பிளவுபட்டிருக்கும் உலகில் கிறிஸ்தவ உபசரிக்கும் பண்பு
“ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம்.”—3 யோவான் 8.
1. மிகவும் விரும்பத்தக்க என்ன வெகுமதிகளை சிருஷ்டிகர் மனிதவர்க்கத்திற்கு அளித்திருக்கிறார்?
“புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.” (பிரசங்கி 8:15) யெகோவா தேவன் தம்முடைய மானிட படைப்பு மகிழ்வோடும் களிப்போடும் இருக்க வேண்டும் என்று விரும்புவது மட்டுமல்லாமல், அவர்கள் அவ்வாறு இருப்பதற்கான வழிவகையையும் ஏற்பாடு செய்கிறார் என்பதை அந்த வார்த்தைகளின் மூலம் பண்டைய எபிரெய பிரசங்கி நமக்கு சொல்கிறார். மனித சரித்திரம் முழுவதும் எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களின் மத்தியில் இருக்கும் ஒரு பொதுவான விருப்பம் என்னவென்றால், சந்தோஷமாயிருந்து நல்ல நேரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே.
2. (அ) யெகோவா மனிதவர்க்கத்துக்காக நோக்கங்கொண்டிருந்தவற்றை அவர்கள் எவ்வாறு துர்ப்பிரயோகம் செய்திருக்கின்றனர்? (ஆ) அதன் விளைவு என்ன?
2 இன்று நாம் இன்பமே சிறந்தது என்று எண்ணும் சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், அதில் ஜனங்கள் இன்பங்களையும் நல்ல நேரங்களையும் நாடுவதிலேயே முழுவதுமாக ஈடுபட்டிருக்கின்றனர். பைபிள் முன்னறிவித்துள்ளபடி, பெரும்பாலான ஜனங்கள் “தற்பிரியராயும், . . . தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” ஆகியிருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-4) இது யெகோவா தேவன் நோக்கங்கொண்டிருந்தவற்றுக்கு முற்றிலும் மாறுபாடானதாய் இருக்கிறது. நல்ல நேரங்களை நாடுவது முக்கிய இலக்காக ஆகும்போது, அல்லது சுய-திருப்தி மாத்திரமே முக்கிய குறிக்கோளாக ஆகும்போது, மெய்யான திருப்தி இருப்பதில்லை, ‘எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாக ஆகிறது.’ (பிரசங்கி 1:14; 2:11) இதன் காரணமாக உலகம் தனிமையான மற்றும் ஏமாற்றமடைந்த ஆட்களால் நிரப்பப்பட்டிருக்கிறது, அது சமுதாயத்தில் உள்ள அநேக பிரச்சினைகளுக்கு வழிநடத்துகிறது. (நீதிமொழிகள் 18:1) ஜனங்கள் ஒருவரையொருவர் சந்தேகிப்பவர்களாகவும் இனம், மரபு, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் பிளவுபட்டவர்களாகவும் ஆகின்றனர்.
3. நாம் எவ்வாறு மெய்யான மகிழ்ச்சியையும் திருப்தியையும் கண்டடையலாம்?
3 மற்றவர்களை யெகோவா கையாளும் விதத்தை—தயவோடும், தாராள குணத்தோடும், உபசரிக்கும் பண்போடும் இருப்பதை—ஜனங்கள் பார்த்து பின்பற்றினால் விஷயங்கள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்! நம்முடைய சொந்த விருப்பங்களைத் திருப்திசெய்வதற்கென்று நாம் முயற்சி செய்வதில் மெய்யான மகிழ்ச்சிக்கான இரகசியம் சார்ந்தில்லை என்பதை அவர் தெளிவாக்கினார். மாறாக, இதுவே அதன் திறவுகோலாக உள்ளது: “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.” (அப்போஸ்தலர் 20:35) மெய்யான மகிழ்ச்சியையும் திருப்தியையும் கண்டடைவதற்கு, நம்மைக் கட்டுப்படுத்தும் தடைகளையும் பிரிவினைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். நம்மோடு சேர்ந்து யெகோவாவை சேவிப்பவர்களை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் பின்வரும் புத்திமதியை ஏற்றுக்கொள்வது இன்றியமையாதது: “ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம்.” (3 யோவான் 8) நம்முடைய சூழ்நிலைகள் அனுமதிக்கும் அளவுக்கு, தகுதியுள்ள நபர்களுக்கு உபசரிக்கும் பண்பை காண்பிப்பது இரண்டு வழிகளில் பிரயோஜனமுள்ளது—அது கொடுப்பவர்களுக்கும் பெற்றுக்கொள்பவர்களுக்கும் நன்மை பயக்குகிறது. அப்படியென்றால், நாம் ‘உபசரிக்கும் பண்போடு ஏற்றுக்கொள்ள’ வேண்டிய தகுதியுள்ள நபர்களில் யார் அடங்கியுள்ளனர்?
‘திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்’
4. யெகோவாவின் ஜனங்கள் சிலருடைய மத்தியிலும்கூட குடும்ப உறவுகளில் என்ன மாற்றம் காணப்படுகிறது?
4 நிலையான குடும்பங்களும் மகிழ்ச்சியான திருமணங்களும் இன்று அபூர்வமாய் இருக்கின்றன. பூமிமுழுவதிலும் மணவிலக்கு வீதம் அதிகரித்துக்கொண்டே போவதும் திருமணமாகாத தாய்மாரின் எண்ணிக்கை அதிகரிப்பதும் பாரம்பரியமான குடும்பத்தை பெருமளவில் மாற்றியிருக்கின்றன. அதன் காரணமாக, சமீப ஆண்டுகளில் யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருக்கும் அநேகர் சிதறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் திருமண துணைவர்களிடமிருந்து மணவிலக்கு செய்யப்பட்டிருக்கின்றனர் அல்லது பிரிக்கப்பட்டிருக்கின்றனர், அல்லது அவர்கள் ஒற்றை-பெற்றோர் குடும்பங்களில் வாழ்கின்றனர். கூடுதலாக, இயேசு முன்னறிவித்தபடி, அவர் கற்பித்த சத்தியம் அநேக குடும்பங்களில் பிரிவினைகளை உண்டாக்கியிருக்கிறது.—மத்தேயு 10:34-37; லூக்கா 12:51-53.
5. பிளவுபட்டிருக்கும் குடும்பங்களில் இருப்போருக்கு எது உற்சாகத்துக்கு ஊற்றுமூலமாயிருக்கும் என்று இயேசு சொன்னார்?
5 புதியவர்கள் சத்தியத்துக்காக உறுதியான நிலைநிற்கை எடுப்பதைக் காண்பது நம்முடைய இதயத்துக்கு அனலூட்டுவதாய் இருக்கிறது, இயேசுவின் உற்சாகமூட்டும் வாக்குறுதியைக்கூறி நாம் அவர்களை அடிக்கடி ஆறுதல்படுத்துகிறோம்: “என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மாற்கு 10:29, 30.
6. நம் மத்தியில் உள்ள ‘திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும்’ நாம் எவ்வாறு ‘சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும், தாய்மார்களாகவும், பிள்ளைகளாகவும்’ ஆகலாம்?
6 ஆனால் இந்தச் ‘சகோதரர்களும் சகோதரிகளும் தாய்களும் பிள்ளைகளும்’ யாவர்? ஒரு ராஜ்ய மன்றத்தில் தங்களை சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் என்று அழைத்துக்கொள்ளும் பெரும்பாலும் நூற்றுக்கும் அல்லது அதற்கும் மேற்பட்ட பெரும் எண்ணிக்கையான ஜனங்களை வெறுமனே காண்பது, ஒரு நபர் அவர்களை தன்னுடைய சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும், தாய்களாகவும் பிள்ளைகளாகவும் தானாகவே உணரும்படி அவரை செய்துவிடுவதில்லை. இந்தக் குறிப்பை சிந்தித்துப் பாருங்கள்: நம்முடைய வணக்கம் யெகோவாவுக்கு ஏற்கத்தகுந்ததாக இருக்க வேண்டுமென்றால், ‘திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரித்து உலகத்தால் கறைபடாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்,’ என்று சீஷனாகிய யாக்கோபு நமக்கு நினைப்பூட்டுகிறார். (யாக்கோபு 1:27) அப்படிப்பட்ட ‘திக்கற்ற பிள்ளைகள் மற்றும் விதவைகள்’ போன்றவர்களிடமாக இரக்கம் காண்பிக்காமல் இருப்பதை அனுமதிக்கும் பொருளாதார செல்வத்தினால் ஏற்படும் பெருமை, சமூக அந்தஸ்து போன்ற உலகப்பிரகாரமான மனநிலைகளை தவிர்க்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அதற்கு மாறாக, அவர்களிடமாக நம் தோழமையையும் உபசரிக்கும் பண்பையும் காண்பிப்பதற்கு நாம் முன்வர வேண்டும்.
7. (அ) ‘திக்கற்ற பிள்ளைகளிடமும் விதவைகளிடமும்’ உபசரிக்கும் பண்புள்ளவர்களாயிருப்பதன் மெய்யான நோக்கம் என்ன? (ஆ) கிறிஸ்தவ உபசரிக்கும் பண்பைக் காண்பிப்பதில் யாரும்கூட பங்குகொள்ளலாம்?
7 ‘திக்கற்ற பிள்ளைகளிடமும் விதவைகளிடமும்’ உபசரிக்கும் பண்பைக் காண்பிப்பது என்பது, அவர்களுடைய பொருளாதார குறைபாட்டை சரியீடு செய்வதை எப்போதும் உட்படுத்துவதில்லை. ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் அல்லது மதசம்பந்தமாக பிளவுபட்டிருக்கும் குடும்பங்கள் அவசியமாகவே பணசம்பந்தமான கடினமான சூழ்நிலையில் இருப்பதில்லை. என்றபோதிலும், ஆரோக்கியமான கூட்டுறவு, குடும்ப சூழ்நிலை, பல்வேறு வயதுள்ள நபர்களின் தோழமை, நல்ல ஆவிக்குரிய காரியங்களை பகிர்ந்துகொள்ளுதல்—இந்த அம்சங்களே வாழ்க்கையில் பெரும் மதிப்புடைய செல்வங்களாக இருக்கின்றன. அன்பு மற்றும் ஐக்கியம் போன்ற மனநிலைகளே முக்கியமே தவிர அந்தச் சமயத்தின்போது செய்யப்படும் விரிவான ஏற்பாடுகள் அல்ல என்பதை நினைவில் வைக்க வேண்டும், சில சமயங்களில் ‘திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும்கூட’ உடன் கிறிஸ்தவர்களுக்கு உபசரிக்கும் பண்பைக் காண்பிப்பதில் பங்குகொள்ளலாம் என்பது எவ்வளவு சிறப்பாய் இருக்கிறது!—1 இராஜாக்கள் 17:8-16-ஐ ஒப்பிடுக.
நம் மத்தியில் அயல்நாட்டவர் இருக்கின்றனரா?
8. யெகோவாவின் சாட்சிகளுடைய பெரும்பாலான சபைகளில் என்ன மாற்றம் காணப்படுகிறது?
8 பெரும் திரளான மக்கள் நாடு விட்டு நாடு செல்லும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். “உலகமுழுவதிலும் பத்து கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தாங்கள் குடிமக்களாயில்லாத தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர், இரண்டு கோடியே முப்பது லட்சம் மக்கள் தங்கள் சொந்த தேசங்களிலேயே தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்,” என்று உவர்ல்ட் பிரஸ் ரிவ்யூ சொல்கிறது. அநேக இடங்களில், விசேஷமாக பெரிய பட்டணங்களில், பெரும்பாலும் ஒரே இனத்தவர் அல்லது தேசத்தைச் சேர்ந்தவர் அடங்கிய யெகோவாவின் ஜனங்களுடைய சபைகள் இப்போது உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்த ஜனங்கள் அடங்கியதாய் இருப்பதே இதன் நேரடியான விளைவாய் இருந்திருக்கிறது. இது ஒருவேளை நீங்கள் இருக்குமிடத்தில் உண்மையாய் இருக்கலாம். நம்முடையதிலிருந்து வித்தியாசமாயிருக்கும் மொழி, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை-பாணியுடைய இந்த “அந்நியர்” மற்றும் “அயல்நாட்டவர்” என்று உலகம் அழைக்கும் இவர்களை, நாம் எவ்வாறு கருத வேண்டும்?
9. கிறிஸ்தவ சபைக்குள் வந்துகொண்டிருக்கும் “அந்நியர்” மற்றும் “அயல்நாட்டவர்” ஆகியோரைக் குறித்து நம்முடைய எண்ணத்தில் என்ன வினைமையான கண்ணி நம்மை சிக்கவைத்து விடக்கூடும்?
9 எளிதாக சொன்னால், அந்நிய தேசத்திலிருந்து அல்லது புறமத தேசம் என்றழைக்கப்படுவதிலிருந்து வந்தோரைக் காட்டிலும் சத்தியத்தை அறிந்துகொள்ளும் சிலாக்கியத்திற்கு நாம் எப்படியோ அதிகமாக தகுதியுள்ளவர்கள் என்று நம்மை உணரவைக்கும் அந்நிய நாட்டவர்பால் காண்பிக்கப்படும் எந்த வெறுப்பான மனநிலைகளையும் நாம் அனுமதிக்கக்கூடாது; அல்லது இப்படி புதிதாக வந்தவர்கள் ராஜ்ய மன்றத்தை அல்லது வேறு சொத்துக்களை உபயோகிப்பதில் வரம்புமீறி நடக்கிறார்கள் என்றோ நாம் உணரக்கூடாது. உண்மையில் அப்படிப்பட்ட எண்ணங்களை மனதில் வைத்திருந்த சில முதல் நூற்றாண்டு யூத கிறிஸ்தவர்களுக்கு எவருமே அதற்குத் தகுதியானவர்கள் அல்ல என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் நினைப்பூட்ட வேண்டியிருந்தது; கடவுளுடைய தகுதியற்ற தயவுதானே எவருமே இரட்சிக்கப்படுவதை சாத்தியமாக்கிற்று. (ரோமர் 3:9-12, 23, 24) ஏதாவது ஒரு விதத்தில் நற்செய்தியைக் கேட்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்திருக்கும் அநேக ஜனங்களிடமாக கடவுளுடைய தகுதியற்ற தயவு இப்போது சென்றெட்டுவதைக் குறித்து நாம் களிகூர வேண்டும். (1 தீமோத்தேயு 2:4) அவர்கள் பேரில் நாம் வைத்திருக்கும் பாசம் மெய்யானது என்பதை நாம் எவ்வாறு காண்பிக்கலாம்?
10. நம் மத்தியில் உள்ள ‘அயல்நாட்டவரிடம்’ நாம் உண்மையிலேயே உபசரிக்கும் பண்புள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதை நாம் எவ்வாறு காண்பிக்கலாம்?
10 நாம் பவுலின் புத்திமதியைப் பின்பற்றலாம்: “ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.” (ரோமர் 15:7) மற்ற தேசங்களிலிருந்து அல்லது பின்னணிகளிலிருந்து வருவோர் பெரும்பாலும் வசதியற்ற சூழலில் இருக்கின்றனர் என்பதை மனதில் வைத்தவர்களாய், நம்மால் முடிந்த அளவு நாம் அவர்களுக்கு தயவும் அக்கறையும் காண்பிக்க வேண்டும். நாம் அவர்களை நம் மத்தியில் வரவேற்று, அவர்களில் ஒவ்வொருவரையும் “சுதேசிபோல எண்ணி,” ‘உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூர வேண்டும்.’ (லேவியராகமம் 19:34) இதைச் செய்வது சுலபமானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் பின்வரும் புத்திமதியை நினைவில் வைத்தால் வெற்றியடையலாம்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”—ரோமர் 12:2.
பரிசுத்தவான்களோடே பகிர்ந்துகொள்ளுங்கள்
11, 12. யெகோவாவின் ஊழியர்கள் சிலருக்கு என்ன விசேஷ கரிசனை அளிக்கப்பட்டது: (அ) பண்டைய இஸ்ரவேலிலும் (ஆ) முதல் நூற்றாண்டிலும்?
11 நம்முடைய கரிசனையையும் உபசரிக்கும் பண்பையும் பெற்றுக்கொள்வதற்கு தகுதியுள்ளோரில், நம்முடைய ஆவிக்குரிய நலனுக்காக கடினமாக உழைக்கும் முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்கள் அடங்குவர். பண்டைய இஸ்ரவேலிலிருந்த ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் யெகோவா விசேஷமான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். (எண்ணாகமம் 18:25-29) முதல் நூற்றாண்டில், விசேஷமான ஸ்தானங்களில் அவர்களைச் சேவித்துக்கொண்டிருந்தோரை கவனித்துக்கொள்ளும்படியும்கூட கிறிஸ்தவர்கள் ஊக்குவிக்கப்பட்டிருந்தனர். பூர்வ கிறிஸ்தவர்கள் மத்தியில் நெருக்கமான பாசப்பிணைப்பு நிலவியிருந்ததைப் பற்றி 3 யோவான் 5-8-ல் உள்ள பதிவு நமக்கு ஒரு கண்ணோட்டத்தை அளிக்கிறது.
12 சபையைச் சந்திப்பதற்காக அனுப்பப்பட்ட சில பயணக் கண்காணிகளிடமாக காயு காண்பித்த தயவையும் உபசரிக்கும் பண்பையும் வயதுசென்ற அப்போஸ்தலனாகிய யோவான் பெரிதும் மதித்தார். இந்தச் சகோதரர்கள் அனைவரும் —இந்த நிருபத்தை எடுத்துச் சென்ற தேமேத்திரியும் உட்பட—அந்நியர்களாக அல்லது காயுவுக்கு முன்பின் தெரியாதவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் உபசரிக்கும் பண்போடு ஏற்றுக்கொள்ளப்பட்டனர், ஏனென்றால் அவர்கள் “அவருடைய [கடவுளுடைய] நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.” யோவான் அதை இந்த விதத்தில் கூறினார்: “ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம்.”—3 யோவான் 1, 7, 8.
13. இன்று நம் மத்தியில் இருக்கும் யார் விசேஷமாக ‘உபசரிக்கும் பண்போடு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு’ தகுதிவாய்ந்தவர்கள்?
13 இன்று, யெகோவாவின் அமைப்புக்குள், முழு சகோதர கூட்டுறவின் சார்பாக கடுமையாய் உழைக்கும் அநேகர் இருக்கின்றனர். சபைகளைக் கட்டியெழுப்புவதில் வாரந்தோறும் தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவழிக்கும் பயணக் கண்காணிகள்; அயல்நாடுகளில் பிரசங்கிப்பதற்காக குடும்பங்களையும் நண்பர்களையும் விட்டு வரும் மிஷனரிகள்; உலகளாவிய பிரசங்க வேலையை ஆதரிப்பதற்காக தங்கள் சேவைகளை மனமுவந்து அளித்து பெத்தேல் வீடுகளில் அல்லது கிளை அலுவலகங்களில் சேவிப்போர்; வெளி ஊழியத்தில் தங்கள் நேரத்தையும் சக்தியையும் பெருமளவில் செலவழிக்கும் பயனியர் சேவையில் இருப்போர். அடிப்படையில், இவர்கள் அனைவரும் கடுமையாய் உழைக்கின்றனர், எந்தவொரு தனிப்பட்ட மகிமைக்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ அல்ல, ஆனால் கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் பேரிலும் யெகோவாவின் பேரிலுமுள்ள அன்பின் காரணமேயாகும். அவர்களுடைய முழு-ஆத்துமாவோடுகூடிய பக்தியின் காரணமாக அவர்களை நாம் பார்த்து பின்பற்றுவதற்கு தகுதியுள்ளோராக இருக்கின்றனர், மேலும் ‘உபசரிக்கும் பண்போடு’ ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் நிச்சயமாகவே தகுதியுள்ளவர்கள்.
14. (அ) நாம் விசுவாசமுள்ள நபர்களுக்கு உபசரிக்கும் பண்பைக் காண்பிக்கும்போது, எவ்வாறு மேம்பட்ட கிறிஸ்தவர்களாக ஆகிறோம்? (ஆ) மரியாள் “நல்ல பங்கைத்” தெரிந்துகொண்டாள் என்று இயேசு ஏன் சொன்னார்?
14 ‘அப்படிப்பட்டவர்களை நாம் உபசரிக்கும் பண்போடு ஏற்றுக்கொள்ளும்போது,’ நாம் ‘சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாகிறோம்’ என்று அப்போஸ்தலனாகிய யோவான் குறிப்பிட்டுக் காண்பித்தார். ஒரு கருத்தில், அதன் விளைவாக நாம் மேம்பட்ட கிறிஸ்தவர்களாக ஆகிறோம். இது ஏனென்றால், உடன் விசுவாசிகளுக்கு நன்மை செய்வது கிறிஸ்தவ கிரியைகளில் அடங்கியுள்ளது. (நீதிமொழிகள் 3:27, 28; 1 யோவான் 3:18) மற்றொரு விதத்திலும்கூட பலன்கள் இருக்கின்றன. மரியாளும் மார்த்தாளும் இயேசுவை தங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டபோது, இயேசுவுக்காக “அநேக காரியங்களை” தயாரிப்பதன் மூலம் நல்ல விருந்தளிப்பவராக இருக்க மார்த்தாள் விரும்பினாள். மரியாள் வித்தியாசமான விதத்தில் உபசரிக்கும் பண்பைக் காண்பித்தாள். அவள் “இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்,” அவள் ‘நல்ல பங்கைத்’ தெரிந்துகொண்டதற்காக இயேசு அவளைப் பாராட்டினார். (லூக்கா 10:38-42) பல வருடங்களாக அனுபவம் பெற்றிருப்போரின் உரையாடல்கள் மற்றும் கலந்தாலோசிப்புகள், அவர்களுடைய தோழமையில் செலவழித்த மாலை நேரத்தின் சிறப்பு அம்சங்களாக பெரும்பாலும் இருக்கின்றன.—ரோமர் 1:11, 12.
விசேஷ நிகழ்ச்சிகளின்போது
15. யெகோவாவின் ஜனங்களுக்கு என்ன விசேஷ நிகழ்ச்சிகள் சந்தோஷமான சமயங்களாக இருக்கலாம்?
15 மெய் கிறிஸ்தவர்கள் பிரபலமான பழக்கங்களையோ அல்லது உலகப்பிரகாரமான விடுமுறை நாட்களையோ பண்டிகைகளையோ கொண்டாடுவதில்லையென்றாலும், ஒருவரோடொருவர் தோழமையை அனுபவிப்பதற்கென்று அவர்கள் ஒன்றுகூடி வரும் நிகழ்ச்சிகள் உண்டு. உதாரணமாக, இயேசு கானா ஊரிலே நடந்த கலியாண விருந்துக்கு சென்றிருந்தார்; அங்கு அவர் தம்முடைய முதல் அற்புதத்தை நடப்பித்துக் காண்பித்ததன் மூலம் அந்த நிகழ்ச்சியின் சந்தோஷத்துக்கு பங்களித்தார். (யோவான் 2:1-11) அதேபோல் இன்று, யெகோவாவின் ஜனங்கள் அதைப் போன்ற விசேஷமான நிகழ்ச்சிகளில் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாக அனுபவிக்கின்றனர், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான கொண்டாட்டமும் கேளிக்கையும் அதிகத்தைச் செய்கின்றன. ஆனால் எது பொருத்தமானது?
16. விசேஷ நிகழ்ச்சிகளின்போதும்கூட சரியான நடத்தை இருக்க வேண்டும் என்பதற்கான என்ன வழிகாட்டும் குறிப்புகள் நமக்கு இருக்கின்றன?
16 கிறிஸ்தவர்களுக்குப் பொருத்தமான நடத்தை எது என்பதை நாம் பைபிளைப் படிப்பதிலிருந்து கற்றறிகிறோம், அதை நாம் எல்லா சமயங்களிலும் பின்பற்றுகிறோம். (ரோமர் 13:12-14; கலாத்தியர் 5:19-21; எபேசியர் 5:3-5) தோழமை கூட்டங்கள், திருமணம் சம்பந்தப்பட்டவையாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தக் காரணத்திற்காக இருந்தாலும் சரி, அவை நம்முடைய கிறிஸ்தவ தராதரங்களைப் புறக்கணித்து விடுவதற்கோ அல்லது நாம் சாதாரணமாக செய்யாத ஏதோவொன்றை செய்வதற்கோ நமக்கு சுயாதீனம் அளிப்பதில்லை; நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தேசத்தின் எல்லா பழக்கவழக்கங்களையும் பின்பற்றுவதற்கும்கூட நாம் கடமைப்பட்டில்லை. அப்படிப்பட்டவற்றில் பெரும்பாலானவை பொய்மத பழக்கவழக்கங்களின் பேரிலோ அல்லது மூடநம்பிக்கைகளின் பேரிலோ சார்ந்திருக்கின்றன, மற்றவை தெளிவாகவே கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையை உட்படுத்துகின்றன.—1 பேதுரு 4:3, 4.
17. (அ) கானா ஊரில் நடந்த கலியாண விருந்து நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு சரியாக மேற்பார்வையிடப்பட்டிருந்தது என்பதை என்ன காரணக்கூறுகள் காண்பிக்கின்றன? (ஆ) இயேசு அந்த நிகழ்ச்சியை அங்கீகரித்தார் என்பதை எது குறிப்பிட்டுக் காட்டுகிறது?
17 யோவான் 2:1-11-ஐ வாசிக்கையில், அந்த நிகழ்ச்சி விரிவானதாக இருந்தது என்பதையும் அங்கு விருந்தினர் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர் என்பதையும் புரிந்துகொள்வது கடினமாயில்லை. இருப்பினும், இயேசுவும் அவருடைய சீஷர்களும் ‘அழைக்கப்பட்ட’ விருந்தாளிகளாக இருந்தனர்; அவர்களில் சிலராவது விருந்தளித்தவருக்கு உறவினராய் ஒருவேளை இருந்தபோதிலும் அவர்கள் அழைக்காமலேயே வந்துவிடவில்லை. அங்கே “வேலைக்காரர்” இருந்தனர் என்பதையும் பரிமாறப்பட வேண்டிய அல்லது செய்யப்படவேண்டியவற்றுக்கு வழிநடத்துதல் அளிக்க “பந்திவிசாரிப்புக்காரன்” ஒருவன் இருந்தான் என்பதையும் நாம் கவனிக்கிறோம். அந்த நிகழ்ச்சி நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, சரியாக மேற்பார்வையிடப்பட்டிருந்தது என்பதை இவையனைத்தும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. கலியாண விருந்திலே இயேசு தாம் செய்தவற்றின் மூலம் தம் “மகிமையை வெளிப்படுத்தினார்,” என்று கூறி அப்பதிவு முடிகிறது. அது கட்டுப்படுத்தமுடியாமல் அமைதியைக் கெடுத்து அமளியுண்டாக்கும் விருந்தாக இருந்திருந்ததென்றால் அதைச் செய்வதற்கு அவர் அந்த நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்திருப்பாரா? சந்தேகத்துக்கு இடமின்றி, அவர் அதைச் செய்திருக்க மாட்டார்.
18. எந்தச் சமூக நிகழ்ச்சியைக் குறித்த விஷயத்திலும் எதை நாம் கவலையுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
18 அப்படியென்றால், நாம் விருந்தளிக்கும் எந்தவொரு விசேஷ நிகழ்ச்சியையும் பற்றியென்ன? உபசரிக்கும் பண்போடு மற்றவர்களை வரவேற்பதன் நோக்கம், நாம் அனைவரும் ‘சத்தியத்தில் உடன்வேலையாட்களாகும்படிக்கே’ என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இவ்வாறு, ஒரு நிகழ்ச்சியை “சாட்சிகள்” கூட்டம் என்று மட்டும் அடையாளப்படுத்திக் காண்பிப்பது போதுமானதல்ல. நாம் யார், நாம் நம்புவது என்ன என்பதற்கு அது உண்மையில் சாட்சி அளிக்கிறதா என்ற கேள்வி ஒருவேளை கேட்கப்படலாம். ‘மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை’ போன்றவற்றில் மனம்போன போக்கில் ஈடுபடுவதன் மூலம் உலகத்தின் வழிகளை எவ்வளவு நுணுக்கமாக பின்பற்றலாம் என்பதைக் காண்பதற்கான சந்தர்ப்பங்களாக அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நாம் ஒருபோதும் கருதக்கூடாது. (1 யோவான் 2:15, 16) மாறாக, இந்த நிகழ்ச்சிகள் யெகோவாவின் சாட்சிகளாக நாம் வகிக்கும் பங்கை சரியான விதத்தில் பிரதிபலிக்க வேண்டும், மேலும் நம்முடைய நடத்தை யெகோவாவுக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டுவருவதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்க வேண்டும்.—மத்தேயு 5:16; 1 கொரிந்தியர் 10:31-33.
‘முறுமுறுப்பில்லாமல் உபசரிப்பவர்களாயிருங்கள்’
19. நாம் ஏன் ‘ஒருவரையொருவர் முறுமுறுப்பில்லாமல் உபசரிப்பது’ அவசியம்?
19 உலக நிலைமைகள் தொடர்ந்து சீரழிந்துகொண்டே போவதாலும் ஜனங்கள் எப்போதும் இருந்ததைக் காட்டிலும் அதிகமாக பிரிவுற்றிருப்பதாலும், மெய்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் நெருக்கமான பிணைப்பை பலப்படுத்துவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்வது அவசியம். (கொலோசெயர் 3:14) இதன் காரணமாக நாம் ‘ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாய்’ இருக்க வேண்டும் என்று பேதுரு நம்மை ஊக்குவித்தார். பின்னர், நடைமுறையான கருத்தில் அவர் கூடுதலாக சொன்னார்: “முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.” (1 பேதுரு 4:7-9) நம்முடைய சகோதரர்களிடமாக உபசரிக்கும் பண்பைக் காண்பிப்பதற்கு நாம் முதற்படியெடுக்க விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறோமா, தயவுள்ளவர்களாகவும் உதவிசெய்பவர்களாகவும் இருப்பதில் நாம் ஊக்கமுள்ளோராய் இருக்கிறோமா? அல்லது அப்படிப்பட்ட சந்தர்ப்பம் எழும்புகையில் நாம் முறுமுறுக்கிறோமா? நாம் அவ்வாறு செய்தால், நாம் மகிழ்ச்சியை பெறாமல் போய்விடுவோம், நன்மையானதைச் செய்வதனால் விளையும் சந்தோஷம் என்ற வெகுமதியை இழந்துவிடுவோம்.—நீதிமொழிகள் 3:27; அப்போஸ்தலர் 20:35.
20. இன்றைய பிளவுபட்டிருக்கும் உலகில் நாம் உபசரிக்கும் பண்பை நடைமுறையில் காண்பித்தோமென்றால் என்ன ஆசீர்வாதங்கள் நமக்காக காத்திருக்கின்றன?
20 நம் உடன் கிறிஸ்தவர்களோடு நெருக்கமாக வேலைசெய்து, ஒருவருக்கொருவர் தயவோடும் உபசரிக்கும் பண்போடும் இருப்பது அளவற்ற ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். (மத்தேயு 10:40-42) ‘அவர்கள்மேல் கூடாரம் விரித்து நிழலிடுவேன். அவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை’ என்று யெகோவா அப்படிப்பட்டவர்களுக்கு வாக்களித்தார். யெகோவாவின் கூடாரத்தில் இருப்பது என்பது, அவருடைய பாதுகாப்பையும் உபசரிக்கும் பண்பையும் அனுபவிப்பதே. (வெளிப்படுத்துதல் 7:15, 16; ஏசாயா 25:6) ஆம், யெகோவாவின் உபசரிக்கும் பண்பை என்றென்றுமாக அனுபவிக்கும் எதிர்பார்ப்பு சமீபத்தில் உள்ளது.—சங்கீதம் 27:4; 61:3, 4.
உங்களால் விளக்க முடியுமா?
◻ மெய்யான மகிழ்ச்சியையும் திருப்தியையும் நாம் கண்டடைய வேண்டுமென்றால் நாம் எதை கவனியாமல் விடக்கூடாது?
◻ “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும்” யாவர், நாம் அவர்களை எவ்வாறு “கவனித்துக்கொள்ள” வேண்டும்?
◻ நம் மத்தியிலுள்ள “அயல்நாட்டவரையும்” “அந்நியரையும்” நாம் எவ்வாறு கருத வேண்டும்?
◻ இன்று யார் குறிப்பாக கரிசனைக் காண்பிக்கப்படுவதற்கு தகுதியுள்ளவர்கள்?
◻ உபசரிக்கும் பண்பின் மெய்யான மனநிலையை விசேஷ நிகழ்ச்சிகள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சிகளில் நாம் அயல்நாட்டவர், திக்கற்ற பிள்ளைகள், முழுநேர சேவையில் இருப்போர், மற்ற விருந்தினர் ஆகியோரிடம் உபசரிக்கும் பண்பைக் காண்பிக்கலாம்