புதிய ஊழிய ஆண்டுக்கான மெச்சத்தக்க இலக்கு
1 ஆன்மீக ரீதியில் நாம் முன்னேற வேண்டுமானால் இலக்குகள் வைக்க வேண்டும். புதிய ஊழிய ஆண்டுக்காக நீங்கள் என்ன இலக்கு வைத்திருக்கிறீர்கள்? ஒரு மாதமோ பல மாதங்களோ துணைப் பயனியர் ஊழியம் செய்வது சிறந்த இலக்காக இருக்கும். இந்த இனிய வேலையில் பங்குகொள்வதற்கு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். ஆகவே அதைக் குறித்துச் சிந்திப்பதற்கு இதுதான் ஏற்ற தருணம். துணைப் பயனியர் செய்வதற்கு ஏன் இலக்கு வைக்க வேண்டும்?
2 துணைப் பயனியர் செய்வதற்கான காரணங்கள்: துணைப் பயனியர் சேவையின்போது ஊழியத்தில் அதிக நேரம் ஈடுபட முடிவதால் இது நம் பரலோகத் தகப்பனை “அதிகமதிகமாய்” பிரியப்படுத்த உதவுகிறது. (1 தெ. 4:1) யெகோவா நமக்குச் செய்துள்ளவற்றை எல்லாம் நினைக்கும்போது, அவரைப்பற்றி மற்றவர்களிடம் சொல்ல நம் இருதயம் தூண்டப்படுகிறது. (சங். 34:1, 2) ஊழியத்தில் அதிகமாய் ஈடுபடுவதற்காக நாம் செய்யும் தியாகங்களை எல்லாம் யெகோவா கவனிக்கிறார், அவற்றை உயர்வாய் மதிக்கிறார். (எபி. 6:10) நம்முடைய கடின உழைப்பினால் யெகோவாவைப் பிரியப்படுத்துகிறோம் என்பதை அறிவது நமக்கு பெரும் சந்தோஷத்தைத் தருகிறது.—1 நா. 29:9.
3 பொதுவாக, ஏதாவதொரு காரியத்தில் நீங்கள் அதிகமாக ஈடுபடும்போது, அது சுலபமானதாக, அதிக இன்பமானதாக ஆகிறது. ஊழியத்தில் அதிக நேரம் ஈடுபடும்போது, வீட்டுக்கு வீடு பிரசங்கிக்கையில் உங்களால் தடுமாறாமல் பேச முடியும். திறம்பட்ட முறையில் உரையாடலைத் துவங்கவும் பைபிளைப் பயன்படுத்தவும் முடியும். எந்தளவுக்கு அதிகமாக உங்கள் நம்பிக்கையைப்பற்றி பேசுகிறீர்களோ அந்தளவுக்கு அதிகமாக உங்கள் விசுவாசம் பலப்படும். பைபிள் படிப்பே நடத்தாத அநேகர் துணைப் பயனியர் செய்த சமயத்தில் ஒரு படிப்பைத் துவங்கியிருக்கிறார்கள்.
4 ஆன்மீக ரீதியில் மந்தமாய் இருப்பவர்கள் முன்னேற வேண்டும் என்ற ஊக்கத்தைப் பெற துணைப் பயனியர் ஊழியம் உதவலாம். ஒருகாலத்தில் ஒழுங்கான பயனியராக இருந்த ஒரு சகோதரர், சம்பாத்தியம் பண்ணுவதிலேயே தான் மூழ்கிவிட்டதை உணர்ந்தார்; அதனால் துணைப் பயனியராக ஒரு மாதம் சேவைசெய்யத் தீர்மானித்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “அந்த ஒரு மாதமும் ஆன்மீக ரீதியில் நான் எந்தளவு தெம்படைந்தேன் என்பதை நினைக்கும்போது எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கிறது! அதனால் தொடர்ந்து துணைப் பயனியர் செய்வதற்குத் தீர்மானித்தேன். பிறகு மீண்டும் ஒழுங்கான பயனியராக ஆகிவிட்டேன்.”
5 தடைகளைத் தாண்டுதல்: சிலர் பிரசங்கிக்கத் தங்களுக்குப் போதிய திறமை இல்லை என நினைப்பதால் துணைப் பயனியர் செய்யத் தயங்குகிறார்கள். இதுதான் உங்கள் பிரச்சினை என்றால், எரேமியாவுக்கு யெகோவா உதவியதுபோல உங்களுக்கும் அவர் உதவுவார். (எரே. 1:6-10) மோசே, “திக்குவாயும் மந்தநாவும்” உள்ளவராய் இருந்தபோதிலும், யெகோவா தம்முடைய சித்தத்தைச் செய்வதற்கு அவரைப் பயன்படுத்தினார். (யாத். 4:10-12) லாயக்கற்றவராக நீங்கள் உணர்ந்தால், தைரியத்திற்காக யெகோவாவிடம் மன்றாடுங்கள்.
6 சுகவீனம் அல்லது பிஸியான வாழ்க்கை காரணமாக துணைப் பயனியர் செய்ய நீங்கள் தயங்குகிறீர்களா? நீங்கள் உடல்நலம் குன்றியவர்களாக இருந்தால், உங்களுக்கு வசதியான முறையில் நேரத்தைத் திட்டமிட்டு ஊழியம் செய்யும்போது, துணைப் பயனியர் சேவை என்ற இலக்கை எட்ட முடியும். நீங்கள் பிஸியான வாழ்க்கையில் அல்லாடிக் கொண்டிருந்தால், அதிக முக்கியமில்லாத சில காரியங்களை அடுத்த மாதத்திற்கு ஒத்திப் போடலாம். முழுநேர வேலை செய்யும் சிலர், ஓரிரு நாட்கள் விடுமுறை எடுப்பதன்மூலம் துணைப் பயனியர் செய்திருக்கிறார்கள்.—கொலோ. 4:5.
7 அதை எவ்வாறு செய்வது: துணைப் பயனியர் செய்வதற்கான உங்கள் ஆசையை ஜெபத்தில் தெரியப்படுத்துங்கள். ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் கேளுங்கள். (ரோ. 12:11, 12) உங்களுடைய அட்டவணையை மாற்றியமைப்பது சம்பந்தமாக சரியான தீர்மானங்களை எடுக்க அவர் உதவுவார். (யாக். 1:5) துணை பயனியர் செய்வதற்கான ஆசை இல்லையென்றால், பிரசங்க வேலையில் இன்பம் காண உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள்.—லூக். 10:1, 17.
8 துணைப் பயனியர் செய்வதற்கான இலக்கைக் குறித்து குடும்பமாக கலந்து பேசுங்கள். (நீதி. 15:22) ஒருவேளை, குடும்பத்தில் மற்ற அங்கத்தினர்களுடைய ஆதரவுடன் ஒருவராவது துணைப் பயனியர் செய்யலாம். துணைப் பயனியர் செய்ய ஆசைப்படுவதைப்பற்றி சபையிலுள்ள மற்றவர்களிடம், குறிப்பாக உங்களைப் போன்ற சூழ்நிலையில் இருப்பவர்களிடம் சொல்லுங்கள். இது துணைப் பயனியர் செய்வதற்கான ஆர்வத்தை இன்னும் முடுக்கிவிடலாம்.
9 புதிய ஊழிய ஆண்டிற்கான உங்களுடைய ஊழிய அட்டவணையைப் புரட்டிப் பார்க்கையில், எப்போது துணைப் பயனியர் செய்ய முடியுமென்று நினைக்கிறீர்கள்? நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும்சரி, பள்ளிக்குச் செல்பவராக இருந்தாலும்சரி விடுமுறை கிடைக்கிற மாதங்களிலோ ஐந்து சனி ஞாயிறுகள் வருகிற மாதங்களிலோ துணைப் பயனியர் செய்ய விரும்பலாம். உதாரணமாக, செப்டம்பர், டிசம்பர், மார்ச், ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் ஐந்து சனி ஞாயிறுகள் உள்ளன. மே மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகளும் ஜூன் மாதத்தில் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளும் உள்ளன. உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், பொதுவாக நல்ல சீதோஷ்ணம் நிலவுகிற மாதங்களில் துணைப் பயனியர் செய்யத் திட்டமிடலாம். வட்டாரக் கண்காணி உங்கள் சபையைச் சந்திக்கும் மாதத்திலும்கூட பயனியர் செய்ய நீங்கள் நினைக்கலாம். அவருடைய சந்திப்பின்போது, ஒழுங்கானப் பயனியர்களோடு நடத்தப்படுகிற கூட்டத்தின் முதல் பகுதியில் கலந்து கொள்ளும் கூடுதல் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கலாம். நினைவு ஆசரிப்பு அடுத்த வருடம் மார்ச் 22-ஆம் தேதி வருவதால், மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களும் துணைப் பயனியர் செய்வதற்கு ஏற்ற மாதங்கள்தான். எந்த மாதம் அல்லது மாதங்களில் துணைப் பயனியர் செய்யப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்தபிறகு, மணிநேரத்தை எட்ட உதவுகிற ஒரு அட்டவணையைத் தயார் செய்யுங்கள்.
10 இந்தப் புதிய ஊழிய ஆண்டில் துணைப் பயனியர் செய்ய முடியாதென்று நீங்கள் நினைத்தாலும்கூட, பயனியர் மனப்பான்மையை உங்களால் காட்ட முடியும். யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைத் கொடுப்பதற்காக நீங்கள் முழு மூச்சோடு முயற்சி செய்வது அவரைப் பிரியப்படுத்துகிறது என்ற நம்பிக்கையுடன் முடிந்தளவு ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபடுங்கள். (கலா. 6:4) துணைப் பயனியர் செய்ய முடிந்தவர்களுக்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்துங்கள். ஒருவேளை, பயனியர் செய்பவர்களுடன் சேர்ந்து கொள்வதற்காக வாரத்தில் நீங்கள் வழக்கமாக ஊழியம் செய்கிற நாளோடுகூட வேறொரு நாளும் ஈடுபடுவதற்கு உங்கள் அட்டவணையை மாற்றியமைக்கலாம்.
11 யெகோவாவின் மக்கள் காலத்தின் அவசரத்தன்மையை அறிந்திருக்கிறார்கள். அவசரமாக செய்து முடிக்க வேண்டிய ஒரு வேலை, அதாவது நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலை நமக்கு இருக்கிறது. ஆட்களின் உயிர் ஆபத்தில் இருக்கிறது, மீந்திருக்கும் காலமோ வெகு குறைவு. (1 கொ. 7:29-31) கடவுள்மீதும் சக மனிதர்மீதுமுள்ள அன்பு ஊழியத்தில் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யத் தூண்டும். முயற்சியும் நல்ல திட்டமும் இருந்தால் இந்தப் புதிய ஊழிய ஆண்டில் குறைந்த பட்சம் ஒரு மாதமாவது நம்மால் துணைப் பயனியர் செய்ய முடியும். இது மெச்சத்தக்க இலக்கு அல்லவா!
[கேள்விகள்]
1. புதிய ஊழிய ஆண்டில் என்ன இலக்கை வைப்பதற்கு நாம் திட்டமிடலாம்?
2. துணைப் பயனியர் செய்வதை இலக்காக வைப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
3, 4. துணைப் பயனியர் செய்யும்போது நாம் எவ்வாறு பயனடைகிறோம்?
5. லாயக்கற்றவர்கள் என்ற நினைப்பை நாம் எப்படி ஓரங்கட்டலாம்?
6. சுகவீனத்தின் மத்தியிலும் பிஸியான வாழ்க்கையின் மத்தியிலும் எவ்வாறு துணைப் பயனியர் சேவை செய்யலாம்?
7. துணைப் பயனியர் செய்வதைக் குறித்து ஜெபிப்பது ஏன் பயனுள்ளது?
8. நீதிமொழிகள் 15:22-ஐப் பின்பற்றுவது துணைப் பயனியர் செய்வதை எப்படிச் சாத்தியமாக்கலாம்?
9. எந்தெந்த மாதங்களில் துணைப் பயனியர் செய்ய நீங்கள் தீர்மானிக்கலாம்?
10. உங்களால் துணைப் பயனியர் செய்ய முடியாவிட்டாலும்கூட நீங்கள் என்ன செய்யலாம்?
11. நாம் ஏன் அவசரத்தன்மையுடன் செயல்பட வேண்டும்?