அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
பெற்றோரின் விசுவாசத்துக்குப் பலன் கிடைத்தது
இஸ்ரவேலருக்கு, ஓர் ஆண் குழந்தையின் பிறப்பு அதிகமாக களிகூறுவதற்குரிய ஒன்றாக இருந்தது. இது வம்சாவளி தொடருவதையும் தேசத்தில் தங்களுடைய பரம்பரை சொத்து குடும்பத்தை விட்டு செல்லாதிருப்பதையும் குறித்தது. ஆனால் பொ.ச.மு. சுமார் 1593-ம் ஆண்டில் எபிரெயர்களுக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பது ஆசீர்வாதமாக இருப்பதைவிட ஒரு சாபமாகவே தோன்றியிருக்கக்கூடும். ஏன்? எகிப்தின் பார்வோன், தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிராந்தியத்தில் யூதர்களின் ஜனத்தொகை வேகமாக அதிகரிப்பதைக் குறித்து கவலையுள்ளவனாய், புதிதாக பிறந்த அவர்களுடைய எல்லா ஆண்குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும் என்பதாக கட்டளையிட்டிருந்தான்.—யாத்திராகமம் 1:12, 15-22.
இந்தக் கொடிய படுகொலை முயற்சியின் போதுதானே, திருமணமான எபிரெய தம்பதியான அம்ராம், யோகெபேத் ஒரு அழகான ஆண் குழந்தைக்குப் பெற்றோர் ஆயினர். பார்வோனின் கட்டளை அவர்களுடைய நினைவுக்கு வந்தபோது அவர்களுடைய சந்தோஷத்தை திகில் எவ்வாறு பீடித்திருக்கும் என்பதைக் கற்பனைசெய்வது எளிதே. இருந்தபோதிலும், அம்ராமும் யோகெபேத்தும் தங்களுடைய ஆண் குழந்தையைப் பார்த்தபோது, விளைவுகள் என்னவாயிருப்பினும் அவனை கைவிட்டுவிடாதிருக்க உறுதியாக தீர்மானித்திருந்தார்கள்.—யாத்திராகமம் 2:1, 2; 6:20.
விசுவாசத்தோடு செயல்படுதல்
மூன்று மாதங்கள் அம்ராமும் யோகெபேத்தும் தங்கள் குழந்தையை ஒளித்து வைத்திருந்தார்கள். (யாத்திராகமம் 2:2) இருப்பினும் எபிரெயர்களும் எகிப்தியர்களும் நெருக்கமாக அடுத்தடுத்து வாழ்ந்து வந்த காரணத்தால் இது ஆபத்தானதாக இருந்தது. பார்வோனின் கட்டளையை தந்திரமாக மீறுவதற்கு முயலுவதாக எவராவது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் தண்டனையாக கொல்லப்படுவர்—குழந்தையும்கூட இறந்துவிடும். அப்படியென்றால் தங்களையும் தங்கள் மகனையும் உயிரோடு காத்துக்கொள்ள பக்தியுள்ள இந்தப் பெற்றோர் என்ன செய்யக்கூடும்?
யோகெபேத் நாணற்புல் தண்டுகளை கொஞ்சம் சேகரித்தார். நாணற்புல் மூங்கிலைப் போல உறுதியான தனித்தண்டைக் கொண்டது; சுமார் ஒரு விரலின் பருமனில் மூன்று பக்கமுள்ள தண்டினை கொண்டது. அது ஆறு மீட்டர்கள் உயரத்துக்கு வளரக்கூடும். எகிப்தியர்கள் பேப்பர், பாய்கள், கப்பலின் பாய், செருப்புகள் மற்றும் எடைகுறைவான படகுகளை உண்டுபண்ண இந்தத் தாவரத்தைப் பயன்படுத்தினர்.
யோகெபேத் தன் குழந்தையை வைப்பதற்கு போதுமான அளவில் நாணல் தண்டினால் ஒரு பெட்டியைச் செய்தார். அடுத்து அவர் பெட்டியை ஒன்றாக இணைப்பதற்கும் அதில் தண்ணீர் புகாதபடி செய்வதற்கும் பிசினும் கீலும் பூசினார். யோகெபேத் பின்னர் தன்னுடைய குழந்தையை அப்பெட்டிக்குள் வைத்து நைல் நதியோரத்தில் நாணலுக்குள்ளே வைத்தார்.—யாத்திராகமம் 2:3.
குழந்தை கண்டெடுக்கப்படுகிறது
யோகெபேத்தின் மகள் மிரியாம், அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்க அதற்குச் சற்று அருகில் நின்றுகொண்டாள். அப்போது பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்கு வந்தாள்.a இளவரசி நைலின் இந்தப் பகுதிக்கு அடிக்கடி வந்துபோனது ஒருவேளை யோகெபேத்துக்கு தெரிந்திருக்கலாம், எளிதில் கண்டெடுக்கப்படக்கூடிய ஒரு இடத்தில் பெட்டியை வேண்டுமென்றே வைத்திருக்கலாம். எப்படியிருந்தாலும், பார்வோனின் மகள் விரைவிலேயே நாணலுக்குள் பாதி மறைத்தும் மறைக்காமலும் வைக்கப்பட்டிருந்த பெட்டியை கவனித்துவிட்டாள், அதைக் கொண்டுவரும்படியாக தன் பணிப்பெண்களில் ஒருத்தியை அழைத்தாள். அழுதுகொண்டிருந்த அந்தக் குழந்தையை அவள் அதனுள்ளே கண்டபோது, அவள் இரக்கத்தால் தூண்டப்பட்டாள். இது ஒரு எபிரெய குழந்தை என்பதை அவள் கண்டுகொண்டாள். இருந்தபோதிலும், இத்தனை அழகான ஒரு குழந்தையை எப்படி கொன்றுவிடமுடியும்? மனிதாபிமான இரக்கத்தையும் தவிர, ஒருவர் விண்ணுலகத்துக்குள்ளே அனுமதிக்கப்படுவதானது அவருடைய வாழ்நாட் காலத்தின்போது அவர் செய்யும் தயவான செயல்களின் பதிவைச் சார்ந்ததாக இருந்தது என்ற பிரபலமான எகிப்திய நம்பிக்கை பார்வோனின் மகளின்மீது செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்.b—யாத்திராகமம் 2:5, 6.
தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்த மிரியாம், பார்வோனின் மகளிடம் நெருங்கி வந்தாள். “உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா”? என்று கேட்டாள். இளவரசி இவ்வாறு பதிலுரைத்தாள்: “அழைத்துக்கொண்டுவா”. மிரியாம் தன் தாயிடம் ஓடினாள். உடனடியாகவே, யோகெபேத் பார்வேனின் மகளுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தாள். “நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்,” என்று இளவரசி அவளிடம் சொன்னாள். இதற்குள்ளாக யோகெபேத்தே குழந்தையின் தாய் என்பதை பார்வோனின் மகள் கண்டுகொண்டிருக்க வேண்டும்.—யாத்திராகமம் 2:7-9.
குழந்தை தாய்ப்பால் மறக்கும் வரையாக யோகெபேத் குழந்தையை தன்னோடு வைத்திருந்தார்கள்.c உண்மையான கடவுளாகிய யெகோவாவைப் பற்றி அவனுக்குப் போதிக்க இது அவர்களுக்கு அநேக அருமையான சந்தர்ப்பங்களைக் கொடுத்தது. பின்னர் யோகெபேத் குழந்தையைப் பார்வோனின் மகளிடமாக கொண்டுவந்தார்கள், இவள் பையனுக்கு மோசே என்று பெயரிட்டாள், இதன் பொருள், ‘ஜலத்தினின்று காப்பாற்றப்பட்டான்’ என்பதாகும்.—யாத்திராகமம் 2:10, NW.
நமக்குப் பாடம்
அம்ராமும் யோகெபேத்தும் தங்களுடைய மகனுக்கு தூய்மையான வணக்கத்தின் நியமங்களைக் கற்றுக்கொடுக்க தங்களுக்கு கிடைத்த குறுகிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொண்டனர். இன்றைய பெற்றோரும் அதையே செய்யவேண்டும். ஆம், அவர்கள் கண்டிப்பாய் அவ்விதமாக செய்ய வேண்டும். பிசாசாகிய சாத்தான் “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” (1 பேதுரு 5:8) அருமையான இளைஞர்களை—பையன்களையும் பெண் பிள்ளைகளையும்—யெகோவாவுக்கு சிறந்த ஊழியர்களாகும் வாய்ப்பை உடையவர்களை தனக்கு இரையாக்கிக்கொள்ள அவன் மிகவும் விரும்புவான். இளைஞர்களிடமாக அவன் எந்த பரிவிரக்கமும் கொள்வது கிடையாது! இதன் காரணமாக, ஞானமுள்ள பெற்றோர் தங்கள் சிசுக்களை உண்மை கடவுளாகிய யெகோவாவுக்கு பயப்படும்படியாக பயிற்றுவிக்கிறார்கள்.—நீதிமொழிகள் 22:6; 2 தீமோத்தேயு 3:14, 15.
எபிரெயர் 11:23-ல் அம்ராமும் யோகெபேத்தும் தங்களுடைய சிசுவை அதனுடைய வாழ்க்கையின் முதல் மூன்று மாதங்களின்போது ஒளித்து வைக்க எடுத்த முயற்சி, விசுவாசத்தின் ஒரு செயலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடவுள் பயமுள்ள இந்தப் பெற்றோர் இருவரும் தங்கள் பிள்ளையை கைவிட்டுவிடாதிருந்ததன் மூலம், பாதுகாப்பதற்கு யெகோவாவுக்கிருக்கும் வல்லமையில் நம்பிக்கையைக் காண்பித்தார்கள், இதற்காக அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். நமக்கு என்ன நேரிடும்படி யெகோவா அனுமதித்தாலும், அது கடைசியாக நம்முடைய நித்திய நலனுக்கும் மகிழ்ச்சிக்குமாகவே இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்களாக நாமும்கூட யெகோவாவின் கட்டளைகளையும் நியமங்களையும் உறுதியாக பற்றிக்கொண்டிருப்பதைக் காண்பிக்கவேண்டும்.—ரோமர் 8:28.
[அடிக்குறிப்புகள்]
a பண்டைய காலங்களில் இன்று பொதுவாக செய்யப்படுவதைவிட நீண்ட காலம் அநேக குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டப்பட்டது. பால்மறக்கப்பட செய்தபோது சாமுவேல் குறைந்தபட்சம் மூன்று வயதுள்ளவனாகவும் ஈசாக்கு சுமார் ஐந்து வயதுள்ளவனாகவும் இருந்தான்.
b எகிப்தியர்கள் நைலை கருவள தெய்வமாக வணங்கினர். அதன் தண்ணீர்களுக்கு கனிகொடுக்கச் செய்யும் வல்லமையும் வாழ்நாளை நீடிக்கச் செய்யும் வல்லமையும்கூட இருந்ததாக அவர்கள் நம்பினர்.
c மரணத்தின்போது ஒரு நபரின் ஆவி, ஆசிரிஸின் முன்னிலையில், “நான் எந்த மனிதனையும் காயப்படுத்தியது இல்லை,” “சிசுக்களின் வாய்க்கு பாலை கொடுக்காமல் இருந்தது இல்லை,” “பசியாயிருப்பவனுக்கு அப்பத்தையும் தாகமாயிருப்பவனுக்கு தண்ணீரையும் நான் கொடுத்திருக்கிறேன்,” போன்ற உறுதிமொழிகளை வரிசையாக எடுத்துச் சொல்லும் என்பதாக எகிப்தியர்கள் நம்பிவந்தார்கள்.