பத்திரிகைகளைப் பெற்றுக் கொண்டவர்களிடம் பைபிள் படிப்பைத் துவங்குவது எப்படி?
1 சனிக்கிழமைகளில் பொதுவாக காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை நாம் ஊழியத்தில் அளிக்கிறோம். இருந்தாலும், நல்மனமுள்ளவர்களுக்கு சத்தியத்தைப் போதிக்க வேண்டுமென்ற நம் இலக்கை அடைவதில் இது முதல்படி மட்டுமே. மறுசந்திப்பில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளித்து பைபிள் படிப்பைத் துவங்குவது எப்படி என்பதற்கான சில அறிவுரைகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை உங்கள் பிராந்தியத்திற்கு ஏற்றவாறும் உங்களுடைய சொந்த வார்த்தைகளிலும் பயன்படுத்தலாம். உங்களுக்கு பயன்தருகிற வேறு அணுகுமுறைகள் இருந்தால் அவற்றையும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
2 ஆரம்பப் பக்கங்களைப் பயன்படுத்துங்கள்: மறுசந்திப்பில் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “நான் கொடுத்துச் சென்ற பத்திரிகைகள் பைபிளிடம் உங்கள் கவனத்தைத் திருப்பியிருக்கும். எனவே, பைபிள் வாசிப்பது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதைக் கவனியுங்கள்.” ஏசாயா 48:17, 18; யோவான் 17:3; அல்லது பொருத்தமான வேறொரு வசனத்தை வாசியுங்கள். பிறகு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அறிமுகப்படுத்தி, வீட்டுக்காரரிடம் ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டு இவ்வாறு சொல்லலாம்:
◼ “எதிர்காலத்தைக் குறித்த நிஜ நம்பிக்கையை பைபிள் நமக்கு அளிக்கிறது.” 4-5 பக்கங்களை வீட்டுக்காரருக்குக் காட்டி, “இதிலுள்ள எந்த வாக்குறுதி நிஜமாவதைக் காண நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்?” என்று கேளுங்கள். அவர் பதிலளித்த பின்பு, குறிப்பிட்ட அந்த வாக்குறுதியைப்பற்றி கலந்தாராய்கிற அதிகாரத்திற்கு அவருடைய கவனத்தைத் திருப்புங்கள்; அவர் அனுமதித்தால், ஓரிரண்டு பாராக்களை சுருக்கமாகக் கலந்து பேசுங்கள்.
◼ அல்லது நீங்கள் இவ்வாறு சொல்லலாம், “வாழ்க்கையைப் பற்றிய மிக முக்கியமான கேள்விகளுக்கு பைபிள் பதில் அளிக்கிறது.” பக்கம் 6-க்கு அவருடைய கவனத்தைத் திருப்பி, அப்பக்கத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு கேள்வியை அவர் எப்போதாவது யோசித்ததுண்டா என கேளுங்கள். அக்கேள்விக்கான பதில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்குத் திருப்பி, அதிலுள்ள ஓரிரண்டு பாராக்களைச் சுருக்கமாகக் கலந்து பேசுங்கள்.
◼ அல்லது பொருளடக்கத்திலுள்ள தலைப்புகள் சிலவற்றைக் காட்டி, அவற்றில் எந்த விஷயத்தைப்பற்றி அவர் தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்று கேளுங்கள். அந்தத் தலைப்பிலுள்ள அதிகாரத்திற்குத் திருப்பி பைபிள் படிப்பை சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள்.
3 ஒரு கேள்வியை விட்டுச்செல்லுங்கள்: முதல் சந்திப்பிலேயே மறு சந்திப்புக்காக வீட்டுக்காரரைத் தயார்படுத்துவது மற்றொரு முறையாகும். வீட்டுக்காரர் பத்திரிகைகளைப் பெற்றுக் கொண்ட பிறகு, ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, அதற்குரிய பதிலை அடுத்த முறை வரும்போது சொல்வதாக உறுதியளியுங்கள். மறுபடியும் சென்று சந்திப்பதற்கு திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். சொன்ன வாக்கைக் காப்பாற்றுங்கள். (மத். 5:37) மறுபடியும் செல்லும்போது, அந்தக் கேள்வியை வீட்டுக்காரருக்கு நினைவுபடுத்துங்கள்; அதற்குரிய பதிலை பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து சுருக்கமாக வாசித்து விளக்குங்கள். அவரும் அதைப் பார்ப்பதற்கு வசதியாக, ஒரு புத்தகத்தை அவரிடம் கொடுங்கள். ஒருசில உதாரணங்களைக் கவனியுங்கள்:
◼ நீங்கள் கொடுத்த பத்திரிகை மோசமாகிவரும் உலக நிலைமைகளைக் குறித்து கலந்தாராய்வதாக இருந்தால், இவ்வாறு சொல்லலாம், “இந்தப் பூமியில் கடவுள் என்னென்ன மாற்றங்களைச் செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு பைபிள் தரும் பதிலை நாம் அடுத்த முறை பார்க்கலாம்.” திரும்பச் செல்லும்போது, 4-5 பக்கங்களிலுள்ள குறிப்புகளைப் பயன்படுத்துங்கள். அல்லது “துயர சம்பவங்கள் நடக்க வேண்டுமென்பது கடவுளுடைய சித்தமா?” என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். மறுசந்திப்பில், அதிகாரம் 1-லுள்ள 7-8 பாராக்களை வீட்டுக்காரருக்கு விளக்குங்கள்.
◼ நீங்கள் கொடுத்த பத்திரிகை குடும்பத்தைப்பற்றி கலந்தாராய்வதாக இருந்தால், இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு வரலாம்: “குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்க குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?” திரும்பச் செல்லும்போது அதிகாரம் 14-ல் பாரா 4-ஐ சிந்தியுங்கள்.
◼ நீங்கள் கொடுத்த பத்திரிகை பைபிளின் நம்பகத்தன்மையைப் பற்றி கலந்தாராய்வதாக இருந்தால், அடுத்த முறை சம்பாஷிப்பதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கலாம்: “பைபிள் விஞ்ஞான ரீதியில் திருத்தமானதா?” மறுபடியும் சந்திக்கையில், அதிகாரம் 2-ல் பாரா 8-ஐச் சிந்தியுங்கள்.
4 ஒவ்வொரு கலந்துரையாடலின் முடிவிலும் அடுத்த சந்திப்பில் பதிலளிப்பதற்காக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு வாருங்கள். பைபிள் படிப்பைத் துவங்கிய பிறகு, முதல் அதிகாரத்திலிருந்து கடைசி அதிகாரம்வரை கிரமமாகச் சிந்தியுங்கள். வீட்டுக்காரர் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை ஏற்க மறுத்துவிட்டால் என்ன செய்வது? தொடர்ந்து அவருக்குப் பத்திரிகைகளை கொடுத்து வருவதோடு பைபிளிலிருந்தே நேரடியாக அவருடன் பேசலாம். அவருடைய ஆர்வத்தை வளர்க்க நீங்கள் தொடர்ந்து உதவினால், காலப்போக்கில் பைபிள் படிப்புக்கு அவர் சம்மதிக்கலாம்.
5 பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் ஒருவருடைய ஆர்வப்பசியைத் தூண்டிவிடலாம். எனவே, பத்திரிகைகளைப் பெற்றுக் கொண்டவர்களிடம் பைபிள் படிப்பைத் துவங்குவதற்கு விசேஷ முயற்சி எடுங்கள். இவ்வாறு ‘சீஷராக்கி . . . அவர்களுக்கு உபதேசம்பண்ணும்படி’ இயேசு கொடுத்த அறிவுரைகளுக்கு நாம் கீழ்ப்படிவோம்.—மத். 28:19, 20.
[கேள்விகள்]
1. என்ன இலக்கோடு நாம் பத்திரிகைகளைக் கொடுக்கிறோம்?
2. பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்?
3. (அ) மோசமாகிவரும் உலக நிலைமைகளைப்பற்றி (ஆ) குடும்பத்தைப்பற்றி (இ) பைபிளின் நம்பகத்தன்மையைப்பற்றி கலந்தாராய்கிற பத்திரிகைகளைக் கொடுத்தபிறகு பைபிள் படிப்பை எவ்வாறு நாம் துவங்கலாம்.
4. வீட்டுக்காரர் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை ஏற்க மறுத்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?
5. ஆட்களிடம் பத்திரிகைகளை கொடுத்து வருவதோடு வேறு எதையும் நாம் செய்ய வேண்டும்?