யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்ய போதிக்கப்படுதல்
“உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்.”—சங்கீதம் 143:10.
1, 2. (அ) நாம் எப்போது போதிக்கப்பட வேண்டும், என்ன மெய்ப்பட்ட நோக்கத்துடன்? (ஆ) யெகோவாவால் போதிக்கப்பட்டு வருவது ஏன் மிக முக்கியம்?
ஒருவர் உயிருடனும் செயல்படுபவராகவும் இருக்கும் ஒவ்வொரு நாளும், பயனுடைய ஏதாவது அவருக்குப் போதிக்கப்படலாம். உங்கள் காரியத்திலும் அது உண்மையாயுள்ளது, மற்றவர்களைக் குறித்ததிலும் அது உண்மையாக உள்ளது. ஆனால் மரணத்தின்போது என்ன சம்பவிக்கிறது? அந்த நிலைமையில் எதுவும் போதிக்கப்படுவதோ கற்றுக்கொள்ளப்படுவதோ சாத்தியமல்ல. “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்,” என்று பைபிள் தெளிவாகச் சொல்லுகிறது. மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக்குழியாகிய, ஷியோலில் அறிவு இல்லை. (பிரசங்கி 9:5, 10, NW) நாம் போதிக்கப்படுவதும் அறிவைத் திரட்டுவதும் வீண் என்று இது அர்த்தப்படுகிறதா? நாம் என்ன போதிக்கப்படுகிறோம், அந்த அறிவை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதன்பேரில் அது சார்ந்திருக்கிறது.
2 உலகப்பிரகாரமானதாக இருப்பது மாத்திரமே நமக்குப் போதிக்கப்பட்டால், நிலையான எதிர்காலம் நமக்கு இல்லை. எனினும் மகிழ்ச்சியுண்டாக, நித்திய ஜீவனை அடையும் நோக்கத்துடன் சகல தேசங்களிலுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் கடவுளுடைய சித்தம் போதிக்கப்பட்டு வருகிறார்கள். ஜீவனளிக்கும் அறிவின் மூலகாரணராகிய யெகோவாவால் போதிக்கப்பட்டுவருவதில், இந்த நம்பிக்கைக்கான ஆதாரம் உள்ளது.—சங்கீதம் 94:9-12.
3. (அ) இயேசு கடவுளுடைய முதல் மாணாக்கராக இருந்தார் என்று ஏன் சொல்லலாம்? (ஆ) மனிதர்கள் கடவுளால் போதிக்கப்படுவார்கள் என்பதற்கு என்ன உறுதி நமக்கு இருக்கிறது, அதன் பலன் என்ன?
3 கடவுளுடைய முதற்பேறான குமாரன், அவருடைய முதல் மாணாக்கராக, தம்முடைய பிதாவுக்குப் பிரியமானதைச் செய்யும்படி போதிக்கப்பட்டார். (நீதிமொழிகள் 8:22-30; யோவான் 8:28) பல ஆயிரக்கணக்கான மனிதர்கள் தம்முடைய பிதாவால் போதிக்கப்படுவார்கள் என்று இயேசு குறிப்பிட்டார். கடவுளிடமிருந்து கற்றுக்கொள்கிற நமக்கு என்ன எதிர்பார்ப்புகள் இருக்கின்றன? இயேசு இவ்வாறு சொன்னார்: “எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். . . . என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—யோவான் 6:45-47.
4. கடவுள் அளிக்கும் போதகத்தால் லட்சக்கணக்கான மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், என்ன எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு இருக்கின்றன?
4 ஏசாயா 54:13-லிருந்து இயேசு மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டார். அது, கடவுளுடைய அடையாள அர்த்தமான ஸ்திரீயாகிய பரலோக சீயோனை நோக்கி பேசப்பட்டது. அந்தத் தீர்க்கதரிசனம் அவளுடைய குமாரருக்கு, அதாவது, ஆவியால் பிறப்பிக்கப்பட்ட 1,44,000 பேரான, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு முக்கியமாய்ப் பொருந்துகிறது. அந்த ஆவிக்குரிய குமாரர்களில் ஒரு மீதிபேர் இன்று சுறுசுறுப்பாய்ச் செயல்பட்டு, முழு உலகளாவிய ஒரு போதனை திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதன் பலனாக, ஒரு ‘திரள் கூட்டம்’ ஆகிய லட்சக்கணக்கான மற்றவர்களும் யெகோவாவால் போதிக்கப்படுவதிலிருந்து பயனடைகிறார்கள். இந்தக் கற்கும் நடவடிக்கையில் குறுக்கிடும் தடையாகிய மரணமில்லாமல் தொடரும் ஈடிணையற்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. எவ்வாறு? விரைவாய் அணுகிக்கொண்டிருக்கும் ‘மகா உபத்திரவத்தைத்’ தப்பிப் பிழைத்து, பரதீஸான பூமியில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழப்போகும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 10, 13-17, NW.
கடவுளுக்குப் பிரியமானதைச் செய்வதன்பேரில் மிகைப்பட்ட அறிவுறுத்தல்
5. (அ) 1997-க்குரிய வருடாந்திர வசனம் எது? (ஆ) கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவதைப்பற்றி நாம் எவ்வாறு உணரவேண்டும்?
5 உலகமெங்குமுள்ள 80,000-க்கும் மேற்பட்ட சபைகளில், 1997-ன்போது யெகோவாவின் சாட்சிகள், சங்கீதம் 143:10-ன் இந்தத் தொடக்க வார்த்தைகளை மனதில் விடாது வைத்து வருவார்கள்: “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்.” அதுவே 1997-க்குரிய வருடாந்திர வசனமாக இருக்கும். கவனத்தைக் கவரும் முறையில் ராஜ்ய மன்றங்களில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும் அவ்வார்த்தைகள், கடவுள் அருளும் கல்வியைப் பெறுவதற்கு முதன்மையான ஓர் இடம் சபை கூட்டங்கள் கூடும் இடமென நினைவுபடுத்தும். அங்கே விடாது தொடரும் போதனைக்குரிய ஒரு நிகழ்ச்சிநிரலில் நாம் பங்குகொள்ளலாம். நம்முடைய மகா போதகரால் போதிக்கப்படும்படி, கூட்டங்களில் நம் சகோதரருடன் நாம் கூடியிருக்கையில், பின்வருமாறு எழுதின சங்கீதக்காரனைப்போல் உணரலாம்: “யெகோவாவின் வீட்டுக்குப் போவோம் வாருங்கள் என்று அவர்கள் என்னிடம் சொல்லவே, மகிழ்ச்சியடைந்தேன்.”—சங்கீதம் 122:1, தி.மொ.; ஏசாயா 30:20.
6. தாவீதின் வார்த்தைகளில், நாம் எதை ஒப்புக்கொள்கிறோம்?
6 ஆம், நம் எதிரியான பிசாசுக்குப் பிரியமானதை அல்லது அபூரண மனிதருக்குப் பிரியமானதைச் செய்வதற்கு மாறாக, கடவுளுக்குப் பிரியமானதைச் செய்யும்படி போதிக்கப்படவே நாம் விரும்புகிறோம். ஆகையால், தாவீதைப்போல், நாம் வணங்கி சேவிக்கும் கடவுளை யாரென நன்றியோடு தெரிவிக்கிறோம்: “நீரே என் கடவுள்; உமது நல்ல ஆவி என்னைச் செம்மையான இடத்தில் நடத்துவதாக.” (சங்கீதம் 143:10, தி.மொ.) பொய்யரோடு கூடியிருக்க விரும்பாமல், யெகோவாவுக்கு வணக்கம் செலுத்தப்படும் இடத்தில் இருப்பதையே தாவீது விரும்பி தெரிந்துகொண்டார். (சங்கீதம் 26:4-7) தாவீதின் காலடிகளைக் கடவுளுடைய ஆவி வழிநடத்தினதால், நீதியின் பாதைகளில் அவர் நடக்க முடிந்தது.—சங்கீதம் 17:5; 23:3.
7. கிறிஸ்தவ சபையின்மீது கடவுளுடைய ஆவி எவ்வாறு செயல்பட்டிருக்கிறது?
7 அப்போஸ்தலருக்கு, பரிசுத்த ஆவி எல்லாவற்றையும் போதித்து, தாம் அவர்களுக்குச் சொல்லியிருந்த காரியங்களையெல்லாம் நினைப்பூட்டுமென்று பெரிய தாவீதாகிய இயேசு கிறிஸ்து அவர்களுக்கு உறுதிகூறினார். (யோவான் 14:26) கடவுளின் எழுதப்பட்ட வார்த்தையில் அடங்கியுள்ள ‘கடவுளின் ஆழமானக் காரியங்களை,’ பெந்தெகொஸ்தே முதற்கொண்டு யெகோவா படிப்படியாய் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். (1 கொரிந்தியர் 2:10-13, NW) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” என்று இயேசு குறிப்பிட்ட, காணக்கூடிய ஒரு வழிமூலத்தைக்கொண்டு இதை அவர் செய்திருக்கிறார். இது அளிக்கும் ஆவிக்குரிய உணவு, உலகமெங்குமுள்ள கடவுளுடைய ஜனங்களின் சபைகளுக்கு போதிக்கும் திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.—மத்தேயு 24:45-47, NW.
யெகோவாவுக்குப் பிரியமானவை நம் கூட்டங்களில் போதிக்கப்படுகின்றன
8. காவற்கோபுர படிப்பில் பங்கு கொள்வது ஏன் அவ்வளவு மதிப்புமிகுந்தது?
8 சபையின் வாராந்தர காவற்கோபுர படிப்பில் சிந்திக்கப்படும் விஷயம், பைபிள் நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்துவதை அடிக்கடி கையாளுகிறது. இது, வாழ்க்கையின் கவலைகளைச் சமாளிக்க நமக்கு நிச்சயமாகவே உதவி செய்கிறது. மற்ற படிப்புகளில், ஆழ்ந்த அறிவாராய்ச்சியைக் கொண்ட ஆவிக்குரிய சத்தியங்கள் அல்லது பைபிள் தீர்க்கதரிசனங்கள் சிந்திக்கப்படுகின்றன. அத்தகைய படிப்புகளின்போது எவ்வளவு அதிகமானவை நமக்குப் போதிக்கப்படுகின்றன! பல நாடுகளில் இந்தக் கூட்டங்களுக்கு வருவோரால் ராஜ்ய மன்றங்கள் முழுமையாக நிரம்பிவிடுகின்றன. எனினும், சில நாடுகளில் கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டிருக்கிறது. ஏன், அதைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி,” தாங்கள் தவறாமல் ஒன்றுகூடிவருவதை உலகப்பிரகாரமான வேலை குறுக்கிட்டு தடுக்க சிலர் அனுமதிக்கிறார்களா? அல்லது கூடி மகிழ்கிற நடவடிக்கைகளில் அல்லது டெலிவிஷன் பார்த்துக்கொண்டிருப்பதில் பல மணிநேரங்களைச் செலவிடுவதால், எல்லா கூட்டங்களுக்கும் செல்லும் திட்டத்தை மட்டுக்குமீறி கடினமாய்த் தோன்ற செய்கிறதாக இருக்கலாமா? எபிரெயர் 10:23-25-ல் கொடுக்கப்பட்டுள்ள, தேவாவியால் ஏவப்பட்ட கட்டளையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். “நாளானது சமீபித்துவருகிறதை” நாம் காணும் இப்போது கடவுளுடைய போதனையைப் பெறுவதற்கு நாம் கூடிவருவது, அவற்றைப் பார்க்கிலும் அதிக முக்கியமானதல்லவா?
9. (அ) ஊழியக் கூட்டம் எவ்வாறு நம்மை ஊழியத்திற்குத் தகுதிப்படுத்தும்? (ஆ) சாட்சி கொடுப்பதைப் பற்றியதில் நம்முடைய மனப்பான்மை என்னவாக இருக்க வேண்டும்?
9 கடவுளுடைய ஊழியர்களாகச் சேவிப்பது நம்முடைய முதன்மையான பொறுப்புகளில் ஒன்றாக உள்ளது. இதை நாம் எவ்வாறு பலன்தரத்தக்க முறையில் நிறைவேற்றலாம் என்பதை நமக்குப் போதிப்பதற்கு ஊழியக் கூட்டம் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆட்களை அணுகுவது எப்படி, என்ன சொல்வது, சாதகமாக ஏற்கப்படுகையில் நாம் செயல்படும் முறை, மற்றும் நம்முடைய செய்தியை ஆட்கள் ஏற்காது தள்ளிவிடும்போதும் என்ன செய்வது போன்றவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம். (லூக்கா 10:1-11) இந்த வாராந்தர கூட்டத்தில், பலன்தரத்தக்க முறைகள் கலந்தாலோசிக்கப்பட்டு நடித்துக் காட்டப்பட்டு வருவதால், நாம் வீடுவீடாகச் செல்லும்போது மட்டுமல்லாமல், வீதிகளில், ஊர்திகள் தங்கவைக்கும் இடங்களில், பொதுப் போக்குவரத்து ஊர்திகளில், விமான நிலையங்களில், வியாபார இடங்களில் அல்லது பள்ளிக்கூடங்களில் ஆட்களை அணுகிப் பேசுவதற்கு நாம் மேலும் நன்றாக ஆயத்தம் செய்யப்படுகிறோம். “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்,” என்ற நம்முடைய வேண்டுகோளுக்குப் பொருந்த, நம்முடைய எஜமானர் நம்மை ஊக்கப்படுத்தினபடி செய்வதற்கு நாம் விரும்புவோம்: “மனுஷர் . . . பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.”—மத்தேயு 5:16.
10. ‘பாத்திரமானவர்களுக்கு’ நாம் எவ்வாறு உண்மையில் உதவிசெய்யலாம்?
10 மற்றவர்களை சீஷராக்குவதற்கும் அத்தகைய சபை கூட்டங்களில் நாம் போதிக்கப்படுகிறோம். அக்கறை காட்டப்பட்டால் அல்லது புத்தகம் ஏற்கப்பட்டால், மறுசந்திப்புகள் செய்கையில், பைபிள் படிப்புகளைத் தொடங்குவதே நம் நோக்கமாக இருக்கிறது. ஒரு கருத்தில் இது, இயேசு கட்டளையிட்ட காரியங்களை அவர்களுக்குப் போதிக்கும்படி சீஷர்கள், ‘பாத்திரமானவரிடத்தில் தங்கினதற்கு’ ஒப்பாக இருக்கிறது. (மத்தேயு 10:11; 28:19, 20) நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு போன்ற மிகச் சிறந்த உதவிகளை உடையோராய், நம் ஊழியத்தை முற்றிலும் சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு நாம் உண்மையில் நன்கு தகுதியாக்கப்பட்டவர்களாய் இருக்கிறோம். (2 தீமோத்தேயு 4:5) ஒவ்வொரு வாரமும், ஊழியக் கூட்டத்துக்கும் தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கும் நீங்கள் ஆஜராகையில், போதியளவு தகுதிபெற்ற கடவுளுடைய ஊழியரில் ஒருவராக, அவருடைய சித்தத்தை நிறைவேற்றுபவராய் உங்களைச் சிபாரிசு செய்யும் உதவியுள்ள குறிப்புகளை மனதில் பற்றிக்கொண்டு, பின்பு அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.—2 கொரிந்தியர் 3:3, 5; 4:1, 2.
11. மத்தேயு 6:33-ல் காணப்படும் இந்த வார்த்தைகளில் சிலர் எவ்வாறு விசுவாசம் காட்டியிருக்கிறார்கள்?
11 நாம், ‘முதலாவதாக, கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பது’ கடவுளுடைய சித்தமாக உள்ளது. (மத்தேயு 6:33, NW) இவ்வாறு உங்களை கேட்டுக்கொள்ளுங்கள், ‘என் [அல்லது என் மணத்துணையின்] உலகப்பிரகாரமான வேலை அவசியப்படுத்துபவை, கூட்டத்துக்கு வர இடையூறாக இருந்தால், இந்த நியமத்தை நான் எவ்வாறு பொருத்திப் பயன்படுத்துவேன்?’ ஆவிக்குரியப்பிரகாரம் முதிர்ச்சியுள்ள பலர், தங்களை வேலைக்கு அமர்த்தியிருப்பவர்களிடம் அந்தக் காரியத்தைப் பற்றி பேச நடவடிக்கைகள் எடுப்பார்கள். முழுநேர ஊழியரான ஒரு சகோதரி, சபை கூட்டங்களுக்கு ஆஜராக, ஒவ்வொரு வாரமும் தனக்கு நேரம் வேண்டுமென்று தன்னை வேலைக்கு அமர்த்தினவரிடம் தெரிவித்தார்கள். அவர்களுடைய வேண்டுகோளை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அந்தக் கூட்டங்களில் என்ன நடக்கிறதென்பதைப் பற்றி அறிய விரும்பி, தானும் ஆஜராவதற்குக் கேட்டார். வரவிருந்த மாவட்ட மாநாடு ஒன்றைப் பற்றிய அறிவிப்பைக் அங்கே கேட்டார். இதன் பலனாக, அந்த எஜமானர் அந்த நாள் முழுவதும் மாநாட்டில் செலவிட ஏற்பாடு செய்தார். இந்த உதாரணத்திலிருந்து என்ன பாடத்தை நீங்கள் கற்கிறீர்கள்?
தேவபக்தியுள்ள பெற்றோரால் யெகோவாவின் சித்தம் போதிக்கப்படுவது
12. பிள்ளைகளுக்கு யெகோவாவின் சித்தம் கற்பிக்கப்படுவதற்கு, பொறுமையுடனும் உறுதியுடனும் கிறிஸ்தவ பெற்றோர் என்ன செய்கின்றனர்?
12 ஆனால், கடவுளுடைய சித்தத்தைச் செய்யும்படி போதிக்கப்படுவதற்கு, சபை கூட்டங்களும் மாநாடுகளும் மாத்திரமே ஒரே ஏற்பாடாக இல்லை. தேவபக்தியுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகள் யெகோவாவைத் துதித்து அவருடைய சித்தத்தைச் செய்யும்படி அவர்களைப் பயிற்றுவித்து, சிட்சித்து, வளர்க்கும்படி கட்டளையிடப்படுகின்றனர். (சங்கீதம் 148:12, 13; நீதிமொழிகள் 22:6, 15) அவ்வாறு செய்வது, நம் ‘சிறுபிள்ளைகளைக்’ கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தேவைப்படுத்துகிறது, அங்கே அவர்கள் ‘கேட்டுக் கற்றுக்கொள்வார்கள்.’ ஆனால், வீட்டில் பரிசுத்த எழுத்துக்களிலிருந்து அவர்களுக்குப் போதிப்பதைப் பற்றியதென்ன? (உபாகமம் 31:12; 2 தீமோத்தேயு 3:15) ஒழுங்கான குடும்ப பைபிள் படிப்பு திட்டங்களைப் பல குடும்பங்கள் உணர்வுள்ளோராய்த் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் அதன்பின் சீக்கிரத்திலேயே அவை வரவர கவனம் செலுத்தாமல் விட்டுவிடப்படும்படி அனுமதித்திருக்கின்றனர். இத்தகைய அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கிறதா? தவறாமல் ஒழுங்காய் படிக்கும் அத்தகைய படிப்பை சிபாரிசு செய்தது பொருத்தமானதாக இல்லை அல்லது உங்கள் குடும்ப நிலை அவ்வளவாய் வேறுபட்டிருப்பதால், உங்கள் காரியத்தில் அது சாத்தியமாகாது என்று முடிவு செய்வீர்களா? நிலைமை என்னவாக இருந்தாலும், ஆகஸ்ட் 1, 1995-ன் காவற்கோபுரம் பத்திரிகையிலுள்ள, “எங்களுடைய செழுமையான ஆவிக்குரிய சொத்து” மற்றும் “விடாமுயற்சியினால் வரும் பலன்கள்” என்ற சிறந்த கட்டுரைகளை, பெற்றோரே நீங்கள் தயவுசெய்து திரும்ப வாசியுங்கள்.
13. தினவசனத்தைச் சிந்திப்பதிலிருந்து குடும்பங்கள் எவ்வாறு பயனடையலாம்?
13 தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்திலிருந்து தினவசனத்தைச் சிந்திப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளும்படி குடும்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. அந்த வாக்கியத்தையும் விளக்கக் குறிப்புகளையும் வெறுமனே வாசிப்பது நல்லதுதான், ஆனால் அந்த வசனத்தைக் கலந்தாராய்ந்து பொருத்திப் பயன்படுத்துவது அதிக நன்மை பயக்குவதாக இருக்கிறது. உதாரணமாக, எபேசியர் 5:15-17-ஐ (NW) சிந்தித்தால், தனிப்பட்ட படிப்புக்கும், முழுநேர ஊழியம் ஒன்றில் பங்குகொள்வதற்கும், தேவராஜ்ய ஊழிய நியமிப்புகளான மற்றவற்றைக் கவனிப்பதற்கும், ‘வாய்ப்புள்ள காலத்தை வாங்குவது’ எவ்வாறு என்பதன்பேரில் குடும்ப உறுப்பினர் பகுத்தாராயலாம். ஆம், தினவசனத்தின்பேரில் ஒரு குடும்பம் கலந்தாலோசிப்பது, ‘யெகோவாவின் சித்தம் என்னவென்று [மேலுமதிக முழுமையாய்] தொடர்ந்து அறிந்துணர்ந்து வருவதற்கு’ அவர்களில் ஒருவரை அல்லது பலரை வழிநடத்தலாம்.
14. பெற்றோர்கள் எவ்வகையான போதகர்களாக இருக்கவேண்டுமென்று உபாகமம் 6:6, 7 காட்டுகிறது, இது எதை அவசியப்படுத்துகிறது?
14 பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு விடா முயற்சியுடன் போதிப்போராக இருக்க வேண்டும். (உபாகமம் 6:6, 7) ஆனால் இது, தங்கள் பிள்ளைகளை வெறுமனே கண்டனம் செய்யும் அல்லது கட்டளையிடும் காரியமல்ல. தகப்பனும் தாயும் செவிகொடுத்தும் கேட்க வேண்டும். இவ்வாறு, எது விளக்கப்பட, தெளிவாக்கப்பட, அல்லது உதாரணங்காட்டப்பட, அல்லது திரும்பவும் சொல்லப்பட அவசியமாக இருக்கிறது என்பதை மேலும் நன்றாய் அவர்கள் அறிந்துகொள்ள முடியும். கிறிஸ்தவ குடும்பம் ஒன்றில், பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ளாத, அல்லது அவர்களுக்குக் கவலையுண்டாக்குகிற காரியங்களைப் பற்றி கேள்விகள் கேட்கும்படி அவர்களை ஊக்குவிப்பதன்மூலம், திறந்த மனதுடன் கலந்துபேசும்படி தூண்டப்படுகிறார்கள். இவ்வாறு செய்ததன்மூலம், தங்கள் பருவ வயது மகனுக்கு, யெகோவா தொடக்கம் இல்லாதவராக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்ததென்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். காலமும் விண்வெளியும் முடிவற்றதாக இருக்கின்றனவென்று ஏற்கப்பட்டிருப்பதைக் காட்டும், உவாட்ச் டவர் சொஸைட்டி பிரசுரங்களிலிருந்த தகவலைப் பெற்றோர் பயன்படுத்த முடிந்தது. அந்தக் குறிப்பை உதாரணத்தைக் கொண்டு விளக்க அது உதவியது, அது தங்கள் மகனுக்குத் திருப்தியளித்தது. ஆகையால், உங்கள் பிள்ளைகளின் கேள்விகளுக்குத் தெளிவாகவும் வேதவசனங்களிலிருந்தும் பதிலளிப்பதற்கு நேரமெடுத்து, கடவுளுக்குப் பிரியமானதைச் செய்ய கற்றுக்கொள்வது மிகுந்த மனத்திருப்தியளிக்கும் என்பதைக் காண அவர்களுக்கு உதவிசெய்யுங்கள். கடவுளுடைய ஜனங்கள்—இளைஞரும் முதியோரும்—இன்று வேறு என்ன போதிக்கப்படுகிறார்கள்?
அன்புகூரவும் போராடவும் போதிக்கப்படுதல்
15. நம்முடைய சகோதர அன்பின் உண்மையானத் தன்மை எப்போது சோதிக்கப்படலாம்?
15 இயேசுவின் புதிய கட்டளைக்கு ஒத்திசைவாய், ‘ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி தேவனால் போதிக்கப்பட்டவர்களாக’ நாம் இருக்கிறோம். (1 தெசலோனிக்கேயர் 4:9) காரியங்கள் அமைதியாக நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கையில், நம் சகோதரர் எல்லாரையும் நாம் நேசிக்கிறோமென்று உணரலாம். எனினும், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் எழும்புகையில் அல்லது மற்றொரு கிறிஸ்தவர் சொல்கிற அல்லது செய்கிற ஒன்றின் காரணமாக நம் உணர்ச்சி புண்படுத்தப்படுகையில் என்ன நடக்கிறது? இந்த நிலையில் நம்முடைய அன்பின் உண்மையானத் தன்மை சோதனைக்குட்படுத்தப்படலாம். (2 கொரிந்தியர் 8:8-ஐ ஒப்பிடுக.) இத்தகைய சந்தர்ப்பங்களில் என்ன செய்யும்படி பைபிள் நமக்குப் போதிக்கிறது? ஒரு காரியமானது, முழுமையானக் கருத்தில் அன்பைக் காட்ட முயற்சி செய்வதாகும். (1 பேதுரு 4:8) நம்முடைய சொந்த அக்கறைகளுக்கானவற்றை நாடி, அற்ப குற்றங்களின்பேரில் கோபமூளுவதற்கு, அல்லது தீங்கை மனதில் பேணிவைப்பதற்கு மாறாக, அன்பு திரளான பாவங்களை மூடும்படி அனுமதிக்க நாம் பிரயாசப்பட வேண்டும். (1 கொரிந்தியர் 13:5) இதுவே கடவுளுக்குப் பிரியமானதென்று நாம் அறிந்திருக்கிறோம், எப்படியெனில், இதையே அவருடைய வார்த்தை போதிக்கிறது.
16. (அ) என்ன வகையான போரில் ஈடுபடுவதற்குக் கிறிஸ்தவர்கள் போதிக்கப்படுகிறார்கள்? (ஆ) நாம் எவ்வாறு போராயுதம் தரிக்கப்படுகிறோம்?
16 அன்பையும் போரையும் பலர் ஒன்றாக இணைக்கமாட்டார்கள் என்றபோதிலும், போர் நமக்குப் போதிக்கப்படுகிற ஒன்றாக உள்ளது, ஆனால் அது தனிப்பட்ட வகையான ஒரு போர். தாவீதின் காலத்தில் போர், இஸ்ரவேலின் பகைஞருக்கு எதிராக சொல்லர்த்தமான போரை உட்படுத்தினபோதிலும், எவ்வாறு போர் நடத்துவது என்பதைத் தனக்குப் போதிக்க யெகோவாவின்பேரில் தான் சார்ந்திருந்ததை தாவீது கண்டுணர்ந்திருந்தார். (1 சாமுவேல் 17:45-51; 19:8; 1 இராஜாக்கள் 5:3; சங்கீதம் 144:1) இன்று நம்முடைய போராடுதலைப் பற்றியதென்ன? நம்முடைய போராயுதங்கள் மாம்சத்துக்குரியவையல்ல. (2 கொரிந்தியர் 10:4) நம்முடையது ஆவிக்குரிய ஓர் போர், அதற்கு, ஆவிக்குரிய போராயுதங்களை நாம் தரித்துக்கொள்ள வேண்டும். (எபேசியர் 6:10-13) தம்முடைய வார்த்தையின் மூலமாகவும் தம்முடைய கூட்டிச்சேர்க்கப்பட்ட ஜனங்களின் மூலமாகவும், வெற்றிகரமான ஆவிக்குரிய போர் செய்ய யெகோவா நமக்குப் போதிக்கிறார்.
17. (அ) நம்முடைய கவனத்தைத் திருப்புவதற்கு சாத்தான் என்ன தந்திர சூழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறான்? (ஆ) எதை நாம் ஞானமாய்த் தவிர்க்க வேண்டும்?
17 முக்கியமற்ற காரியங்களின்பேரில் நம் கவனத்தைத் திருப்பும்படி சாத்தான் முயற்சி செய்து, மறைவான வஞ்சக வழிகளில், உலகப்பிரகாரமான சோதனைகளையும், விசுவாசத் துரோகிகளையும், சத்தியத்தை எதிர்க்கும் மற்றவர்களையும் பயன்படுத்துகிறான். (1 தீமோத்தேயு 6:3-5, 11; தீத்து 3:9-11) எதிர்முகத் தாக்கலால் நம்மை மேற்கொள்ள தனக்கு அதிக வாய்ப்பில்லை என்று அவன் காண்பதால், ஆவிக்குரிய மதிப்பற்று நாம் குறைகூறவும் மதியீனமானக் கேள்விகளைக் கேட்கவும் நம்மைச் செய்விப்பதன்மூலம் நம்மை இடறிவிழச் செய்ய அவன் முயலுவதாகத் தோன்றுகிறது. எச்சரிக்கையாக இருக்கும் போர்வீரர்களாக, நாம் எதிர்முகத் தாக்கல்களுக்கு விழிப்பாயிருப்பதுபோல், அத்தகைய ஆபத்துக்களுக்கும் விழிப்பாக இருக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 1:3, 4.
18. இனிமேலும் நமக்கென்று வாழாதிருப்பது எதை உண்மையில் உட்படுத்துகிறது?
18 மனிதரின் பிரியங்களையோ அல்லது தேசங்களின் விருப்பங்களையோ நாம் முன்னேற்றுவிக்கிறதில்லை. நாம் இனிமேலும் நமக்காக வாழக்கூடாது; மாறாக கிறிஸ்து இயேசுவுக்கிருந்த அதே மனநிலையைத் தரித்து, கடவுளுடைய சித்தத்திற்காக வாழவேண்டுமென்று, இயேசு கிறிஸ்துவினுடைய முன்மாதிரியின் மூலம் யெகோவா நமக்குப் போதித்திருக்கிறார். (2 கொரிந்தியர் 5:14, 15) சென்ற காலத்தில், கட்டுப்பாடற்ற மிக ஒழுக்கக்கேடான வாழ்க்கையை நாம் ஒருவேளை வாழ்ந்து, அருமையான நேரத்தை வீணாகச் செலவிட்டிருக்கலாம். களியாட்டங்களும், மிதமீறிய குடிவெறியும், ஒழுக்கக்கேடும் இந்தப் பொல்லாத உலகத்தின் போக்காக உள்ளன. இப்போது கடவுளுடைய சித்தத்தைச் செய்யும்படி நாம் போதிக்கப்பட்டு வருவதால், இந்தச் சீரழிந்த உலகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டிருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோமல்லவா? ஆகையால், கறைப்படுத்தும் உலக பழக்கவழக்கங்களில் உட்படுவதைத் தவிர்க்க, ஆவிக்குரியப்பிரகாரமாய்க் கடும் போரிடுவோமாக.—1 பேதுரு 4:1-3.
நாம் நன்மையடைய நமக்கே போதித்துக்கொள்வது
19. யெகோவாவின் சித்தம் கற்பிக்கப்பட்டு வருவதும் பின்பு அதைச் செய்வதும் என்ன நன்மைகளுக்கு வழிநடத்தும்?
19 யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி போதிக்கப்பட்டு வருவது நமக்கு மிகுந்த நன்மை பயக்குகிறதென்பதைத் தெரிந்துணர்வது தவிர்க்கமுடியாதது. கடவுளுடைய குமாரனின் மூலமாகவும் அதோடு அவருடைய வார்த்தையின் மற்றும் கூட்டிச்சேர்க்கப்பட்ட ஜனங்களின் மூலமாகவும் நமக்கு வருகிற போதனைகளைக் கற்று பின்பற்றும்படி, கூர்ந்த கவனம் செலுத்துவதால் நாம் நம் பங்கை செய்யவேண்டும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. (ஏசாயா 48:17, 18; எபிரெயர் 2:1) அவ்வாறு செய்வதன்மூலம், இடுக்கண் நிறைந்த இந்தக் காலங்களில் உறுதியாய் நிலைத்துநிற்பதற்கும் எதிர்காலத்தில் வரவிருக்கிற பெரும் புயல்களை நாம் தாங்கி கடக்கவும் பலப்படுத்தப்பட்டிருப்போம். (மத்தேயு 7:24-27) இப்போதேயும், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன்மூலம் நாம் கடவுளைப் பிரியப்படுத்தி, நம்முடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்வோம். (யோவான் 9:31; 1 யோவான் 3:22) உண்மையான சந்தோஷத்தையும் அனுபவித்து மகிழ்வோம்.—யோவான் 13:17.
20. 1997-ம் ஆண்டு முழுவதும் இந்த வருடாந்திர வசனத்தை நீங்கள் காண்கையில் எதன்பேரில் தியானிப்பது நன்மையாயிருக்கும்?
20 1997-ம் ஆண்டின்போது, இந்த வருடாந்தர வசனமாகிய சங்கீதம் 143:10-ஐ வாசித்து சிந்திப்பதற்கு நமக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும்: “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்.” இதை நாம் செய்து வருகையில், நாம் போதிக்கப்படும்படி கடவுள் செய்திருக்கிற ஏற்பாடுகளின்பேரில் சிந்திப்பதற்கு, மேலே குறிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் சிலவற்றை நாம் பயன்படுத்துவோமாக. “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்,” என்பதை அறிந்தவர்களாய், அந்த வார்த்தைகளின்பேரில் செய்யும் அத்தகைய தியானத்தை, அந்த மன்றாட்டுக்கு ஒத்தவாறு நடப்பதற்குத் தூண்டுகோலாக நாம் பயன்படுத்துவோமாக.—1 யோவான் 2:17.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி இன்று யார் போதிக்கப்பட்டு வருகிறார்கள்?
◻ 1997-ன்போது சங்கீதம் 143:10 நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
◻ யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி நாம் எவ்வாறு போதிக்கப்படுகிறோம்?
◻ தங்கள் பிள்ளைகளுக்குப் போதிப்பதில் கிறிஸ்தவ பெற்றோர் என்ன செய்வதைத் தேவைப்படுத்துகிறது?