மே 25-31, 2026
பாட்டு 135 யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’
விவேகம் இருந்தால் வெற்றி நிச்சயம்!
“விவேகத்தோடு ஒரு காரியத்தைச் செய்கிறவன் வெற்றி பெறுவான்.”—நீதி. 16:20.
என்ன கற்றுக்கொள்வோம்?
எந்தவொரு விஷயத்தைச் செய்வதற்கு முன்பும் நிறுத்தி நிதானமாகச் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால், எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையையும் நம்மால் சரியாகச் சமாளிக்க முடியும்.
1-2. விவேகம் என்றால் என்ன, இந்தக் குணம் நமக்கு எப்படி உதவும்?
உங்களை யாராவது மரியாதை இல்லாமல் நடத்தியது போல தோன்றியிருக்கிறதா? உங்களைப் புரிந்துகொள்ளாத மாதிரியோ அநியாயமாக நடத்திய மாதிரியோ தோன்றியிருக்கிறதா? ஒரு விஷயத்தைச் செய்ய உங்களுக்குப் பயமாக இருந்திருக்கிறதா? இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நல்லபடியாக நடந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்கலாம். ஆனால், அப்போதும் நல்ல விதமாக நடந்துகொள்ள உதவும் ஒரு குணத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது. அதுதான் விவேகம்!
2 விவேகமாக நடந்துகொள்ளும் ஒருவர், வெறுமனே பார்க்கும் விஷயங்களை வைத்து அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க மாட்டார். அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளைத் தெரிந்துகொள்வார். உதாரணத்துக்கு, ஒரு விஷயம் ஏன் இப்படி நடந்தது, ஒருவர் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்பதைப் புரிந்துகொள்வார். நமக்கு விவேகம் இருந்தால், ஞானமான முடிவுகளை எடுப்போம். நம் ‘உதடுகளை அடக்குவோம்,’ எப்போது அமைதியாக இருக்க வேண்டுமோ அப்போது “அமைதியாக” இருப்போம். (நீதி. 10:19; சங். 4:4) விவேகம் இருந்தால், நம்மை எரிச்சல்படுத்தும் சூழ்நிலைகளிலும் நாம் கோபத்தைக் கட்டுப்படுத்துவோம், மற்றவர்களைத் தாராளமாக மன்னிப்போம். அதோடு, யாராவது நமக்கு ஆலோசனை கொடுத்தால் அதை மனதார ஏற்றுக்கொள்வோம். (நீதி. 19:20) விவேகத்தோடு நடந்துகொள்ளும்போது யெகோவா நம்மைப் பார்த்து சந்தோஷப்படுவார், நமக்கும் நம்மைச் சுற்றி இருக்கிறவர்களுக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும். அதுவும் ரொம்ப முக்கியமாக, நம் கோபத்தைச் சீண்டி பார்க்கும் சூழ்நிலைகளிலும் நாம் எரிச்சல் அடைய மாட்டோம், முட்டாள்தனமாக எதையும் செய்துவிட மாட்டோம். இப்போது, மூன்று பைபிள் உதாரணங்களைப் பார்க்கலாம். அதிலிருந்து மனத்தாழ்மையாக இருக்க... சாந்தமாக இருக்க... யெகோவாவை முழுமையாக நம்பி இருக்க... விவேகம் நமக்கு எப்படி உதவும் என்று தெரிந்துகொள்வோம்.
பெருமை இல்லாமல் மனத்தாழ்மையாக இருங்கள்
3. நாகமான் யார்?
3 சரியான விஷயத்தைச் செய்ய வேண்டும் என்றால், நம்மிடம் பெருமை இருக்கக் கூடாது. (1 பே. 5:5) அதற்கு விவேகம் நமக்கு உதவும். இதைப் புரிந்துகொள்ள நாகமானின் உதாரணத்தைப் பார்க்கலாம். நாகமான் சீரியாவில் வாழ்ந்து வந்தார். சீரியா, இஸ்ரவேலுக்கு வடக்கில் இருந்த ஒரு தேசம். நாகமான் சீரியப் படைத் தளபதி, ரொம்பச் செல்வாக்குள்ள ஒருவர். ஆனால், அவர் தொழுநோயால் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தார்.—2 ரா. 5:1.
4. இஸ்ரவேல் சிறுமி சொன்னதைக் கேட்டு நாகமான் என்ன செய்யவில்லை, என்ன செய்தார்?
4 நாகமானின் மனைவியிடம் ஒரு இஸ்ரவேல் சிறுமி வேலைக்காரப் பெண்ணாக இருந்தாள். அவள் நாகமானின் மனைவியிடம், இஸ்ரவேலில் இருக்கும் கடவுளுடைய தீர்க்கதரிசியால் நாகமானின் தொழுநோயைக் குணப்படுத்த முடியும் என்று சொன்னாள். (2 ரா. 5:2, 3) ஒருவேளை நாகமான், ‘இவள் ஒரு சின்னப் பெண், அதுவும் என் எதிரி தேசத்திலிருந்து வந்தவள். எனக்கு உதவுகிற மாதிரி பெரிதாக இவள் என்ன சொல்லிவிடப் போகிறாள்’ என்று யோசித்திருக்கலாம். ஆனால், நாகமான் அப்படிச் செய்யவில்லை. பெருமையோடு அவள் சொன்னதை ஒதுக்கித் தள்ளாமல், மனத்தாழ்மையோடு அவள் சொன்னதை நன்றாக யோசித்துப் பார்த்தார். அதனால், சீரிய ராஜாவிடம் அனுமதி வாங்கிவிட்டு உடனே இஸ்ரவேலுக்குப் புறப்பட்டுப் போனார். நோய் குணமாக வேண்டும் என்ற ஏக்கத்தோடு கிளம்பினார்.—2 ரா. 5:4, 5.
5. நாகமான் இஸ்ரவேலுக்கு வந்தபோது என்ன நடந்தது?
5 நாகமான், இஸ்ரவேலின் ராஜா யோராமிடம் வந்து சேர்ந்தார். தன்னைக் குணப்படுத்தச் சொல்லி சீரியா ராஜா கொடுத்து அனுப்பிய கடிதத்தை அவரிடம் கொடுத்தார். அதைப் பார்த்ததும் யோராம் தன் உடையைக் கிழித்துக்கொண்டார். சீரியா ராஜா தன்னை வம்புக்கு இழுத்து சண்டைக்குக் கூப்பிடுவதாக நினைத்தார். இதைக் கேள்விப்பட்ட எலிசா தீர்க்கதரிசி, நாகமானைத் தன்னிடம் அனுப்பி வைக்கும்படி சொன்னார். (2 ரா. 5:6-9) நாகமான் அங்கே போனபோது அவர் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. எலிசா, வீட்டைவிட்டு வெளியே வந்து நாகமானை வரவேற்கவும் இல்லை அவரிடம் பேசவும் இல்லை. வெறுமனே ஒரு ஆள் அனுப்பி நாகமான் செய்ய வேண்டியதை அவரிடம் சொன்னார்.—2 ரா. 5:10.
6. (அ) நாகமானுக்கு ஏன் கோபம் வந்திருக்கலாம்? (ஆ) நாகமானின் ஊழியர்கள் எப்படி விவேகமாக நடந்துகொண்டார்கள், அதனால் என்ன ஆனது? (2 ராஜாக்கள் 5:13, 14)
6 இது நாகமானுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால், “பயங்கர கோபமடைந்து, அங்கிருந்து புறப்பட்டார்.” (2 ரா. 5:11, 12) ஒரு படைத் தளபதிக்குக் கொடுக்க வேண்டிய கவுரவத்தையும் மரியாதையையும் எலிசா தனக்குக் கொடுக்கவில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். அதோடு, சீரியா தேசத்தையே எலிசா அவமானப்படுத்தியதாகவும் நினைத்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் சரி, குணமாகாமலேயே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், நாகமானின் ஊழியர்கள் விவேகமாக நடந்துகொண்டார்கள். நாகமானுக்கு உதவத்தான் எலிசா நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள். அதனால், நாகமானிடம் அவருடைய முடிவை மாற்றச் சொல்லி கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். நாகமான் பெருமையை ஒதுக்கி வைத்துவிட்டு எலிசா சொன்னதை மனத்தாழ்மையாகச் செய்தார். அதனால், குணமானார்!—2 ராஜாக்கள் 5:13, 14-ஐ வாசியுங்கள்.
7. நாகமானிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (நீதிமொழிகள் 22:4) (படங்களையும் பாருங்கள்.)
7 நமக்கு என்ன பாடம்? நமக்கு விவேகம் இருந்தால், வெறுமனே பார்க்கும் விஷயங்களை வைத்து அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காமல், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளைத் தெரிந்துகொண்டு முடிவுகளை எடுப்போம். அதோடு, உணர்ச்சிவசப்பட்டு எந்த விஷயத்தையும் செய்ய மாட்டோம், மனத்தாழ்மையாக இருப்போம். மனத்தாழ்மை இருந்தால் ‘எனக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்பதுபோல் நடந்துகொள்ள மாட்டோம். மற்றவர்களுடைய உதவி, முக்கியமாக யெகோவாவின் உதவி தேவை என்பதைப் புரிந்திருப்போம். நாகமான் அப்போது யெகோவாவை வணங்க ஆரம்பிக்கவில்லை. ஆனாலும், விவேகத்தைக் காட்டினார். மற்றவர்கள் சொன்னதை மனத்தாழ்மையோடு கேட்டார். இஸ்ரவேல் சிறுமி சொன்னதை... அவருடைய ஊழியர்கள் சொன்னதை... ரொம்ப முக்கியமாக, யெகோவாவின் தீர்க்கதரிசி எலிசா சொன்னதை... கேட்டார். நாகமான் பெருமையை ஒதுக்கித் தள்ளினார். அதனால், ஞானமான முடிவை எடுத்தார், நன்மையடைந்தார். நாம் என்ன செய்ய வேண்டும்? ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன்பு அல்லது மனதில் பட்டதைச் சொல்வதற்கு முன்பு நிறுத்தி நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, பைபிளிலிருந்து ஒருவர் கொடுத்த ஆலோசனையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம், அல்லது அமைப்பு கொடுத்த ஒரு வழிநடத்துதல் நமக்குப் புரியாமல் இருக்கலாம். அந்த மாதிரி சமயங்களில் நாம் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பது நாம் மனத்தாழ்மையோடு இருக்கிறோமா பெருமையோடு இருக்கிறோமா என்பதைக் காட்டிவிடும்.—நீதிமொழிகள் 22:4-ஐ வாசியுங்கள்.
மற்றவர்கள் நமக்கு அறிவுரை கொடுக்கும்போது... ஆலோசனை சொல்லும்போது... அமைப்பிடம் இருந்து வழிநடத்துதல் கிடைக்கும்போது... நாகமானைப் போல நாமும் மனத்தாழ்மையோடு அதைக் கேட்க வேண்டும் (பாரா 7)
கோபப்படாமல் சாந்தமாக இருங்கள்
8. எந்த மாதிரி சமயங்களில் சாந்தமாக இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்?
8 நமக்கு விவேகம் இருந்தால், நம் கோபத்தைச் சீண்டி பார்க்கும் சமயங்களிலும் நாம் சாந்தமாக இருப்போம். உண்மைதான், சாந்தமாக இருப்பது எல்லா சமயத்திலும் சுலபம் கிடையாது. அதுவும், யாராவது நம்மை அநியாயமாக நடத்தினாலோ நம்மைக் காயப்படுத்துகிற மாதிரி பேசினாலோ நமக்குக் கோபம் வருவது இயல்புதான். (எபே. 4:26) தாவீதும் அபிகாயிலும் பதட்டமான ஒரு சூழ்நிலையில் எப்படி விவேகமாக நடந்துகொண்டார்கள் என்று இப்போது பார்க்கலாம்.
9. நாபால் தாவீதை எப்படி நடத்தினான்?
9 ஒருசமயம், சவுலிடமிருந்து தப்பித்து ஓடியபோது தாவீதும் அவருடைய ஆட்களும் பாரான் வனாந்தரத்துக்குப் போனார்கள். (1 சா. 25:1) அங்கே இருந்தபோது, நாபால் என்ற பணக்காரனுடைய மந்தையையும் மேய்ப்பர்களையும் பாதுகாத்தார்கள். (1 சா. 25:15, 16) ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் சமயம் வந்தது. அப்போது, தாவீது அவருடைய ஆட்களை நாபாலிடம் அனுப்பி, கொஞ்சம் உணவு கொடுக்கச் சொல்லி ரொம்ப மனத்தாழ்மையாகவும் மரியாதையாகவும் கேட்டார். (1 சா. 25:6-8) ஆனால் நாபால் கொஞ்சம்கூட நன்றியோடு நடந்துகொள்ளவில்லை. அதோடு, தாவீதையும் அவருடைய ஆட்களையும் ரொம்ப மோசமாக நடத்தினான், கேவலமாகப் பேசினான்.—1 சா. 25:10, 11.
10. தாவீதும் அபிகாயிலும் எப்படி விவேகமாக நடந்துகொண்டார்கள்? (1 சாமுவேல் 25:32, 33) (படத்தையும் பாருங்கள்.)
10 தாவீதுடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? கண்டிப்பாகக் கோபம் வந்திருக்கும். அதனால், தாவீது ஏன் அவ்வளவு கோபப்பட்டார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தச் சமயத்தில் அவருக்குப் பயங்கர கோபம் வந்து, நாபாலைக் கொல்ல வேண்டும் என்று நினைத்தார். (1 சா. 25:13, 21, 22) அவனைக் கொல்வதற்காகக் கிளம்பிப் போனபோது, நாபாலின் புத்திசாலியான மனைவி அபிகாயில், தாவீதையும் அவருடைய ஆட்களையும் தடுத்து நிறுத்தினாள். அபிகாயில் எப்படி விவேகமாக நடந்துகொண்டாள்? தாவீது கோபமாக இருந்தாலும் அவர் ரொம்ப நல்லவர் என்பதைப் புரிந்து வைத்திருந்தாள். அதனால், தாவீதின் கோபத்தைத் தணிப்பதற்காக தன்னால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்தாள். தாராளமாக நிறைய அன்பளிப்புகளைக் கொடுத்தாள், சில ஞானமான ஆலோசனைகளையும் கொடுத்தாள். (1 சா. 25:18, 23-31) தாவீதும் விவேகத்தைக் காட்டினார். அபிகாயில் சொன்ன ஆலோசனையைக் கவனித்துக் கேட்டார், அதை ஏற்றுக்கொண்டார். யெகோவா யோசிக்கிற மாதிரி யோசித்துதான் அபிகாயில் அந்த ஆலோசனையைக் கொடுத்தாள் என்று புரிந்துகொண்டார். அதனால், தாவீதின் கோபம் தணிந்தது, அவர் சாந்தமானார். இப்படி, ஒரு பெரிய பாவத்தைச் செய்வதிலிருந்து தப்பித்தார்.—1 சாமுவேல் 25:32, 33-ஐ வாசியுங்கள்.
பதட்டமான ஒரு சூழ்நிலையில் தாவீதும் அபிகாயிலும் விவேகமாக நடந்ததால், பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டன (பாரா 10)
11. யாராவது நம்மைக் கோபப்படுத்தினாலும் நாம் விவேகமாக இருந்தால் எப்படி நடந்துகொள்வோம்? (நீதிமொழிகள் 19:11)
11 நமக்கு என்ன பாடம்? சிலசமயங்களில், நாம் கோபப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், விவேகமாக நடந்துகொள்ளும்போது அந்தச் சூழ்நிலையிலும் நம்மால் சாந்தமாக இருக்க முடியும். கோபமாக நடந்துகொள்வதால் வரும் பின்விளைவுகளை யோசித்துப் பார்க்கும்போது நாம் சாந்தமாக இருப்போம், ஞானமான முடிவுகளை எடுப்போம். (நீதிமொழிகள் 19:11-ஐ வாசியுங்கள்.) தாவீது தவறு செய்துவிட்டால் யெகோவா எவ்வளவு வருத்தப்படுவார் என்பதை அபிகாயில் ஞாபகப்படுத்தியபோது தாவீதின் கோபம் உடனே தணிந்தது. உங்களை யாராவது கோபப்படுத்தினாலோ எரிச்சல்படுத்தினாலோ முன்பின் யோசிக்காமல் சட்டென்று எதுவும் செய்துவிடாதீர்கள். (யாக். 1:19) யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அந்த விஷயத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று யோசித்துப் பார்க்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் கோபம் தணிந்து நீங்கள் சாந்தமாக நடந்துகொள்வீர்கள்.
12. விவேகமாகவும் சாந்தமாகவும் நடந்துகொள்ள மற்றவர்கள் நமக்கு எப்படி உதவி செய்யலாம்?
12 தாவீதுக்கு உதவ யெகோவா அபிகாயிலைப் பயன்படுத்தினார். அதேமாதிரி, நமக்கு உதவ யெகோவா சகோதர சகோதரிகளைப் பயன்படுத்துவார். அப்போது நம்மாலும் யெகோவா மாதிரியே யோசிக்க முடியும். அதனால், உங்கள் கோபத்தைச் சீண்டி பார்க்கிற ஒரு சூழ்நிலை வரும்போது, அவசரப்பட்டு எதையும் செய்துவிடாதீர்கள். முதிர்ச்சியுள்ள ஒருவரிடம் அதைப் பற்றி பேசுங்கள். யெகோவா யோசிக்கிற மாதிரி யோசிக்க, அவர் உங்களுக்கு உதவுவார். (நீதி. 12:15; 20:18) சிலசமயம், உங்களுடைய நண்பர்கள் எதையாவது நினைத்து கோபமாக இருக்கலாம். அப்போது, அபிகாயில் மாதிரி அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அந்தச் சூழ்நிலையை யெகோவா பார்க்கிற மாதிரி பார்க்க அவருக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் விவேகமாகவும் சாந்தமாகவும் நடந்துகொள்ள நீங்கள் செய்யும் உதவியையும், அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சியையும் யெகோவா கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்.
பயப்படாமல் நம்பிக்கையாக இருங்கள்
13. பயத்தைச் சமாளிக்க விவேகம் நமக்கு எப்படி உதவும்?
13 நம் எல்லாருக்குமே சிலசமயங்களில் பயம் வருவது இயல்புதான். ஆனால் விவேகம் இருந்தால், அந்தப் பயத்தைத் தாண்டிப் பார்ப்போம். நமக்குப் பயத்தைக் கொடுக்கும் எந்தவொரு சூழ்நிலையும் யெகோவாவுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்பதைப் புரிந்துகொள்வோம். அப்போது, பயமாக இருந்தாலும் யெகோவாவை நம்பி இருப்போம். (சங். 27:1) தீர்வே இல்லை என்று நாம் நினைக்கும் பிரச்சினைகளுக்கும் யெகோவாவால் தீர்வைக் கொடுக்க முடியும், நமக்கு உதவி செய்ய முடியும். யோனா தீர்க்கதரிசியின் வாழ்க்கையிலும் இதுதான் நடந்தது. அவர் யெகோவாமேல் ரொம்ப அன்பு வைத்திருந்தார். ஆனால், யெகோவா அவருக்கு ஒரு கஷ்டமான நியமிப்பைக் கொடுத்தபோது அவர் பயந்துபோனார்.
14. யெகோவா கொடுத்த நியமிப்பைச் செய்ய யோனா ஏன் பயந்திருக்கலாம்?
14 ரொம்பத் தைரியத்தோடு செய்ய வேண்டிய ஒரு நியமிப்பை யெகோவா யோனாவுக்குக் கொடுத்தார். நினிவேக்குப் போய் அங்கிருந்த மக்களிடம், யெகோவா அவர்களை அழிக்கப்போகிறார் என்ற செய்தியை யோனா சொல்ல வேண்டியிருந்தது. (யோனா 1:1, 2) அப்படி ஒரு நியமிப்பு உங்களுக்குக் கிடைத்திருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? பயமாக இருந்திருக்கும். இஸ்ரவேலில் இருந்து அசீரிய நகரமான நினிவேக்கு நடந்துபோக கிட்டத்தட்ட ஒரு மாதம் எடுக்கும். அதுமட்டுமல்ல, அசீரியர்கள் ரொம்ப முரட்டுத்தனமானவர்கள், கொடூரமானவர்கள். நினிவே ‘இரத்தக்கறை படிந்த நகரம்’ என்றும் பைபிள் சொல்கிறது. (நாகூ. 3:1, 7) அதனால், யெகோவா சொன்னதைச் செய்வதற்குப் பதிலாக யோனா ஓடிப்போக நினைத்தார்.—யோனா 1:3.
15. யெகோவாமேல் இருக்கும் நம்பிக்கையை இன்னும் அதிகமாக்க யோனாவுக்கு எது உதவியது? (யோனா 2:6-9)
15 நினிவேக்கு எதிர் திசையில் போகும் ஒரு கப்பலில் யோனா ஏறிப் போனார். பின்பு, அவரைத் தூக்கிக் கடலில் வீசினார்கள். அப்போது, அற்புதமான விதத்தில் யோனாவின் உயிரை யெகோவா காப்பாற்றினார். இதிலிருந்து, யெகோவாவுக்கு எவ்வளவு வல்லமையும் சக்தியும் இருக்கிறது என்பதை யோனா புரிந்துகொண்டார். (யோனா 1:15, 17) அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, யோனா அவருடைய பயத்தைத் தாண்டிப் பார்க்கக் கற்றுக்கொண்டார். நினிவேக்குப் போவதை நினைத்து பயப்பட தேவையில்லை, எப்படிப்பட்ட ஆபத்துகளிலிருந்தும் யெகோவாவால் தன்னைப் பாதுகாக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டார். (யோனா 2:6-9-ஐ வாசியுங்கள்.) அதனால், யெகோவா அவரை மறுபடியும் நினிவேக்குப் போக சொன்னபோது, கீழ்ப்படிந்து உடனே அங்கே போனார். யெகோவா சொன்ன செய்தியை அங்கிருந்த மக்களிடம் சொன்னார். அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது.—யோனா 3:5.
16. பயத்தைச் சமாளிக்க விவேகம் எப்படி உதவும்? (நீதிமொழிகள் 29:25) (படங்களையும் பாருங்கள்.)
16 நமக்கு என்ன பாடம்? மனிதர்கள் ஏதாவது சொல்லிவிடுவார்களோ செய்துவிடுவார்களோ என்று பயந்து, யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையில் பின்வாங்கிவிடக் கூடாது. (நீதிமொழிகள் 29:25-ஐ வாசியுங்கள்.) யோனாவுக்கு விவேகம் இருந்ததால், அவருடைய நியமிப்பில் இருந்த பிரச்சினையைப் பற்றியே யோசிக்காமல், யெகோவாவால் அவருக்கு எப்படியெல்லாம் உதவி செய்ய முடியும் என்று யோசித்தார். அதேபோல் நாமும், யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார், நம்மை எப்படியெல்லாம் பாதுகாத்திருக்கிறார் என்று நன்றாக யோசித்துப் பார்த்தால், நம் பயத்தைத் தாண்டி வருவோம். அதோடு, நம் சகோதர சகோதரிகளுடைய அனுபவங்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும். யெகோவாவை நம்பியிருந்ததால் அவர்கள் எப்படிப் பயங்கரமான பிரச்சினைகளைத் தாண்டி வந்தார்கள், கஷ்டமான நியமிப்புகளைச் செய்து முடித்தார்கள் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.a (எபி. 13:6) அப்போது, நாம் யெகோவாவை நம்பி விவேகமாக நடப்போம். அப்படிச் செய்ய மற்றவர்களுக்கும் உதவுவோம்.
யோனா யெகோவாவையே நம்பி இருக்க கற்றுக்கொண்டார், யெகோவா கொடுத்த நியமிப்பைச் செய்துமுடித்தார் (பாரா 16)
தொடர்ந்து விவேகமாக நடங்கள்
17. தொடர்ந்து விவேகமாக நடக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
17 நமக்கு விவேகம் இருந்தால், வாழ்க்கையில் வரும் எல்லா பிரச்சினைகளையும் நம்மால் நன்றாகச் சமாளிக்க முடியும். அப்படியென்றால், தொடர்ந்து விவேகமாக நடக்க நாம் என்ன செய்ய வேண்டும்? விவேகத்தின் ஊற்றாக இருக்கும் யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும். அவருடைய வார்த்தையின் மூலமாகவும் சக்தியின் மூலமாகவும் யெகோவா அந்த விவேகத்தை நமக்குத் தருகிறார். (நெ. 9:20; சங். 32:8) நாம் ஞானமான முடிவுகளை எடுக்கவும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்துவிடாமல் இருக்கவும் யெகோவா நமக்கு பைபிளைப் பயன்படுத்தி ஆலோசனைகளைக் கொடுக்கிறார். (சங். 119:97-101) பைபிளைக் கவனமாகப் படிக்கும்போதும், யெகோவாவின் சக்திக்காக ஜெபம் செய்யும்போதும் நம்மால் தொடர்ந்து விவேகமாக நடந்துகொள்ள முடியும். அப்போது நாம் யெகோவா யோசிப்பதுபோல் யோசிப்போம், அவர் விரும்புவதைச் செய்வோம்.—நீதி. 21:11, அடிக்குறிப்பு.
18. என்ன செய்ய நாம் உறுதியாக இருக்கிறோம்?
18 தொடர்ந்து விவேகமாக நடக்க யெகோவாவிடம் உதவி கேட்டுக்கொண்டே இருப்போம். (சங். 14:2) அப்போது, “விவேகமான வழியைவிட்டு” நாம் ஒருபோதும் விலகிப்போக மாட்டோம். (நீதி. 21:16) எப்போதையும்விட இப்போது, எல்லா சூழ்நிலையிலும் விவேகத்தைக் காட்ட நாம் உறுதியாக இருக்கலாம். விவேகம் இருந்தால் வெற்றி நிச்சயம்!
பாட்டு 42 என் ஜெபம்
a உதாரணத்துக்கு, JW லைப்ரரியில் அல்லது jw.org-ல், “தொடர் கட்டுரைகள்” என்ற பகுதியில் “யெகோவாவின் சாட்சிகளின் வாழ்க்கை சரிதை” என்ற தலைப்பின் கீழ் வந்த ஜார்ஜி போர்ச்சுல்யனின் அனுபவத்தைப் பாருங்கள்.