மே 18-24, 2026
பாட்டு 35 மிக முக்கியமானதையே செய்வோம்
கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள்
“யெகோவாவின் விருப்பம் என்னவென்று புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருங்கள்.”—எபே. 5:17.
என்ன கற்றுக்கொள்வோம்?
நம் கவனத்தைச் சிதறடிக்க நிறைய விஷயங்கள் இருந்தாலும் யெகோவாவுக்கு நாம் எப்படி முதலிடம் கொடுக்கலாம் என்று தெரிந்துகொள்வோம்.
1-2. முக்கியமான விஷயங்கள்கூட எப்படி ஒரு கவனச்சிதறலாக ஆகிவிடலாம்?
எப்போதாவது உங்கள் கவனம் சிதறியிருக்கிறதா? உதாரணத்துக்கு, நீங்கள் வண்டி ஓட்டிக்கொண்டிருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். அப்போது உங்கள் ஃபோன் அடிக்கிறது. உதவிக் கேட்டுதான் யாரோ ஃபோன் செய்கிறார் என்று உங்களுக்குத் தோன்றுகிறது. வண்டி ஓட்டும்போதே ஃபோன் எடுத்துப் பேசுவீர்களா? கண்டிப்பாக மாட்டீர்கள். ஏனென்றால், அந்தச் சமயத்தில் ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுவதுதான் முக்கியம். அதேமாதிரி, நம் வாழ்க்கையில் நிறையக் கவனச்சிதறல்கள் வரலாம். அந்தச் சமயங்களில் எது முக்கியம் என்று யோசித்துப் பார்த்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
2 நம் வாழ்க்கையில் நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அவை எல்லாவற்றையும்விட ரொம்ப முக்கியமானது, யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவைதான்.a (மத். 6:33) கவனமாக வண்டி ஓட்டுகிற ஒரு டிரைவர் மாதிரி, எவையெல்லாம் நம் கவனத்தைச் சிதறடிக்கும் என்று நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். யெகோவாவின் சேவையை இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிடும் எதற்கும் நாம் இடம் கொடுக்கக் கூடாது.—நீதி. 4:25; மத். 6:22.
3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்ப்போம்?
3 நாம் யாருமே வேண்டுமென்றே யெகோவாவின் சேவையை இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட மாட்டோம். ஆனால், நம் கவனம் சிதறி அப்படி நடந்துவிட வாய்ப்பிருக்கிறது. (லூக். 21:34-36) அதனால், யெகோவாவின் சேவைக்கு எப்போதும் முதலிடம் கொடுக்க நாம் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு உதவுகிற மூன்று விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். (1) நமக்கு என்னென்ன கவனச்சிதறல்கள் வரலாம்? (2) இயேசு எப்படிக் கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்கவில்லை? (3) இயேசு மாதிரியே நாம் எப்படிக் கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காமல் இருக்கலாம்?
நமக்கு என்ன கவனச்சிதறல்கள் வரலாம்?
4-6. எந்த மாதிரி விஷயங்கள் நம் கவனத்தைச் சிதறடித்து விடலாம்?
4 நம் எல்லாருக்குமே வாழ்க்கையில் செய்ய வேண்டிய நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. ஒருவேளை, நமக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம், குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ நமக்கோ சில தேவைகள் இருக்கலாம். இவை எல்லாமே நேரம் எடுத்து நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்தான். ஆனால், இவையே நம் கவனத்தைச் சிதறடிக்க வாய்ப்பு இருக்கிறது. எப்படி? அவற்றைப் பற்றியே நாம் யோசித்துக் கொண்டிருந்தால்... வேறு எதையும் செய்ய முடியாத அளவுக்கு நம் நேரத்தையும் சக்தியையும் அவை உறிஞ்சிவிடுகிறது என்றால்... அதுவே நமக்குக் கவனச்சிதறல் ஆகிவிடும்.
5 அதுமட்டுமல்ல நம்மில் நிறையப் பேர், வன்முறை அதிகம் நடக்கிற... பணம் சம்பாதிக்க கஷ்டப்படுகிற... நோய் பரவுகிற... இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவற்றால் நாம் பாதிக்கப்படலாம், சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். (2 தீ. 3:1) இந்த மாதிரி கஷ்டங்களை அனுபவிக்கும்போது அவற்றைப் பற்றியே யோசித்து யோசித்து கவலையில் மூழ்கிவிடலாம்.
6 ஒருவேளை, உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு இந்த மாதிரி கஷ்டங்கள் வந்திருக்கலாம். அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கலாம். அப்படி நடக்கும்போது, அவர் மனதளவில் உடைந்துவிடலாம். கஷ்டப்படுகிற மாதிரி அல்லது கவலையிலேயே இருக்கிற மாதிரி யெகோவா நம்மைப் படைக்கவில்லை. அதனால்தான் கஷ்டங்கள் வரும்போது, ஆசைப்பட்ட மாதிரி வாழ முடியவில்லையே என்று நிறையப் பேர் சோர்ந்து போகிறார்கள். அந்தப் பிரச்சினைகளை மறப்பதற்காக பொழுதுபோக்கே கதி என்று இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நாம் இருந்தால் என்ன செய்யலாம்? இயேசுவிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியும். இயேசு எப்படிக் கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காமல் எப்போதுமே யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்தார் என்று இப்போது பார்க்கலாம்.
இயேசு கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்கவில்லை
7. எவையெல்லாம் இயேசுவின் கவனத்தைச் சிதறடித்திருக்கலாம்?
7 இயேசுவுக்கு அவருடைய கவனத்தைச் சிதறடிக்கும் நிறையச் சூழ்நிலைகள் வந்தன. உதாரணத்துக்கு, அவர் பூமியில் வாழ்ந்த சமயத்தில், சமுதாய மற்றும் அரசியல் பிரச்சினைகள் இருந்தன. நிறைய மக்கள் ஏழைகளாக இருந்தார்கள், நோயால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். (மத். 14:14; மாற். 14:7) ரோமர்களும் மற்ற யூதர்களும் அவர்களை அநியாயமாக நடத்தினார்கள். இயேசுவுக்கு அற்புதம் செய்யும் சக்தி இருக்கிறது என்று தெரிந்தபோது மக்கள் அவரை ராஜாவாக்க நினைத்தார்கள். (யோவா. 6:14, 15) அதுமட்டுமல்ல, சாத்தானும் இயேசுவைச் சோதித்தான். இந்த உலகத்தின் ராஜாவாக அவரை ஆக்குவதாகச் சொன்னான். (மத். 4:8, 9) உடனே ராஜாவாக ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமே என்று இயேசு யோசிக்க வாய்ப்பு இருந்தது. ஒருசமயம், அப்போஸ்தலன் பேதுருவும் இயேசுவிடம், “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்!” என்று சொன்னார். (மத். 16:21, 22) இயேசு நினைத்திருந்தால், பேதுரு சொன்ன மாதிரி கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்.
8. கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காமல் இருக்க இயேசுவுக்கு எது உதவியது?
8 இதுபோன்ற எந்தக் கவனச்சிதறல்களுக்கும் இயேசு இடம் கொடுக்கவில்லை. அப்படிச் செய்ய அவருக்கு எது உதவியது? மூன்று விஷயங்கள்: ஒன்று, யெகோவா யோசிப்பதுபோல் யோசித்தார். (யோவா. 8:28; 14:9) இரண்டு, யெகோவாவின் சேவையைச் சுறுசுறுப்பாகச் செய்தார். (மத். 9:35) மூன்று, உண்மையிலேயே எது முக்கியம் என்று நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். (யோவா. 4:34) சாத்தானின் சோதனைகளை இயேசு எதிர்த்து நின்றார். பேதுரு நல்ல எண்ணத்தோடுதான் அதைச் சொன்னார் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தாலும், அது யெகோவாவின் விருப்பம் இல்லை என்பதால் அதை ஒதுக்கித்தள்ளினார். (மத். 4:10; 16:23) மக்கள் சொன்ன விஷயங்களும் செய்த விஷயங்களும் அவருடைய கவனத்தைச் சிதறடிக்க இயேசு விட்டுவிடவில்லை. அவருடைய கவனம் யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதிலேயே இருந்தது. உண்மைதான், இயேசுவுக்கு வந்த அதே கவனச்சிதறல்கள் நமக்கு வராமல் இருக்கலாம். ஆனால், இயேசு செய்த மூன்று விஷயங்களை நாமும் செய்தால், நமக்கு வரும் கவனச்சிதறல்களை நம்மால் ஒதுக்கித்தள்ள முடியும்.
கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?
9. நாம் என்ன செய்ய வேண்டும் என்று எபேசியர் 5:17 சொல்கிறது?
9 யெகோவா யோசிப்பதுபோல் யோசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், ‘யெகோவாவின் விருப்பம் என்னவென்று நம்மால் புரிந்துகொள்ள’ முடியும். (எபேசியர் 5:17-ஐ வாசியுங்கள்.) யெகோவா என்ன விரும்புகிறார் என்று தெரிந்துகொள்ள பைபிளைப் படித்து ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை, நமக்கு இருக்கிற அதே சூழ்நிலையைப் பற்றி பைபிள் எதுவும் சொல்லவில்லை என்றாலும், யெகோவாவின் விருப்பம் என்னவென்று நம்மால் தெரிந்துகொள்ள முடியும். எப்படி? ஒரு விஷயத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க தயாராக இருக்க வேண்டும்.
10. யெகோவா எப்படி யோசிக்கிறார் என்று தெரிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
10 பைபிளைப் படிக்கும்போது, மனிதர்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று பாருங்கள். அப்போது யெகோவாவின் யோசனைகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும். (எரே. 45:5) ஒரு பைபிள் பதிவைப் படிக்கும்போது நம்மையே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘இதிலிருந்து நான் யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டேன்? யெகோவா மாதிரியே யோசிக்க நான் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்?’ யெகோவாவின் யோசனைகள் நம் யோசனைகளைவிட உயர்ந்தது என்று நமக்குத் தெரியும். (ஏசா. 55:9) அதனால் அவருடைய விருப்பப்படி நடக்க, அவரிடமே உதவி கேட்க வேண்டும். (சங். 143:10) அதோடு, அவர் மாதிரியே யோசிக்கவும் அவரிடம் உதவி கேட்டு ஜெபம் செய்ய வேண்டும்.—1 யோ. 5:14.
11. யெகோவா நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்?
11 யெகோவா யோசிப்பதுபோல் நாம் யோசிக்க கற்றுக்கொண்டால், நம்மிடம் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியும். முடிவுக்காக காத்திருக்கிற இந்தச் சமயத்தில், நம்முடைய கவனம் சிதறாமல் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். (மத். 24:44) அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட்டு அதில் மூழ்கிவிடக் கூடாது என்று நினைக்கிறார். (மத். 6:31, 32) அதனால்தான், நம் உடல்நலம், வேலை, வீடு, குடும்பம் பற்றியெல்லாம் கவலைகள் வரும்போது அவற்றை சமாளிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தருகிறார். நம்முடைய பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான ஞானத்தையும் பலத்தையும் அவரிடம் கேட்கும்போது அதைத் தாராளமாகத் தருகிறார்.—சங். 55:22; நீதி. 3:5-7.
12. உலகத்தில் நடக்கிற கெட்ட விஷயங்களைப் பார்த்து கவலைப்படாமல் இருக்க நமக்கு எது உதவும்? (மத்தேயு 5:3)
12 யெகோவாவுடைய சேவையைச் சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும். இந்த உலகத்தில் நடக்கிற கெட்ட விஷயங்களைப் பார்க்கும்போது, நமக்கு ஓரளவு கவலை வரும்தான். நம் கட்டுப்பாட்டில் இல்லாத இந்த மாதிரி விஷயங்களை நினைத்து அளவுக்கதிகமாகக் கவலைப்படும்போது நம் கவனம் சிதறிவிடும். அப்படி ஆகாமல் இருக்க, யெகோவாவுடைய சேவையை நாம் சுறுசுறுப்பாக செய்ய வேண்டும். யெகோவாவோடு நெருக்கமாக இருப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்தால், உண்மையிலேயே சந்தோஷமாக இருப்போம். ஏனென்றால் அப்படித்தான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். (மத்தேயு 5:3-ஐ வாசியுங்கள்.) யெகோவாவோடு நெருக்கமாக இருக்க வேண்டுமென்றால், பைபிளைப் படித்து அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும், அவருடைய சேவையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது, யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவோம், நம் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துவோம்.—நீதி. 23:15.
13. நாம் எப்படி “நேரத்தை மிக நன்றாக” பயன்படுத்தலாம்?
13 “நேரத்தை மிக நன்றாக” பயன்படுத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். (எபே. 5:15, 16) இந்த வசனம், அன்றாட விஷயங்களில் நம் நேரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை. முடிவுக்காகக் காத்திருக்கிற இந்தச் சமயத்தில் நம் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்த வேண்டும் என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறது. நாம் எப்படி நம் நேரத்தை நன்றாகப் பயன்படுத்தலாம்? இன்று நாம் பார்க்கிற, கேட்கிற, படிக்கிற எல்லாவற்றிலும் நிறையக் கெட்ட செய்திகள்தான் வருகின்றன. அந்த மாதிரி செய்திகளைத் தெரிந்துகொள்வதற்காக நாம் நிறைய நேரம் செலவு செய்தால், நம் கவனம் சிதறிவிடும். நாம் சோர்ந்துபோய்விடுவோம், யெகோவாவுடைய சேவையில் நம் ஆர்வம் குறைந்துவிடும். அதனால், செய்திகளைப் பார்ப்பதற்கோ படிப்பதற்கோ கேட்பதற்கோ நாம் அளவுக்கதிகமான நேரத்தைச் செலவு செய்யாமல் இருப்பது நல்லது. அப்போது கவலையிலேயே மூழ்கிவிட மாட்டோம், யெகோவாவுடைய சேவையைச் செய்வதற்கு நமக்கு நிறைய நேரமும் சக்தியும் இருக்கும். அதுமட்டுமல்ல, இன்னும் அதிகமாக ஊழியம் செய்வதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்றும் பார்ப்போம். உதாரணத்துக்கு, நிறைய மறுசந்திப்புகள் செய்வோம். மக்கள் ‘சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெறுவதும், மீட்புப் பெறுவதும்’ எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து வைத்திருப்போம். (1 தீ. 2:4) அதனால், கிடைக்கிற எல்லா வாய்ப்பையும் பயன்படுத்தி மக்களுக்கு உதவி செய்வோம்.
14. யெகோவாவுடைய சேவையைச் சுறுசுறுப்பாகச் செய்வதால் நமக்கு என்ன நன்மை? (படத்தையும் பாருங்கள்.)
14 யெகோவாவுடைய சேவையை நாம் சுறுசுறுப்பாகச் செய்தால், நாம் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்பதை மறந்துவிட மாட்டோம். இன்று நடக்கிற வன்முறை, பணப்பிரச்சினை, பெருந்தொற்று இதையெல்லாம் பார்த்து அளவுக்கதிகமாகக் கவலைப்பட மாட்டோம். இவையெல்லாம் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்தான் என்று நமக்குப் புரியும். இந்த எல்லா கெட்ட விஷயங்களுக்கும் யெகோவா சீக்கிரத்தில் முடிவுகட்டுவார், இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவார் என்று நமக்குத் தெரியும். அதனால், நம் கவனத்தைச் சிதறவிட மாட்டோம். பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவா உதவுவார் என்ற நம்பிக்கையோடு பதட்டப்படாமல் இருப்போம்.—சங். 16:8; 112:1, 6-8.
உலக நிலைமைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், யெகோவாவின் சேவையைச் சுறுசுறுப்பாக செய்யுங்கள் (பாரா 14)b
15. நமக்குத் தெளிந்த புத்தி இருந்தால் என்ன செய்வோம்? (1 பேதுரு 4:7)
15 உண்மையிலேயே எது முக்கியம் என்று நன்றாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இந்த உலகத்தில் இருக்கிற நிறைய மக்கள் ஜாலியாக இருப்பதற்கும் பொழுதுபோக்குக்கும் நிறைய நேரத்தைச் செலவு செய்கிறார்கள். உலகத்துக்குச் சீக்கிரத்தில் முடிவு வரப்போகிறது என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் யோசிப்பதே இல்லை. ஜாலியாக இருப்பது தப்பில்லைதான், ஆனால் இந்த உலகத்தில் இருப்பவர்களைப் போல யோசிக்காமல் இருக்க நமக்கு “தெளிந்த புத்தி” தேவை. (1 பேதுரு 4:7-ஐ வாசியுங்கள்.) நமக்குத் தெளிந்த புத்தி இருந்தால், பொழுதுபோக்கு விஷயத்தில் ஞானமான முடிவுகள் எடுப்போம். அதற்கே எல்லா நேரத்தையும் சக்தியையும் கொடுத்துவிட மாட்டோம். நம் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்தினால், யெகோவா யோசிக்கிற மாதிரி யோசிக்கிறோம்... உண்மையிலேயே எது முக்கியம் என்று தெரிந்துவைத்திருக்கிறோம்... என்பதைக் காட்டுவோம்.—2 தீ. 1:7.
16. மரணம் நெருங்கிய சமயத்தில் இயேசுவுடைய கவனம் எதில் இருந்தது?
16 உண்மையிலேயே எது முக்கியம் என்று இயேசு தெரிந்துவைத்திருந்தார். மரணம் நெருங்கிய சமயத்தில்கூட, இயேசுவுடைய கவனமெல்லாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதிலும், அவருடைய விருப்பத்தைச் செய்வதிலும்தான் இருந்தது. இயேசு அவ்வளவு உருக்கமாக ஜெபம் செய்ததற்கும் அதுதான் காரணம். ஆனால், இயேசு மாதிரி அவருடைய சீஷர்கள் கவனமாக இருக்கவில்லை, அவர்கள் தூங்கிவிட்டார்கள். ஏனென்றால், “அவர்கள் துக்கத்தில் துவண்டுபோய் இருந்தார்கள்.”—லூக். 22:39-46; யோவா. 19:30.
17. ஏன் நிறையப் பேர் சோஷியல் மீடியாவைப் பயன்படுத்துகிறார்கள், அது எப்படி ஒரு கவனச்சிதறலாக ஆகிவிடலாம்? (படத்தையும் பாருங்கள்.)
17 இயேசுவுடைய சீஷர்கள் மாதிரி, நாமும் சிலசமயங்களில் களைத்துப்போய் சோர்ந்துபோய் இருக்கலாம். இந்தக் கடைசி நாட்களில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து நாம் கவலைப்படலாம். நிறையப் பேர், பிரச்சினைகளை மறப்பதற்கு சோஷியல் மீடியா பக்கம் போகிறார்கள். நண்பர்களுக்கும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் ஃபோட்டோக்களை அனுப்புவதற்கு, வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்கு அதைப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, அதில் எக்கச்சக்கமான வீடியோக்களைப் பார்க்கிறார்கள், நிறைய ‘கேம்ஸ்’ விளையாடுகிறார்கள். சோஷியல் மீடியாவில் புதுப்புது விஷயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்து தங்களை அப்டேட்டாக வைத்துக்கொள்வதற்கே மக்கள் நிறைய நேரத்தையும் சக்தியையும் செலவு செய்கிறார்கள். ஆனால், நாம் சோஷியல் மீடியாவைச் சரியான விதத்தில் பயன்படுத்துவதற்கு இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘சோஷியல் மீடியாவில் நான் பார்க்கும் விஷயங்கள் உண்மையிலேயே என் வாழ்க்கைக்குப் பிரயோஜனமாக இருக்கிறதா? அல்லது, முக்கியமான விஷயங்களில் இருந்து என் கவனத்தைச் சிதறடிக்கிறதா?’
ஞானமான முடிவுகள் எடுக்கும்போது, சோஷியல் மீடியாவோ பொழுதுபோக்கோ நம் கவனத்தைச் சிதறடிக்க விடமாட்டோம் (பாரா 17)
18. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் நாம் ஏன் ஞானமான முடிவுகளை எடுக்க வேண்டும்?
18 அதேசமயத்தில், ஆன்லைனில் சினிமா படங்கள், தொடர்கள், சின்ன சின்ன வீடியோக்கள் பார்ப்பதிலும், வீடியோ கேம்ஸ் விளையாடுவதிலும் நாம் ஞானமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது. ஓரளவு பொழுதுபோக்கு நமக்குத் தேவைதான். ஆனால், என்ன மாதிரியான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிறோம், அதற்கு எவ்வளவு நேரம் செலவு செய்கிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு வீடியோவைப் பார்த்து முடித்த பிறகு, அடுத்து இன்னொரு வீடியோ வரும். அப்படியே அடுத்தடுத்து வீடியோக்கள் வந்துகொண்டே இருக்கும். அந்த மாதிரி வரும் சில வீடியோக்களில் ஒழுக்கக்கேடான, வன்முறையான விஷயங்களும் இருக்கலாம். ஆசியாவில் இருந்த ஒரு சகோதரருக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம். ஆரம்பத்தில், சினிமா படங்களில் வரும் சின்ன சின்ன காட்சிகளை ஃபோனில் பார்த்தார். பிறகு, அதில் அடுத்தடுத்து வந்த வீடியோக்களைப் பார்த்தார். அப்படியே அசிங்கமான காட்சிகள் இருக்கிற வீடியோக்களையும் பார்க்க ஆரம்பித்தார். கடைசியில் ஆபாசப் படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், மூப்பர்களுடைய உதவியோடும் நெருக்கமான நண்பர்களுடைய உதவியோடும் அதிலிருந்து வெளியே வந்தார். பிறகு, ஃபோனில் இருந்து அந்த ஆப்-களை (apps) ‘டெலீட்’ செய்தார். அதோடு, ஃபோனை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதில் சில கட்டுப்பாடுகளையும் வைத்தார். பொழுதுபோக்கு விஷயத்தில் ஞானமான முடிவுகள் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்கிறோம், இல்லையா!
19. ஜாலியாக இருக்கவும் சுற்றிப் பார்க்கவும் நிறைய நேரம் செலவு செய்தால் என்ன ஆகும்?
19 சுற்றிப் பார்க்கும் விஷயங்களிலும், ஜாலியாக இருக்க நாம் செய்யும் மற்ற விஷயங்களிலும் நாம் ஞானமான முடிவுகளை எடுக்க வேண்டும். சிலசமயங்களில், நம் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கொஞ்சம் ஓய்வு எடுப்பது நல்லதுதான். அது நாம் அரோக்கியமாக இருக்கவும் உதவும். ஆனால், அதற்கே நாம் நிறைய நேரத்தைக் கொடுத்தால், உண்மையிலேயே முக்கியமாக இருக்கும் விஷயங்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடும். (பிலி. 1:10) அதனால், நாம் என்ன செய்கிறோம், அதில் எவ்வளவு நேரம் செலவு செய்கிறோம் என்பதை யோசித்துப் பார்த்து சரியான முடிவு எடுக்க வேண்டும். நம்மையே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘சுற்றிப் பார்க்கவும் ஜாலியாக இருக்கவும் நான் செலவு செய்யும் நேரம், சரியான முடிவைத்தான் நான் எடுத்திருக்கிறேன் என்று காட்டுகிறதா? உண்மையிலேயே எது முக்கியமோ அதற்கு நான் முதலிடம் கொடுக்கிறேனா? இந்த உலகத்துக்கு வரப்போகிற முடிவுக்கு நான் தயாராக இருக்கிறேனா?’
20. கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
20 யெகோவாவின் சேவையிலிருந்து நம் கவனத்தைச் சிதறடிக்கும் எந்தவொரு விஷயத்துக்கும் நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. (ஏசா. 48:17) யெகோவாவின் உதவியோடு, வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை நம்மால் நல்ல விதத்தில் சமாளிக்க முடியும். உலகத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்த்து நாம் கவலையில் மூழ்கிவிட மாட்டோம். பொழுதுபோக்குக்கு நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்துவிட மாட்டோம். அப்படியென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? எப்போதுமே யெகோவா மாதிரி யோசிக்க வேண்டும், அவருடைய சேவையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், உண்மையிலேயே எது முக்கியம் என்று நன்றாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், கவனச்சிதறலுக்கு நாம் இடம் கொடுத்துவிட மாட்டோம், ‘உண்மையான வாழ்வை உறுதியாகப் பிடித்துக்கொள்வோம்.’—1 தீ. 6:19.
பாட்டு 129 சகித்தே ஓடுவோம்!
a வார்த்தையின் விளக்கம்: யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையில் பைபிள் படிப்பது, ஜெபம் செய்வது, கூட்டங்களில் கலந்துகொள்வது, குடும்ப வழிபாடு செய்வது, ஊழியத்துக்குப் போவது போன்றவை இருக்கின்றன. அதுமட்டுமல்ல, வணக்கத்துக்காகக் கூடிவரும் இடங்களைக் கட்டுவது அல்லது பராமரிப்பது, நிவாரண வேலைகளுக்கு உதவுவது, மாநாடுகளில் வாலண்டியராக சேவை செய்வது, பெத்தேலில் சேவை செய்வது போன்றவைகூட யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவைதான்.
b படவிளக்கம்: ஒரு தம்பதி, உலகத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்த்து கவனத்தைச் சிதறவிடாமல், ஊழியத்தை மும்முரமாகச் செய்கிறார்கள்.