இது யாருக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும்?
1. காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசிக்கும்போது நாம் எதை யோசித்துப் பார்க்க வேண்டும், ஏன்?
1 உலகெங்கும் உள்ள மக்களை மனதில் வைத்தே காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அவற்றில் விதவிதமான தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்கும்போது, அது எப்படிப்பட்ட ஆட்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்களுக்கு அதைக் கொடுக்க ஊக்கமாக முயற்சியெடுக்க வேண்டும்.
2. மற்றவர்களுக்கு ஆர்வமூட்டும் என்ன விஷயங்கள் நம் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன?
2 உங்களுடன் வேலை செய்பவரோடு நீங்கள் கலந்துபேசிய ஏதோவொரு பைபிள் விஷயம் சமீபத்திய காவற்கோபுரத்தில் வெளிவந்திருக்கிறதா? குடும்ப வாழ்க்கை பற்றிய ஒரு கட்டுரை உங்கள் உறவினருக்குப் பயனுள்ளதாக இருக்குமா? உங்களுக்குத் தெரிந்த ஒருவர் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருக்கும் ஓர் இடத்தைப் பற்றி விழித்தெழு! விளக்கியிருக்கிறதா? உங்கள் பிராந்தியத்திலுள்ள வியாபார, அரசு மற்றும் தொண்டு நிறுவனத்தாருக்கு ஆர்வமூட்டும் விஷயம் நம் பத்திரிகை ஒன்றில் இருக்கிறதா? உதாரணத்திற்கு, முதியோர்கள் எதிர்ப்படும் சவால்களைச் சிறப்பித்துக் காட்டுகிற ஒரு பத்திரிகை, முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும். குற்றச்செயல்கள் பற்றிய ஒரு கட்டுரை சட்ட ஒழுங்குத் துறையினருக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும்.
3. மக்களுக்குப் பொருத்தமாக உள்ள பத்திரிகையை அளிப்பதால் வரும் நன்மைகளை ஓர் அனுபவத்துடன் விளக்குங்கள்.
3 பலன்கள்: தமிழ்நாட்டிலுள்ள ஒரு சபையார் தங்கள் பிராந்தியத்தைச் சேர்ந்த சில பகுதிகளில் விழித்தெழு! பத்திரிகைகளை அளித்ததால் முன்பு பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருந்தார்கள். ஆனால், “இளந்தளிர்கள் பொறுப்புள்ள இளைஞர்களாக...” என்ற தலைப்பில் வெளிவந்த அக்டோபர்-டிசம்பர் 2011 விழித்தெழு!-வைப் பெற்றவுடன் அந்தப் பகுதிகளுக்குச் சென்று அநேக குடும்பத்தினரைச் சந்தித்தார்கள்; பொறுப்புள்ள பிள்ளைகளை வளர்ப்பது சம்பந்தமாகத் தாங்கள் ஒரு விசேஷப் பத்திரிகையைக் கொடுக்க வந்திருப்பதாகச் சொல்லி அதை அளித்தார்கள். இப்படி, முதல் நாளன்றே 200 பிரதிகளை விநியோகித்தார்கள். சுமார் ஆறு வருடம் ஊழியம் செய்யப்படாத அந்தப் பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட பிரதிகளை இரண்டே மாதங்களில் விநியோகித்தார்கள்.
4. நம்முடைய பத்திரிகைகளை நாம் ஏன் முடிந்தளவு எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்?
4 நம்முடைய பத்திரிகைகள், இன்றைய உலக சம்பவங்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன, பைபிள்மீதும் கடவுளுடைய அரசாங்கத்தின்மீதும் கவனத்தைத் திருப்புகின்றன. ‘மீட்பை அறிவிக்கிற’ பத்திரிகைகள் இந்த உலகத்திலேயே இவை மட்டும்தான். (ஏசா. 52:7, NW) எனவே, இவற்றை முடிந்தளவு எல்லோருக்கும் நாம் கொடுக்க வேண்டும். இதைச் செய்வதற்கு ஒரு நல்ல வழி, ஒரு கட்டுரையைப் படிக்கும்போது, “இது யாருக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும்?” என்று சிந்தித்துப் பார்ப்பதே.