ஜூன் 1-7, 2026
பாட்டு 111 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்
உங்களை வெறுக்கும்போதும் சந்தோஷமாக இருக்கலாம்!
‘மக்கள் உங்களை வெறுக்கும்போதும் சந்தோஷப்படுங்கள்.’—லூக். 6:22.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவாவுக்குச் சேவை செய்வதால் மக்கள் நம்மை வெறுத்தாலும் நாம் ஏன் சந்தோஷமாக இருக்கலாம் என்று கற்றுக்கொள்வோம்.
1. இயேசு என்ன சொன்னார், அது ஏன் ஆச்சரியமாக இருக்கிறது?
‘மக்கள் உங்களை வெறுக்கும்போதும் சந்தோஷப்படுங்கள்’ என்று மலைப் பிரசங்கத்தில் இயேசு சொன்னார். (லூக். 6:22) இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கண்டிப்பாக ஆச்சரியப்பட்டிருப்பார்கள். ஏனென்றால், ஒருவர் நம்மை வெறுக்கும்போது நம் யாராலுமே சந்தோஷப்பட முடியாது. அப்படியென்றால், இயேசு ஏன் அதைச் சொன்னார்? இது நாம் யோசித்துப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம். ஏனென்றால், இன்றும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களை நிறையப் பேர் வெறுக்கிறார்கள். மக்கள் ஏன் நம்மை வெறுக்கிறார்கள்? அவர்கள் வெறுத்தாலும் நாம் ஏன் சந்தோஷமாக இருக்கலாம்? பதில் இந்தக் கட்டுரையில்!
ஏன் நம்மை வெறுக்கிறார்கள்
2-3. உண்மை கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு ஒரு காரணம் என்ன, நம்மை எதிர்ப்பவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? (யோவான் 16:2, 3)
2 யெகோவாவை வணங்குவதால் நம்மை வெறுக்கிறார்கள். தன்னைப் பின்பற்றுகிறவர்களைத் துன்புறுத்துவார்கள், சிலரைக் கொலைகூட செய்வார்கள் என்று இயேசு சொன்னார். அதற்கான காரணத்தையும் சொன்னார்: “தகப்பனைப் பற்றியோ என்னைப் பற்றியோ தெரிந்துகொள்ளாததால் அவர்கள் இப்படியெல்லாம் செய்வார்கள்.” (யோவான் 16:2, 3-ஐ வாசியுங்கள்.) ஆனால், நிஜத்தில் கடவுளுடைய மக்களுக்கு வரும் துன்புறுத்தலுக்குப் பின்னால் இருப்பது யார்? சாத்தான்தான். அவன்தான் “இந்த உலகத்தின் கடவுள்.” (2 கொ. 4:3, 4) அவன் மக்களிடமிருந்து யெகோவாவைப் பற்றிய உண்மைகளை மறைக்கிறான். அதேநேரம், கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டு அவர்மேல் அன்பு காட்டுகிறவர்களை மற்றவர்கள் வெறுக்கவும் வைக்கிறான். (யோவா. 8:42-44) இந்த உண்மையைத் தெரிந்துகொண்டதால், நம்மை எதிர்ப்பவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? சாத்தான்தான் மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறான் என்பதை நாம் புரிந்து வைத்திருப்பதால், பதிலுக்கு அவர்களை நாம் வெறுப்பதில்லை.
3 பவேல்a என்பவரின் அனுபவத்தைப் பார்க்கலாம். நம் வேலைகள் தடை செய்யப்பட்ட ஒரு நாட்டில் அவர் வாழ்கிறார். யெகோவாவை உண்மையோடு வணங்கி வந்ததால் அவரைக் கைது செய்தார்கள். பயங்கரமாக அடித்து பல மாதங்களுக்குத் தனிச் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள். அவர் இப்போது இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவை வணங்குவதைத் தடுத்து நிறுத்த சாத்தானும் அவனுடைய பேய்களும் கையில் எடுத்திருக்கிற ஆயுதம்தான் இந்தத் துன்புறுத்துதல். சிறைச்சாலையில் வேலை செய்யும் நிறையப் பேருக்கு எங்கள்மேல் எந்தத் தனிப்பட்ட விரோதமும் இல்லை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத்தான் செய்கிறார்கள்.” குரோஷியாவில் இருக்கும் ஒரு சகோதரரை யெகோவாவை வணங்காத அவருடைய பெற்றோர் ரொம்பத் துன்புறுத்தினார்கள். அவர் இப்படிச் சொன்னார்: “உண்மையிலேயே என் எதிரி சாத்தான்தான். என் அப்பா-அம்மா இல்லை.”—எபே. 6:12.
4. இயேசு மற்றும் ஸ்தேவானுடைய முன்மாதிரியில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)
4 நம்மை எதிர்ப்பவர்களை நாம் வெறுப்பதில்லை. சொல்லப்போனால், அவர்களுக்காக ஜெபம் செய்கிறோம். (மத். 5:44) இந்த விஷயத்தில் இயேசுவும் ஸ்தேவானும் நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள். ரோம வீரர்கள் இயேசுவை மரக்கம்பத்தில் வைத்து ஆணியடித்தபோது, “தகப்பனே, இவர்களை மன்னித்துவிடுங்கள்” என்று இயேசு அவர்களுக்காக ஜெபம் செய்தார். (லூக். 23:34) தன்னைக் கொலை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த வீரர்களை மன்னிக்கச் சொல்லி இயேசு யெகோவாவிடம் கேட்டார். அதேசமயம், எதிரிகளால் தூண்டப்பட்டு, தன்னைக் கொலை செய்யச் சொல்லி கோஷம் போட்ட மக்கள் கூட்டத்தைப் பற்றியும் அந்தச் சமயத்தில் இயேசு யோசித்திருக்கலாம். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை என்பதை இயேசு புரிந்துகொண்டார். அதேபோல், ஸ்தேவானும் தன்னைக் கொலை செய்யப்போகிறவர்களை மன்னிக்கச் சொல்லி கடவுளிடம் கேட்டார். (அப். 7:58-60) இயேசுவும் ஸ்தேவானும் செய்த ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுத்தாரா? ஆம். இயேசுவைக் கொலை செய்ய வேண்டும் என்று நினைத்த நிறையப் பேர், பிறகு மனந்திருந்தி இயேசுமேல் விசுவாசம் வைத்தார்கள், ஞானஸ்நானம் எடுத்தார்கள். (அப். 2:36-41) அதேபோல், ஸ்தேவானைக் கொலை செய்வதற்குத் துணை போன சவுல் பிறகு கிறிஸ்தவராக ஆனார். தெரியாமல் அவர் செய்த தவறை நினைத்து மிகவும் வேதனைப்பட்டார்.—1 தீ. 1:13.
தங்களைத் துன்புறுத்தியவர்களுக்காக இயேசுவும் அவருடைய சீஷர் ஸ்தேவானும் ஜெபம் செய்தார்கள். நாமும் நம்மைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யலாம் (பாரா 4)
5. சீசரின் அனுபவத்தில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
5 இன்றும் நம்மை எதிர்ப்பவர்களுக்காக நாம் செய்யும் ஜெபங்களுக்கு யெகோவா பதில் தருகிறார். வெனிசுவேலாவில் இருக்கும் சீசர் என்பவரின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவருடைய அப்பா சத்தியத்தைப் பயங்கரமாக எதிர்த்தார். சீசர் இப்படிச் சொல்கிறார்: “ஒரு நல்ல அம்மாவாக ஒரு நல்ல மனைவியாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி என் அம்மா இருந்தார். என் அம்மா கடவுளுடைய அரசாங்கத்துக்குத்தான் முதலிடம் கொடுத்தார். அதற்காக என் அப்பாவை ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. அப்பாவை மதிக்க வேண்டும் என்று எனக்கும் என்கூட பிறந்தவர்களுக்கும் சொல்லிக்கொடுத்தார். கடவுளுக்குப் பிடிக்காத எதையாவது அவர் செய்யச் சொன்னால் தவிர மற்ற எல்லா சமயங்களிலும் அப்பாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்.” வருஷங்கள் போகப் போக சீசரின் அப்பாவின் மனம் இளகியது. சீசர் இப்படிச் சொன்னார்: “ஒருநாள் நான் உருக்கமாக ஜெபம் செய்துவிட்டு, என் அப்பாவிடம் ‘பைபிள் படிக்க ஆசைப்படுகிறீர்களா’ என்று கேட்டேன். சரி என்று அவர் சொன்னதும் எனக்கு அப்படியொரு சந்தோஷம்.” சீக்கிரத்தில் சீசரின் அப்பா ஞானஸ்நானம் எடுத்தார். நம்மை எதிர்க்கிறவர்கள் எல்லாரும் இப்படி மாறுவார்கள் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், நம் நல்ல நடத்தையையும் மரியாதையான பேச்சையும் கவனித்து சிலர் மனம் மாறலாம். அப்போது நமக்குக் கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது! ‘முழு உலகத்துக்கே நீதிபதியாக இருக்கும்’ இரக்கமுள்ள யெகோவாவை இவர்களும் தெரிந்துகொள்ளும் நாளுக்காக நாம் ஆசையாகக் காத்திருக்கிறோம்.—ஆதி. 18:25.
6. மாற்கு 13:13 சொல்வதுபோல், மக்கள் நம்மை ஏன் வெறுக்கிறார்கள்?
6 நாம் இயேசுமேல் மரியாதை வைத்திருப்பதால் நம்மை வெறுக்கிறார்கள். உண்மை கிறிஸ்தவர்களை எல்லா மக்களும் வெறுப்பதற்கான ஒரு காரணத்தை இயேசு சொன்னார்: “நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால்” வெறுப்பார்கள் என்று சொன்னார். (மாற்கு 13:13-ஐ வாசியுங்கள்.) இன்று மக்கள் பூமியில் இருக்கும் தலைவர்களைத்தான் நம்புகிறார்கள். ஆனால் நாம் யெகோவா தேர்ந்தெடுத்த ராஜாவான இயேசுவை நம்புகிறோம். அதனால் மக்கள் நம்மை வெறுக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசுவுக்கு அதிகாரம் இருக்கிறது. 1914-ல் இருந்து அவர் ஆட்சி செய்து வருகிறார். சீக்கிரத்தில், அவரை எதிர்க்கும் எல்லா அரசாங்கங்களையும் ஒழித்துக்கட்டுவார்.
7-8. மக்கள் நம்மை வெறுப்பதற்கு இன்னொரு காரணம் என்ன? (யோவான் 15:18-20) (படங்களையும் பாருங்கள்.)
7 சாத்தானுடைய உலகத்தை நாம் ஒதுக்கித்தள்ளுவதால் நம்மை வெறுக்கிறார்கள். இயேசுவின் சீஷர்கள் ‘இந்த உலகத்தின் பாகமாக இல்லாததால்’ மக்கள் அவர்களை வெறுப்பார்கள் என்றும் இயேசு சொன்னார். (யோவான் 15:18-20-ஐ வாசியுங்கள்.) அன்று இருந்த கிறிஸ்தவர்கள் மாதிரியே நாமும் இந்த உலகத்தின் கெட்ட எண்ணத்தையும், நடத்தையையும், பேச்சையும் ஒதுக்கித்தள்ளுகிறோம். இதனால், வேலை செய்யும் இடத்திலும் பள்ளியிலும் மற்றவர்கள் நம் சகோதர சகோதரிகளை மோசமாக நடத்துகிறார்கள், கேலி செய்கிறார்கள். (1 பே. 4:3, 4) ஆனால், நம்மை எதிர்த்த சிலர் காலப்போக்கில் அவர்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு நம்மை மதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அது உண்மையிலேயே நமக்குச் சந்தோஷமாக இருக்கிறது.
8 மத்திய அமெரிக்காவில் இருக்கும் இக்னாஸியோ என்பவரின் அனுபவத்தைப் பார்க்கலாம். கடவுளுக்குப் பிடித்தமாதிரி அவர் ஒழுக்கமாக வாழ்ந்தார். அதனால், அவர் படித்த பள்ளியில் இருந்த ஒரு டீச்சர் அவரை எப்போதும் கேலி செய்வார். பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பு ஒருநாள் அந்த டீச்சர் இக்னாஸியோவிடம், ‘எல்லாரும் உன்னை கேலி செய்தாலும் உன்னால் எப்படி ஒழுக்க விஷயங்களை விட்டுக்கொடுக்காமல் இருக்க முடிகிறது’ என்று கேட்டார். அதற்கு இக்னாஸியோ, ‘கடவுளுடைய சட்டங்கள் என்னுடைய நல்லதுக்குத்தான் என்பதை நான் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வேன்’ என்று சொன்னார். பிறகு, நம் கூட்டங்களுக்கு வரச்சொல்லி அந்த டீச்சரைக் கூப்பிட்டார். டீச்சரும் கூட்டத்துக்குப் போனார்! சபையில் இருந்த எல்லாரும் காட்டிய அன்பு அவருக்கு ரொம்பப் பிடித்துபோனதால் தொடர்ந்து கூட்டங்களுக்குப் போனார். பைபிள் படிப்பு படிக்கவும் ஆரம்பித்தார். அதனால் அவருக்கும் எதிர்ப்பு வந்தது. ஆனால் அவர் தொடர்ந்து முன்னேற்றம் செய்தார், ஞானஸ்நானமும் எடுத்தார்.
நம் வயது என்னவாக இருந்தாலும், நம் விசுவாசத்தை ஆதரித்து தைரியமாகப் பேச முடியும் (பாரா 8)b
9-10. (அ) வேறு எப்படியும் கிறிஸ்தவர்கள் சாத்தானின் உலகத்தில் இருந்து வித்தியாசமாகத் தெரிகிறார்கள்? (ஆ) அப்போஸ்தலன் பவுலுடைய உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 அரசியல் மற்றும் போர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் நடுநிலையாக இருக்கிறோம். இப்படியும் சாத்தானுடைய உலகத்தில் இருந்து வித்தியாசமாக இருக்கிறோம். (யோவா. 18:36) ரோமர் 13:1 சொல்வதுபோல், அரசாங்கத்தின் சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிகிறோம். அதேசமயம், கிறிஸ்தவர்களாக நாம் அரசியல் விஷயங்களில் எந்தப் பக்கத்தையும் ஆதரிப்பது இல்லை. அதனால் நாம் தேர்தலில் போட்டி போடவும் மாட்டோம், ஓட்டு போடவும் மாட்டோம். ஏன்? ஏனென்றால், யெகோவாவுக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் நம் ராஜா இயேசுவுக்கும் எப்போதும் உண்மையாக இருக்க விரும்புகிறோம். நிறைய யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய நம்பிக்கைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அங்கும் அந்தச் சகோதர சகோதரிகள் தொடர்ந்து பிரசங்கிக்கிறார்கள். இப்படி அப்போஸ்தலன் பவுலைப் போலவே இருக்கிறார்கள். பவுல், பல வருஷங்களாக வீட்டுக் காவலிலும் சிறையிலும் இருந்தார். (அப். 24:27; 28:16, 30) அந்தச் சமயத்தில் சிறைக் காவலர்கள், அரண்மனை அதிகாரிகள், ஆளுநர்கள், ராஜாக்கள் என காதுகொடுத்து கேட்ட எல்லாரிடமும் நல்ல செய்தியைச் சொன்னார். ரோமப் பேரரசன் நீரோவின் அதிகாரிகளிடம்கூட அவர் நல்ல செய்தியைச் சொல்லியிருக்கலாம்.—அப். 9:15.
10 அவரைப் போலவே சிறையில் இருக்கும் நம் சகோதர-சகோதரிகளும் நீதிபதிகள், அரசாங்க அதிகாரிகள், காவலாளிகள் என காதுகொடுத்து கேட்கும் எல்லாருக்கும் நல்ல செய்தியைச் சொல்கிறார்கள். நடுநிலையாக இருந்ததற்காக ஒரு சகோதரர் ஆறு வருஷங்களுக்குமேல் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த நாட்கள் தனக்குத் தண்டனையாகத் தெரியவில்லை, நல்ல மனமுள்ளவர்களைக் கண்டுபிடிக்க யெகோவா கொடுத்த நியமிப்பாகத்தான் தெரிந்தது என்று அவர் சொன்னார். இதேமாதிரி நல்ல செய்தியைச் சொல்ல யெகோவா நம்மை பயன்படுத்தினால் நிச்சயமாக நாமும் சந்தோஷப்படுவோம்! (கொலோ. 4:3) யெகோவாவுக்குச் சேவை செய்வதால் மற்றவர்கள் நம்மை வெறுக்கும்போது, நாம் சந்தோஷமாக இருக்க இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.
உலகம் நம்மை வெறுத்தாலும் நாம் ஏன் சந்தோஷமாக இருக்கலாம்
11. துன்புறுத்தலை அனுபவிப்பது விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தும்? ஒரு உதாரணம் கொடுங்கள்.
11 உலகத்தின் வெறுப்பு பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம். யெகோவாமேல் அன்பு காட்டி அவருக்குச் சேவை செய்கிறவர்களை, சாத்தானும் அவனுடைய ஆட்களும் வெறுப்பார்கள் என்று முதல் தீர்க்கதரிசனத்திலேயே யெகோவா சொல்லிவிட்டார். (ஆதி. 3:15) அது உண்மை என்பதை இயேசு அடிக்கடி சொல்லிக் காட்டினார். நான்கு சுவிசேஷ புத்தகங்களிலும் அது பதிவாகி இருக்கிறது. (மத். 10:22; மாற். 13:9-12; லூ. 6:22, 23; யோவா. 15:20) பைபிளை எழுதிய மற்றவர்களும் அதைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். (2 தீ. 3:12; யாக். 1:2; 1 பே. 4:12-14; யூதா 3, 17-19) அதனால், துன்புறுத்துதல் வரும்போது நாம் அதிர்ச்சி ஆவதில்லை. பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது என்று சந்தோஷப்படுகிறோம். உண்மையான கடவுளை நாம் வணங்குகிறோம் என்பதற்கு இது பெரிய ஆதாரம்! நம் வேலைகளுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கும் நாட்டில் வாழும் ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “நான் யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்தபோது, இப்போதோ பிறகோ எனக்குத் துன்புறுத்தல் வரும் என்று நன்றாகத் தெரியும். அதனால் துன்புறுத்தல் வந்தபோது நான் பயப்படவும் இல்லை ஆச்சரியப்படவும் இல்லை.” இந்தச் சகோதரியை நிறையப் பேர் எதிர்த்தார்கள். அதில் அவருடைய கணவரும் ஒருவர். அவர் சகோதரியை மோசமாக நடத்தினார். பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் எரித்தார். பயத்தில் முடங்கிப் போவதற்குப் பதிலாக நம் சகோதரி விசுவாசத்தில் பலசாலியாக ஆனார். (எபி. 10:39) அவர் இப்படிச் சொல்கிறார்: “துன்புறுத்தல் வரும் என்பது தீர்க்கதரிசனம். அதனால் கண்டிப்பாகத் துன்புறுத்தல் வரும் என்று எனக்குத் தெரியும். அதை அனுபவித்தபோது நான் உண்மையான மதத்தில்தான் இருக்கிறேன் என்ற உறுதி எனக்குக் கிடைத்தது.”
12. துன்புறுத்தலைத் தாக்குப்பிடிக்க ஒரு சகோதரருக்கு எது உதவியது?
12 துன்புறுத்தல் வரும் என்று எதிர்பார்த்து இருந்தாலும், அதைத் தாங்கிக்கொள்வது சவால்தான். சிறையில் இருந்த சமயத்தைப் பற்றி ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “சிலநேரம் ரொம்ப வேதனையாக இருக்கும். சோர்ந்துபோவேன், அழுவேன்.” தாக்குப்பிடிக்க இந்தச் சகோதரருக்கு எது உதவியது? அவரே இப்படிச் சொன்னார்: “நான் எப்போதும் ஜெபம் செய்வேன். ஒவ்வொரு நாளையும் ஜெபம் செய்துதான் ஆரம்பிப்பேன். எப்போது கஷ்டங்கள் வந்தாலும் உடனே ஜெபம் செய்வேன். அநியாயம் நடக்கும்போது கோபம் வரும். அப்போது கழிவறைக்குள் போய் கதவைப் பூட்டிக்கொண்டு ஜெபம் செய்வேன்.” பைபிள் காலத்திலும் நம் காலத்திலும் உண்மையாக இருந்தவர்களுடைய உதாரணங்களைச் சகோதரர் யோசித்துப் பார்த்திருக்கிறார். துன்புறுத்தலைத் தாக்குப்பிடிக்க அதுவும் அவருக்கு உதவியது. இயேசு, தன் சீஷர்களுக்குக் கொடுப்பதாக வாக்குக்கொடுத்த சமாதானம் அவருக்குக் கிடைத்தது.—யோவா. 14:27; 16:33.
13. வெறுப்பை வெல்ல எது உதவும்?
13 வெறுப்பைவிட பலமாக இருக்கும் அன்பு நமக்குக் கிடைக்கிறது. கடைசி மூச்சுவரை இயேசு அவருடைய அப்பாமேல் ரொம்ப அன்பாக இருந்தார். அவருடைய நண்பர்கள் மேலும் அன்பு காட்டினார். (யோவா. 13:1; 15:13) நாமும் யெகோவா மீதும் நம் சகோதர-சகோதரிகள் மீதும் அப்படிப்பட்ட அன்பை வளர்த்துக்கொண்டால் வெறுப்பை வெல்லலாம். எப்படி? பதில் தெரிந்துகொள்ள அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பார்க்கலாம்.
14. மரணம் வந்தபோதும் உறுதியாய் நிற்க பவுலுக்கு எது உதவியது?
14 பவுல் கொலை செய்யப்படுவதற்குக் கொஞ்சம் முன்பு அவருடைய அன்பான நண்பன் தீமோத்தேயுவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இப்படிச் சொன்னார்: ‘கடவுள் தருகிற சக்தி நமக்குக் கோழைத்தனத்தை அல்ல, வல்லமையையும் அன்பையும் கொடுக்கிறது.’ (2 தீ. 1:7) பவுல் சொன்னதற்கு என்ன அர்த்தம்? யெகோவாமேல் பலமான அன்பு இருந்தால் ஒரு கிறிஸ்தவர் எப்படிப்பட்ட துன்புறுத்தலையும் சந்திக்கத் தயாராக இருப்பார். (2 தீ. 1:8) யெகோவாவுக்குச் சேவை செய்வதால் மரணத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பவுலுக்குத் தெரியும். ஆனால், யெகோவாமேல் பலமான அன்பு இருந்ததால் பவுல் தைரியமாகவும் உண்மையாகவும் இருந்தார்.—அப். 20:22-24.
15. நம்முடைய காலத்தில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் சுயநலமில்லாத அன்பை எப்படிக் காட்டியிருக்கிறார்கள்? (படத்தையும் பாருங்கள்.)
15 துன்புறுத்தல் வரும்போது உறுதியாய் இருக்கிற நம் சகோதர-சகோதரிகள்மேல் நாம் ரொம்பப் பாசம் வைத்திருக்கிறோம். அன்று உயிரையே பணயம் வைத்து பவுலுக்கு உதவிய ஆக்கில்லா-பிரிஸ்கில்லாளைப் போல, இன்று நம் சகோதர-சகோதரிகளுக்கு உதவ சிலர் அவர்களுடைய உயிரையே மனதார பணயம் வைக்கிறார்கள். (ரோ. 16:3, 4) உதாரணமாக ரஷ்யாவில், கைது செய்யப்பட்ட சகோதர சகோதரிகளைப் பார்ப்பதற்காக நிறையப் பேர் நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். ஒருசமயம் கைது செய்யப்பட்ட ஒரு சகோதரியைப் பார்ப்பதற்காக நிறையச் சகோதர சகோதரிகள் நீதிமன்றத்துக்கு வந்தார்கள். அதைப் பார்த்தபோது அந்தச் சகோதரி வாயடைத்து போனார். கொஞ்ச நேரத்துக்கு அவரால் பேசக்கூட முடியவில்லை. சரியான சமயத்தில் சகோதர சகோதரிகள் காட்டிய சுயநலமில்லாத அன்பு அவரைத் தூக்கி நிறுத்தியது. வெறுப்பையும் வெல்லும் அன்பு நமக்குக் கிடைப்பதால் நாம் சந்தோஷமாக இருக்கலாம்!
நம் வேலைகளுக்குத் தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் இருக்கும் நாடுகளிலும் சகோதர சகோதரிகள் சுயநலமில்லாத அன்பைக் காட்டுகிறார்கள் (பாரா 15)c
16. கடவுளுக்குச் சேவை செய்வதால் மோசமாக நடத்தப்பட்டாலும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று அப்போஸ்தலன் பேதுரு ஏன் சொன்னார்? (1 பேதுரு 4:14)
16 வெறுப்பைச் சகித்திருந்தால் கடவுள் நம்மை ஏற்றுக்கொள்வார். (1 பேதுரு 4:14-ஐ வாசியுங்கள்.) கடவுளுக்குச் சேவை செய்வதால் மோசமாக நடத்தப்பட்டாலும், அதைச் சகித்திருப்பவர்கள் சந்தோஷமானவர்கள் என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். அது எப்படி? துன்புறுத்தலைச் சகிப்பது, ‘கடவுளுடைய சக்தி நம்மேல் தங்கியிருப்பதற்கு’ அடையாளம். இப்படித் துன்புறுத்தலைச் சகித்துக்கொண்டு கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவது எவ்வளவு சந்தோஷத்தைத் தரும் என்று பேதுருவுக்குத் தெரியும். கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் ஆலயத்தின் காவலர்கள் கைது செய்தார்கள். ஆனால் பேதுரு அவர்களிடம் தைரியமாகப் பேசினார். (அப் 5:24-29) பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் அடித்தார்கள். ஆனாலும் ஊழியம் செய்வதை அவர்கள் நிறுத்தவில்லை. “[இயேசுவுடைய] பெயருக்காகத் தாங்கள் அவமானப்படத் தகுதியுள்ளவர்களெனக் கருதப்பட்டதை நினைத்து அப்போஸ்தலர்கள் சந்தோஷமாக” இருந்தார்கள். நமக்குத் துன்புறுத்தல் வரும்போது நம்மாலும் சந்தோஷமாக இருக்க முடியும்.—அப். 5:40-42.
17. இறப்பதற்கு முந்தின இரவு இயேசு தன் சீஷர்களிடம் என்ன சொன்னார்?
17 இயேசு, தான் இறப்பதற்கு முந்தின இரவு அவருடைய சீஷர்களிடம் இப்படிச் சொன்னார்: ‘என்மேல் அன்பு காட்டுகிறவனிடம் என் தகப்பனும் அன்பு காட்டுவார், நானும் அவன்மேல் அன்பு காட்டுவேன்.’ (யோவா. 14:21) சீக்கிரத்தில், யெகோவாவுக்குச் சேவை செய்கிறவர்களை மக்கள் வெறுப்பதற்குப் பதிலாக அன்பு காட்டுவார்கள். அந்தக் காலத்துக்காக நாம் ஆசையாகக் காத்திருக்கிறோம். (2 தெ. 1:6-8) அந்தக் காலம் வரும்வரை உறுதியாக இருக்கலாம். ஏனென்றால், உலகம் நம்மை வெறுத்தாலும் நாம் சந்தோஷமாக இருக்க நிறையக் காரணங்கள் இருக்கின்றன!
பாடல் 149 ஒரு வெற்றிப் பாடல்
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b படவிளக்கம்: பள்ளியில் இக்னாஸியோவுக்கு நடந்தது சித்தரிக்கப்பட்டுள்ளது.
c படவிளக்கம்: விசுவாசத்துக்காகக் கைது செய்யப்பட்டு கொண்டுபோகப்படும் ஒரு சகோதரியை, சகோதர சகோதரிகள் உற்சாகப்படுத்துவது சித்தரிக்கப்பட்டுள்ளது.