நினைவுநாள் அனுசரிப்பை விளம்பரப்படுத்துகிற விசேஷ விநியோகிப்பு!
1. மார்ச் 21, 2009 முதற்கொண்டு ராஜ்ய பிரஸ்தாபிகள் உலகெங்கும் எந்த வேலையில் ஈடுபடுவார்கள், ஏன்?
1 ஏப்ரல் 9, 2009 வியாழக்கிழமை அன்று, உலகெங்குமுள்ள யெகோவாவின் வணக்கத்தார் ஒன்றுகூடி வருவார்கள்; எதற்காக? மனிதகுலத்தின் மீது யெகோவா தேவனுடைய அன்பின் மிகப் பெரிய வெளிக்காட்டுதலைப் பற்றிச் சிந்திப்பதற்காக. (ரோ. 5:6-8) ஆர்வமுள்ள லட்சக்கணக்கானோர் நம்மோடு சேர்ந்து இயேசுவின் மரண நாளை அனுசரிப்பார்கள் என்று நாம் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். மார்ச் 21 முதற்கொண்டு நினைவுநாள் அனுசரிப்புக்கான விசேஷ அழைப்பிதழ் உலகெங்கும் விநியோகிக்கப்படும்.
2. அழைப்பிதழைக் கொடுக்கும்போது என்ன குறிப்புகளை நீங்கள் நினைவில் வைக்க வேண்டும்?
2 நினைவில் வைக்க வேண்டிய குறிப்புகள்: எதிர்ப்புகள் வந்திருக்கிற பிராந்தியங்களில், வெகு ஜாக்கிரதையாக இருங்கள், பகுத்துணர்வோடு செயல்படுங்கள். சந்திப்பவர்களிடமெல்லாம் அழைப்பிதழைக் கொடுப்பதற்குப் பதிலாக, சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உண்மையிலேயே ஆர்வம் காட்டுகிறவர்களுக்குக் கொடுங்கள். அழைப்பிதழில் உள்ள படங்களையும், கேள்விகளையும், வசனங்களையும் நன்றாகப் பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு, முன்பக்கப் படத்தைக் காண்பித்து, “ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறப்போகும் இயேசுவின் மரண நினைவுநாள் அனுசரிப்பில் நீங்களும் எங்களோடு கலந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லுங்கள். பின்பு, அழைப்பிதழிலுள்ள தலைப்பையும் அடுத்தடுத்துள்ள கேள்விகளையும் வாசித்துக் காட்டுங்கள். அதன்பின், “உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் நீங்கள் அழைத்து வரலாம், வேறு யாரையாவது அழைத்து வர நீங்கள் விருப்பப்பட்டால் அவர்களையும் தாராளமாக அழைத்து வரலாம்” என்று மறக்காமல் அவர்களிடம் சொல்லுங்கள்.
3. விசேஷ விநியோகிப்பின் ஆரம்பத்தில் நீங்கள் அழைத்தவர்களை எப்படித் திரும்பவும் நினைப்பூட்டலாம்?
3 சனி, ஞாயிறு தினங்களில், அழைப்பிதழோடு சேர்த்து பத்திரிகைகளையும் கொடுங்கள். மறுசந்திப்பு நபர்கள், பைபிள் மாணாக்கர்கள், உறவினர்கள், சக மாணவர்கள், சக பணியாளர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் ஆகிய எல்லாரிடமும் இந்த அழைப்பிதழைக் கொடுக்கத் தீர்மானமாய் இருங்கள். கடந்த வருடம், ஒரு சகோதரி தன்னுடைய உறவினர்களில் 30 பேரை அழைத்தார், பின்பு அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி அவ்வப்போது அவர்களுக்கு நினைப்பூட்டினார். அழைக்கப்பட்டவர்களில் 25 பேர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள், இவர்களில் 4 பேர் பைபிள் படிப்புக்குச் சம்மதம் தெரிவித்தார்கள்; அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
4. நீங்கள் இப்போது எதற்குத் திட்டமிட வேண்டும், ஏன்?
4 இப்போதே திட்டமிடுங்கள்: மார்ச், ஏப்ரல் மாதங்களின்போது அநேக பிரஸ்தாபிகளால் அதிகளவு ஊழியத்தில் ஈடுபட முடியும். உங்கள் பிள்ளைகளோ பைபிள் மாணாக்கர்களோ நல்ல முன்னேற்றம் செய்துவந்தால், அவர்கள் ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபிகள் ஆவதற்கு இதுவே மிகச் சிறந்த சமயமாகும். அன்பின் மிகப் பெரிய இரண்டு வெளிக்காட்டுதல்களின் நினைவு விழாவை இந்த விநியோகிப்பு விளம்பரப்படுத்துகிறது; எனவே, இந்த விநியோகிப்பில் உங்களால் முடிந்தளவு பங்குகொள்ள இப்போதே ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பியுங்கள்.—யோவா. 3:16; 15:13.