கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
‘பவுல் கடவுளுக்கு நன்றி சொல்லி, தைரியம் அடைந்தார்’
பவுல் வருகிறார் என்ற செய்தியை ரோமிலிருந்த சகோதரர்கள் கேள்விப்பட்டபோது, அவர்களில் சிலர் அவரைச் சந்திப்பதற்காகச் சுமார் 64 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தார்கள். அவர்கள் காட்டிய சுயநலமில்லாத அன்பு பவுலை எப்படி உற்சாகப்படுத்தியது? “பவுல் அவர்களைப் பார்த்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லி, தைரியம் அடைந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (அப் 28:15) பொதுவாக, சபையில் இருந்தவர்களைப் பவுல்தான் உற்சாகப்படுத்துவார்; ஆனால் இந்த முறை அவர் கைதியாக வந்திருந்ததால், அவருக்கு உற்சாகம் கிடைத்தது.—2கொ 13:10.
இன்று வட்டாரக் கண்காணிகள் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவதற்காகச் சபைகளைச் சந்திக்கிறார்கள். கடவுளுடைய ஊழியர்கள் எல்லாரையும் போல அவர்களும் சிலசமயங்களில் களைப்பாகவும் கவலையாகவும் சோர்வாகவும் உணர்கிறார்கள். அடுத்த தடவை வட்டாரக் கண்காணியும் அவருடைய மனைவியும் உங்கள் சபைக்கு வரும்போது அவர்களைப் பலப்படுத்த என்ன செய்யலாம்? அப்படிப் பலப்படுத்தும்போது, “ஒருவருக்கொருவர் உற்சாகம் பெற” முடியும்.—ரோ 1:11, 12.
ஊழியக் கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள். வட்டாரக் கண்காணி சந்திக்கும் அந்த விசேஷ வாரத்தை முழுமையாகப் பிரயோஜனப்படுத்திக்கொள்வதற்குப் பிரஸ்தாபிகள் செய்யும் தியாகங்கள் அவரை உற்சாகப்படுத்துகிறது. (1தெ 1:2, 3; 2:20) அந்த மாதத்தில் உங்களால் துணை பயனியர் சேவை செய்ய முடியுமா? அவரோடும் அவருடைய மனைவியோடும் சேர்ந்து ஊழியம் செய்ய முடியுமா அல்லது அவரையோ அவருடைய மனைவியையோ பைபிள் படிப்புக்குக் கூட்டிக்கொண்டு போக முடியுமா? புதியவர்கள் அல்லது தங்களால் திறமையாக ஊழியம் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் உட்பட, வெவ்வேறு பிரஸ்தாபிகளோடு ஊழியம் செய்வதில் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
உபசரியுங்கள். அவர்களை வீட்டில் தங்க வைக்கவோ அவர்களுக்கு உணவு கொடுக்கவோ முடியுமா? அப்படிச் செய்யும்போது, அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறீர்கள். அவர்கள் அதிகமாக எதையும் எதிர்பார்ப்பது கிடையாது.—லூ 10:38-42.
அவருடைய வழிநடத்துதல்களையும் ஆலோசனைகளையும் கேட்டு, அதன்படி செய்யுங்கள். யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையில் எப்படி இன்னும் முன்னேறலாம் என்பதைப் புரிந்துகொள்ள வட்டாரக் கண்காணி அன்போடு உதவுவார். சிலசமயங்களில், கடுமையான ஆலோசனையை அவர் கொடுக்க வேண்டியிருக்கலாம். (1கொ 5:1-5) நாம் அவருக்குக் கீழ்ப்படியும்போதும் அடங்கி நடக்கும்போதும் அவர் சந்தோஷப்படுகிறார்.—எபி 13:17.
நன்றி சொல்லுங்கள். வட்டாரக் கண்காணியும் அவருடைய மனைவியும் எடுத்த முயற்சிகளால் எப்படி நன்மையடைந்திருக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். நேரிலோ அல்லது க்ரீட்டிங் கார்டு மூலமாகவோ இதைச் சொல்லலாம்.—கொலோ 3:15.