விழிப்புடன் இருங்கள்!
சவாலான வாழ்க்கையில் சந்தோஷத்துக்கான வழிகள்—பைபிள் என்ன சொல்கிறது?
சவாலான இந்த வாழ்க்கையில், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நம்முடைய சந்தோஷம் பெரும்பாலும் நம் சூழ்நிலையைப் பொறுத்து கிடையாது, நம்முடைய மனதைப் பொறுத்துதான் இருக்கிறது. எவ்வளவு பிரச்சினை வந்தாலும், “இதயத்தில் சந்தோஷமாக இருப்பவனுக்கு எப்போதும் விருந்துக் கொண்டாட்டம்தான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 15:15) சந்தோஷமாக இருக்க நாம் என்ன செய்யலாம்? பைபிள் தரும் சில அறிவுரைகளை இப்போது பார்க்கலாம்.
கவலைகளைச் சமாளியுங்கள்
பைபிள் இப்படிச் சொல்கிறது: “கவலை ஒருவருடைய இதயத்தைப் பாரமாக்கும். ஆனால், நல்ல வார்த்தை அதைச் சந்தோஷப்படுத்தும்.”—நீதிமொழிகள் 12:25.
கவலையைச் சமாளிக்க பைபிள் உங்களுக்கு உதவி செய்யும். எப்படி என்று தெரிந்துகொள்ள, “கவலையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
தனிமையைச் சமாளியுங்கள்
பைபிள் இப்படிச் சொல்கிறது: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.
நெருக்கமான நண்பர்களைக் கண்டுபிடிக்கவும், அதன் மூலம் தனிமையைச் சமாளிக்கவும் உதவுகிற ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன. “தனிமையைத் துரத்தியடிக்க—பைபிள் எப்படி உதவும்?“ என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.
கடவுள்மேலும் மற்றவர்கள்மேலும் அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள்
பைபிள் இப்படிச் சொல்கிறது: “உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும். . . . உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.”a—மத்தேயு 22:37-39.
கடவுள்மேல் அன்பை வளர்த்துக்கொள்ள அவரிடம் பேசுவது நமக்கு உதவி செய்யும். இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, “நம் ஜெபங்களைக் கடவுள் கேட்கிறாரா?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்கு, இயேசு சொன்ன மாதிரி அவர்களை நாம் நடத்த வேண்டும். எப்படி என்று தெரிந்துகொள்ள இதைப் பாருங்கள்: “அன்பு காட்ட வழிகள்.“
சவாலான வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க பைபிள் எப்படி உதவும் என்று இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, எங்களோடு சேர்ந்து இலவசமாக பைபிளைப் படியுங்கள்.
a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.