இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமத்தல்
‘கையாளுவதற்கு கடினமான [இந்த] காலங்களில்’ இளைஞர்கள் அதிகமான அழுத்தங்களை எதிர்ப்படுகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, NW) ஒழுக்கக்கேடு, புகைபிடித்தல் இன்னும் மற்ற வகையான அழிக்கக்கூடிய நடத்தையை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தால் அவர்கள் அனுதினமும் தாக்கப்பட்டுவருகிறார்கள். கூட்டத்தோடுகூட ஒத்துப்போக மறுப்பதற்காக பைபிள் தராதரங்களைப் பின்பற்றுகிறவர்கள் ஒருவேளை பரிகசிக்கப்படலாம், சில கிறிஸ்தவர்கள் ஒத்துப்போய்விடுவதே எளிதாக இருக்கும் என்பதாக ஒருவேளை நினைக்கலாம்.
பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டின் முடிவில், எரேமியா இவ்விதமாக எழுதினார்: “தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.” (புலம்பல் 3:27) அவர் அர்த்தப்படுத்தியது என்ன? இளைஞராயிருக்கையில் சோதனைகளைக் கையாளக் கற்றுக்கொள்வது, பெரியவர்களாக ஆகும்போது கடினமான பிரச்சினைகளைச் சந்திப்பதற்கு ஒருவரை தயார்செய்ய உதவுகிறது. துன்பங்கள், விரும்பத்தகாதவையாக இருந்தாலும், இளைஞர், வயதுவந்தவர் ஆகிய இருவருக்குமே தவிர்க்க முடியாதவையாகும். (2 தீமோத்தேயு 3:12) ஆனால், உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பதில் கிடைக்கும் நன்மைகள், ஒத்திணங்கிப்போவதால் கிடைக்கும் எந்தத் தற்காலிகமான நிம்மதியையும் விஞ்சிவிடுகின்றன.
நீங்கள் ஒரு இளைஞராக இருந்தால், விசுவாசப் பரீட்சைகளை நேர்மையாக எதிர்ப்படுங்கள். தவறான நடத்தையில் ஈடுபடும்படியாக சோதிக்கப்படுகையில், ஒத்திணங்கிப் போக மறுத்துவிடுங்கள். இதைச் செய்வது தற்போது கடினமாக இருந்தாலும், உங்களுடைய வாழ்நாட்காலத்தில் குறைந்தளவு கவலைகளையே கொண்டிருப்பீர்கள். இயேசு வாக்களித்திருக்கிறார்: ‘என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள் . . . அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.’—மத்தேயு 11:29, 30.
பைபிள் நியமங்களின்படி வாழும் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள். அவ்விதமாகச் செய்வது இப்பொழுது உங்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கை முறையையும் எதிர்காலத்துக்கு ஒரு நிச்சயமான நம்பிக்கையையும் கொடுக்கும். பைபிள் சொல்கிற பிரகாரம், “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.