மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகரில் விசுவாசத்தைக் கட்டுதல்
1 மக்களில் பெரும்பாலானோர் உயிர் தோன்றியதைப்பற்றியும் அதன் நோக்கத்தைப்பற்றியும் ஏதோ ஒருவகை முடிவுக்கு வந்திருக்கின்றனர். வருத்தம் தரும்வகையில், பரிணாமத்தை விடையாக ஏற்றுக்கொள்ளும்படி அநேகர் தவறாக செல்வாக்குச் செலுத்தப்பட்டிருக்கின்றனர். படைப்பு புத்தகம் விவாதத்தின் இருபக்கத்திலும் ஓர் ஆழ்ந்த கண்ணோட்டம் விடுகிறது. பின்னர் பைபிளுக்கு சாதகமாக ஏராளமான சான்றளிக்கிறது. கேட்பதற்கு விருப்பம் உள்ளவர்களாய் இருக்கிற உண்மை மனதுள்ள நபர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்? மறுசந்திப்புகள் செய்வதன்மூலமே. நாம் திரும்ப செல்லும்போது, யெகோவாவில் நம்முடைய சிருஷ்டிகராக விசுவாசத்தைக் கட்டுமளவுக்கு, சொல்வதற்கு தீர்மானமான ஏதோவொன்றை மனதில் கொண்டிருப்பது எப்போதுமே நல்லது.
2 அந்த நபர் பைபிளில் நம்பிக்கையைக் காண்பித்தாரானால், நீங்கள் உரையாடலைத் தொடங்க இந்த அணுகுமுறை பலனளிக்கக்கூடியதாக இருக்கலாம்:
◼ “பிரபஞ்சத்தின் தோற்றத்தைப்பற்றி ஏசாயா 45:18 வல்லமைவாய்ந்த வகையில் சொல்கிறது. அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். [வாசித்த பிறகு குறிப்புசொல்ல அனுமதியுங்கள்.] யெகோவா தம்மைத்தாமே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவராக அடையாளப்படுத்துகிறார். பூமியின்மீது உயிர் தோன்றியதைப்பற்றி என்ன? இதற்கும் ஏசாயா 42:5 அவருக்கே எல்லா புகழையும் கொடுக்கிறது. [வாசியுங்கள்.] பைபிள் என்ன சொல்லுகிறதோ அது உண்மையானால், பரிணாமம் பொய்யாக இருக்கவேண்டும். பைபிளை நம்பலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” படைப்பு புத்தகத்தில் 17-வது அதிகாரத்தைக் காட்டி, சிருஷ்டிகராக யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு கூடுதலான காரணங்களைச் சுட்டிக்காட்டுங்கள்.
3 இவ்வாறு ஏதாவது சொல்வதன்மூலம் நீங்கள் உரையாடலைத் தொடங்கலாம்:
◼ “நான் போனதடவை வந்தபோது, மனிதனுக்கும் பூமிக்கும் என்ன எதிர்காலம் இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. நான் உங்களுக்குக் கொடுத்துச் சென்ற புத்தகம் அந்தக் கேள்விக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்று கவனியுங்கள்.” படைப்பு புத்தகத்தின் 234-5-ம் பக்கங்களைத் திறந்து, பாராக்கள் 6-ஐயும் 7-ஐயும் வாசிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். இன்னும் அதிக அக்கறை காட்டினால், நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “பூமியில் என்னென்ன திடீர்மாற்றங்கள் ஏற்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” பொருத்தமானதாக இருக்குமானால், படைப்பு புத்தகத்தில் அதே அதிகாரத்தில் உள்ள மற்ற பாராக்களை தொடர்ச்சியாக சிந்திப்பதன்மூலம் இந்தக் குறிப்பை அச்சமயத்திலோ நீங்கள் அடுத்தமுறை செல்லும்போதோ ஆலோசிக்கலாம்.
4 வீட்டுக்காரர் “மிகப் பெரிய மனிதர்” புத்தகத்தைப் பெற்றிருந்தால், நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼ “இன்று அநேக மக்கள் தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் சந்தோஷத்தைக் கண்டடைய முடியாதவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்ததுண்டா? சந்தோஷத்தைக் கண்டடைவது எப்படி என்று இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்தார். மேலும் சரியானதைச் செய்வதனால் வரும் மகிழ்ச்சியைத் தம்முடைய வாழ்க்கையில் பிரதிபலித்தும் காட்டினார்.” மத்தேயு 5:3-12-ல் கூறப்பட்டுள்ள ‘சந்தோஷத்திற்கு’ கவனத்தைச் செலுத்துங்கள். அவற்றில் சில மிகப் பெரிய மனிதர் புத்தகத்தில் அதிகாரம் 35-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. முக்கியமாக தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளை உணர்ந்தவர்களாய் இருப்பதனால் சந்தோஷம் எவ்வாறு கிடைக்கிறது என்பதைக் காண்பியுங்கள். பின்பு, இந்தத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு வீட்டு பைபிள் படிப்பைக் கொண்டிருப்பது எவ்வாறு ஒரு நல்ல படியாக இருக்கிறது என்றும் விளக்குங்கள்.
5 மறுசந்திப்பை நீங்கள் தொடங்குவதற்கான மற்றொரு வழி கீழ்க்கண்டவாறு சொல்வதன்மூலமாகும்:
◼ “பொல்லாங்கினாலும் துன்மார்க்கத்தினாலும் மனிதவர்க்கம் பேரளவு வேதனையையும் துயரத்தையும் அனுபவித்திருக்கிறது. இந்த நிலைமைகள் முடிவுக்கு வரும் என்று இந்தப் பூமியின் சிருஷ்டிகராகிய யெகோவா வாக்களித்திருக்கிறார். [அதிகாரம் 133-க்குத் திருப்பி, நீதிமொழிகள் 2:21, 22-ஐ வாசியுங்கள்.] இயேசுவின் முன்மாதிரியின் மூலமும் போதனைகளின் மூலமும் யெகோவா நமக்குக் கற்றுக்கொடுத்தவற்றை கற்றுக்கொண்டு கீழ்ப்படிபவர்கள், அதிசயமான ஆசீர்வாதங்களுக்காக எதிர்நோக்கி இருக்கலாம்.” அத்தகைய ஓர் உறுதியான நம்பிக்கையை நம்மால் எவ்வாறு கொண்டிருக்க முடிகிறது என்பதைக் காட்டுங்கள். இதை 25, 26, 37, 44, 46, 47, 52, 58, 70 போன்ற அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓரிரு அற்புதங்களுக்குக் கவனத்தை ஈர்ப்பதன்மூலம் காட்டுங்கள்.
6 மறுசந்திப்புகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரங்களை அட்டவணையில் திட்டமிடுவது மிகச் சிறந்தது என்று அனுபவமுள்ள பிரஸ்தாபிகள் அறிந்துகொண்டிருக்கின்றனர். இந்த வேலைக்காக திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்துவைத்திருப்பது, காட்டப்பட்ட அக்கறையைத் தாமதியாமல் பின்தொடர நமக்கு ஏதுவாக இருக்கும். உங்களுக்கும் உங்களுடைய பிராந்தியத்தில் வசிக்கும் மக்களுக்கும் மிகப் பொருத்தமான நேரத்தை தீர்மானியுங்கள். இந்த வேலையில் தவறாது பங்கேற்பதன்மூலம், ‘சீஷராக்குவதற்கான’ கட்டளையை நிறைவேற்றுவதில் வரும் மகிழ்ச்சியை நீங்கள் கண்டடைவீர்கள்.—மத். 28:19, 20.