NASA Photo
விழிப்புடன் இருங்கள்!
நிலையான அரசாங்கம் ஒன்று பூமியை ஆட்சி செய்யுமா?—பைபிள் என்ன சொல்கிறது?
அரசியல் குழப்பங்கள் உலக நாடுகளை உலுக்கி எடுக்கின்றன. நிலையான அரசாங்கம் இருக்கும் நாடுகள் என்று கருதப்படுகிற நாடுகளில்கூட அரசாங்கங்கள் ஆட்டம் கண்டிருக்கின்றன. அரசியல்வாதிகளின் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள், பெரும்பான்மையான வாக்குகள் இல்லாததால் ஏற்படும் தேர்தல் குழப்பங்கள், கட்சிகளுக்கு இடையே சண்டைகள், உள்நாட்டுக் கலவரங்கள் போன்ற பிரச்சினைகள் இருப்பதால், ஒரு நிலையான அரசாங்கத்தை அவர்களால் அமைக்க முடிவதில்லை.
ஆனால், உறுதியான, நிலையான அரசாங்கம் ஒன்று இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. நீங்களும் ஒருவேளை அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். இயேசு கிறிஸ்து சொல்லிக்கொடுத்த ஜெபத்தில் இந்த அரசாங்கத்தைப் பற்றித்தான் சொல்லியிருந்தார். அவர் சொன்னது இதோ:
“நீங்கள் இப்படி ஜெபம் செய்யுங்கள்: ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.”—மத்தேயு 6:9, 10.
அந்த அரசாங்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
இந்த அரசாங்கம்—நிலையானது
இந்த அரசாங்கம் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும்.
இயேசு இந்த அரசாங்கத்தை “பரலோக அரசாங்கம்” என்று சொன்னார். (மத்தேயு 4:17; 5:3, 10, 19, 20) இந்தக் காரணத்தினால்தான், “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” என்று அவர் சொன்னார்.—யோவான் 18:36.
இந்த அரசாங்கம்தான் இனிமேல் மனிதர்களை ஆட்சி செய்யும்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “அந்த ராஜ்யம் . . . மற்ற எல்லா ராஜ்யங்களையும் [அதாவது, மனித அரசாங்கங்களை] நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.—தானியேல் 2:44.
இயேசு கிறிஸ்து ராஜாவாக ஆட்சி செய்யும் இந்த அரசாங்கம் என்றுமே கவிழாது.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “இவருடைய அரசாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும், இவருடைய ராஜ்யம் அழிக்கப்படாது.”—தானியேல் 7:13, 14.
இந்த அரசாங்கம் பூமியில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவருடைய ஆட்சியில் நீதிமான்கள் செழிப்பார்கள். சந்திரன் இருக்கும்வரை மிகுந்த சமாதானம் இருக்கும்.” (சங்கீதம் 72:7) “அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”—மீகா 4:4.
இந்த அரசாங்கத்தைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
இயேசு பூமியில் இருந்தபோது, தன்னுடைய நேரத்தை எல்லாம் “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப்” பிரசங்கிப்பதற்காகவே செலவு செய்தார்.’ (மத்தேயு 9:35) இயேசு இதையும் சொல்லியிருந்தார்:
“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14.
இன்று, இந்த அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி 240-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிக்கப்படுகிறது. இந்த அரசாங்கத்தைப் பற்றியும் அது உங்களுக்கு அள்ளித்தரும் நன்மைகளைப் பற்றியும் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? என்ற வீடியோவைப் பாருங்கள்.