அக்கறைகாட்டுவோரை, பலன்தரும் தெரு ஊழியத்தின்மூலம் கண்டுபிடித்தல்
1 இராஜ்ய நற்செய்தியைக் கேட்பதற்குத் தகுதியுள்ளோரைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். (மத். 10:11) எனினும், இன்று பல இடங்களில், ஆட்களை அவர்களுடைய வீடுகளில் சந்திப்பது மேலும் மேலும் அதிகக் கடினமாகிக்கொண்டிருக்கிறது. ஆகவே, ஒருவேளை சந்திக்கத் தவறிய தகுதியுள்ளோரை எட்டுவதற்கு என்ன செய்யலாம்?
2 வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தில் சந்திக்கத் தவறின ஆட்களைக் கண்டுபிடிப்பதற்கு தெரு ஊழியம் பலன்தரத்தக்க ஒரு முறையாக இருக்கலாம். பஸ் நிற்குமிடங்கள், உட்செல்ல அனுமதிகொடுக்கப்படாத கட்டடங்களுக்கருகில், பொது பூங்காக்கள், இன்னும் ஜனங்கள் தங்கள் அன்றாட விவகாரங்களில் ஈடுபட்டு நடமாடும் மற்ற இடங்களிலும் நாம் தெரு ஊழியம் செய்யலாம்.
3 தெரு ஊழியம் குறிப்பிடப்படுகையில், சிலருக்குத் திகிலுணர்ச்சிகள் உண்டாகின்றன. தாங்கள் வெட்கப்படுவதால் அல்லது ராஜ்ய செய்தியை எதிர்ப்போரால் அவமதிக்கப்படுவதை எதிர்பார்ப்பதால் அந்த ஊழியத்தில் பங்குகொள்ள அவர்கள் தயங்கலாம். இந்தக் கவலைகள் பொதுவாய் ஆதாரமற்றவை. இந்த ஊழியத்தில் அனுபவமுள்ளவர்கள், வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தைப் பார்க்கிலும் இது எவ்வகையிலும் கடினமாக இல்லையென தெரிவிக்கின்றனர். உண்மையில், தெருவில் பல்வேறு காரணங்களின்பேரில் மற்றவர்கள் தங்களை அணுகிப் பேசுவதில் பெரும்பான்மையர் பழக்கப்பட்டவர்களாகியுள்ளனர் என்றும், நாம் அவர்களுடைய கதவை தட்டி பேசும்போது இருப்பதைப் பார்க்கிலும் இங்கு நம்மோடு கலந்துபேச அல்லது செவிகொடுக்க சிலர் அதிகம் மனம் சாய்வோராக உள்ளனரென்றும் அவர்கள் கண்டிருக்கின்றனர். ஆகையால் நாம் ‘தைரியம்கொண்டால்’ ஆச்சரியமுண்டாக மகிழ்ச்சிதரும் பலனடைவோம்.—1 தெ. 2:2.
4 எவ்வாறு மிக அதிக பலன்தரத்தக்க முறையில் தெரு ஊழியத்தைச் செய்யலாம்? நன்றாய்த் தயாரிப்பது முக்கியமானது. முன்னதாகவே பத்திரிகைகளை வாசித்து, நீங்கள் சந்திக்கும் ஆட்களுக்கு அக்கறையூட்டுமென உணரும் பேச்சுக் குறிப்புகள் ஒன்றிரண்டைத் தெரிந்தெடுங்கள். 30 வினாடிகள் நீடிக்கும் ஓர் பிரசங்கம் பொருத்தமானது. மற்றவர்களோடு நேரடியான சந்திப்பு செய்வது இலக்காக இருப்பதால், போதியளவான ஆட்கள் வழக்கமாய்க் கடந்துபோகும் ஓரிடத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அருகில் மற்றொரு பிரஸ்தாபியைக் கொண்டிருப்பது உசிதமானதென்றாலும் தனியாகப் பிரிந்துநின்று ஊழியம் செய்வதே பொதுவாகச் சிறந்தது. ஒன்றாய்ச் சேர்ந்து நிற்கும் பிரஸ்தாபிகள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருப்பதில் காலத்தைக் கடக்கும் போக்கில் இருந்து, ராஜ்ய செய்திக்குச் செவிகொடுக்க மனமுள்ளோராக இருக்கக்கூடிய பொதுமக்களுக்குக் கவனம் செலுத்தாமல்விட நேரிடலாம்.
5 ஓரிடத்தில் பத்திரிகைகளைக் காட்டிக்கொண்டு சும்மா நிற்பது, தனி நபர்களை அணுகிப்பேச முன்முயற்சி எடுப்பதைப்போல் பலன் தருவதாக இராது. நேரில் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். ஓர் உரையாடலைத் தொடங்க நீங்கள் முயற்சி செய்கையில், கனிவுடனும் சினேகப்பான்மையுடனும் நேரடியாக பேசுபவராயும் இருங்கள். சில சந்தர்ப்பங்களில், ஓர் ஆளுடன் பேசுகையில் அவரோடு சில அடிகள் நீங்கள் நடக்க வேண்டியதாயிருக்கலாம். அவர் செவிகொடுப்பவராக இருந்தால், பத்திரிகைகளை அளியுங்கள். பத்திரிகைகள் மறுக்கப்பட்டால், ஒரு துண்டுப்பிரதியை அளிக்க நீங்கள் விரும்பலாம்.
6 பொதுவாக, அக்கறையைத் தூண்டும் ஒரு கேள்வியை எழுப்பும் அல்லது ஒரு கூற்றைக் கூறும் சுருக்கமான பிரசங்கத்தைத் தயாரிப்பது சிறந்ததாகும். இணக்கமான பதில் இருந்தால், அந்த அக்கறையைத் தொடர்ந்து வளர்க்க அந்த நபரின் பெயரையும் விலாசத்தையும், ஒருவேளை அவருடைய தொலைபேசி எண்ணையும்கூட, பெற முயற்சி செய்யுங்கள். நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “நீங்கள் மேலும் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால், நான் உங்களை உங்கள் வீட்டில் சந்திப்பதில் அல்லது மற்றொரு சாட்சி அவ்வாறு சந்திக்க ஏற்பாடு செய்வதில் மகிழ்ச்சியடைவேன்.”
7 ஒரு மூப்பர் தெரு ஊழியத்தில் ஈடுபட்டிருக்கையில் ஓர் அம்மாளை அணுகிப் பேசினார். அவளுடைய வீட்டில் சாட்சிகளோடு பேச அந்த அம்மாளுக்கு ஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையென அறிந்தார். அவள் ஒரு புத்தகத்தை ஏற்றுக்கொண்டு, வசதியான நேரத்தில் ஒரு சகோதரி அவளுடைய வீட்டில் அவளைச் சந்திப்பதற்குச் சம்மதித்தாள். தெரு ஊழியத்தை நாம் பலன்தரத்தக்க முறையில் செய்தால் தகுதியுள்ளோரான மேலும் பலரை நிச்சயமாகவே கண்டுபிடித்து அவர்களுக்கு உதவிசெய்ய முடியும்.—அப். 17:17.