ஊழியத்தில் அதிகம் ஈடுபட முடியுமா?
1. வெளி ஊழியத்தில் என்ன அவசர தேவை உள்ளது, ஏன்?
1 நற்செய்திக்கு ஏராளமானோர் செவிகொடுப்பதை கவனித்த இயேசு தம்முடைய சீடர்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்; “அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானரிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று கட்டளையிட்டார். (மத். 9:37, 38) நாம் அறுவடை காலத்தின் இறுதியில் வாழ்ந்துவருவதால், இயேசுவின் சீடர்களைவிட நாம் மிக அவசரமாக இந்த வேலையில் ஈடுபட வேண்டியுள்ளது. அப்படியென்றால், வெளி ஊழியத்தில் எவ்வாறு இன்னும் அதிகமாக ஈடுபட முடியும் என்பதை நாம் ஜெபத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.—யோவா. 14:13, 14.
2. அறுவடைக்கு அதிக வேலையாட்கள் தேவை என்ற அழைப்புக்கு சிலர் எப்படிப் பிரதிபலித்திருக்கிறார்கள்?
2 ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்கு வழிகள்: யெகோவாவின் வழிநடத்துதலோடும் உதவியோடும் அநேகரால் பயனியர் சேவையைத் துவங்க முடிந்திருக்கிறது. (சங். 26:2, 3; பிலி. 4:6) சிலர், வருடத்தில் ஒரு மாதமோ அதற்கும் அதிகமாகவோ துணை பயனியர் சேவை செய்ய விசேஷ முயற்சி எடுத்திருக்கிறார்கள். இப்படிச் செய்வது ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்கு ஒரு சிறந்த வழியாக இருந்திருக்கிறது. துணை பயனியர் சேவையில் கிடைத்த சந்தோஷம், ஒழுங்கான பயனியராவதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க அநேகரைத் தூண்டியுள்ளது.—அப். 20:35.
3. நீங்கள் முன்பு பயனியர் சேவை செய்திருந்தால், இப்போது எதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கலாம்?
3 பயனியர் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியுமா?: நீங்கள் முன்பு பயனியர் சேவை செய்திருந்தால், அதில் கிடைத்த இனிய அனுபவங்கள் உங்கள் மனதில் இன்னும் பசுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்தச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதைப் பற்றி நீங்கள் ஜெபத்தோடு சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் அச்சேவையை நிறுத்துவதற்குக் காரணமாயிருந்த சூழ்நிலைகள் இப்போது இல்லாமல் இருக்கலாம். அந்த விசேஷ வாய்ப்பை நீங்கள் மீண்டும் பெறுவதற்கு இப்போது வழி பிறந்திருக்கலாம்.—1 யோ. 5:14, 15.
4. நம் எல்லாருக்கும் எப்பேர்ப்பட்ட அருமையான வாய்ப்பு உள்ளது?
4 அறுப்பு வேலை மும்முரமாக நடந்து வருகிறது; அது சீக்கிரத்தில் முடிவடையப் போகிறது. (யோவா. 4:35, 36) நாம் எல்லாருமே ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்காக அன்றாட வேலைகளில் ஏதாவது மாற்றங்களைச் செய்ய முடியுமா என சீர்தூக்கிப் பார்ப்போமாக. பயனியர் சேவையில் ஈடுபட நமக்கு வாய்ப்பே இல்லையென்று நாம் உள்ளப்பூர்வமாக உணர்ந்தால், இந்த வேலையை மிகவும் பலன்தரும் விதத்தில் செய்வதற்கு நாம் வேறு வழிகளைத் தேடலாம் அல்லவா? (மாற். 12:41-44) இந்த ஒப்பற்ற வேலையில் யெகோவா தங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருக்கிற அனைவருக்கும் இது எப்பேர்ப்பட்ட அருமையான வாய்ப்பு!—சங். 110:3.