உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 12/15 பக். 20-21
  • “சரி, உங்கள் சர்ச் எங்குள்ளது?”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “சரி, உங்கள் சர்ச் எங்குள்ளது?”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 12/15 பக். 20-21

“சரி, உங்கள் சர்ச் எங்குள்ளது?”

மொஸாம்பிக்கில் யெகோவாவின் சாட்சிகள் அடிக்கடி இந்தக் கேள்வி கேட்கப்படுகிறார்கள். உண்மையில் சொல்லவேண்டுமானால், சமீப காலம் வரையில் இது, பதிலளிப்பதற்குக் கடினமான ஒரு கேள்வியாக இருந்திருக்கிறது. இது ஏனென்றால், 1991 வரையில் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை, இந்த நாட்டில் யெகோவாவின் சாட்சிகள் அனுபவிக்கவில்லை. ஆகையால், வணக்கத்திற்குரிய இடங்களெனத் திட்டமாய் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க ஸ்தாபிக்கப்பட்ட இடங்களைக் கொண்டிருப்பது சாத்தியமல்லாததாக இருந்தது.

எனினும், பிப்ரவரி 19, 1994-ல் இந்த நிலைமை மாறிற்று. மொஸாம்பிக்கில் முதன்முதலாகக் கட்டப்பட்ட இரண்டு ராஜ்ய மன்றங்கள், வெயில் காய்ந்துகொண்டிருந்த அந்நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. துறைமுகப்பட்டினமாகிய பீராவில் இருந்த, கூட்டம் நடத்துவதற்கான இந்தச் சிறந்த மன்றங்களின் பிரதிஷ்டைக்கு மொத்தம் 602 பேர் வந்தனர். மொஸாம்பிக்கின் கடற்கரையோர மத்திபத்தில் அந்தப் பட்டணம் உள்ளது. அந்தப் பட்டணத்திலுள்ள மூன்று சபைகளின் தேவைகளுக்கு இவை பயன்படும்.

அஸ்திபாரம் போடப்பட்டதிலிருந்து அந்தக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும்வரை அந்த முழு வேலைக்கு, ஓர் ஆண்டும் இரண்டு மாதங்களுமானக் கடின உழைப்பைத் தேவைப்படுத்தியது. அருகிலிருந்த ஜிம்பாப்வியிலிருந்து 30 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், தாங்களாக முன்வந்து, உள்ளூர் சாட்சிகளோடுகூட தோளுக்குத் தோள் ஒன்றுசேர்ந்து அடிக்கடி உழைத்தனர். வேலை நடவடிக்கைகளுக்கு மூல இடமாகச் சேவித்த பீராவிலிருந்த மிஷனரி வீட்டில் எல்லாரையும் தங்க வைக்க முடியாததால், வெளியே அந்த வீட்டின் சுற்றுப்புறத்தில், வார முடிவுநாட்களின்போது சிலர் தங்கினர். மேலும் சில சந்தர்ப்பங்களில் பல வாரங்கள் அவ்வாறு தங்கினர்.

மாஸாம்பா மற்றும் முனாவா சபைகளுக்குரிய ராஜ்ய மன்றம் கட்டப்பட்ட இடம் பீராவின் பெருஞ்சாலை பக்கமாக உள்ளது. ஒரு மிஷனரி இவ்வாறு சொன்னார்: “வேலை விரைவாக நடந்துகொண்டு, அதன் முன்னேற்றம் மிகவும் கவனிக்கத்தக்கதாக இருந்த ஒரு நாளின்போது, ஊர்திகளை ஓட்டிச் செல்பவர்கள் ராஜ்ய மன்றத்தை ஆச்சரியத்துடன் உற்றுநோக்கிக்கொண்டே கடக்கையில், தங்கள் சக்கர இயக்குப் பிடியை (steering wheel) ஏறக்குறைய மறந்துவிட்டு, கிட்டத்தட்ட விபத்துக்குட்பட இருந்ததை நாங்கள் கண்டோம்.” பலர் ஊர்தியை நிறுத்தியும் வேலை செய்யப்படுவதை பார்த்தனர். பல்வேறு மரபினர் அங்கிருந்து ஒன்றுசேர்ந்து உழைத்ததைக் கண்டதில் அவர்கள் முக்கியமாய் மனக்கவர்ச்சியடைந்தனர்.

பெரும்படியான திட்டமிடுதலையும் ஒழுங்கமைத்தலையும் இந்த வேலை உட்படுத்தியது. கட்டிடம் கட்ட தேவைப்படும் பொருட்களும் உதவியாதாரங்களும் கிடைப்பது அரிதாக இருக்கும் உலகத்தின் இந்த பாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்ற பல வேலைகளின் காரியங்களில் இருந்திருப்பதுபோல், ராஜ்ய மன்றங்களின் கட்டிட வேலை, அவசியமான பொருட்கள் இல்லாமல் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், 800 சிமென்ட் மூட்டைகள் தேவைப்பட்டன, சிமென்ட்டை அளிப்பதற்கு இருந்த அந்த ஒரே இடத்திலும், சிமென்ட்டை நிரப்புவதற்குத் தேவைப்பட்ட கோணிப்பைகள் இல்லை. தலைநகர் மபூடோவிலிருக்கும் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்துக்குச் சகோதரர் செய்தி தெரிவித்தனர்; விமானத்தின்மூலம் பைகள் அனுப்பப்பட்டன. இவை சிமென்ட் உற்பத்திச் சாலைக்குக் கொண்டுசென்று நிரப்பப்பட்டன. வேலை தடங்கலில்லாமல் நடந்தேறியது.

மற்றொரு சந்தர்ப்பத்தில், கூரை உத்திரங்கள் அமைக்கப்படுகையில், கட்டுவோருக்கு இரும்பு உத்திரங்கள் குறைவுபட்டன. இரும்பு கிடைப்பது மிக அரிதாக இருந்ததால், அந்த வேலைக்கான இரும்பு 600 கிலோமீட்டர்கள் தூரத்திலிருந்து தருவிக்கப்பட்டது! வேலை நடப்பதை உற்றுநோக்கிக்கொண்டிருந்த ஓர் ஆளை, கட்டிடம் கட்டுவோரில் ஒருவர் அணுகி, அந்த வேலையை முடிக்கத் தங்களுக்கு இரும்பு கிடைக்குமிடம் அவருக்குத் தெரியுமாவெனக் கேட்டார். அந்த மனிதர் இவ்வாறு பதில் சொன்னார்: “நான் இங்கே ஒரு மணிநேரத்திற்கு மேலாக நின்றுகொண்டிருக்கிறேன், இது தற்செயலாக இருந்திருக்காது. நீங்கள் செய்யும் வேலையையும், இந்த ஏற்பாட்டுக்குப் பின்னுள்ள ஆர்வ மனப்பான்மையையும் போற்றாமலிருக்க என்னால் முடிகிறதில்லை. உங்களுக்குத் தேவைப்படும் அதே வகையான இரும்பு என்னிடம் உள்ளது, அதை இனாமாக உங்களுக்கு அளிப்பது எனக்கு மகிழ்ச்சி தரும்.” அது மிக சமயோசிதமான ஏற்பாடாக முடிந்தது.

இந்தக் கட்டிட வேலையை பொறுப்பேற்பதாக எந்தப் பெரிய கட்டிட குழு பொறுப்பேற்று நடத்துகிறதென்று காண்போர் பலர் அதிசயித்தனர். இவர்கள் யெகோவாவின் சாட்சிகள், தங்கள் சேவையைத் தாங்களாக முன்வந்து அளிக்கின்றனர் என்று அவர்களுக்குச் சொல்வதில் கட்டிட வேலைசெய்வோர் நிச்சயமாகவே, மிகுந்த இன்பங்கொண்டனர். காண்போரை முக்கியமாய் மனம் கவர்ந்ததென்ன? ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒன்றுபட்ட ஜனங்கள், பல்வேறு மரபினராக இருக்கிறபோதிலும், சகோதரராக நீங்கள் ஒன்றுசேர்ந்து வேலைசெய்கிறீர்கள்.” தாங்கள் பைபிள் படிக்க வேண்டுமென்று பலர் வந்து கேட்டது இதன் பலனாக இருந்தது. கூட்டங்களிலும் இதன் பலன் காணப்பட்டது. உதாரணமாக, மாங்கே சபை கூட்டத்திற்கு ஆஜராவோரின் சராசரி எண்ணிக்கை, சாட்சிகளின் எண்ணிக்கைக்கு இரட்டிப்பான அளவுக்கும் மேலாக இருந்தது.

அவ்விடத்து சாட்சிகளுக்கு இந்தப் புதிய ராஜ்ய மன்றங்கள் மிகுந்த ஆசீர்வாதமாக மெய்யாகவே நிரூபித்திருக்கின்றன. புல் கூரையைக் கொண்ட அல்லது ஒருசில தகரங்கள் கூரையாக அமைக்கப்பட்ட, செப்பம் செய்யப்படாத இடங்களில், ஒருவர் வீட்டுக்குப் பின்புறத்தில், அல்லது வீட்டின் ஒரு சிறு அறையில் அவர்களில் பெரும்பான்மையர் முன்பு கூடிவந்தனர். மழை பெய்தபோது அவர்கள் அடிக்கடி நனைந்தனர்; இருப்பினும் உண்மையுடன் கூட்டங்களுக்கு ஆஜராகி வந்தார்கள். இவை மாத்திரமே, மொஸாம்பிக்கிலிருந்த சாட்சிகள் அறிந்த ‘ராஜ்ய மன்றங்களாகப்’ பல ஆண்டுகள் இருந்துவந்தன. மஸாம்பா சபையில் ஒரு மூப்பராயிருக்கும் சகோதரர் கீட்டானு கேப்ரியல் இவ்வாறு அறிவித்தார்: “இந்த ஏற்பாட்டை நிறைவேற்றுவதற்கு உதவியளித்த உலகமெங்குமுள்ள எங்கள் சகோதரருக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” இளைஞனான ஓர் சாட்சி இவ்வாறு நினைவுபடுத்திக் கூறினான்: “காரிகூவில் (ஏறக்குறைய 12 ஆண்டுகள் யெகோவாவின் சாட்சிகள் காவலில் வைக்கப்பட்ட ‘மீண்டும் கல்விபுகட்டும் முகாம்களில்’) இருந்தபோது, ‘நாம் உண்மையுடன் நிலைத்திருப்போம், யெகோவா நமக்குப் பலனளிப்பார்,’ என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருப்போம். இந்தப் புதிய ராஜ்ய மன்றம் யெகோவா அளித்திருக்கும் பலன்.” அவர்களுடைய உள்ளப்பூர்வமான நன்றியறிதலையும், யெகோவாவைத் துதிப்பதற்கான அவர்களுடைய தீர்மானத்தையும் அவர்களுடைய வார்த்தைகள் வெளிப்படுத்தின.

கட்டிடம் கட்டும் வேலையில் பங்குகொண்ட இளைஞர் பலர், பயனியர் ஆர்வத்தால் தூண்டப்பட்டு, பின்னால் ஒழுங்கான பயனியர் ஊழியத்தை ஏற்றனர். மங்கா சபையில் ஒழுங்கான பயனியராயிருக்கும் இசபெல், அந்த ராஜ்ய மன்றத்தின் பிரதிஷ்டைக்கு முந்தின நாள், அது மாசற்று சுத்தமாயிருந்ததைப் பார்த்தபோது, “பீரா பட்டணத்தில் இதுவே எனக்கு மிக அதிக அழகிய இடமாக இருக்கிறது. இங்கே இருப்பது எனக்கு மிக அதிக மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது,” என்று சொன்னாள். அவ்விடத்து அதிகாரிகள், சாட்சிகளின் நேர்மையைப் பற்றி அறிந்திருந்ததனால், தனிப்பட்டு பொருட்கள் இறக்குமதி செய்வதை அனுமதிப்பதில் மிகவும் உதவியாக ஒத்துழைத்தனர் என்று, மிஷனரி ஒருவரான அடாவு கோஸ்ட்டா விளக்கினார். பின்பு அவர் இவ்வாறு மேலும் தொடர்ந்து சொன்னார்: “நாங்கள் மிகக் களைப்படைந்தபோதிலும், யெகோவாவுக்கு கனமும் மகிமையும் உண்டாக இந்த எல்லா வேலையின் கனிகளைக் காண்பது மகிழ்ச்சியாயிருந்தது.”

“சரி, உங்கள் சர்ச் எங்குள்ளது?” என்று சிநேகப்பான்மையான பீரா பட்டண வாசிகள் எவராகிலும் இப்போது கேட்கும்போதெல்லாம், இந்த இரண்டு புதிய ராஜ்ய மன்றங்களில் ஒன்றுக்கு சாட்சிகள் அவரை வழிநடத்தி, “அது அவனீடா ஆக்கோர்டு டி லூஸாக்கே, இன்டர்நாஷனல் ரோடில், ஃபோர்த் ஸ்குவாட்ரன் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்ப்புறத்தில் உள்ளது,” என்ற வார்த்தைகளுடன் பதிலளிக்கிறார்கள். பின்பு மேலும் தொடர்ந்து இவ்வாறு ஒரு திருத்தம் செய்கிறார்கள், “எனினும், அது சர்ச் அல்ல. அது ராஜ்ய மன்றம்.”

[பக்கம் 20-ன் வரைப்படம்/படங்கள்]

ஆப்பிரிக்கா

மொஸாம்பிக்

பீரா

மபூடோ

[படத்திற்கான நன்றி]

Map: Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்