உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 10/1 பக். 9-13
  • “அந்நியரை உபசரிக்க நாடுங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “அந்நியரை உபசரிக்க நாடுங்கள்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அந்நியர் மீது பிரியம்
  • யெகோவா, பரிபூரணமான உபசரிப்பாளர்
  • தேவதூதர்களுக்கு விருந்தளித்தவர்
  • உபசரிக்கும் பண்புள்ள ஜனங்கள்
  • நீங்கள் “அந்நியரை உபசரிக்க நாடுகிறீர்களா?”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • சந்தோஷமாக உபசரிப்பது—ரொம்ப முக்கியம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • தாராளமாக உபசரிப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • பிறரை உபசரிப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 10/1 பக். 9-13

“அந்நியரை உபசரிக்க நாடுங்கள்”

“பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.”—ரோமர் 12:13.

1. அடிப்படையான மனித தேவை என்ன, அது எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது?

பழக்கமில்லாத சுற்றுவட்டாரத்திலுள்ள நடமாட்டமில்லாத தெரு ஒன்றில் பொழுதுசென்ற பிறகு இரவில் நடந்துசெல்வது இக்காலத்தில் வேதனை தரும் அனுபவமாக இருக்கலாம். ஆனால் ஒரு ஜனக்கூட்டத்தில் இருந்துகொண்டு எவரையும் அறியாமலோ அல்லது ஏற்றுக்கொள்ளப்படாமலோ இருப்பது அதுபோலவே மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாய் இருக்கலாம். உண்மையில், கவனிக்கப்படவும், விரும்பப்படவும், நேசிக்கப்படுவதற்குமான தேவை மனித இயல்பின் மிகவும் அத்தியாவசியமான பாகமாக இருக்கிறது. ஒரு அந்நியராகவோ அல்லது வெளியாளாகவோ நடத்தப்பட எவருமே விரும்புவதில்லை.

2. தோழமைக்கான நம்முடைய தேவையை யெகோவா எவ்வாறு அளித்திருக்கிறார்?

2 எல்லா காரியங்களையும் படைத்தவரும் உருவாக்கியவருமான யெகோவா தேவன் தோழமை கொள்வதற்கான மனிதருடைய தேவையை நன்கு அறிந்திருக்கிறார். தம்முடைய மனித சிருஷ்டிப்பை வடிவமைத்தவராகிய அவர், “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல,” என்பதை ஆரம்பத்திலிருந்தே அறிந்து அதைப் பற்றி ஏதோவொன்றை செய்தார். (ஆதியாகமம் 2:18, 21, 22) யெகோவாவும் அவருடைய ஊழியர்களும் மனிதர்களிடமாக வெளிக்காட்டியிருக்கும் இரக்கமான செயல்களின் உதாரணங்களால் பைபிள் பதிவு நிரம்பியிருக்கிறது. மற்றவர்களுடைய மகிழ்ச்சிக்காகவும் களிப்புக்காகவும் நம்முடைய சொந்த திருப்திக்காகவும் எவ்வாறு ‘உபசரிக்கும் பண்பை காண்பிப்பது’ என்பதைக் கற்றுக்கொள்ள இது நமக்கு உதவுகிறது.—ரோமர் 12:13.

அந்நியர் மீது பிரியம்

3. உபசரிக்கும் பண்பின் அடிப்படையான அர்த்தத்தை விளக்குங்கள்.

3 பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “உபசரிப்பு” என்ற சொல், ஃபிலாக்ஸெனியா என்ற கிரேக்க சொல்லிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, அது “அன்பு” மற்றும் “அந்நியர்” என்ற அர்த்தத்தை உடைய இரண்டு மூலச்சொற்களால் ஆனது. இதனால், உபசரிக்கும் பண்பு என்பது “அந்நியர் பேரில் அன்பு” என்று முக்கியமாக பொருள்படுகிறது. இருப்பினும், இது வெறுமனே ஒரு சம்பிரதாயமோ அல்லது நற்பண்புக்குரிய விஷயமோ அல்ல. இது ஒருவருடைய உணர்ச்சிகளையும் பாசங்களையும் உட்படுத்துகிறது. ஜேம்ஸ் ஸ்ட்ராங்கின் எக்ஸாஸ்டிவ் கன்கார்டன்ஸ் ஆஃப் தி பைபிள் சொல்லுகிறபடி, ஃபீலியோ என்ற வினைச்சொல், “நண்பராயிருத்தல் (மிகவும் பிரியமாயிருத்தல் [ஒரு நபர் அல்லது பொருளின்மீது]) என்று பொருள்படுகிறது; அதாவது, பாசத்தை உடையவராயிருத்தல் (உணர்ச்சிக்கனிவு அல்லது உணர்ச்சிகள் சம்பந்தமாக தனிப்பட்ட பாசப்பிணைப்பை குறித்துக்காட்டுகிறது).” எனவே, உபசரிக்கும் பண்பு என்பது, ஒருவேளை பொறுப்புணர்ச்சி அல்லது கடமையின் அடிப்படையில் சார்ந்துள்ள நியமங்களின் பேரில் சார்ந்த அன்புக்கும் அப்பால் செல்கிறது. அது பொதுவாக மெய்யான பிரியம், பாசம் மற்றும் சிநேகம் ஆகியவற்றின் வெளிக்காட்டாக உள்ளது.

4. உபசரிக்கும் பண்பு யாரிடமாக காண்பிக்கப்பட வேண்டும்?

4 இந்தப் பாசத்தையும் பிரியத்தையும் பெற்றுக்கொள்பவரே “அந்நியர்” (கிரேக்க மொழியில், ஸெனாஸ்). இது யாராயிருக்கக்கூடும்? மறுபடியும், ஸ்ட்ராங்கின் கன்கார்டன்ஸ், ஸெனாஸ் என்ற சொல்லை ‘அந்நியமான (சொல்லர்த்தமாக அயலார் அல்லது அடையாளப்பூர்வமாக புதுமை); குறிப்பாகச் சொன்னால் ஒரு விருந்தாளி அல்லது (நேர் மாறாக) அந்நியர்,’ என்று வரையறுக்கிறது. ஆகையால் பைபிளில் விளக்கப்பட்டிருக்கும் உபசரிக்கும் பண்பு, நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரிடமாக காட்டப்படும் தயவை பிரதிபலிக்கலாம், அல்லது அது முழுக்க முழுக்க அந்நியராயிருக்கும் ஒருவரிடமாகவும்கூட காட்டப்படலாம். இயேசு விளக்கினார்: “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா?” (மத்தேயு 5:46, 47) தப்பெண்ணமும் பயமும் சுமத்தும் பிரிவினையையும் வேறுபாட்டையும் கடந்து மெய்யான உபசரிக்கும் பண்பு செல்கிறது.

யெகோவா, பரிபூரணமான உபசரிப்பாளர்

5, 6. (அ) ‘பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறார்,’ என்று இயேசு சொன்னபோது அவர் எதை மனதில் வைத்திருந்தார்? (ஆ) யெகோவாவின் தாராள குணம் எவ்வாறு காணப்படுகிறது?

5 மேலே மேற்கோள் காட்டியிருக்கிறபடி, மனிதர்கள் ஒருவருக்கொருவர் வெளிக்காட்டும் அன்பின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியபின், இயேசு இந்தக் குறிப்பைச் சேர்த்து கூறினார்: “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.” (மத்தேயு 5:48) நிச்சயமாகவே, யெகோவா ஒவ்வொரு அம்சத்திலும் பரிபூரணராயிருக்கிறார். (உபாகமம் 32:4) என்றபோதிலும், இயேசு, யெகோவாவின் பரிபூரணத் தன்மையின் ஒரு குறிப்பான அம்சத்தை சிறப்பித்துக் காண்பித்துக்கொண்டிருந்தார், அவர் முன்பு சொன்னது: “அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:45) தயவு காண்பிக்கும் விஷயத்தைக் குறித்ததில், யெகோவாவிடம் பட்சபாதமே இல்லை.

6 சிருஷ்டிகராக இருப்பதனால், யெகோவாவே எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர். “சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்,” என்று யெகோவா சொல்கிறார். (சங்கீதம் 50:10, 11) அவ்வாறு இருந்தாலும், அவர் சுயநலமாக எதையும் பதுக்கி வைத்துக்கொள்வதில்லை. அவருடைய தாராள குணத்தின் காரணமாக, அவர் தம்முடைய எல்லா சிருஷ்டிப்புகளுக்கும் அளிக்கிறார். யெகோவாவைப் பற்றி சங்கீதக்காரன் சொன்னார்: “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.”—சங்கீதம் 145:16.

7. அந்நியரையும் தேவையில் இருப்போரையும் யெகோவா நடத்தும் விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

7 யெகோவா ஜனங்களுக்குத் தேவையானவற்றை அளிக்கிறார்—அவருக்கு அந்நியராயிருக்கும், அவரை அறியாத ஜனங்களுக்கும்கூட கொடுக்கிறார். யெகோவா “நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை,” என்று பவுலும் பர்னபாவும் லீஸ்திரா பட்டணத்திலிருந்த விக்கிரக வணக்கத்தாருக்கு நினைப்பூட்டினர். (அப்போஸ்தலர் 14:17) விசேஷமாக தேவையில் இருப்போரிடமாக யெகோவா தயவாகவும் தாராள குணமுடையவராகவும் இருக்கிறார். (உபாகமம் 10:17, 18) தயவையும் தாராள குணத்தையும் காண்பிப்பதில்—மற்றவர்களிடம் உபசரிக்கும் பண்பைக் காண்பிப்பதில்—நாம் யெகோவாவிடமிருந்து அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம்.

8. நம்முடைய ஆவிக்குரியத் தேவைகளை கவனித்துக்கொள்வதில் யெகோவா எவ்வாறு தம் தாராள குணத்தை காண்பித்திருக்கிறார்?

8 தம்முடைய சிருஷ்டிப்புகளுக்குத் தேவையான பொருளாதார காரியங்களை ஏராளமாக அளிப்பது மட்டுமன்றி, யெகோவா அவர்களுடைய ஆவிக்குரியத் தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார். நாம் ஆவிக்குரியவிதத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை நம்மில் எவரும் உணருவதற்கு முன்பே, நம்முடைய ஆவிக்குரிய நலனுக்காக யெகோவா மிகவும் பெருந்தன்மையுள்ள விதத்தில் செயல்பட்டார். நாம் ரோமர் 5:8, 10-ல் வாசிக்கிறோம்: ‘நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். . . . நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறோம்.’ பாவமுள்ள மானிடர்கள் நம்முடைய பரலோக தகப்பனோடு ஒரு சந்தோஷமான குடும்ப உறவுக்குள் வருவதை அந்த ஏற்பாடு சாத்தியமாக்குகிறது. (ரோமர் 8:20, 21) நாம் பாவமுள்ள அபூரணமான நிலையில் பகைமை எண்ணம் கொண்டிருந்தபோதிலும்கூட, நம்முடைய வாழ்க்கையை வெற்றிகரமானதாக ஆக்குவதற்கு சரியான அறிவுரைகளையும் வழிநடத்துதலையும் பெற்றுக்கொள்ளும்படியும்கூட யெகோவா நிச்சயித்துக்கொண்டார்.—சங்கீதம் 119:105; 2 தீமோத்தேயு 3:16.

9, 10. (அ) யெகோவா பரிபூரண உபசரிப்பாளர் என்று நாம் ஏன் சொல்லலாம்? (ஆ) இந்த விஷயத்தில் மெய் வணக்கத்தார் எவ்வாறு யெகோவாவை பார்த்துப் பின்பற்ற வேண்டும்?

9 இதன் காரணமாக, யெகோவா உண்மையில் அநேக வழிகளில் பரிபூரண உபசரிப்பாளர் என்று நாம் சொல்லலாம். அவர் தேவையில் இருப்போரை, தாழ்நிலையிலுள்ளோரை, எளிமையானோரை கவனியாமல் விடுவதில்லை. அவர் அந்நியர் மற்றும் அவருடைய விரோதிகள் பேரிலும்கூட மெய்யான அக்கறையும் கவனமும் காண்பிக்கிறார், அதற்காக அவர் எந்தப் பலனையும் எதிர்பார்ப்பதில்லை. இவையனைத்திலும், அவர் பரிபூரண உபசரிப்பாளராக இருப்பதில் எவரைக்காட்டிலும் மிகப்பெரிய உதாரணமாய் இருக்கிறார் அல்லவா?

10 அப்படிப்பட்ட அன்புள்ள தயவும் தாராள குணமுமுள்ள கடவுளாக யெகோவா இருக்கிறபடியால், தம்முடைய வணக்கத்தார் அவரைப் பார்த்து பின்பற்றும்படி அவர் விரும்புகிறார். பைபிள் முழுவதுமாக, இந்தத் தயவான பண்பின் தலைசிறந்த முன்மாதிரிகளை நாம் காண்கிறோம். “பண்டைய இஸ்ரவேலில் உபசரிக்கும் பண்பு வெறும் நன்னடத்தைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல . . . ஆனால் ஒழுக்கமுறை சம்பந்தமான குறிப்பிடத்தக்க பழக்கமாயிருந்தது . . . களைப்புற்ற பயணியை வரவேற்பது, தங்கள் மத்தியில் அந்நியரை ஏற்றுக்கொள்வது போன்ற பைபிள்கால பழக்கவழக்கங்களிலிருந்தே உபசரிக்கும் பண்பும் அதன் சம்பந்தப்பட்ட அம்சங்களும் யூத பாரம்பரியத்தில் உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு நற்குணமாக உருவாகியது,” என்று என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா குறிப்பிடுகிறது. ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேசத்தவரின் அல்லது இனப்பிரிவினரின் தனிச்சிறப்புடைய பண்பாக மட்டுமல்லாமல், உபசரிக்கும் பண்பு யெகோவாவின் எல்லா மெய் வணக்கத்தாருடைய தனிச்சிறப்புப் பண்பாய் இருக்க வேண்டும்.

தேவதூதர்களுக்கு விருந்தளித்தவர்

11. உபசரிக்கும் பண்பு எதிர்பாராத ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்தது என்பதை என்ன தலைசிறந்த முன்மாதிரி காண்பிக்கிறது? (ஆதியாகமம் 19:1-3; நியாயாதிபதிகள் 13:11-16-ஐயும் பார்க்கவும்.)

11 எப்ரோனுக்கு அருகே மம்ரேயின் பெரிய மரங்களுக்கு மத்தியில் ஆபிரகாமும் சாராளும் கூடாரமடித்துத் தங்கியிருந்தபோது, அவர்கள் வெளிக்காட்டிய உபசரிக்கும் பண்பு நன்கு அறியப்பட்டிருக்கும் பைபிள் பதிவுகளில் ஒன்றாகும். (ஆதியாகமம் 18:1-10; 23:19) அப்போஸ்தலனாகிய பவுல் இந்த அறிவுரையை கொடுத்தபோது இந்தச் சம்பவத்தை அவர் மனதில் வைத்திருந்தார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை: “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.” (எபிரெயர் 13:2) உபசரிக்கும் பண்பு என்பது வெறுமனே ஒரு பழக்கமோ அல்லது வளர்ப்பு முறைக்குரிய விஷயமோ அல்ல என்பதைக் காண இந்தப் பதிவை படிப்பது நமக்கு உதவிசெய்யும். மாறாக, இது மகத்தான ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் தெய்வீக பண்பு.

12. அந்நியர் பேரில் அன்பை ஆபிரகாம் எவ்வாறு செயலில் வெளிக்காட்டினார்?

12 வெறுமனே அவ்வழியாய் கடந்துசென்ற மூன்று அந்நியர்கள் என்று சொல்லுமளவுக்கு, வருகை தந்தவர்கள் ஆபிரகாமுக்கு தெரியாதவர்களாக இருந்தார்களென்றும், எதிர்பாராமல் வந்தார்களென்றும் ஆதியாகமம் 18:1, 2 குறிப்பிடுகிறது. சில கருத்துரையாளர்களின்படி, கிழக்கத்திய நாட்டவர் மத்தியிலிருந்த பழக்கம், அந்நிய தேசத்தில் உள்ள பயணி அங்கிருக்கும் எவரையும் அறியாமலிருந்தாலும் உபசரிக்கும் பண்பை எதிர்பார்க்கும் உரிமையைப் பெற்றிருந்தார். ஆனால் அந்நியர் தங்கள் உரிமையைப் பயன்படுத்திக்கொள்ளும்வரை ஆபிரகாம் காத்திருக்கவில்லை; அவரே முன்வந்து செயல்பட ஆரம்பித்தார். இந்த அந்நியர் அவரிடமிருந்து சிறிது தொலைவிலிருந்தபோதே அவர்களைச் சந்திப்பதற்காக அவர் ‘ஓடினார்’—ஆபிரகாம் இவையனைத்தையும் 99 வயதாயிருந்தபோது “பகலின் உஷ்ணவேளையில்” செய்தார்! ஆபிரகாமை நாம் பார்த்து பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரியாக பவுல் ஏன் குறிப்பிட்டுப் பேசினார் என்பதை இது நமக்கு காண்பிக்கிறதல்லவா? அதுவே உபசரிக்கும் பண்பின் சாராம்சமாக இருக்கிறது, அந்நியர் பேரில் பாசம் அல்லது அன்பு, அவர்களுடைய தேவைகளின் பேரில் அக்கறை. அது ஒரு உடன்பாடான பண்பு.

13. ஆபிரகாம் ஏன் வருகை தந்தவர்களுக்கு ‘தரை மட்டும் குனிந்தார்’?

13 அந்நியரைச் சந்தித்தப்பின்பு, ஆபிரகாம் ‘தரைமட்டும் குனிந்தார்’ என்றும்கூட பதிவு நமக்கு சொல்கிறது. முற்றிலும் அந்நியராயிருப்போருக்கு தரைமட்டும் குனிவதா? ஆபிரகாம் குனிந்த அச்செயலானது, மதிப்புக்குரிய விருந்தாளி அல்லது உயர்வான ஸ்தானத்திலிருந்த ஒருவரை வரவேற்கும் முறையாக இருந்தது, அதை கடவுளுக்கென்று மட்டுமே ஒதுக்கிவைக்கப்படும் வணக்கத்துக்குரிய செயலோடு குழப்பிவிடக்கூடாது. (ஒப்பிடுக: அப்போஸ்தலர் 10:25, 26; வெளிப்படுத்துதல் 19:10.) குனிவதன் மூலம், தலையை வெறுமனே சாய்க்காமல், “தரை மட்டும்” குனிவதன் மூலம், ஆபிரகாம் இந்த அந்நியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாயிருக்கும் கனத்தைச் செலுத்தினார். அவர் ஒரு பெரிய, செல்வச்செழிப்பான கோத்திரப்பிதா குடும்பத்துக்கு தலைவராக இருந்தார், அவ்வாறு இருந்தபோதிலும் அவர் இந்த அந்நியரை தன்னைக்காட்டிலும் மிகுதியான கனத்துக்கு பாத்திரராக கருதினார். வழக்கமாக அந்நியர் பேரிலிருக்கும் சந்தேகத்தின் காரணாக, காத்திருந்து-பார்ப்போம் என்ற மனநிலையிலிருந்து இது எவ்வளவு வித்தியாசம்! ஆபிரகாம் பின்வரும் கூற்றின் அர்த்தத்தை உண்மையிலேயே செயல் மூலம் வெளிப்படுத்திக் காட்டினார்: “கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.”—ரோமர் 12:10.

14. ஆபிரகாம் அந்நியருக்கு உபசரிக்கும் பண்பைக் காண்பித்ததில் என்ன முயற்சியும் தியாகமும் உட்பட்டிருந்தன?

14 ஆபிரகாமின் உணர்ச்சிகள் உண்மையானவை என்பதை எஞ்சியிருக்கும் விவரப்பதிவு காண்பிக்கிறது. உணவுதானே மிகவும் சிறப்பாக இருந்தது. நிறைய மிருகங்களையுடைய பெரிய வீட்டிலும்கூட, ‘ஒரு நல்ல இளங்கன்று’ சாதாரணமாக ஒவ்வொரு நாள் சாப்பாட்டிலும் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. அந்தப் பிராந்தியத்தில் நிலவியிருக்கும் பழக்கங்களைக் குறித்து ஜான் கிட்டுவின் டெய்லி பைபிள் இல்லஸ்ட்ரேஷன்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது: “சில பண்டிகைகளின்போது அல்லது அந்நியர் ஒருவர் வரும்போது மட்டுமே சிறப்பான உணவு தயாரிக்கப்படுமே தவிர, வேறு சமயங்களில் அல்ல; ஏராளமான பறவைகளும் மிருகங்களும் வைத்திருந்தவர்களும்கூட அப்படிப்பட்ட சமயங்களின்போது மட்டுமே மிருக மாம்சத்தை புசித்தனர்.” விரைவில் அழியக்கூடிய எந்த உணவுப்பொருளையும் சேமித்து வைப்பதை உஷ்ணமான சீதோஷ்ணநிலை அனுமதிக்கவில்லை, ஆகையால் அப்படிப்பட்ட உணவைத் தயாரிப்பதற்கு அந்தச் சமயத்தில்தானே எல்லா காரியங்களும் செய்யப்பட வேண்டும். இந்தச் சுருக்கமான விவரப்பதிவில், “சீக்கிரமாய்” அல்லது “சீக்கிரத்தில்” என்ற சொல் மூன்று தடவை குறிப்பிடப்பட்டுள்ளது ஆச்சரியமாயில்லை, ஆபிரகாம் சாப்பாட்டை தயாரித்து வைப்பதற்கு சொல்லர்த்தமாகவே ‘ஓடினார்’!—ஆதியாகமம் 18:6-8.

15. ஆபிரகாம் காண்பித்தபடி, உபசரிக்கும் பண்பைக் காண்பிப்பதில் பொருளாதார ஏற்பாடுகளைக் குறித்து சரியான நோக்குநிலை என்ன?

15 இருப்பினும், யாராவது ஒருவரை வெறுமனே கவர வேண்டும் என்ற நோக்கத்திற்காக பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்படுவதில்லை. ஆபிரகாமும் சாராளும் சாப்பாடு தயாரித்து அளிப்பதற்கென்று அத்தனை முயற்சி எடுத்தபோதிலும், ஆபிரகாம் அதைக் குறித்து ஆரம்பத்தில் எவ்வாறு குறிப்பிட்டார் என்பதைக் கவனியுங்கள்: “கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள்.” (ஆதியாகமம் 18:4, 5) அந்த “கொஞ்சம் அப்பம்,” கொழுத்த இளங்கன்றும் அதோடுகூட மெல்லிய மாவு, வெண்ணெய், பால் ஆகியவற்றால் செய்யப்பட்ட வட்ட அப்பங்களாக இருந்தன—ஒரு ராஜாவுக்குப் பொருத்தமான விருந்து. குறிப்பு என்ன? உபசரிக்கும் பண்பை காண்பிக்கும்போது, முக்கியமான காரியம் என்னவென்றால் அல்லது எதை அழுத்திக் காண்பிக்க வேண்டுமென்றால், உணவும் பானமும் எவ்வளவு சிறப்பாக இருக்க வேண்டும் அல்லது எவ்வளவு பெரிதாக பொழுதுபோக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற காரியங்கள் அல்ல. ஒருவர் விலையுயர்ந்த பொருட்களை வாங்கமுடியுமா என்பதன் பேரில் உபசரிக்கும் பண்பு சார்ந்தில்லை. மாறாக, மற்றவர்களுடைய நலனில் மெய்யான அக்கறை காண்பிப்பதன் பேரிலும் ஒருவரால் முடிந்தளவு மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கான விருப்பத்தைக் கொண்டிருப்பதன் பேரிலும் அது சார்ந்துள்ளது. “பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது,” என்று ஒரு பைபிள் நீதிமொழி சொல்கிறது, அதில்தானே மெய்யான உபசரிக்கும் பண்புக்கான திறவுகோல் உள்ளது.—நீதிமொழிகள் 15:17.

16. ஆபிரகாம் வருகை தந்தவர்களுக்காக செய்த விஷயத்தில், ஆவிக்குரிய காரியங்களுக்காக அவர் எவ்வாறு போற்றுதல் காண்பித்தார்?

16 இருந்தபோதிலும், அந்த முழு சம்பவத்துக்கும் ஒரு ஆவிக்குரிய தனிச்சிறப்பு அம்சமும்கூட இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். வருகை தந்தவர்கள் யெகோவாவிடமிருந்து வந்த செய்தியாளர்கள் என்பதை ஆபிரகாம் எப்படியோ கண்டறிந்தார். பின்வரும் வார்த்தைகளை சொல்லி அவர் அவர்களிடம் பேசியதிலிருந்து இது புலனாகிறது: “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனை விட்டுக் கடந்துபோக வேண்டாம்.”a (ஆதியாகமம் 18:3; ஒப்பிடுக: யாத்திராகமம் 33:20.) யெகோவாவிடமிருந்து அவருக்கு செய்தி இருந்ததா அல்லது அவர்கள் வெறுமனே அவ்வழியாய் கடந்து சென்றுகொண்டிருந்தார்களா என்பதை ஆபிரகாம் முன்னரே அறிந்திருக்கவில்லை. அதைப் பொருட்படுத்தாமல், யெகோவாவினுடைய நோக்கத்தின் நிறைவேற்றம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது என்பதை அவர் மதித்துணர்ந்தார். இந்தத் தனிப்பட்ட நபர்கள் யெகோவாவிடமிருந்து வந்த ஏதோவொரு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதற்குப் பங்களித்து உதவ அவர் ஏதாவது செய்யமுடியுமென்றால், அது அவருக்கு பிரியமாயிருக்கும். யெகோவாவின் ஊழியர்கள் சிறந்ததைப் பெற தகுதியுள்ளவர்கள், மேலும் அந்தச் சூழ்நிலைகளின் கீழ் அவர்களுக்கு சிறந்ததாய் இருப்பவற்றை அவர் அளிப்பார் என்பதை அவர் உணர்ந்தார். அவ்வாறு செய்வதன் மூலம், தனக்கோ அல்லது வேறு எவருக்கோ ஆவிக்குரிய ஆசீர்வாதம் இருக்கும். காரியங்கள் சம்பவித்தபடி, ஆபிரகாமும் சாராளும் உண்மைமனதோடு காண்பித்த உபசரிக்கும் பண்புக்காக வெகுவாக ஆசீர்வதிக்கப்பட்டனர்.—ஆதியாகமம் 18:9-15; 21:1, 2.

உபசரிக்கும் பண்புள்ள ஜனங்கள்

17. இஸ்ரவேலர் மத்தியில் இருந்த அந்நியர் மற்றும் தேவையில் இருந்தோரைக் குறித்து யெகோவா அவர்களிடம் என்ன தேவைப்படுத்தினார்?

17 ஆபிரகாமின் மிகச்சிறந்த உதாரணம், அவரிடமிருந்து வந்த தேசத்தால் மறக்கப்பட்டுவிடக்கூடாது. அவர்கள் மத்தியில் இருந்த அந்நியர்களுக்கு உபசரிக்கும் பண்பை காண்பிப்பதற்கான ஏற்பாடுகள், யெகோவா இஸ்ரவேலருக்கு கொடுத்த நியாயப்பிரமாணத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. “உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.” (லேவியராகமம் 19:34) பொருளாதார ஆதரவு தேவைப்படுவோருக்கு ஜனங்கள் விசேஷ கரிசனை காண்பிக்க வேண்டும், அவர்களை கவனியாமல் விட்டுவிடக்கூடாது. ஏராளமான அறுவடைகளால் யெகோவா அவர்களை ஆசீர்வதித்தபோதும், பண்டிகைகளின்போது அவர்கள் மகிழ்ச்சியாயிருந்தபோதும், ஓய்வு வருடங்களின்போது அவர்கள் தங்கள் உழைப்புகளிலிருந்து ஓய்ந்திருந்தபோதும், மற்ற சந்தர்ப்பங்களின்போதும், ஜனங்கள் ஏழ்மையில் இருந்தோரை—விதவைகள், திக்கற்ற பிள்ளைகள், பரதேசிகள் ஆகியோரை—நினைவில் வைக்க வேண்டும்.—உபாகமம் 16:9-14; 24:19-21; 26:12, 13.

18. யெகோவாவின் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வதன் சம்பந்தமாக உபசரிக்கும் பண்பு எவ்வளவு முக்கியமானது?

18 தயவு, தாராள குணம், மற்றவர்களிடமாக, விசேஷமாக தேவையில் இருப்போரிடம் காட்ட வேண்டிய உபசரிக்கும் பண்பு, ஆகியவற்றின் முக்கியத்துவம் இஸ்ரவேலர் இந்தப் பண்புகளை பிரயோகிக்காமல் புறக்கணித்தபோது யெகோவா அவர்களைக் கையாண்ட விதத்திலிருந்து காணமுடிகிறது. அந்நியர் மற்றும் தேவையில் இருப்போர் ஆகியோரிடமாக தயவும் தாராள குணமும் காண்பிப்பது, அவருடைய ஜனங்கள் அவருடைய ஆசீர்வாதங்களை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கான தேவைகளில் அடங்கியுள்ளது என்று யெகோவா தெளிவுபடுத்தினார். (சங்கீதம் 82:2, 3; ஏசாயா 1:17; எரேமியா 7:5-7; எசேக்கியேல் 22:7; சகரியா 7:9-11) இவற்றையும் மற்ற தேவைகளையும் நிறைவேற்றி முடிப்பதில் அந்தத் தேசத்தார் ஊக்கமுள்ளவர்களாயிருந்தபோது, அவர்கள் செழித்தோங்கி பொருளாதார மற்றும் ஆவிக்குரிய அபரிமிதத்தை அனுபவித்தனர். தங்கள் சுயநலமுள்ள தனிப்பட்ட நாட்டங்களில் அவர்கள் முழுவதுமாக ஈடுபட்டிருந்து, தேவையில் இருந்தோருக்கு இப்படிப்பட்ட தயவான குணங்களைக் காண்பிக்கத் தவறியபோது, அவர்கள் யெகோவாவின் கண்டனத்தைப் பெற்றுக்கொண்டனர், இறுதியில் அவர்களுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பும் வழங்கப்பட்டது.—உபாகமம் 27:19; 28:15, 45.

19. நாம் கூடுதலாக எதை சிந்திக்க வேண்டும்?

19 அப்படியென்றால், இந்த விஷயத்தில் நாம் யெகோவாவின் எதிர்பார்ப்புகளுக்கு இசைவாக வாழ்கிறோமா என்பதை நம்மைநாமே ஆராய்ந்து பார்ப்பது எவ்வளவு முக்கியம்! இது விசேஷமாக நம் நாளில், சுயநலமுள்ள மற்றும் பிரிவினை மனப்பான்மையுள்ள உலகில் அவ்வாறிருக்கிறது. பிளவுற்றிருக்கும் உலகில் நாம் எவ்வாறு கிறிஸ்தவ உபசரிக்கும் பண்பைக் காண்பிக்கலாம்? அந்தப் பொருளே அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிறது.

[அடிக்குறிப்பு]

a இந்தக் குறிப்பைப் பற்றிய முழுமையான கலந்தாலோசிப்புக்கு, “கடவுளை எவராவது பார்த்திருக்கிறீர்களா?” என்ற கட்டுரையை காவற்கோபுரம் (ஆங்கிலம்), மே 15, 1988, பக்கங்கள் 21-3-ல் பார்க்கவும்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

◻ “உபசரிக்கும் பண்பு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பைபிள் சொல்லின் அர்த்தம் என்ன?

◻ உபசரிக்கும் பண்பைக் காண்பிப்பதில் என்ன வழிகளில் யெகோவா பரிபூரண முன்மாதிரியாய் இருக்கிறார்?

◻ உபசரிக்கும் பண்பைக் காண்பிப்பதில் ஆபிரகாம் எந்த அளவுக்கு சென்றார்?

◻ எல்லா மெய் வணக்கத்தாரும் ஏன் ‘அந்நியரை உபசரிக்க நாட வேண்டும்’?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்