அன்புள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு
தமிழ்நாட்டில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அறிந்து இந்தியா முழுவதிலுமுள்ள சகோதரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெளி ஊழியத்திலும் அதிகாரிகளை சந்திக்கையிலும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்துவதற்கு, தமிழ்நாட்டிலுள்ள சகோதரர்களுக்கு கடந்த சில ஆண்டுகள் பயிற்சிக் காலமாக இருந்திருக்கின்றன. (1 பே. 3:15) சுவிசேஷ வேலையில் வைராக்கியத்துடன் மட்டுமின்றி, விவேகத்துடனும் ஈடுபட்டு, எப்பொழுதும் சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லாமல், இணங்க வைக்கும் விதத்தில் நியாயவிவாதம் செய்கையில் சிறந்த பலன்கள் கிடைக்கின்றன.—நீதி. 16:21, 23.
பிற நாடுகளிலும்கூட ஊழியம் சம்பந்தப்பட்ட வேலையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை சகோதரர்கள் செய்து வருகிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் வால்கில் அச்சகத்தில் இரண்டு புதிய அச்சு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன; இவை ஒவ்வொன்றும் அதிகபட்சமாக மணிக்கு 90,000 பத்திரிகைகளை அச்சிடும் திறன் கொண்டவை. அதே சமயத்தில், தடித்த அட்டையுள்ள புத்தகங்களை நிமிடத்திற்கு 120 என்ற கணக்கில் தயாரிக்கும் புதிய சாதனமும் நிறுவப்பட்டுள்ளது. அச்சகத்தை வால்கில்லுக்கு மாற்றிவிட்டதால் புரூக்ளினில் 360 ஃபர்மன் ஸ்ட்ரீட்டில் இருந்த கட்டடத்தை விற்க முடிந்தது.
இந்தியாவில் நினைவு ஆசரிப்பு சமயத்தில் ஊழியம் வெகு மும்முரமாக நடைபெற்றது. ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 2,368 பேர் துணைப் பயனியர் சேவை செய்தனர்; புதியதோர் உச்சநிலையாக 18,114 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன; கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்புக்கு 61,538 பேர் கூடிவந்திருந்தனர்.
“கடவுளோடு நடவுங்கள்” என்ற மாவட்ட மாநாடுகளுக்காகவும், ஊழியப் பயிற்சிப் பள்ளியின் ஆறாவது வகுப்பிற்காகவும் ஆவலோடு காத்திருக்கிறோம்; இவை அக்டோபரில் துவங்கும். 2005 ஊழிய ஆண்டில் நாம் கால் பதிக்கையில், உங்களோடு சேர்ந்து நாங்களும் ‘கர்த்தருடைய கிரியையில் எப்பொழுதும் பெருகுவதில்’ மகிழ்ச்சி அடைகிறோம்.—1 கொ. 15:58.
உங்கள் சகோதரர்கள்,
இந்திய கிளை அலுவலகம்