கிறிஸ்துவைப் போலவே கீழ்ப்படிதலோடும் தைரியத்தோடும் இருங்கள்
“தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்.”—யோவா. 16:33.
1. கடவுளுக்கு இயேசு எந்தளவுக்குக் கீழ்ப்படிதலைக் காட்டினார்?
இயேசு கிறிஸ்து எப்போதும் கடவுளுடைய சித்தத்தைச் செய்தார். தம்முடைய பரலோகத் தகப்பனுக்குக் கீழ்ப்படியக் கூடாதென்ற எண்ணமே அவர் மனதில் தோன்றியதில்லை. (யோவா. 4:34; எபி. 7:26) ஆனால், பூமியில் வாழ்ந்த காலத்தில் கீழ்ப்படிதலோடு இருப்பது அவருக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இயேசு ஊழியம் செய்ய ஆரம்பித்த சமயத்திலிருந்தே சாத்தானும் அவனுடைய ஆட்களும் அவரை உத்தமமாக நடக்கவிடாதபடி எவ்வளவோ முயற்சி செய்தார்கள்; அதற்காகச் சில சமயம் அவரைக் கட்டாயப்படுத்தப் பார்த்தார்கள், அவரிடம் நியாயங்காட்டிப் பேசினார்கள், நயவஞ்சகமாக நடந்துகொண்டார்கள். (மத். 4:1-11; லூக். 20:20-25) இந்த எதிரிகள் அவருக்கு மனோ ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும், உடல் ரீதியிலும் தாங்கமுடியாத வேதனைகளைக் கொடுத்தார்கள். கடைசியில் அவரைக் கழுமரத்தில் அறைந்து சாகடித்தார்கள். (மத். 26:37, 38; லூக். 22:44; யோவா. 19:1, 17, 18) இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும், அதுவும் மிகுந்த வேதனைகளுக்கு மத்தியிலும் அவர் “சாகுமளவுக்கு . . . கீழ்ப்படிதலைக் காட்டினார்.”—பிலிப்பியர் 2:8-ஐ வாசியுங்கள்.
2, 3. கஷ்டங்களின் மத்தியிலும் இயேசு கீழ்ப்படிதலைக் காட்டியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
2 பூமியில் தமக்குக் கிடைத்த அனுபவத்திலிருந்து கீழ்ப்படிதலின் புதிய பரிமாணங்களை இயேசு கற்றுக்கொண்டார். (எபி. 5:8) ஆனால், யெகோவாவுக்குச் சேவை செய்வது சம்பந்தமாக அவர் கற்றுக்கொள்ள புதிய விஷயங்களே இல்லை என்பதுபோல் தோன்றலாம். ஏனென்றால், அவர் யெகோவாவோடு யுகாயுகங்களாக நெருக்கமான பந்தத்தை அனுபவித்திருந்தார். அதுவும் படைப்பு சமயத்தில் கடவுளுடைய “கைதேர்ந்த வேலையாளாக” இருந்தார். (நீதி. 8:30, NW) என்றாலும், கஷ்டங்களின் மத்தியில்கூட அவர் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்தது தம் உத்தமத்தைவிட்டு துளியும் விலகாதிருந்ததை நிரூபித்தது. கடவுளுடைய மகனான அவர், கடவுளோடு இன்னும் நெருக்கமான பந்தத்தை அனுபவித்தார். அவருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
3 இயேசு பரிபூரண மனிதராக இருந்தபோதிலும் முழுமையான கீழ்ப்படிதலைக் காட்டுவதற்குத் தம் சொந்த பலத்தைச் சார்ந்திருக்கவில்லை. தொடர்ந்து கீழ்ப்படிதலைக் காட்ட உதவும்படி அவர் கடவுளிடம் ஜெபம் செய்தார். (எபிரெயர் 5:7-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், தொடர்ந்து கீழ்ப்படிதலைக் காட்டுவதற்கு நாமும் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்; அதோடு, ஜெப சிந்தையுடன் இருக்க வேண்டும். அதனால்தான் அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களிடம், ‘சாகுமளவுக்கு, தம்மையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டிய’ “கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த இதே சிந்தை உங்களுக்கும் இருக்கட்டும்” என்று அறிவுறுத்தினார். (பிலி. 2:5-8) இந்தப் பொல்லாத உலகத்தில்கூட மனிதர்களால் கீழ்ப்படிதலைக் காட்ட முடியும் என்பதை இயேசுவின் வாழ்க்கை நிரூபித்தது. உண்மைதான், இயேசு பரிபூரணராக இருந்ததால் கீழ்ப்படிதலைக் காட்ட முடிந்தது. ஆனால், நம்மைப் போன்ற அபூரண மனிதர்களால் காட்ட முடியுமா?
அபூரணத்தின் மத்தியிலும் கீழ்ப்படிதல்
4. சுயமாய்த் தீர்மானம் எடுக்கிறவர்களாக நாம் படைக்கப்பட்டிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
4 ஆதாமையும் ஏவாளையும் புத்திக்கூர்மையுள்ளவர்களாக, சுயமாய்த் தீர்மானம் எடுக்கும் திறனுள்ளவர்களாகக் கடவுள் படைத்தார். அவர்களுடைய பிள்ளைகளான நமக்கும் அந்தத் திறன் இருக்கிறது. அப்படியானால், நல்லதையோ கெட்டதையோ தீர்மானிப்பதற்கான சுதந்திரம் நமக்கு இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், கடவுளுக்குக் கீழ்ப்படிவதா வேண்டாமா என்று நாமாகவே தீர்மானிக்க முடிகிறது. அந்தளவுக்குச் சுதந்திரம் இருந்தாலும், நாம் எடுக்கிற தீர்மானங்களுக்குக் கணக்குக்கொடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. உண்மையில், நாம் எடுக்கிற தீர்மானங்கள் நம்மை வாழ்வுக்கும் வழிநடத்தலாம் சாவுக்கும் வழிநடத்தலாம். அத்தீர்மானங்கள் நம்மை மட்டுமல்ல, நமக்கு நெருக்கமானவர்களையும் பாதிக்கலாம்.
5. நம் எல்லாருக்குமே என்ன போராட்டம் இருக்கிறது, அதில் நாம் எப்படி வெற்றிகாணலாம்?
5 அபூரணம் நம் இரத்தத்திலேயே ஊறிப்போயிருப்பதால் கீழ்ப்படிதல் தானாகவே வந்துவிடாது. இதனால், கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது எப்போதுமே சுலபமாக இருப்பதில்லை. இந்த விஷயத்தில் பவுலும்கூட போராட வேண்டியிருந்தது. “என் மனதின் சட்டத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு சட்டம் என் உடலுறுப்புகளில் இருப்பதைக் காண்கிறேன்; என் உடலுறுப்புகளில் உள்ள பாவத்தின் சட்டமாகிய அது என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது” என்று அவர் எழுதினார். (ரோ. 7:23) எந்தத் தியாகமும் செய்ய வேண்டியிராத சமயத்தில் அல்லது எந்தக் கஷ்டமும் பிரச்சினையும் இல்லாத சமயத்தில் கீழ்ப்படிவது சுலபமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ஒரு பக்கம் கடவுளுக்குக் கீழ்ப்படிகிற ஆசையும், இன்னொரு பக்கம் ‘உடலின் இச்சையையும், கண்களின் இச்சையையும்’ திருப்திசெய்கிற ஆசையும் இருந்தால் என்ன செய்வது? தவறான ஆசைகள் நம் அபூரணத்தினாலும், நம்மைச் சுற்றியுள்ள ‘உலக சிந்தையின்’ செல்வாக்கினாலும் நமக்குள் எழுகின்றன; இவை மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. (1 யோ. 2:16; 1 கொ. 2:12) இப்படிப்பட்ட தவறான ஆசைகளுக்கு இடங்கொடுக்காதிருக்க நம் ‘இருதயத்தைப் பக்குவப்படுத்த’ வேண்டும். அதுவும், இக்கட்டான சூழ்நிலையையோ ஏதாவதொரு சோதனையையோ சந்திப்பதற்கு முன்பு அப்படிச் செய்ய வேண்டும்; என்ன நடந்தாலும் சரி, யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்பதில் உறுதியாக இருக்க வேண்டும். (சங். 78:8, NW) இருதயத்தைப் பக்குவப்படுத்தியதால் வெற்றிகண்ட ஏராளமானவர்களுடைய உதாரணம் பைபிளில் இருக்கிறது.—எஸ்றா 7:10; தானி. 1:8.
6, 7. ஞானமான தீர்மானங்களை எடுக்கத் தனிப்பட்ட படிப்பு எப்படி உதவுகிறது என்பதற்கு ஓர் உதாரணம் தருக.
6 நம்முடைய இருதயத்தைப் பக்குவப்படுத்துவதற்கான ஒரு வழி, பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் ஊக்கமாகப் படிப்பதே. பின்வரும் சூழ்நிலையில் நீங்கள் இருப்பதுபோல் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் தனிப்பட்ட படிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்கிற விஷயங்களைக் கடைப்பிடிக்க உதவும்படி யெகோவாவுடைய சக்திக்காகச் சற்று முன்புதான் ஜெபம் செய்திருக்கிறீர்கள். அடுத்தநாள் அதே நேரம் டிவியில் ஒரு சினிமா பார்ப்பதற்குத் தீர்மானித்திருந்தீர்கள். அந்தப் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், சில அசிங்கமான காட்சிகளும் வன்முறைக் காட்சிகளும் அதில் இருப்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது.
7 “பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுக்கூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது. இவை பரிசுத்தமான மக்களுக்கு தகுந்தவை அல்ல” என்று எபேசியர் 5:3-ல் பவுல் சொன்ன அறிவுரையைக் குறித்து நீங்கள் ஆழ்ந்து யோசிக்கிறீர்கள். அதோடு, பிலிப்பியர் 4:8-ல் பவுல் சொன்ன அறிவுரையையும் நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்க்கிறீர்கள். (வசனத்தை வாசியுங்கள்.) பைபிளிலுள்ள இந்த அறிவுரைகளைத் தியானிக்கும்போது, ‘தெரிந்தே நான் இதுபோன்ற சினிமா காட்சிகளை என் மனதிலும் இருதயத்திலும் நிரப்பினேன் என்றால் இயேசுவைப் போல் இம்மி பிசகாமல் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறேன் என்று சொல்ல முடியுமா?’ என உங்களையே கேட்டுக்கொள்கிறீர்கள். இப்போது என்ன செய்வீர்கள்? தீர்மானித்தபடியே மறுநாள் அந்தச் சினிமாவைப் பார்ப்பீர்களா?
8. ஒழுக்க மற்றும் ஆன்மீக ரீதியில் நாம் ஏன் உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?
8 ‘கெட்ட சகவாசம் என்னை ஒன்றும் செய்துவிடாது’ என்று நினைத்துக்கொண்டு நம்முடைய ஒழுக்க மற்றும் ஆன்மீக நெறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருப்பது சரியல்ல. அந்தச் சகவாசம், வன்முறையும் ஆபாசமும் அடங்கிய பொழுதுபோக்கின் வடிவில் வந்தாலும் அதற்கு இடங்கொடுப்பது சரியல்ல. மாறாக, சாத்தானின் சிந்தை நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டரை உபயோகிப்பவர்கள் அதில் வைரஸ் புகாமல் இருப்பதற்காக ரொம்பவே சிரமம் எடுத்துக்கொள்கிறார்கள். காரணம், வைரஸ்கள் கம்ப்யூட்டரைப் பழுதாக்கி, அதிலுள்ள தகவல்களை அழித்துவிடுகின்றன; அதோடு, மற்ற கம்ப்யூட்டர்களையும் தாக்கிவிடுகின்றன. கம்ப்யூட்டர்களைப் பாதுகாப்பதற்கே அந்தளவு முயற்சி தேவைப்படுகிறதென்றால், சாத்தானின் ‘சூழ்ச்சிகளிலிருந்து’ நம்மைப் பாதுகாப்பதற்கு இன்னும் எந்தளவு முயற்சி தேவைப்படும் என யோசித்துப் பாருங்கள்!—எபே. 6:11.
9. ஒவ்வொரு நாளுமே யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நாம் ஏன் தீர்மானமாய் இருக்க வேண்டும்?
9 ஒவ்வொரு நாளுமே நாம் ஏதாவது ஒரு விதத்தில் யெகோவாவின் விருப்பப்படி செய்வதா வேண்டாமா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது. மீட்புப் பெற நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவருடைய நீதியான நியமங்களுக்கு இசைய வாழ வேண்டும். இயேசுவைப் போலவே ‘சாகுமளவுக்குக்கூட’ கீழ்ப்படிதலைக் காட்ட வேண்டும்; இதன் மூலம் நமக்கு உண்மையான விசுவாசம் இருக்கிறது என்பதை நிரூபிப்போம். நாம் தொடர்ந்து விசுவாசமுள்ளவர்களாக இருந்தால் யெகோவா நமக்குப் பலன் அளிப்பார். “முடிவுவரை சகித்திருப்பவனே மீட்புப் பெறுவான்” என இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 24:13) இதற்கு, இயேசுவைப் போலவே நாம் தகுந்த தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தெளிவு.—சங். 31:24.
இயேசு—தைரியத்திற்குத் தலைசிறந்த முன்மாதிரி
10. என்னென்ன அழுத்தங்கள் நமக்கு வரலாம், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
10 நம்மைச் சுற்றியுள்ள உலகத்தாரின் சிந்தையும் நடத்தையும் நம்மைக் கெடுத்துவிடாதபடி பார்த்துக்கொள்ள நமக்குத் தைரியம் தேவை. ஒழுக்க ரீதியிலும், சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், மத ரீதியிலும் வருகிற அழுத்தங்களைக் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட வேண்டியிருக்கிறது; அவை யெகோவாவின் நீதியுள்ள வழிகளைவிட்டு அவர்களை விலகச் செய்கின்றன. அநேகருக்குக் குடும்பத்திலிருந்து எதிர்ப்பு வருகிறது. சில நாடுகளில், பரிணாமக் கோட்பாடு கல்வி நிறுவனங்களில் தீவிரமாகக் கற்பிக்கப்படுகிறது, நாத்திகக் கொள்கையும் பிரபலமாகி வருகிறது. இப்படிப்பட்ட அழுத்தங்களை எதிர்ப்படும்போது நாம் வெறுமனே கைகட்டிக்கொண்டு இருக்க முடியாது. இவற்றுக்கு இணங்கிவிடாதபடி நம்மைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நாம் எப்படி வெற்றி காணலாம் என்பதை இயேசுவின் முன்மாதிரி காட்டுகிறது.
11. இயேசுவின் முன்மாதிரியைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது நமக்கு எப்படி அதிக தைரியத்தைத் தருகிறது?
11 “இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனால் தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்” என்று இயேசு தம்முடைய சீடர்களிடம் சொன்னார். (யோவா. 16:33) அவர் இந்த உலகத்தின் செல்வாக்கிற்குக் கொஞ்சமும் இடங்கொடுக்கவில்லை. தாம் செய்துவந்த பிரசங்க வேலையை நிறுத்தவோ, உண்மை வணக்கம் மற்றும் நல்நடத்தை சம்பந்தமாகத் தாம் கடைப்பிடித்துவந்த நெறிமுறைகளைத் தளர்த்தவோ அவர் இந்த உலகத்தை அனுமதிக்கவில்லை; அவ்வாறே நாமும் அனுமதிக்கக் கூடாது. தம்முடைய சீடர்களைக் குறித்து ஜெபத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.” (யோவா. 17:16) தைரியமாயிருந்த கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பற்றிப் படிப்பதும் ஆழ்ந்து சிந்திப்பதும், இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருக்க நமக்கு உதவுகிறது.
இயேசுவிடமிருந்து தைரியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
12-14. இயேசு காட்டிய தைரியத்திற்கு உதாரணங்கள் தருக.
12 தம்முடைய ஊழிய காலம் முழுவதிலும் இயேசு அசாத்திய தைரியத்தைக் காட்டினார். கடவுளுடைய மகனாகத் தமக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, “ஆலயத்திற்குள் போய், அங்கு விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டும் இருந்த எல்லாரையும் வெளியே துரத்தினார்; காசு மாற்றுபவர்களின் மேஜைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.” (மத். 21:12) தாம் இறப்பதற்கு முந்தின இரவன்று, படைவீரர்கள் தம்மைக் கைதுசெய்ய வந்தபோது சீடர்களைக் காப்பாற்றுவதற்காகத் தைரியமாய் முன்வந்து, “என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்று சொன்னார். (யோவா. 18:8) சில நொடிகள் கழித்து பேதுருவிடம் வாளை உறையில் போடும்படி சொன்னார்; தைரியத்திற்காக அவர் போராயுதங்களைச் சார்ந்திருக்கவில்லை, யெகோவாவையே சார்ந்திருந்தார் என்பது இதிலிருந்து தெரிகிறது.—யோவா. 18:11.
13 துளியும் அன்பு காட்டாத பொய்ப் போதகர்களின் முகமூடியை அவர் தைரியமாகக் கிழித்தெறிந்தார், அவர்களுடைய பொய்ப் போதனைகளைப் பயப்படாமல் வெட்டவெளிச்சமாக்கினார். “வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! மனிதர்கள் போக முடியாதபடி பரலோக அரசாங்கத்தின் கதவைப் பூட்டிப்போடுகிறீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார். அதோடு, “திருச்சட்டம் குறிப்பிடுகிற நியாயம், இரக்கம், விசுவாசம் ஆகிய மிக முக்கியமான காரியங்களை விட்டுவிட்டீர்கள். . . . கிண்ணத்தையும் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் சுத்தம் செய்கிறீர்கள், ஆனால் உட்புறத்தில் அவை கொள்ளையினாலும் அநியாயத்தினாலும் நிறைந்திருக்கின்றன” என்றும் சொன்னார். (மத். 23:13, 23, 25) பொய் மதத் தலைவர்கள் இயேசுவின் சீடர்களையும் துன்புறுத்தி, அவர்களில் சிலரைக் கொலை செய்வார்கள் என்பதால், இயேசுவைப் போல் அவர்களுக்கும் தைரியம் தேவைப்பட்டது.—மத். 23:34; 24:9.
14 இயேசு பேய்களையும்கூடத் தைரியமாக எதிர்த்துநின்றார். ஒரு சமயம், பேய்பிடித்த ஒருவன் அவரை நோக்கி ஓடி வந்தான்; ஒருவராலும் அவனைச் சங்கிலியால் கட்டி வைக்க முடியவில்லை, அந்தளவு பலமிக்கவனாக இருந்தான். அவனை ஆட்டிப்படைத்த நிறையப் பேய்களை இயேசு கொஞ்சமும் பயப்படாமல் துரத்தினார். (மாற். 5:1-13) உண்மைதான், இன்று நமக்கு இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்வதற்கான வல்லமையைக் கடவுள் கொடுக்கவில்லை. என்றாலும், பிரசங்க மற்றும் கற்பிக்கும் வேலையின் மூலம் சாத்தானை எதிர்த்து நாம் ஆன்மீகப் போரில் ஈடுபட வேண்டியிருக்கிறது; ஏனென்றால், ‘விசுவாசிகளாக இல்லாதவர்களுடைய மனக்கண்களை அவன் குருடாக்கியிருக்கிறான்.’ (2 கொ. 4:4) இயேசு பயன்படுத்திய போராயுதங்களைப் போலவே நம்முடைய போராயுதங்கள் “இந்த உலகத்தார் பயன்படுத்துவதைப் போன்ற போராயுதங்கள் அல்ல; ஆனால், அவை கடவுளால் கொடுக்கப்பட்டவை; ஆழமாக வேரூன்றியவற்றை [பொய்ப் போதனைகளை] தகர்த்தெறிவதற்கு வல்லமை பெற்றவை.” (2 கொ. 10:4) கடவுள் கொடுத்திருக்கிற இந்தப் போராயுதங்களைப் பயன்படுத்துவது சம்பந்தமாக, இயேசுவின் முன்மாதிரியிலிருந்து நாம் அதிகத்தைக் கற்றுக்கொள்கிறோம்.
15. இயேசு எதன் அடிப்படையில் தைரியத்தைக் காட்டினார்?
15 இயேசு, துணிச்சலின் அடிப்படையில் தைரியத்தைக் காட்டவில்லை, விசுவாசத்தின் அடிப்படையில் காட்டினார். நாமும் அவ்வாறே காட்ட வேண்டும். (மாற். 4:40) உண்மையான விசுவாசத்தை நாம் எப்படிப் பெறலாம்? மீண்டும் இயேசுவின் முன்மாதிரி நமக்கு வழிகாட்டுகிறது. வேதவசனங்களை அவர் நன்றாக அறிந்திருந்தார், அவற்றின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். அவர் நிஜமான வாளைப் பயன்படுத்தவில்லை, கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கிற அவரது வார்த்தையாகிய வாளையே பயன்படுத்தினார். கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலேயே தம்முடைய போதனைகள் இருக்கின்றன என்பதற்கு அத்தாட்சியாக, அதிலிருந்தே அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசினார். ஏதாவது ஒரு விஷயத்தைச் சொன்ன பிறகு பெரும்பாலும், “என்று எழுதப்பட்டிருக்கிறதே,” அதாவது கடவுளுடைய வார்த்தையில் எழுதப்பட்டிருக்கிறதே, என்று சொல்லி முடித்தார்.a
16. பலமான விசுவாசத்தை நாம் எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்?
16 நாம் இயேசுவின் சீடர்களாய் இருப்பதால் நிச்சயம் சோதனைகளை எதிர்ப்படுவோம். அவற்றைத் தாக்குப்பிடிப்பதற்கு பலமான விசுவாசம் நமக்குத் தேவை; அதை வளர்த்துக்கொள்வதற்கு, தினந்தோறும் பைபிளை வாசித்து ஆராய வேண்டும், தவறாமல் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும், விசுவாசத்திற்கு அஸ்திவாரமாய் உள்ள சத்தியங்களால் நம் மனதை நிரப்ப வேண்டும். (ரோ. 10:17) அதுமட்டுமல்ல, நாம் கற்றுக்கொள்கிற விஷயங்களைப் பற்றித் தியானித்து, அதாவது ஆழ்ந்து சிந்தித்து, நம் இருதயத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். உயிர்த்துடிப்புள்ள விசுவாசமே நம்மைத் தைரியமாகச் செயல்பட வைக்கும். (யாக். 2:17) கடவுளுடைய சக்திக்காக நாம் ஜெபமும் செய்ய வேண்டும்; ஏனென்றால், கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களில் விசுவாசமும் ஒன்று.—கலா. 5:22.
17, 18. பள்ளியில் ஓர் இளம் சகோதரி எப்படித் தைரியத்தைக் காட்டினாள்?
17 உண்மையான விசுவாசம் எப்படித் தைரியத்தைத் தருகிறது என்பதை கிட்டீ என்ற ஓர் இளம் சகோதரி அனுபவத்தில் கண்டாள். பள்ளியில் ‘நற்செய்தியை அறிவிப்பதற்கு வெட்கப்படக் கூடாது’ என்பதை அவள் சிறு வயது முதலே அறிந்திருந்தாள்; சக மாணவர்களுக்குச் சிறந்த விதத்தில் சாட்சி கொடுக்க ரொம்பவே ஆசைப்பட்டாள். (ரோ. 1:16) நற்செய்தியை அவர்களிடம் சொல்வதற்கு ஒவ்வொரு வருடமும் தீர்மானம் செய்தாள், ஆனால் வாய்திறந்து பேச அவளுக்குத் தைரியம் வரவில்லை. சில வருடங்கள் கழித்து, அவள் வேறு பள்ளிகளுக்கு மாறிச் சென்றாள். “கிடைத்த வாய்ப்பையெல்லாம் நழுவ விட்டுவிட்டேன், ஆனால் இப்போது என்ன ஆனாலும் சரி, நான் பேசியே தீருவேன்” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள். கிறிஸ்து காண்பித்ததைப் போன்ற தைரியத்திற்காகவும், விவேகத்திற்காகவும், சரியான வாய்ப்பிற்காகவும் அவள் ஜெபம் செய்தாள்.
18 புதிதாகச் சேர்ந்த பள்ளியில் முதல் நாளன்று, ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும்படி எல்லா மாணவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அநேகர் தங்களுடைய மதப் பின்னணியைப் பற்றிச் சொல்லிவிட்டு, தாங்கள் அதை உண்மையில் கடைப்பிடிப்பதில்லை என்று சொன்னார்கள். தான் ஜெபித்தபடியே தனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டதாக கிட்டீ உணர்ந்தாள். தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிற சமயம் வந்தபோது, “நான் ஒரு யெகோவாவின் சாட்சி. வணக்க சம்பந்தமான விஷயங்களிலும் சரி ஒழுக்க சம்பந்தமான விஷயங்களிலும் சரி, நான் எந்த முடிவை எடுத்தாலும் பைபிள் அடிப்படையில்தான் எடுப்பேன்” என்று சொன்னாள். அவள் பேசப் பேச சில மாணவர்கள் அவளைக் கிண்டலாகப் பார்த்தார்கள், முகம் சுளித்தார்கள். மற்றவர்களோ அவள் சொன்னதை உன்னிப்பாகக் கேட்டார்கள், பிற்பாடு அது சம்பந்தமாகக் கேள்விகள் கேட்டார்கள். மத நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமல் பேசியதில் அவள் ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்கியதை அவளுடைய ஆசிரியர் அதன்பின் சொல்லிக் காண்பித்தார். தைரியம் காட்டுகிற விஷயத்தில் இயேசுவின் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொண்டதற்காக அவள் ரொம்பவே சந்தோஷப்படுகிறாள்.
கிறிஸ்துவைப் போலவே விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டுதல்
19. (அ) உண்மையான விசுவாசம் எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) யெகோவாவின் மனதை நாம் எப்படிக் குளிர்விக்க முடியும்?
19 விசுவாசத்தின் அடிப்படையிலேயே தைரியத்தைக் காட்ட வேண்டும் என்பதை அப்போஸ்தலர்களும் உணர்ந்திருந்தார்கள். அதனால்தான், “எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்” என்று இயேசுவிடம் கேட்டார்கள். (லூக்கா 17:5, 6-ஐ வாசியுங்கள்.) உண்மையான விசுவாசம் என்பது, கடவுள் இருக்கிறார் என்று நம்புவதை மட்டுமே அர்த்தப்படுத்தாது. யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை, அதாவது அன்பும் கனிவும் உள்ள அப்பாவிடம் ஒரு சிறு குழந்தைக்கு இருப்பது போன்ற பந்தத்தை, வளர்த்துக்கொள்வதையும் அர்த்தப்படுத்துகிறது. கடவுளுடைய தூண்டுதலால் சாலொமோன் இவ்வாறு எழுதினார்: “என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.” (நீதி. 23:15, 16) நீதியான நியமங்களை ஆதரிக்கிறோம் என்பதை நாமும் தைரியமாகக் காட்டும்போது யெகோவாவின் மனதைக் குளிர்விப்போம், இதை அறிவது நம் தைரியத்தை அதிகரிக்கிறது. ஆகவே, நாம் எப்போதும் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவோமாக! நீதியான நெறிமுறைகளை ஆதரிக்கிறோம் என்பதைத் தைரியமாய்க் காட்டுவோமாக!
[அடிக்குறிப்பு]
a உதாரணங்களுக்கு, மத்தேயு 4:4, 7, 10; 11:10; 21:13; 26:31; மாற்கு 9:13; 14:27; லூக்கா 24:47; யோவான் 6:45; 8:17 ஆகிய வசனங்களைப் பாருங்கள்.
விளக்க முடியுமா?
• அபூரணத்தின் மத்தியிலும் கீழ்ப்படிதலைக் காட்ட எது நமக்கு உதவும்?
• உண்மையான விசுவாசம் எதன் அடிப்படையில் அமைந்துள்ளது, தைரியமாய் இருப்பதற்கு அது நமக்கு எப்படி உதவும்?
• நாம் கிறிஸ்துவைப் போலவே கீழ்ப்படிதலோடும் தைரியத்தோடும் இருக்கும்போது என்ன பலன் கிடைக்கும்?
[பக்கம் 13-ன் படம்]
சோதனைகளை எதிர்த்துநிற்க உங்கள் ‘இருதயத்தைப் பக்குவப்படுத்துகிறீர்களா’?
[பக்கம் 15-ன் படம்]
இயேசுவைப் போலவே விசுவாசத்தின் அடிப்படையில் தைரியத்தை நம்மால் காட்ட முடியும்