உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w26 ஏப்ரல் பக். 14-19
  • கஷ்டங்களைச் சரியான விதத்தில் பாருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கஷ்டங்களைச் சரியான விதத்தில் பாருங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்க...
  • கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்கவில்லை என்றால்...
  • கஷ்டங்கள் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
  • நீங்கள் படும் கஷ்டங்கள் கடவுள் தரும் தண்டனையா?
    விழித்தெழு!—2009
  • யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • சகித்திருக்க யெகோவா உதவுகிறார்​—⁠எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
w26 ஏப்ரல் பக். 14-19

ஜூன் 15-21, 2026

பாட்டு 122 வேரூன்றி நிற்போம்!

கஷ்டங்களைச் சரியான விதத்தில் பாருங்கள்

“வேதனையும் கஷ்டமும் எனக்கு வந்தாலும்,உங்களுடைய கட்டளைகளை மிகவும் விரும்புகிறேன்.”—சங். 119:143.

என்ன கற்றுக்கொள்வோம்?

கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்த்தால் அதை நல்லபடியாகச் சமாளிப்போம், யெகோவாவுக்கு உண்மையாக இருப்போம்.

1-2. கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

யெகோவா அவருடைய மக்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார். இருந்தாலும், நிறைய பேருடைய வாழ்க்கை, “துன்ப துயரங்களால்தான் நிறைந்திருக்கின்றன.” (சங். 90:10) யெகோவாவுக்குச் சேவை செய்வதால் சிலருடைய குடும்பத்தில் இருப்பவர்களே அவர்களை மோசமாக நடத்துகிறார்கள். ஊழியம் செய்வதால் சிலர் துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது ஜெயிலில் தள்ளப்படுகிறார்கள். வயதாவதால் அல்லது நோய்நொடியால் நிறைய பேர் வலியில் வேதனைப்படுகிறார்கள். அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்ததால் அல்லது வாழ்க்கையில் ஏதாவது ஒரு பெரிய கஷ்டம் வந்ததால் சிலர் துக்கத்தில் தவிக்கிறார்கள். நீங்கள் இப்போது ஏதாவது கஷ்டத்திலோ வலியிலோ வேதனையிலோ இருக்கிறீர்களா?

2 கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டும் என்றால் அதை நாம் சரியான விதத்தில் பார்க்க வேண்டும். அது ஏன் முக்கியம்? இதைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள், கார் ஓட்டும்போது ரோட்டில் வரும் ஆபத்துகள் மாதிரி. ஆபத்துகளைப் பொறுத்து நாம் இடது பக்கமாக அல்லது வலது பக்கமாகப் போக வேண்டியிருக்கலாம். அல்லது, வேகத்தைக் குறைக்க வேண்டியிருக்கலாம். இல்லையென்றால், அப்போதைக்கு காரை நிறுத்த வேண்டியிருக்கலாம். இப்படி ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அந்த ஆபத்து நம் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். ஒருவேளை, கார் கண்ணாடியில் பனியோ சேறோ மண்ணோ இருந்தால் அந்த ஆபத்து நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும். அதேமாதிரி, நமக்கு வரும் கஷ்டங்களை நாம் தெளிவாகப் பார்க்கும்போதுதான்—யெகோவா பார்க்கிற மாதிரி பார்க்கும்போதுதான்—நம்மால் அதைச் சரியான விதத்தில் சமாளிக்க முடியும். இந்தக் கட்டுரையில் மூன்று விஷயங்களைப் பார்ப்போம். (1) கஷ்டங்களைப் பற்றி நாம் எதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்? (2) கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்கவில்லையென்றால் என்ன ஆகும்? (3) கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

ஒருவர் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார். கார் கண்ணாடி ரொம்ப அழுக்காக இருக்கிறது. அவருக்கு முன்னால் திடீரென்று தெரிகிற சாலைத் தடுப்பைப் பார்த்து பயந்துபோகிறார்.

நம் கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்த்தால்தான் அதை நம்மால் நல்ல விதத்தில் சமாளிக்க முடியும் (பாரா 2)


கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்க...

3. இப்போது நமக்கு இருக்கும் கஷ்டங்கள் ஏன் தீரவே தீராது?

3 இந்த உலகத்தில் கண்டிப்பாகக் கஷ்டங்கள் இருக்கும். நம்மிடம் பாவம் இருக்கும்வரை, சாத்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்யும்வரை, நம் கஷ்டங்கள் தீரவே தீராது. அதுமட்டுமல்ல, இந்த உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க இயற்கை பேரழிவுகளாலும் மக்கள் செய்யும் கெட்ட விஷயங்களாலும் நம்முடைய கஷ்டங்கள் இன்னும் அதிகமாகத்தான் ஆகும். (மத். 24:8; 2 தீ. 3:13) யெகோவா எதிர்காலத்தில் எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்யப் போகிறார் என்பது உண்மைதான். ஆனால், இப்போதே அவை எல்லாவற்றையும் அவர் சரிசெய்தால், இந்த உலகத்தை ஆட்சி செய்ய சாத்தானுக்கு அவர் உதவி செய்வதுபோல் ஆகிவிடும். இந்த உலகம் சாத்தானின் கையில் இருக்கும்வரை நமக்குக் கண்டிப்பாகக் கஷ்டங்கள் இருக்கும்.—பிர. 9:12.

4. கிறிஸ்தவர்களுக்குக் கூடுதலாக வேறு என்ன கஷ்டங்கள் வருகின்றன?

4 கிறிஸ்தவர்களுக்குக் கூடுதலான கஷ்டங்கள் வரும். இயேசு தன் சீஷர்களிடம் ஒரு விஷயத்தை அடிக்கடி சொன்னார். தன்னைப் பின்பற்றுவதால் மக்கள் அவர்களைத் துன்புறுத்துவார்கள் என்று சொன்னார். (மத். 24:9; யோவா. 16:2) அதனால், நமக்குத் துன்புறுத்தல் வரும்போது நாம் அதிர்ச்சியடைவதில்லை. (1 தெ. 3:3, 4) நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொண்டு தொடர்ந்து இயேசுவைப் பின்பற்றுகிறோம். பலமான விசுவாசத்தோடு தொடர்ந்து சகித்திருந்தால், நாம் சரியானதைத்தான் செய்கிறோம், முடிவில்லாத வாழ்வுக்கான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதில் உறுதியாக இருக்கலாம். அதுமட்டுமல்ல, யெகோவாவை மட்டும்தான் வணங்குகிறோம், அவரால் மட்டும்தான் நம்மைச் சரியான விதத்தில் ஆட்சி செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறோம். அதோடு, சாத்தான் ஒரு பொய்யன் என்பதை நிரூபிக்கிறோம். மனிதர்கள் அன்பினால் இல்லாமல் சுயநலத்துக்காகத்தான் கடவுளை வணங்குகிறார்கள் என்று சாத்தான் பொய் சொல்கிறான். இந்தப் பொய்யை நிரூபிப்பதற்காக யெகோவாவின் மக்களைக் கொடூரமாகத் தாக்குகிறான். (யோபு 1:9-11) ஆனால், நாம் யெகோவாமேல் இருக்கிற அன்பினால் தொடர்ந்து சகித்திருக்கும்போது அவருடைய மனதைச் சந்தோஷப்படுத்துகிறோம்.—நீதி. 27:11.

5. பிரசங்கி 7:13, 14-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (படங்களையும் பாருங்கள்.)

5 யெகோவா கஷ்டங்களை அனுமதிக்கிறார். யெகோவா ஒருநாளும் நம்மை மோசமாக நடத்த மாட்டார், கெட்ட காரியங்களால் நம்மைச் சோதிக்கவும் மாட்டார். (யாக். 1:13) ஆனால் சாலொமோன் ராஜா, ‘கஷ்டமான நாளை’ ‘உண்மை கடவுளின் செயல்கள்’ என்று சொல்லியிருக்கிறார். (பிரசங்கி 7:13, 14-ஐ வாசியுங்கள்.) பொதுவாக, யெகோவா அனுமதிக்கிற ஒரு விஷயத்தை அவர் செய்வதுபோல் பைபிள் சொல்கிறது. இந்த வசனத்திலும் அந்த அர்த்தத்தில்தான் சொல்லியிருக்கிறது. அப்படியென்றால், பிரசங்கி 7:13, 14-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? முதலில், சாத்தானுடைய உலகத்தில் நாம் வாழும்வரை நமக்குச் சந்தோஷமான நாட்களும் இருக்கும், கஷ்டமான நாட்களும் இருக்கும். இந்த எதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சந்தோஷமான நாள் வரும்போது அதைக் கடவுளிடமிருந்து வந்த ஒரு பரிசாகப் பார்த்து அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இரண்டாவதாக, ஒரு நாளில் ‘என்ன நடக்குமென்று மனுஷர்களுக்கு தெரியாது’ என்பதையும் சாலொமோன் ஞாபகப்படுத்துகிறார். அதாவது, அந்த நாள் சந்தோஷமான நாளாக இருக்குமா, கஷ்டமான நாளாக இருக்குமா என்பது நமக்குத் தெரியாது. எதிர்பாராத பிரச்சினைகள் நல்லவர்களுக்கும் வருகிறது, கெட்டவர்களுக்கும் வருகிறது.

படத்தொகுப்பு: தோட்டம் வைத்திருக்கும் ஒருவருக்கு சந்தோஷமான நாட்களும் வருகின்றன, கஷ்டமான நாட்களும் வருகின்றன. 1. தோட்டம் செழிப்பாக இருக்கிறது. அங்கு விளைந்திருக்கும் தக்காளி பழங்களைச் சந்தோஷமாக அறுவடை செய்கிறார். 2. வேறொரு நாளில், செடிகள் வாடிப்போய் இருக்கிறது. அழுகி போயிருக்கும் தக்காளி பழங்களைச் சோகத்தோடு பார்க்கிறார்.

சாத்தானுடைய இந்த உலகத்தில் நமக்குச் சந்தோஷமான நாட்களும் இருக்கும், கஷ்டமான நாட்களும் இருக்கும் என்ற எதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் (பாரா 5)


6. யெகோவா நமக்கு ஏன் கஷ்டங்களை அனுமதிக்கலாம்? (எபிரெயர் 12:7, 11)

6 கஷ்டம் வரும்போது யெகோவா நமக்கு இதைக் கற்றுத்தருகிறார்: நம்மையே நம்பி இருக்காமல் அவரை நம்பி இருக்க வேண்டும். நமக்கு வரும் எல்லா கஷ்டங்களையும் யெகோவா கவனிக்கிறார். நமக்கு வலிக்கும்போது அவருக்கும் வலிக்கிறது. ‘பயங்கர இருட்டான பள்ளத்தாக்கில்’ நடப்பதற்கு யெகோவா நம்மை அனுமதித்தாலும், நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகிறார், நம்மேல் ரொம்ப அன்பு வைத்திருப்பதைக் காட்டுகிறார், தொடர்ந்து சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தையும் கொடுக்கிறார். (சங். 23:4) கஷ்டங்கள், உண்மையிலேயே நாம் எப்படிப்பட்டவர்கள் என்றும் என்னென்ன குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நமக்குக் காட்டுகிறது. (எபிரெயர் 12:7, 11-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் உதவியோடு அந்தக் குணங்களை நம்மால் வளர்த்துக்கொள்ளவும் முடியும். யோபுவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவர் மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. யெகோவா யோபுவுக்குக் கஷ்டங்களைக் கொடுக்கவில்லைதான். ஆனால், அதை அனுமதித்தபோது அதைப் பயன்படுத்தி யோபுவுக்கு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்தார். (யோபு 42:1-6) ஒரு விஷயம் மட்டும் உறுதி: யெகோவா அனுமதிக்கும் எந்தவொரு கஷ்டமும் நம்மை நிரந்தரமாகப் பாதிக்காது. கடவுளை நம்பி கஷ்டங்களை உண்மையோடு சகித்திருக்கும்போது நமக்கு “முழு வெற்றி” கிடைக்கும்.—ரோ. 8:35-39.

7. கடவுளுக்குக் கீழ்ப்படிவதால் நாம் துன்புறுத்தப்படும்போது ஏன் சந்தோஷமாக இருக்கலாம்?

7 துன்புறுத்தப்படும்போது நாம் சந்தோஷமாக இருக்கலாம். துன்புறுத்தல்கள் வரும்போது கடவுள் உங்களை ஆசீர்வதிக்கவில்லை என்று ஒருநாளும் நினைக்காதீர்கள். உண்மை என்னவென்றால், கடவுளுக்கு நீங்கள் கீழ்ப்படிவதால்தான் உங்களுக்குத் துன்புறுத்தல்கள் வருகின்றன. (மத். 5:10-12) அப்போதும் நீங்கள் உண்மையாக இருப்பதைப் பார்த்து யெகோவா ரொம்பச் சந்தோஷப்படுகிறார், உங்களுக்கு நிச்சயம் பலன் கொடுப்பார். துன்புறுத்தல்களை நாம் சரியான விதத்தில் பார்க்கும்போது அப்போஸ்தலர்களைப் போலவே சந்தோஷமாக இருப்போம், அதைக் கவுரவமாக நினைப்போம். (அப். 5:40-42) துன்புறுத்தல்களை நாம் சகித்திருக்கும்போது யெகோவாவைப் பற்றி தெரியாதவர்களுக்கும் அவரைப் பற்றி சொல்லிக்கொடுக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது அவர்களும் “[யெகோவாவை] மகிமைப்படுத்துவார்கள்.” (1 பே. 2:12) யோசேப்பைப் போலவே, கஷ்டங்கள் முடிந்த பிறகு மட்டுமல்ல, கஷ்டங்கள் இருக்கும்போதே நமக்கு வெற்றி கிடைக்கும்.—ஆதி. 39:3, 23.

8. முடிவுவரை சகித்திருக்க நாம் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

8 நம் கஷ்டங்கள் கண்டிப்பாக ஒருநாள் முடிவுக்கு வரும். யோபுவின் உதாரணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒரு உண்மை என்னவென்றால், நம்முடைய கஷ்டங்களுக்குக் கண்டிப்பாக ஒரு முற்றுப்புள்ளி இருக்கிறது. யோபுவின் கஷ்டங்கள் முடிந்தன, “யெகோவா முன்பைவிட அதிகமாக யோபுவை ஆசீர்வதித்தார்.” (யோபு 42:12) அதேமாதிரி, புதிய உலகத்தில் யெகோவா நம்மைப் பிரம்மாண்டமான விதத்தில் ஆசீர்வதிக்கப் போகிறார். இன்று நமக்குக் கஷ்டங்கள் இருப்பது உண்மைதான். ஆனால், எதிர்காலத்தில் நாம் அனுபவிக்கப்போகிற முடிவில்லாத வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தக் கஷ்டங்கள் எல்லாம் நொடிப்பொழுதுதான்! யெகோவா கொடுக்கப்போகும் முடிவில்லாத வாழ்வுக்காக முடிவுவரை சகித்திருப்போம்!—மத். 24:13.

கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்கவில்லை என்றால்...

9. கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்க தவறினால் என்ன ஆகும்?

9 நமக்கு வருகிற கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்கவில்லை என்றால், அதைப் பற்றியே யோசித்து யோசித்து பிரச்சினையை இன்னும் பெரிதாக்கி விடுவோம். உதாரணமாக, யெகோவாதான் நம் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் என்று நினைக்க ஆரம்பித்துவிடுவோம். யோபு ஒருசமயம், கடவுள்தான் அவருக்குக் கஷ்டம் கொடுப்பதாக நினைத்தார். இப்படிக் கஷ்டங்களைச் சரியாகப் பார்க்க தவறியதால் “கடவுளைவிட தன்னை நல்லவராகக் காட்டிக்கொள்ள” நினைத்தார். (யோபு 32:2) அதேபோல் நகோமியும், தனக்கு வந்த எல்லா கஷ்டங்களுக்கும் ஒருசமயம் கடவுளைக் குற்றம் சொன்னார். (ரூத் 1:13, 20, 21) ஒருவேளை, யோபுவும் நகோமியும் அவர்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல் இருந்திருந்தால், கடவுளோடு அவர்களுக்கு இருந்த நட்பு முறிந்துபோயிருக்கும். (நீதி. 19:3) ஆனால், அவர்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு, கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்க யெகோவா அவர்களுக்கு உதவினார். அவர்கள் உண்மையாக இருந்ததற்காக அவர்களை ஆசீர்வதித்தார்.

10. கஷ்டங்கள் வரும்போது நமக்கு என்ன சந்தேகம் வரலாம்?

10 நம் கஷ்டங்களுக்கு யெகோவா காரணம் இல்லை என்பது நமக்கு நன்றாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், அவருக்கு உண்மையிலேயே நம்மேல் அக்கறை இருக்கிறதா என்று நாம் சந்தேகப்பட ஆரம்பித்துவிடலாம். இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால் நாம் சோர்ந்துவிடுவோம், யெகோவாவுடைய சேவையைத் தொடர்ந்து செய்ய முடியாமல் போய்விடும். (நீதி. 24:10) தாவீது ராஜாவுக்கும் ஆபகூக் தீர்க்கதரிசிக்கும் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் வந்தன. தங்களுடைய ஜெபத்தையும் கதறலையும் யெகோவா உண்மையிலேயே கேட்கிறாரா என்று அவர்கள் யோசித்தார்கள். (சங். 10:1; ஆப. 1:2) ஆனால், அவர்கள் ஜெபம் செய்வதை நிறுத்தவே இல்லை. யெகோவா அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார், தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்தார். உங்களுக்கும் கண்டிப்பாக உதவுவார்.—சங். 10:17.

11. கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்கவில்லை என்றால், நாம் எப்படி யோசிக்க ஆரம்பித்துவிடலாம்?

11 கஷ்டங்களை நாம் சரியான விதத்தில் பார்க்காவிட்டால், ‘என் வாழ்க்கையில் யெகோவா எந்த கஷ்டத்தையும் அனுமதிக்கக் கூடாது’ என்று நினைத்துவிடுவோம். அதனால், கஷ்டங்கள் வரும்போது அதிர்ச்சி ஆகிவிடுவோம். (1 பே. 4:12) இயேசுவின் சீஷர்களை எடுத்துக்கொள்ளுங்கள். தான் கஷ்டப்பட்டு சாக வேண்டியிருக்கும் என்று சீஷர்களிடம் இயேசு தெளிவாகச் சொல்லியிருந்தார். ஆனால், அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. (லூக். 18:33, 34) இப்படி ஒரு கஷ்டத்தை இயேசு அனுபவிக்க யெகோவா கண்டிப்பாக விடமாட்டார் என்று பேதுரு நினைத்தார். ஆனால், இது கடவுளுடைய விருப்பம் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால், பேதுருவைப் போல அவர் யோசிக்கவில்லை, பேதுருவைக் கண்டித்தார். (மாற். 8:31-33) இயேசு இறந்த பிறகும்கூட அவருடைய சீஷர்களால் அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பதை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், இயேசு அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. அவர் உயிர்த்தெழுந்த பிறகு, அதை அவர்கள் புரிந்துகொள்ள உதவினார். அதற்காக, ‘வேதவசனங்களை முழுமையாக விளக்கிக் காட்டினார்.’ (லூக். 24:25-27, 32, 44-48) இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்த்ததால், வரப்போகிற எதிர்ப்பைச் சமாளிக்க அவர்கள் தயாரானார்கள். அதேமாதிரி நாமும், கஷ்டங்களையும் துன்புறுத்தலையும் பற்றி பைபிள் சொல்வதை ஆழமாக யோசித்துப் பார்த்தால், வரப்போகிற கஷ்டங்களைச் சமாளிக்க தயாராவோம்.

12. ஒரு சூழ்நிலையை யெகோவா பார்ப்பதுபோல் பார்க்கவில்லை என்றால் என்ன ஆகும்?

12 ஒரு சூழ்நிலையை யெகோவா பார்ப்பதுபோல் பார்க்கவில்லை என்றால், சிறிய பிரச்சினைகூட பெரிய பிரச்சினையாகத் தெரியும். இதைப் புரிந்துகொள்ள இயேசு சொன்ன ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு திராட்சை தோட்டத்தில் வேலை செய்தவர்கள் தங்களுக்குச் சரியான கூலி கிடைக்கவில்லை என்று நினைத்து தோட்டத்து சொந்தக்காரருக்கு எதிராக முறுமுறுத்தார்கள். ஆனால், அந்தச் சொந்தக்காரர் அவர்களிடம் ‘நான் எந்த அநியாயமும் செய்யவில்லை’ என்று சொன்னார். (மத். 20:10-13) தோட்டத்து சொந்தக்காரர் அவர்களிடம் அநியாயமாக நடந்துகொண்டதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. அந்தக் கூலியாட்கள் சந்தோஷத்தை இழந்ததற்குக் காரணம், சொன்ன கூலியைவிட அவர்கள் அதிகமாக எதிர்பார்த்ததுதான். இன்றும் சில சகோதர சகோதரிகள் இதேபோல் நினைத்துவிடலாம். உதாரணத்துக்கு, அவர்கள் எதிர்பார்த்த ஒரு பொறுப்பு கிடைக்காதபோது அல்லது ஆசைப்பட்டு செய்துகொண்டிருக்கும் ஒரு பொறுப்பை இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்போது அநியாயம் நடந்துவிட்டதாக நினைக்கலாம். அப்படியென்றால், இந்த மாதிரி கஷ்டமான சூழ்நிலைகளைச் சரியான விதத்தில் பார்க்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

கஷ்டங்கள் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

13. நமக்கென்று கஷ்டங்கள் வரும்போது நாம் என்ன செய்துவிடலாம்?

13 கஷ்டங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று நமக்கு நன்றாகத் தெரிந்திருக்கலாம். மற்றவர்கள் கஷ்டப்படும்போது அந்த வசனங்களைக் காட்டி நாம் அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கலாம். ஆனால், நமக்கென்று கஷ்டங்கள் வரும்போது அதைச் சரியான விதத்தில் பார்க்க தவறிவிடலாம். உதாரணத்துக்கு, யெகோவா நம்மைத் தண்டிக்கிறார் என்றோ நாம் செய்யும் ஜெபங்களைக் கேட்கவில்லை என்றோ நினைக்கலாம். இந்த மாதிரி எண்ணங்களை மாற்றிக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

14. கஷ்டப்படும்போது நீங்கள் எதற்கெல்லாம் ஜெபம் செய்யலாம்? (பிலிப்பியர் 4:13)

14 யெகோவாவிடம் உதவி கேளுங்கள். உங்களுடைய கஷ்டங்களைப் பற்றியும் அது உங்கள் மனதுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கிறது என்பதைப் பற்றியும் யெகோவாவிடம் சொல்லுங்கள். யெகோவா உங்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அதைக் குறிப்பாகச் சொல்லி அவரிடம் ஜெபம் செய்யுங்கள். கடவுளுடைய சக்திக்காகவும் ஜெபம் செய்யுங்கள். தொடர்ந்து கடவுளுக்குச் சேவை செய்வதற்குத் தேவையான பலத்தையும் நல்ல முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான ஞானத்தையும் அந்தச் சக்தி உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் எதிர்பார்க்காத விதத்தில் யெகோவா உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கலாம் என்பதையும் மறந்துவிடாதீர்கள். (எபே. 3:20) தேவதூதர்களையோ சகோதர-சகோதரிகளையோ பயன்படுத்தி யெகோவா உங்களுக்கு உதவி செய்யலாம். (சங். 34:7) அப்படியென்றால், யெகோவா உங்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்தாலும் சரி, அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லுங்கள். ஒரு சூழ்நிலையைச் சமாளிக்க உங்களுக்கு எந்த அளவுக்குக் கடவுளுடைய சக்தி தேவையோ அந்த அளவுக்குச் சக்தியை அவர் கொடுப்பார் என்பதில் உறுதியாக இருங்கள்.—பிலிப்பியர் 4:13-ஐ வாசியுங்கள்.

15. கஷ்டங்களைச் சமாளிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

15 கடவுளோடு உள்ள நட்பைப் பலப்படுத்திக்கொண்டே இருங்கள். ஆன்மீக விஷயங்களை முன்பு செய்த அளவுக்கு இப்போது செய்ய முடியவில்லை என்றாலும் உங்களால் முடிந்ததை செய்துகொண்டே இருங்கள். “வேதனையும் கஷ்டமும்” வரும்போதுதான் எப்போதையும்விட அதிகமாக நாம் யெகோவாவைப் போல யோசிக்க வேண்டும். (சங். 119:143) அதனால், தினமும் பைபிளைப் படியுங்கள், படித்ததை ஆழமாக யோசித்துப் பாருங்கள், ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு ஊழியத்தில் கலந்துகொள்ளுங்கள். கூட்டங்களிலும் கலந்துகொண்டு பதில் சொல்லுங்கள். கஷ்டங்கள் வரும்போது தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். சகோதர சகோதரிகளோடு நேரம் செலவு செய்யுங்கள்.—நீதி. 18:1.

ஹாஸ்பிட்டல் படுக்கையில் இருக்கும் ஒரு சகோதரர் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக “காவற்கோபுர” படிப்பில் கலந்துகொள்கிறார். கையில் “காவற்கோபுரம்” பத்திரிகை இருக்கிறது, பக்கத்தில் பைபிள் இருக்கிறது. படிப்பை நன்றாக கவனித்துக்கொண்டிருக்கிறார்.

கடவுளோடு உள்ள நட்பைப் பலப்படுத்திக்கொண்டே இருக்க உங்களால் முடிந்ததையெல்லாம் செய்யுங்கள் (பாரா 15)


16. கஷ்டங்கள் வரும்போது எப்படிப்பட்ட சந்தேகங்கள் வரலாம், அவற்றை எப்படித் தீர்த்துக்கொள்ளலாம்? (2 கொரிந்தியர் 10:4, 5)

16 உங்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள். கஷ்டங்கள் வரும்போது நம்மைப் பற்றியோ யெகோவாவைப் பற்றியோ சந்தேகங்கள் வரலாம். இந்த மாதிரி “ஆழமாக வேரூன்றிய” சந்தேகங்களைப் பிடுங்கி எறியுங்கள். (2 கொரிந்தியர் 10:4, 5-ஐ வாசியுங்கள்.) அதற்கு ‘கடவுளைப் பற்றிய அறிவு’ உங்களுக்கு உதவும். பைபிளையும் அமைப்பு கொடுத்திருக்கும் பிரசுரங்களையும் படித்து அந்த அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, இப்போதுகூட யெகோவாவுக்கு என்னை பிடிக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா? அப்போஸ்தலன் பவுலைப் பற்றி படித்துப் பாருங்கள். ஊழியம் செய்தபோது அவருக்குப் பயங்கரமான கஷ்டங்கள் வந்தன. இருந்தாலும், யெகோவாவும் இயேசுவும் அவர்கூடவே இருந்ததால்தான் அவரால் தொடர்ந்து ஊழியம் செய்ய முடிந்தது. இது கடவுளுடைய அங்கீகாரம் தனக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையை பவுலுக்குக் கொடுத்தது. (2 கொ. 11:23-27) முன்பு செய்த தவறுகளைக் கடவுள் உண்மையிலேயே மன்னித்துவிட்டாரா என்ற சந்தேகம் வருகிறதா? அப்படியென்றால், கடவுள் பாவங்களை மன்னிக்கிறார் என்று பைபிள் சொல்கிற வசனங்களைக் குறித்து வையுங்கள். (ஏசா. 43:25) அவற்றைப் படித்து, ஆழமாக யோசித்துப் பாருங்கள். (சங். 119:97) வாழ்க்கையில் வந்த ஒரு பேரிடியால், கடவுள் உண்மையிலேயே தன்னுடைய மக்களைப் பாதுகாக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறதா? கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதிக்கிறார் என்பதைப் பற்றியும் அவரோடு இருக்கும் நட்பைப் பாதுகாக்க அவர் எப்படியெல்லாம் உதவுகிறார் என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்துபாருங்கள். (சங். 91:9-12) அதோடு, புயல் போன்ற கஷ்டங்களைச் சமாளித்து யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்த சகோதர சகோதரிகளுடைய அனுபவங்களையும் படித்து பாருங்கள்.a

17. கஷ்டங்கள் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

17 பெரிய கஷ்டங்கள் எதுவும் இல்லாமல் ‘சந்தோஷமான நாளை’ நீங்கள் இப்போது அனுபவித்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள். அவர் கொடுத்திருக்கிற நல்ல விஷயங்களுக்காக அவரைப் புகழுங்கள். (பிர. 7:14) ஆனால், கஷ்டமான நாட்கள் வரும்போது, அதைச் சரியான விதத்தில் பாருங்கள். எப்போதும் யெகோவாவை முழுமையாக நம்பியிருங்கள். அப்படிச் செய்தால், “அதைச் சகித்துக்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் [யெகோவா] வழிசெய்வார்.” (1 கொ. 10:13) நம் சகோதர சகோதரிகளுக்கு வாழ்க்கையில் பெரிய கஷ்டங்கள் வரும்போது நாம் அவர்களுக்கு எப்படி உதவலாம்? அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

உங்கள் பதில் என்ன?

  • கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்க நாம் எதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

  • கஷ்டங்களைச் சரியான விதத்தில் பார்க்கவில்லை என்றால் என்ன ஆகும்?

  • கஷ்டங்கள் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

பாடல் 150 மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்

a உதாரணமாக, மகனை இழந்த வேதனையை டேவிட் மேசேவும் அவருடைய குடும்பமும் எப்படிச் சமாளித்தார்கள் என்று jw.org-ல் இருக்கும் “சந்தோஷமான ஒரு குடும்பம் உதிர்ந்து மலர்ந்தது” என்ற வாழ்க்கை சரிதையில் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்