பைபிள் உதாரணம்
பெனாயா—தைரியத்துக்கும் உண்மைத்தன்மைக்கும் எடுத்துக்காட்டு
தாவீது ராஜாவுக்கும் சாலொமோன் ராஜாவுக்கும் சேவை செய்த ஒரு தைரியமான போர்வீரர்தான் பெனாயா. அவர் ஒரு குருவின் மகன். பொதுவாக, குருமார்களும் லேவியர்களும் போர் ஆயுதங்களை ஏந்தவோ, போரில் களம் இறங்கவோ மாட்டார்கள். ஆனால், பெனாயா யெகோவாவின் போர்களில் கலந்துகொண்டார்; அஞ்சாநெஞ்சம் உள்ளவர் என்பதைப் பல தடவை நிரூபித்தார். ஒருசமயம், தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தைக் கொன்றுபோட்டார். ஆயுதம் ஏந்திய ஒரு ராட்சதனையும் வீழ்த்தினார். தாவீதின் நம்பிக்கையை பெனாயா சம்பாதித்திருந்ததால், அவரை தாவீது தன் மெய்க்காவலர்களுக்குத் தலைவராக நியமித்தார்.—2 சா. 23:20-23.
அப்சலோமும் அதோனியாவும் தாவீதுக்கு எதிராகக் கலகம் செய்த சமயங்களில், பெனாயா தாவீதுக்கு உண்மையாக இருந்தார். (2 சா. 8:18; 15:18; 1 ரா. 1:8) தாவீதின் வயதான காலத்தில், சாலொமோனை ராஜாவாக முடிசூட்டுவதில் பெனாயா ஆதரவு கொடுத்தார். (1 ரா. 1:32-40) யெகோவாவுக்கும் அவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கும், மற்றவர்கள் உண்மையில்லாமல் போனபோதுகூட பெனாயா உண்மையோடு இருந்தார்.
இன்று, நம்முடைய கொடூர எதிரியான சாத்தானையும் அவனுடைய ஆட்களையும் எதிர்த்துப் போராட நமக்கும் தைரியம் தேவை. யெகோவாவின் நெறிமுறைகளின்படி வாழ நாம் உறுதியாக இருக்க வேண்டும். (எபே. 6:11; 1 பே. 5:8, 9) யெகோவாவைவிட்டு சிலர் விலகிப்போனாலும், நாம் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அவர் கண்டிப்பாக நமக்குப் பலன் கொடுப்பார்!—2 சா. 22:26.