கிறிஸ்துவின் சிந்தை உங்களுக்கு இருப்பதாக!
‘கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தை உங்களுக்கும் இருப்பதாக’!—ரோ. 15:5.
1. நாம் ஏன் கிறிஸ்துவின் சிந்தையைப் பின்பற்ற வேண்டும்?
“என்னிடம் வாருங்கள், . . . நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; . . . என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (மத். 11:28, 29) இந்தக் கனிவான அழைப்பு இயேசுவின் அன்பான சிந்தையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. நாம் பின்பற்றுவதற்கு இயேசுவைவிட மிகச் சிறந்த முன்மாதிரி வேறு யாரும் இருக்க முடியாது. அவர் கடவுளின் வல்லமைமிக்க மகனாக இருந்தபோதிலும், மற்றவர்களுடைய பிரச்சினைகளைத் தம்முடைய பிரச்சினையாக நினைத்து அவர்களிடம் கனிவோடு நடந்துகொண்டார். முக்கியமாக வேதனையில் தவித்துக்கொண்டிருந்தவர்களிடம் கனிவோடு நடந்துகொண்டார்.
2. இயேசுவின் சிந்தையில் அடங்கியுள்ள எந்த அம்சங்களை நாம் கலந்தாராய்வோம்?
2 ‘கிறிஸ்துவின் சிந்தையை’ நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்றும், எப்போதும் அதே சிந்தையோடு எப்படி இருக்கலாம் என்றும், நம்முடைய வாழ்க்கையில் அதை எப்படிப் பின்பற்றலாம் என்றும் இந்தக் கட்டுரையிலும், அடுத்துவருகிற இரண்டு கட்டுரைகளிலும் சிந்திப்போம். (1 கொ. 2:16) இயேசு எவ்வாறு சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவராக இருந்தார், கருணை காட்டினார், கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார், தைரியமாக நடந்துகொண்டார், மாறா அன்பைக் காட்டினார் ஆகிய ஐந்து அம்சங்களை நாம் முக்கியமாகக் கலந்தாராய்வோம்.
கிறிஸ்துவின் சாந்தகுணத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
3. (அ) மனத்தாழ்மை காட்டும் விஷயத்தில் இயேசு என்ன பாடத்தை தம் சீடர்களுக்குக் கற்பித்தார்? (ஆ) சீடர்கள் பலவீனங்களை வெளிக்காட்டிய சந்தர்ப்பங்களில் இயேசு எப்படி நடந்துகொண்டார்?
3 கடவுளுடைய பரிபூரண மகனாகிய இயேசு மனப்பூர்வமாய்ப் பூமிக்கு வந்து, அபூரணரும் பாவிகளுமான மக்களுக்குச் சேவை செய்தார். அவர்களில் சிலர் பிற்பாடு அவரைக் கொல்லவிருந்தார்கள். என்றாலும், அவர் எப்போதுமே சந்தோஷமாக இருந்தார், சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டார். (1 பே. 2:21-23) இயேசு வைத்த முன்மாதிரியின் ‘மீதே கண்களை ஒருமுகப்படுத்தினால்,’ மற்றவர்களுடைய தவறுகளாலோ பலவீனங்களாலோ நாம் பாதிக்கப்படும்போது நாமும் அவரைப் போலவே நடந்துகொள்வோம். (எபி. 12:2) ‘தம்முடைய நுகத்தை ஏற்றுக்கொண்டு’ தம்மிடமிருந்து கற்றுக்கொள்ளும்படி இயேசு தம் சீடர்களிடம் சொன்னார். (மத். 11:29) அவரிடமிருந்து அவர்கள் என்ன கற்றுக்கொள்ள முடிந்தது? ஒரு விஷயம், இயேசு சாந்தகுணமுள்ளவராக இருந்தார், தம்முடைய சீடர்கள் செய்த தவறுகளைப் பெரிதுபடுத்தாமல் பொறுமையோடு நடந்துகொண்டார். இறப்பதற்கு முந்தின இரவு, தமது சீடர்களுடைய பாதங்களைக் கழுவி, “மனத்தாழ்மை” காட்டும் விஷயத்தில் மறக்க முடியாத ஒரு பாடத்தை அவர்களுக்குக் கற்பித்தார். (யோவான் 13:14-17-ஐ வாசியுங்கள்.) பிற்பாடு, பேதுருவும் யாக்கோபும் யோவானும் ‘விழித்திருக்காமல்’ தூங்கிவிட்டபோது, இயேசு அவர்களுடைய பலவீனத்தைப் புரிந்துகொண்டு, அவர்கள்மீது பரிவுகாட்டினார். “சீமோனே, தூங்கிக்கொண்டா இருக்கிறாய்?” என்று அனுதாபக் குரலில் கேட்டார். பின்பு, “நண்பர்களே, சோதனைக்கு இணங்கிவிடாதபடி விழிப்புடன் இருந்து ஜெபம் செய்யுங்கள். உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்று சொன்னார்.—மாற். 14:32-38.
4, 5. மற்றவர்களுடைய குற்றங்குறைகளைக் காணும்போது, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி அவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
4 நம்முடைய சக வணக்கத்தார் ஒருவர், போட்டி மனப்பான்மை உள்ளவராகவோ, சட்டெனப் புண்பட்டுவிடுபவராகவோ, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பாரும் மூப்பர்களும் கொடுக்கிற ஆலோசனையைப் பின்பற்றுவதில் மந்தமானவராகவோ இருந்தால், நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? (மத். 24:45-47) ஒருவேளை இந்த உலக மக்கள் அபூரணத்தினால் ஏதாவது தவறு செய்துவிடும்போது, அவர்கள் அப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று நினைத்து அவர்களை எளிதில் மன்னித்துவிடுவோம், ஆனால் அதே தவறை நம்முடைய சகோதரர்கள் செய்யும்போது அவர்களை மன்னிப்பது நமக்கு அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. மற்றவர்களுடைய குற்றங்குறைகளைக் கண்டு நாம் எளிதில் எரிச்சலடைந்தால், “நான் எப்படி ‘கிறிஸ்துவின் சிந்தையை’ இன்னும் நன்றாக வெளிக்காட்டலாம்” என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இயேசுவின் சீடர்கள் ‘அவருடைய சிந்தையை’ வெளிக்காட்டத் தவறியபோது, அவர்கள்மீது அவர் கோபப்படவில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
5 அப்போஸ்தலன் பேதுருவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். படகைவிட்டு இறங்கித் தண்ணீர்மீது நடந்து தம்மிடம் வரும்படி இயேசு பேதுருவுக்குச் சொன்னபோது, பேதுரு உண்மையிலேயே சற்றுத் தூரம்வரை தண்ணீர்மீது நடந்தார். ஆனால், புயல்காற்று வீசுவதைக் கண்டு பயந்தபோது தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தார். ஆனால் இயேசு அவர்மேல் கோபப்பட்டு, “உனக்கு நன்றாக வேண்டும்! இது ஒரு பாடமாக இருக்கட்டும்” என்று சொன்னாரா? இல்லை! “உடனே இயேசு தமது கையை நீட்டி அவரைப் பிடித்துக்கொண்டு,” சாந்தமான குரலில், “‘விசுவாசமில்லாதவனே, ஏன் சந்தேகப்பட்டாய்?’” என்று கேட்டார். (மத். 14:28-31) சகோதரர் ஒருவருடைய விசுவாசம் குறைவுபடுவது நமக்கு வெளிப்படையாகத் தெரிந்தால், நாம் அவருக்கு உதவிக்கரம் நீட்டுவோமா? அவர் இன்னும் அதிக விசுவாசம் பெறுவதற்கு உதவுவோமா? கட்டாயம் உதவ வேண்டும்! பேதுருவிடம் இயேசு சாந்தமாக நடந்துகொண்ட விதத்திலிருந்து இதைத்தான் நாம் பாடமாகக் கற்றுக்கொள்கிறோம்.
6. பதவி ஆசையைக் குறித்து இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு என்ன கற்பித்தார்?
6 தங்களில் யார் உயர்ந்தவர் என்று அப்போஸ்தலர்கள் மத்தியில் அடிக்கடி ஏற்பட்ட வாக்குவாதத்திலும் பேதுரு உட்பட்டிருந்தார். பரலோக அரசாங்கத்தில் இயேசுவுக்கு வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் உட்கார யாக்கோபும் யோவானும் ஆசைப்பட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் கோபப்பட்டார்கள். இத்தகைய போட்டி மனப்பான்மைக்கு அவர்கள் வளர்ந்துவந்த சூழலே காரணம் என்பதை இயேசு அறிந்திருந்தார். அதனால் அவர்களைத் தம்மிடம் அழைத்து, “உலக ஆட்சியாளர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள் என்பதும், உயர் அதிகாரிகள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுக்குள்ளே அப்படி இருக்கக் கூடாது. உங்களில் எவன் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறானோ அவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும். உங்களில் எவன் முதலாவதாக இருக்க விரும்புகிறானோ, அவன் உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்” என்றார். அதன்பின், “மனிதகுமாரனும் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுப்பதற்குமே வந்தார்” என்று தம்முடைய சொந்த முன்மாதிரியைப் பற்றிக் குறிப்பிட்டார்.—மத். 20:20-28.
7. சபையின் ஒற்றுமைக்கு நாம் ஒவ்வொருவரும் எப்படிப் பங்களிக்கலாம்?
7 இயேசுவின் மனத்தாழ்மையைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது, நம் சகோதரர்கள் மத்தியில் ‘நம்மைச் சிறியவர்களாக நடத்திக்கொள்வதற்கு’ உதவுகிறது. (லூக். 9:46-48) சகோதர ஒற்றுமைக்கும் பங்களிக்கிறது. மிகப் பெரிய குடும்பத்தின் தகப்பனாக விளங்கும் யெகோவா, தம்முடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பொறுத்துப்போய், ‘ஒற்றுமையாகக் கூடிவாழ’ வேண்டுமென விரும்புகிறார். (சங். 133:1, NW) இயேசு தம்முடைய தகப்பனிடம் ஜெபம் செய்தபோது உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒன்றுபட்டிருப்பார்கள் எனக் குறிப்பிட்டார்; அவர்கள் அப்படியிருக்கும்போதுதான், “நீங்களே என்னை அனுப்பினீர்கள் என்பதையும், நீங்கள் என்மீது அன்பு காட்டுவது போலவே அவர்கள்மீதும் அன்பு காட்டுகிறீர்கள் என்பதையும் இந்த உலகம் அறிந்துகொள்ளும்” என்று கூறினார். (யோவா. 17:23) இவ்வாறு ஒன்றுபட்டிருப்பது நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. இந்த ஒற்றுமையை அனுபவிப்பதற்கு, மற்றவர்களுடைய குற்றங்குறைகளைக் கிறிஸ்துவின் கண்ணோட்டத்திலேயே நாம் பார்க்க வேண்டும். அவர் மற்றவர்களை மன்னித்தார், அப்படி மன்னித்தால்தான் நமக்கும் மன்னிப்பு கிடைக்கும் என்று அவர் கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 6:14, 15-ஐ வாசியுங்கள்.
8. பல வருடங்களாகக் கடவுளுக்கு ஊழியம் செய்துவருகிறவர்களுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 பல வருடங்களாகக் கிறிஸ்துவைப் பின்பற்றி வருகிறவர்களின் விசுவாசத்தைப் பின்பற்றுவதன் மூலமும் நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். கிறிஸ்துவைப் போலவே, இவர்களும் மற்றவர்களுடைய குற்றங்குறைகளைப் பெரும்பாலும் புரிந்து நடக்கிறார்கள். அதோடு, கிறிஸ்துவைப் போல் கரிசனை காட்டுவது, “பலவீனர்களுடைய பலவீனங்களைத் தாங்கிக்கொள்ள” உதவும் என்றும், சபையின் ஒற்றுமைக்குப் பங்களிக்கும் என்றும் இவர்கள் புரிந்திருக்கிறார்கள். அதோடு, அப்படிக் கரிசனை காட்டுவது முழு சபையுமே கிறிஸ்துவின் சிந்தையை வெளிக்காட்ட ஊக்கமளிக்கும் என்று புரிந்திருக்கிறார்கள். தங்களுடைய சகோதரர்களும் அதே சிந்தையை வெளிக்காட்டி அதே பலன்களைப் பெற வேண்டுமென அப்போஸ்தலன் பவுலைப் போலவே இவர்கள் விரும்புகிறார்கள்; ரோமாபுரியிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “சகிப்புத்தன்மையையும் ஆறுதலையும் அளிக்கிற கடவுள், கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தையை உங்களுக்கும் அருளுவாராக. அப்போதுதான், நீங்கள் ஒருமனதாக நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தகப்பனுமானவரை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள்.” (ரோ. 15:1, 5, 6) ஆம், வழிபாட்டில் நாம் ஒன்றுபட்டிருப்பது யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறது.
9. இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற நமக்கு ஏன் கடவுளுடைய சக்தி தேவை?
9 ‘மனத்தாழ்மையாக’ இருப்பதை இயேசு சாந்தகுணத்தோடு இணைத்துப் பேசினார்; இந்தச் சாந்தகுணம் கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படுகிற குணங்களில் ஒன்றாகும். ஆகவே, இயேசுவின் முன்மாதிரியை நாம் சரியாகப் பின்பற்ற, அதைப் பற்றி ஆழ்ந்து ஆராய்வதோடு, யெகோவாவின் சக்தியும் நமக்குத் தேவைப்படுகிறது. அதனால் அவருடைய சக்திக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும், அதோடு அது பிறப்பிக்கிற குணங்களை, அதாவது “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு” ஆகிய குணங்களை வளர்க்கக் கடும் முயற்சியெடுக்க வேண்டும். (கலா. 5:22, 23) இவ்வாறு, இயேசுவைப் போலவே மனத்தாழ்மையாகவும் சாந்தமாகவும் நடந்துகொள்ளும்போது பரலோகத் தகப்பனாகிய யெகோவாவின் மனதை நாம் குளிர்விப்போம்.
இயேசு மற்றவர்களுக்குக் கருணை காட்டினார்
10. இயேசு எப்படிக் கருணை காட்டினார்?
10 கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களில் கருணையும் ஒன்று. இயேசு மற்றவர்களிடம் எப்போதுமே கருணையோடு நடந்துகொண்டார். தம்மை ஆர்வத்தோடு தேடிவந்தவர்களை அவர் “அன்புடன் [மூல மொழியில், “கருணையுடன்”] ஏற்றுக்கொண்டார்.” (லூக். 9:11) இயேசு காட்டிய கருணையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கருணையுள்ள ஒருவர் சிநேகப்பான்மையானவராக, மென்மையானவராக, அனுதாபமிக்கவராக, இனிமையானவராக இருப்பார். இயேசு அப்படிப்பட்டவராகத்தான் இருந்தார். மக்களைக் கண்டு அவர் மனதுருகினார்; “ஏனென்றால், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள்.”—மத். 9:35, 36.
11, 12. (அ) இயேசு கரிசனை காட்டிய ஒரு சம்பவத்தை விளக்குங்கள். (ஆ) இந்த உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
11 இயேசு மக்களைக் கண்டு மனதுருகி, அவர்கள்மீது கரிசனை காட்டியதோடு தம்மால் முடிந்தவரை அவர்களுக்கு உதவியும் அளித்தார். இதற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். 12 வருடங்களாக இரத்தப்போக்கினால் ஒரு பெண் அவதிப்பட்டுவந்தாள். திருச்சட்டத்தின்படி, தான் தீட்டுப்பட்டவள் என்பதையும், தன்னைத் தொடுகிறவர்கள் தீட்டுப்பட்டவர்களாகிவிடுவார்கள் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். (லேவி. 15:25-27) என்றாலும், இயேசுவுக்கு இருந்த நல்ல பெயரையும், மற்றவர்களை அவர் நடத்திய விதத்தையும் அவள் கேள்விப்பட்டிருந்ததால், தன்னை அவர் குணப்படுத்துவார் என்றும், குணப்படுத்த முடியும் என்றும் உறுதியாக நம்பினாள். “அவருடைய மேலங்கியைத் தொட்டாலே போதும், நான் குணமாகிவிடுவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தாள். பின்பு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவருடைய மேலங்கியைத் தொட்டாள்; தொட்ட உடனேயே குணமாகிவிட்டதை உணர்ந்தாள்.
12 யாரோ தம்மைத் தொட்டார்கள் என்பதை இயேசு உணர்ந்தபோது, அது யாரெனத் தெரிந்துகொள்ள அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். அப்போது அந்தப் பெண், திருச்சட்டத்தை மீறியதற்காகத் தன்னை அவர் கடிந்துகொள்ளப்போகிறார் என்று பயந்து நடுங்கியபடி அவர்முன் வந்து மண்டியிட்டு, எல்லா உண்மையையும் சொல்லிவிட்டாள். வேதனையில் தவித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை இயேசு கடிந்துகொண்டாரா? இல்லவே இல்லை! மாறாக, “மகளே,” என்று கனிவாக அழைத்து, “உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. சமாதானமாகப் போ” என்று ஆறுதலாய்ச் சொன்னார். (மாற். 5:25-34) கருணைமிக்க அந்த வார்த்தைகளைக் கேட்டு அவள் எந்தளவு நிம்மதி அடைந்திருப்பாள்!
13. (அ) இயேசுவின் சிந்தை, பரிசேயர்களின் சிந்தையிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருந்தது? (ஆ) சிறுபிள்ளைகளிடம் இயேசு எவ்வாறு நடந்துகொண்டார்?
13 கல்நெஞ்சக்கார பரிசேயர்களைப் போல், கிறிஸ்து தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்றவர்களுடைய சுமைகளைக் கூட்டவில்லை. (மத். 23:4) மாறாக, யெகோவாவின் வழிகளை மற்றவர்களுக்குக் கருணையோடும் பொறுமையோடும் கற்பித்தார். தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குப் பாசமான தோழராக இருந்தார்; எப்போதுமே அன்பையும் கருணையையும் காட்டுபவராக, உண்மை நண்பராக இருந்தார். (நீதி. 17:17; யோவா. 15:11-15) சிறுபிள்ளைகள்கூட இயேசுவிடம் சகஜமாகப் பழகினார்கள், அவரும் அவர்களோடு சகஜமாகப் பழகினார். மும்முரமாகச் செய்துவந்த காரியங்களைக்கூட நிறுத்திவிட்டு, குழந்தைகளோடு நேரம் செலவிட்டார். அக்காலத்து மதத் தலைவர்களைப் போல் சுய முக்கியத்துவம் கொடுத்துவந்த அவருடைய சீடர்கள், இயேசுவிடம் பிள்ளைகளைக் கொண்டுவந்த மக்களை ஒருசமயம் தடுக்க முயன்றார்கள். அவர்கள் செய்தது இயேசுவுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள், இப்படிப்பட்டவர்களே கடவுளுடைய அரசாங்கத்தில் இருப்பார்கள்” என்றார். பின்பு, பிள்ளைகளை அவர்களிடம் காண்பித்து, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு சிறுபிள்ளையைப் போலிருந்து கடவுளுடைய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாத எவனும் அதில் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டான்” என்று சொன்னார்.—மாற். 10:13-15.
14. உண்மையான அக்கறை காட்டப்படும்போது பிள்ளைகள் என்ன நன்மைகளை அடைவார்கள்?
14 இயேசு ‘தங்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வதித்ததை,’ அந்தப் பிள்ளைகள் வளர்ந்து ஆளான பிறகு நினைத்துப் பார்த்து எந்தளவுக்குச் சந்தோஷப்பட்டிருப்பார்கள் எனச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். (மாற். 10:16) இன்றைய பிள்ளைகள்கூட, சபையிலுள்ள மூப்பர்களும் மற்றவர்களும் தங்கள்மீது உண்மையான அக்கறை காட்டுவதைப் பிற்பாடு ஆசை ஆசையாக நினைத்துப் பார்ப்பார்கள். அதைவிட முக்கியமாக, யெகோவாவின் மக்களுக்கு அவருடைய சக்தியின் வழிநடத்துதல் இருக்கிறதென்பதைச் சிறுவயதிலிருந்தே தெரிந்துகொள்வார்கள்.
கருணையற்ற உலகில் கருணை காட்டுங்கள்
15. இன்று அநேகர் கருணை காட்டாததைக் குறித்து நாம் ஏன் ஆச்சரியப்படத் தேவையில்லை?
15 ‘மற்றவர்கள்மீது கருணை காட்டுவதற்கெல்லாம் எங்கே நேரம்’ என அநேகர் இன்று நினைக்கிறார்கள். அதனால்தான் தினம்தினம் பள்ளியில், வேலையில், பயணிக்கையில், ஊழியத்தில் என எல்லாச் சந்தர்ப்பத்திலும் யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களால் கருணையில்லாமல் நடத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட கருணையற்ற மனப்பான்மையினால் நாம் துவண்டுபோனாலும், இதைக் குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை. கொடிதான இந்த “கடைசி நாட்களில்” உண்மைக் கிறிஸ்தவர்கள் ‘சுயநலக்காரர்களோடும், . . . பந்தபாசம் இல்லாதவர்களோடும்’ தொடர்புகொள்ள வேண்டியிருக்குமென யெகோவாவின் தூண்டுதலால் பவுல் முன்கூட்டியே எச்சரித்து எழுதினார்.—2 தீ. 3:1-3.
16. கிறிஸ்துவைப் போலவே நாம் எப்படிச் சபையில் கருணை காட்டலாம்?
16 மறுபட்சத்தில், உண்மைக் கிறிஸ்தவர்களுடைய சபையில் நிலவுகிற சூழல் இந்தக் கருணையற்ற உலகிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. இயேசுவைப் பின்பற்றுகிற நாம் ஒவ்வொருவருமே அந்த அருமையான சூழல் நிலவுவதற்குப் பங்களிக்கலாம். எவ்வாறு? முதலாவது, நோய்நொடியினாலோ வேறு ஏதாவது கஷ்டங்களாலோ அவதிப்பட்டுவருகிற அநேக சகோதர சகோதரிகளுக்கு உதவியையும் உற்சாகத்தையும் அளிக்கலாம். இந்த “கடைசி நாட்களில்” அப்படிப்பட்ட பிரச்சினைகள் அதிகரிக்கும், ஆனால் அவை ஒன்றும் புதிதல்ல. பைபிள் காலங்களிலேயே கிறிஸ்தவர்கள் அதுபோன்ற பிரச்சினைகளை எதிர்ப்பட்டார்கள். ஆகையால், அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்குப் பல விதங்களில் உதவி தேவைப்பட்டதைப் போலவே இன்றும் தேவைப்படுகிறது. உதாரணமாக, கிறிஸ்தவர்களை பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள், பலவீனமானவர்களுக்கு ஆதரவாக இருங்கள், எல்லாரிடமும் நீடிய பொறுமையோடு நடந்துகொள்ளுங்கள்.” (1 தெ. 5:14) இப்படி நடந்துகொள்வதற்கு, கிறிஸ்துவைப் போலவே கருணை காட்டுவதும் அவசியப்படுகிறது.
17, 18. இயேசுவைப் போலவே கருணையோடு நடந்துகொள்வதற்கான சில வழிகள் யாவை?
17 சக கிறிஸ்தவர்களைக் கருணையுடன் ஏற்றுக்கொள்கிற பொறுப்பு, அதாவது இயேசு அவர்களிடம் எப்படி நடந்திருப்பாரோ அப்படியே நடந்துகொள்கிற பொறுப்பு, கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது; அதோடு, வருடக்கணக்காகத் தங்களுக்குத் தெரிந்த சகோதரர்களிடமும், முன்பின் தெரியாத சகோதரர்களிடமும் உண்மையான அக்கறை காட்டுகிற பொறுப்பு இருக்கிறது. (3 யோ. 5-8) மற்றவர்களிடம் இயேசு வலியச் சென்று கரிசனை காட்டியதைப் போல நாமும் கரிசனை காட்ட வேண்டும், மற்றவர்களுக்கு எப்போதும் புத்துணர்ச்சி அளிக்க வேண்டும்.—ஏசா. 32:2; மத். 11:28-30.
18 மற்றவர்களுடைய நலனில் உள்ளார்ந்த அக்கறை காட்டுவதன் மூலம் நாம் ஒவ்வொருவருமே அவர்களிடம் கருணையோடு நடந்துகொள்ளலாம். அப்படி நடந்துகொள்வதற்கான வழிகளையும் வாய்ப்புகளையும் தேடுங்கள். ஆம், விடாமல் தேடுங்கள்! “ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்; ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்” என்று பவுல் ஊக்கப்படுத்தினார். (ரோ. 12:10) அப்படியானால், கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, மற்றவர்களிடம் அன்போடும் கருணையோடும் நடந்துகொள்ள வேண்டும், ‘வெளிவேஷமற்ற அன்பை’ காட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். (2 கொ. 6:6) கிறிஸ்து காட்டிய இப்படிப்பட்ட அன்பை பவுல் இவ்வாறு விவரித்தார்: “அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது.” (1 கொ. 13:4) ஆகவே, நம்முடைய சகோதர சகோதரிகள்மீது வன்மத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, “ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்; கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்” என்ற அறிவுரைக்குச் செவிசாய்ப்போமாக!—எபே. 4:32.
19. கிறிஸ்துவைப் போலவே கருணை காட்டும்போது என்ன நல்ல பலன்கள் கிடைக்கின்றன?
19 கிறிஸ்துவின் கருணை மனப்பான்மையை நாம் மேன்மேலும் வளர்த்துக்கொள்வதற்கும், அதை எல்லாச் சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் காட்டுவதற்கும் கடுமையாக முயற்சி செய்தோமென்றால், அருமையான பலன்களைப் பெறுவோம். சபையில் யெகோவாவின் சக்தி தாராளமாகச் செயல்படும்; அதோடு, சபையிலுள்ள எல்லாரும் அந்தச் சக்தி பிறப்பிக்கிற குணங்களை வெளிக்காட்டுவார்கள். அதுமட்டுமல்ல, இயேசு வைத்த முன்மாதிரியை நாமும் பின்பற்றி, அப்படிப் பின்பற்ற மற்றவர்களுக்கும் உதவி செய்யும்போது, கடவுளைச் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் வழிபடுகிறவர்களாய் இருப்போம்; அதைக் கண்டு கடவுளும் அகமகிழ்வார். ஆகையால், மற்றவர்களிடம் இயேசு எப்படிச் சாந்தமாகவும் கருணையாகவும் நடந்துகொண்டாரோ அப்படியே நாமும் நடந்துகொள்வதற்கு விடாமல் முயற்சி செய்வோமாக!
விளக்க முடியுமா?
• இயேசு “சாந்தமும் மனத்தாழ்மையுமாக” இருந்ததை எப்படிக் காட்டினார்?
• இயேசு எவ்வாறு கருணை காட்டினார்?
• இந்த அபூரண உலகில், கிறிஸ்துவைப் போலவே சாந்தத்தையும் கருணையையும் காட்டுவதற்கான சில வழிகள் யாவை?
[பக்கம் 8-ன் படம்]
ஒரு சகோதரர் பேதுருவைப் போல் விசுவாசத்தில் குறைவுபடும்போது, அவருக்கு உதவிக்கரம் நீட்டுவீர்களா?
[பக்கம் 10-ன் படம்]
சபையைக் கருணையின் உறைவிடமாக ஆக்குவதற்கு உங்களுடைய பங்கில் நீங்கள் என்ன செய்யலாம்?