கடவுளுடைய வார்த்தை கற்பிக்கப் பிரயோஜனமுள்ளது
1. 2014-ஆம் ஆண்டு வட்டார மாநாட்டின் பொருள் என்ன, எந்தக் கேள்விக்கு அங்கு பதிலளிக்கப்படும்?
1 நம்முடைய ‘மகத்தான போதகராகிய’ யெகோவாதான் இந்த அண்டத்திலேயே தலைசிறந்த போதகர். (ஏசா. 30:20, 21, NW) அவர் எப்படி நமக்குப் போதிக்கிறார்? மற்றெல்லாப் புத்தகங்களையும்விட மேலான ஒரு புத்தகத்தை, ஆம் தம்முடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளை, தந்திருக்கிறார். உடல் ரீதியிலும் மன ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் அவருடைய போதனைகள் நமக்கு எப்படிப் பயனளிக்கும்? 2014 ஊழிய ஆண்டில் நடைபெறப்போகும் வட்டார மாநாட்டில் இந்தக் கேள்விக்கான பதில் சிந்திக்கப்படும். “கடவுளுடைய வார்த்தை கற்பிக்கப் பிரயோஜனமுள்ளது” என்பதே இந்த மாநாட்டின் பொருள். இது 2 தீமோத்தேயு 3:16-ன் அடிப்படையில் அமைந்துள்ளது.
2. முக்கியக் குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுவதற்காக எந்தக் கேள்விகளுக்கு மாநாட்டில் பதிலளிக்கப்படும்?
2 இந்த முக்கியக் குறிப்புகளைக் கவனியுங்கள்: முக்கியக் குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுவதற்காக பின்வரும் கேள்விகளுக்கு மாநாட்டில் பதிலளிக்கப்படும்.
• கடவுளுடைய போதனைகள் நம் வாழ்வில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? (ஏசா. 48:17, 18)
• யெகோவாவுக்கு முழுநேர ஊழியம் செய்ய நம் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்தால் அவர் என்ன செய்வாரென உறுதியாக நம்பலாம்? (மல். 3:10)
• ‘மாறுபட்ட போதனைகளை’ கேட்க நேரிடும்போது என்ன செய்ய வேண்டும்? (எபி. 13:9)
• நாம் எப்படி இயேசு ‘கற்பித்த விதமாக’ கற்பிக்கலாம்? (மத். 7:28, 29)
• சபையில் கற்பிக்கிறவர்கள் ஏன் முதலில் தங்களுக்குத் தாங்களே கற்பித்துக்கொள்ள வேண்டும்? (ரோ. 2:21)
• கடவுளுடைய வார்த்தை எதற்குப் பிரயோஜனமுள்ளது? (2 தீ. 3:16)
• தேசங்கள் ‘அசைக்கப்படுவதால்’ ஏற்படும் விளைவு என்ன? (ஆகா. 2:6, 7)
• யெகோவா நம்மீது என்ன நம்பிக்கை வைத்திருக்கிறார்? (எபே. 5:1)
• யெகோவாவின் போதனைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க நாம் ஏன் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்? (லூக். 13:24)
3. ஏற்ற நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேச்சுகளைக் கூர்ந்து கவனிப்பது ஏன் முக்கியம்?
3 இந்த நிகழ்ச்சிநிரலின் முக்கியப் பொருளுக்கு அடிப்படையாக அமைந்துள்ள வார்த்தைகளைச் சொல்வதற்குச் சற்று முன்பு... அதாவது 2 தீமோத்தேயு 3:16-ல் உள்ள வார்த்தைகளைச் சொல்வதற்குச் சற்று முன்பு... கடைசி நாட்களில் வரவிருக்கும் கொடிய காலங்களை பவுல் விவரித்தார். “பொல்லாதவர்களும் வஞ்சகர்களும் மேன்மேலும் மோசமாவார்கள்; அவர்கள் ஏமாற்றிக்கொண்டும் ஏமாந்துகொண்டும் இருப்பார்கள்” என்று அவர் எழுதினார். (2 தீ. 3:13) நாம் ஏமாந்துபோகாதிருக்க கடவுளுடைய போதனைகளைச் செவிகொடுத்துக் கேட்டு அதன்படி நடப்பது எவ்வளவு முக்கியம்! ஆகவே, ஏற்ற நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேச்சுகளைக் கூர்ந்து கவனிக்கத் தீர்மானமாய் இருப்போமாக.