403 ஆண்டுகால திருமணம் ஆபத்தில்
ஸ்வீடனில் சர்ச்சும் அரசாங்கமும் 400 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ்ந்து வந்திருக்கின்றன. இப்போது மதத்திற்கும் அரசாங்கத்திற்கும் உள்ள மணப் பிணைப்பு தளர்வுறுகிறது.
லூத்தரன் மதப் பிரிவு, 1593-ல் அரசாங்க மதமாக ஸ்தாபிக்கப்பட்டது, ஸ்வீடனின் மக்கள் எல்லாரும் அதன் ஞானஸ்நானம் பெற்ற உறுப்பினராக ஆக வேண்டியிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்பு, 1850-ன் பத்தாண்டுகளின்போது அதில் மாற்றம் செய்யப்பட்டது. ஸ்வீடன் மக்கள் அதற்குமேலும் ஞானஸ்நானம் பெறுவது அவசியமாயில்லை; இருப்பினும், அவர்கள் லூத்தரன் சர்ச்சின் உறுப்பினராக இன்னும் கருதப்பட்டனர். அத்தகையோராக, சர்ச்சை ஆதரிப்பதற்கும் சர்ச்சால் அளிக்கப்படுகிற குறிப்பிட்ட சில சிவில் சேவைகளுக்கும் அவர்கள் தங்கள் வரிவிதிக்கப்பட்ட வருமானத்தில் ஒரு சதவீதம் செலுத்த வேண்டியதிருந்தது. மிக சமீபத்தில் மற்றொரு மாற்றம் ஏற்பட்டது. 1952 முதற்கொண்டு, ஸ்வீடனின் மக்கள் சர்ச்சிலிருந்து சட்டப்பூர்வமாய் விலகிக்கொண்டு, அதன்மூலம் சர்ச்சுக்குரிய வரியின் பெரும்பாகத்தை செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படலாம்.
சமீப ஆண்டுகளில் லூத்தரன் சர்ச்சின் கட்டுப்பாட்டு பிடி ஸ்வீடனில் தொடர்ந்து தளர்ந்து கொண்டேயிருக்கிறது. யூதர், கத்தோலிக்கர், முஸ்லீம்கள் உட்பட, ஸ்வீடனின் பிரஜைகளில் 10 சதவீதமானோர் குடியேறியவர்களாக, லூத்தரன் மதத்தைச் சாராதவர்களாதலால், இது தவிர்க்க முடியாததாக இருந்தது. இவ்வாறு 1996-ன் தொடக்கத்தில், ஸ்வீடனின் மக்களில் 86 சதவீதத்தினர் மாத்திரமே லூத்தரன் சர்ச்சை சேர்ந்தவர்களாக இருந்தனர்; அந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.
தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற நிலை, சர்ச்சுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பெரும் பிளவை தானே உண்டாக்கிக்கொண்டு இருக்கிறது. லூத்தரன் மதத்தினராக அரசர் இருக்க வேண்டியதில்லை என்றும், லூத்தரன் மதத்தைச் சேர்ந்த பெற்றோர் ஒருவருக்குப் பிறக்கும் பிள்ளைகள், லூத்தரன் அரசாங்க சர்ச்சின் உறுப்பினராக இயல்பாய்க் கருதப்படுகிறதில்லை என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலுமாக, த டலஸ் மார்னிங் நியூஸ் செய்தித்தாளின்படி, ஆண்டு 2000-த்திற்குள், “அவ்விடத்து சபை வட்டாரங்களும் அரசாங்கமும் மிகப் பரந்த அளவுகளில் இருக்கும் சொத்துக்களை மதிப்பிட்டு பிரித்துக்கொள்ள வேண்டும். சர்ச்சானது அதன் வருடாந்தர 168 கோடி டாலர் வரவுசெலவு பட்டியலைக் குறைக்க வேண்டும். இதில் பெரும்பான்மையானது அரசாங்க வரிகளின்மூலம் திரட்டப்படுகிறது.” இந்த நூற்றாண்டுக்குப் பின்பு சர்ச், தானே தன் பிஷப்புக்களை நியமித்துக்கொள்ளும்.
அக்கறையற்ற நிலையும் உறுப்பினர் குறைந்துகொண்டே போவதும் கிறிஸ்தவமண்டலத்தைத் தொல்லைப்படுத்தி வருகையில், ஸ்வீடனிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் வெற்றிகரமாய்த் தொடர்ந்து முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். கடவுளுடைய ராஜ்ய பிரஸ்தாபிகள் 24,487 பேர் அந்நாட்டில் இருக்கிறார்கள் என்றும், அவர்களில் ஏறக்குறைய 10 சதவீதத்தினர் முழுநேர பயனியராக பிரசங்க வேலை செய்கிறார்கள் என்றும், 1997 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்) அறிக்கை செய்கிறது. இவர்களில் பலர் மேலும் அதிக ஊழிய சிலாக்கியங்களுக்காகப் பிரயாசப்படுகிறார்கள். உதாரணமாக, 1995-ல் யெகோவாவின் சாட்சிகளின் மாவட்ட மாநாடுகளின்போது, 20 தம்பதிகள் உவாட்ச் டவர் பைபிள் பள்ளியாகிய கிலியட்டில் மிஷனரி பயிற்றுவிப்புக்காக விண்ணப்பித்தனர். அந்தச் சமயத்தில் கடந்த வகுப்புகளில் தேறின ஸ்வீடன் நாட்டவரான 75 கிலியட் பட்டதாரிகள், உலகத்தின் பல்வேறு பாகங்களில் மிஷனரி சேவையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகமில்லாமல் அவர்களுடைய சிறந்த முன்மாதிரியும் ஊக்கமூட்டும் கடிதங்களும் சந்திப்புகளும், இந்த மகத்தான சிலாக்கியத்தில் பங்குகொள்ள இப்போது சிந்தித்துக்கொண்டு இருப்போரின்பேரில் செயல்படும்படியான செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன.
இவ்வாறு, கிறிஸ்தவமண்டலத்தின் லட்சக்கணக்கானோர் சோர்வை அனுபவித்துக் கொண்டு இருக்கையில், யெகோவாவின் சாட்சிகள் ‘மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிக்கிறார்கள்.’—ஏசாயா 65:13, 14.
[பக்கம் 30-ன் படம்]
ஸ்வீடன்