ராஜ்ய மன்ற கட்டுமானம்—பரிசுத்த சேவையின் ஒரு முக்கிய அம்சம்
1 கடந்த ஆண்டில் இந்தியக் கிளை அலுவலக பிராந்தியத்தில் 19 ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இதற்காக அரும்பாடுபட்ட அனைவரையும் நாங்கள் உள்ளங்கனிந்து பாராட்டுகிறோம். ராஜ்ய மன்ற கட்டுமானம் சம்பந்தமாகப் பிரமாண்டமான அளவு வேலை செய்யப்பட்டிருக்கிறது; ஆனாலும், செய்வதற்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது. கூடுதலாக 175 ராஜ்ய மன்றங்கள் நமக்கு உடனடியாய் தேவைப்படுகின்றன. யெகோவாவுக்குச் செய்யும் பரிசுத்த சேவையின் இந்த முக்கிய அம்சத்தை நாம் எல்லாருமே எப்படி ஆதரிக்கலாம்?—வெளி. 7:15.
2 உதவ தயாராய் இருங்கள்: நீங்கள் முழுக்காட்டுதல் பெற்ற ஒரு பிரஸ்தாபியா? அப்படியானால், ராஜ்ய மன்ற கட்டுமான இலாகாவுக்கு ஒத்தாசை செய்ய முன்வரும்படி உங்களை அழைக்கிறோம்; முதலில், ராஜ்ய மன்ற கட்டுமானத் திட்ட வாலண்டியர் விண்ணப்ப படிவத்தை (Application for Kingdom Hall Construction Volunteer Program) முறையாக பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். (சங். 110:3) இந்த வாலண்டியர் சேவை செய்பவர்கள், மனமுவந்து வேலை செய்கிறவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருக்க வேண்டும். (சங். 133:1) கட்டுமானத் திறமைகள் எதுவும் உங்களுக்கு இல்லாவிட்டாலும், நீங்கள் முன்வருவதுதானே, கட்டுமானப் பணி நல்ல விதத்தில் நடந்தேற பெரும் உதவியாக இருக்கும். தற்போது தகுதிவாய்ந்த சகோதரர்களின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது; கட்டுமானப் பணியை மேற்பார்வை செய்யவும் அப்பணிக்குரிய பெர்மிட்டுகள் வாங்குவது சம்பந்தப்பட்ட பல்வேறு வேலைகளைச் செய்யவும் உதவி தேவைப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் இன்னும் அதிகமான வேலைகளைச் செய்வதற்காகப் பயிற்சியும் உங்களுக்கு அளிக்கப்படும்.
3 உங்களால் கட்டுமானப் பணியில் நேரடியாக உதவ முடியாவிட்டால், இந்தப் பணியில் ஈடுபட முடிந்த மற்றவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் உங்கள் ஆதரவை அளிக்கலாம். கட்டுமானப் பணி காரணமாக சபைக் கூட்டங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு பேச்சு நியமிப்பு ஏதாவது இருந்தால், அவர்களுக்குப் பதிலாக அதைக் கொடுக்க நீங்கள் முன்வரலாம். ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவரது பொறுப்பை அவருக்குப் பதில் வேறு யாராவது பார்த்துக் கொள்ள மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம்; இதற்காக அவர்கள் முன்கூட்டியே திட்டமிடலாம். இவ்வாறு, ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலையை முன்னேற்றுவிப்பதில் நாம் ஒன்றுபட்டு உழைப்பதை யெகோவா பார்க்கும்போது சந்தோஷப்படுவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.—எபி. 13:16.
4 ஊக்கமூட்டுங்கள்: ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு அதிக நேரம் செலவிடப்படுகிறது, கடினமாக உழைக்கவும் வேண்டியிருக்கிறது. ஆகவே, இப்பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் சில சமயங்களில் சபைக் கூட்டங்களுக்கு வரமுடியாமல் போக நேரிடுகிறது. அப்படிக் கூட்டங்களுக்கு வரமுடியாதவர்களை மறக்காமல் பாராட்டி, ஊக்கமூட்டுவோமாக; ஏனெனில் அவர்கள் இந்த ‘அத்தியாவசிய வேலைக்கென’ பல தியாகங்களைச் செய்கிறார்கள்.—அப். 6:3, NW; ரோ. 14:19.
5 சமநிலையோடிருங்கள்: கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதே நமது முக்கியமான வேலையாகும். (மாற். 13:10) எனவே முடிந்தவரை சபைக் கூட்ட நாட்களில் வாலண்டியர்கள் கூட்டங்களைத் தவறவிடாதிருக்கும்படியே நாங்கள் கட்டுமானத் திட்டங்களைப் போடுகிறோம். அவ்வாறே, வாலண்டியர்களும் தங்களது பொறுப்புகளுக்கு இடையூறு வராதபடி சமநிலையோடிருக்க வேண்டும். அவர்கள் கூட்டத்திற்கு வரமுடியாதென தெரிந்தால், தங்கள் பேச்சு நியமிப்பை வேறொருவர் கையாள ஏற்பாடு செய்ய வேண்டும்.
6 சபை அங்கத்தினர்களின் ஒற்றுமை, “அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது” என அப்போஸ்தலன் பவுல் விவரித்தார். (எபே. 4:16) யெகோவாவின் மீதும் மெய் வணக்கத்தின் மீதும் நமக்குப் பற்றுதல் இருக்கிறது; அதுவே, நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலும் ராஜ்ய மன்ற கட்டுமானப் பணிக்கு உதவுவதிலும் மற்றவர்களோடு சேர்ந்து ஒத்துழைக்க நம்மை உந்துவிக்கிறது.
[கேள்விகள்]
1. ராஜ்ய மன்ற கட்டுமானம் சம்பந்தமாக என்ன வேலை செய்து முடிக்கப்பட்டிருக்கிறது, செய்வதற்கு இன்னும் என்ன வேலை இருக்கிறது?
2. ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் நாம் எப்படி நேரடியாக உதவலாம்?
3. வேறு என்ன வழிகளில் ராஜ்ய மன்ற கட்டுமானப் பணிக்கு நாம் உதவலாம்?
4. ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களை நாம் எப்படி ஊக்கமூட்டலாம்?
5. கட்டுமானப் பணியில் ஈடுபடுபவர்கள் எப்படிச் சமநிலையோடிருக்கலாம்?
6. மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்க சபையார் அனைவரும் ஒத்துழைக்கையில் என்ன நடக்கிறது?