உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 7/15 பக். 4-7
  • ஆவி மண்டலத்தில் ஆட்சியாளர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆவி மண்டலத்தில் ஆட்சியாளர்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளுக்கு எதிராக நிஜமான ஒரு ஆள்
  • சாத்தான் ஏன் ஆட்சி செய்யும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறான்
  • சாத்தானுக்குக் கொஞ்சகாலமே இருக்கிறது!
  • ராஜ்ய ஆட்சியின்கீழ் களிகூருதல்
  • நித்திய வாழ்க்கைக்கு ஓர் எதிரி
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • பிசாசாகிய சாத்தான்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • விழித்திருங்கள்! சாத்தான் உங்களை விழுங்க பார்க்கிறான்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 7/15 பக். 4-7

ஆவி மண்டலத்தில் ஆட்சியாளர்கள்

உலகை ஆட்சி செய்வது யார்? மனிதனுக்கு அப்பாற்பட்ட ஏதாவதொரு வகையான மேற்பார்வை இருக்கிறதா? அல்லது மனிதர்கள் தங்களைத்தாங்களே கவனித்துக்கொள்ளும்படி கடவுள் விட்டுவிட்டாரா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலைத் தேடுவதில், இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய ஊழியத்தின்போது நடந்த ஒரு சம்பவத்தை நாம் முதலில் கவனிப்போம்.

இயேசு, தம்முடைய முழுக்காட்டுதலுக்குப்பின் சில நாட்களில், பிசாசாகிய சாத்தான் என்றழைக்கப்பட்ட, பார்க்கமுடியாத ஆவி சிருஷ்டியால் சோதிக்கப்பட்டார். அந்தச் சோதனைகளில் ஒன்றைப்பற்றி, பைபிள் சொல்கிறது: ‘பிசாசு அவரை [இயேசுவை] மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்.’ (மத்தேயு 4:8) பின்பு இயேசுவிடம் சாத்தான் இவ்வாறு சொன்னான்: “இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும்.”—லூக்கா 4:6, 7.

இந்த உலகின் எல்லா ராஜ்யங்கள், அல்லது அரசாங்கங்களின்மீதும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதாக சாத்தான் உரிமைபாராட்டினான். இயேசு இந்த உரிமைபாராட்டலை மறுத்தாரா? இல்லை. உண்மையில், சாத்தானை “உலகத்தின் அதிபதி” என்று வேறொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவதன்மூலம் அவர் அதை ஊர்ஜிதம் செய்தார்.—யோவான் 14:30.

பைபிளின்படி, சாத்தான், அதிக வல்லமையைக் கொண்டிருக்கும் ஒரு பொல்லாத தூதனாக இருக்கிறான். கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் சாத்தானை “பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு” தொடர்புபடுத்துகிறார்; அவர்களை ‘இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள்’ என்பதாகச் சொல்லுகிறார். (எபேசியர் 6:11, 12) மேலுமாக, “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” அப்போஸ்தலன் யோவான் சொன்னார். (1 யோவான் 5:19) சாத்தான் ‘உலகமனைத்தையும் மோசம்போக்குவதாக’ பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9) உலகின் அரசியல் அமைப்பிற்கு “தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும்” கொடுக்கிற ஒரு வலுசர்ப்பமாகவும் சாத்தானை அடையாளப்பூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துதல் சித்தரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 13:2.

மனிதர்களைத் தங்களுடைய கேட்டுக்கே வழிநடத்தும் விதத்தில் ஒரு தீய சக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு உலக சம்பவங்களும் சான்றளிக்கின்றன. இல்லையென்றால் வேறென்ன காரணத்துக்காக மனித அரசாங்கங்கள் சமாதானத்தை முன்னேற்றுவிக்கத் தவறுகின்றன? மக்கள் ஒருவரையொருவர் பகைத்து கொலைசெய்வதற்குக் காரணமாக வேறு எது இருக்க முடியும்? உள்நாட்டுக் கலகம் ஒன்றில் ஏற்பட்ட படுகொலையையும் சாவையும் கண்டு திகைப்புற்றவராய், ஒரு கண்கண்ட சாட்சி இவ்வாறு கூறினார்: “இது எப்படி நடந்திருக்கக்கூடும் என்று எனக்குத் தெரியவில்லை. இது பகையைவிடவும் அதிகமானது. ஒரு பொல்லாத ஆவி ஆளே, இந்த மனிதர்களை ஒருவரையொருவர் அழிக்கும்படி பயன்படுத்துகிறான்.”

கடவுளுக்கு எதிராக நிஜமான ஒரு ஆள்

இன்று அநேகர் பிசாசாகிய சாத்தான் இருப்பதாக நம்புவதில்லை. இருந்தாலும், சிலர் நம்புகிறபடி, மனிதகுலத்திலுள்ள வெறும் தீய பண்பாக அவன் இல்லை. பைபிளும் உலக சம்பவங்களும் அவன் ஒரு நிஜமான ஆள் என்பதைக் காண்பிக்கின்றன. மேலுமாக, சாத்தான் யெகோவா தேவனை நேர்மாறாக எதிர்ப்பவன். நிச்சயமாகவே, சாத்தான் கடவுளுக்குச் சமமானவன் அல்லன். யெகோவா எல்லாம்வல்ல சிருஷ்டிகராக இருப்பதால், எல்லா சிருஷ்டிக்கும் மேலாக அவரே தகுந்த ஆட்சியாளராக இருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 4:11.

கடவுள் தமக்கு எதிராளியாக ஒரு பொல்லாத ஆவி சிருஷ்டியைப் படைக்கவில்லை. மாறாக, தூதர்களைச் சேர்ந்த ‘தேவ புத்திரரில்’ ஒருவன், சரியானபடி யெகோவாவுக்கே உரித்தானதாகிய வணக்கத்தைத் தான் பற்றிப்பறித்துக் கொள்ளவேண்டும் என்ற தன்னல ஆசையை வளர்த்துக்கொண்டான். (யோபு 38:7; யாக்கோபு 1:14, 15) இந்த ஆசையே, கடவுளுக்கு எதிராகக் கலகம்செய்யும் ஒரு போக்கில் ஈடுபடும்படி அவனை வழிநடத்தியது. கலகம்செய்வதன்மூலம் இந்த ஆவி சிருஷ்டி, (“எதிர்ப்பவன்” என்று அர்த்தமுடைய) சாத்தானாகவும் (“பழிதூற்றுபவன்” என்று அர்த்தமுடைய) பிசாசாகவும் தன்னை ஆக்கிக்கொண்டான். இவை யாவற்றையும் கவனிக்கையில், உலகை ஆட்சி செய்யும்படி சாத்தான் ஏன் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்று நீங்கள் யோசிக்கக்கூடும்.

சாத்தான் ஏன் ஆட்சி செய்யும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறான்

பூமியின்மீதான ஆட்சியைக் குறித்து சாத்தான் இயேசுவிடம் என்ன சொன்னான் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? “இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் . . . உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது,” என்று சாத்தான் சொன்னான். (லூக்கா 4:6) கடவுளுடைய அனுமதியின் காரணமாக மட்டுமே பிசாசாகிய சாத்தான் அதிகாரம் செலுத்துகிறான் என்று அந்தக் கூற்று காண்பிக்கிறது. ஆனால் சாத்தானை கடவுள் ஏன் பொறுத்துக்கொள்கிறார்?

அந்தக் கேள்விக்கான பதில், ஏதேன் தோட்டத்தில் நடந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது; அங்குத்தான் சாத்தான் உலக ஆட்சியாளனாகத் தன் பதவியை ஏற்கத் தொடங்கினான். முதல் மனுஷனும் மனுஷியுமாகிய ஆதாம், ஏவாளிடம் நன்மையான ஏதோவொன்றைக் கொடுக்காமல் வைத்திருந்ததன்மூலம் கடவுள் கெட்டவிதமாக ஆட்சி செய்கிறார் என்று சாத்தான் அங்குக் குறிப்பிட்டான். சாத்தானின்படி, கடவுளால் விலக்கப்பட்ட அந்தப் பழத்தை அவர்கள் சாப்பிட்டால் அவர்கள் விடுதலையாக்கப்படுவார்கள். ஆதாமும் ஏவாளும் சுயாதீனமுள்ளவர்களாகவும் யெகோவாவிலிருந்து தனித்தியங்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் கடவுளைப் போலவே இருப்பார்கள்!—ஆதியாகமம் 2:16, 17; 3:1-5.

இந்த விதத்தில் பொய் சொல்லி ஏவாளை வஞ்சித்து, அவள் மூலமாக ஆதாமையும் கடவுளுடைய சட்டத்தை மீறும்படி தூண்டி, சாத்தான், முதல் மனித தம்பதியை தன்னுடைய தலைமைதாங்குதலுக்கும் கட்டுப்பாட்டுக்கும்கீழ் கொண்டுவந்தான். இவ்வாறாக, பிசாசு அவர்களுடைய கடவுளாக, யெகோவாவுக்கு எதிரான ஒரு கடவுளாக ஆனான். என்றபோதிலும், விடுதலைக்குப் பதிலாக, ஆதாமும் ஏவாளும் சாத்தானுக்கும், பாவத்துக்கும், மரணத்துக்கும்கீழ் அடிமைத்தனத்தை அனுபவித்தார்கள்.—ரோமர் 6:16; எபிரெயர் 2:14, 15.

அவருடைய பரிபூரண நியாயத்திற்கு இசைவாக, யெகோவா சாத்தானையும் அவனைப் புதிதாகப் பின்பற்றிய இருவரையும் உடனடியாக அழித்திருக்கலாம். (உபாகமம் 32:4) ஆனாலும், ஒழுக்கம் சம்பந்தமான ஒரு விவாதம் உட்பட்டிருந்தது. யெகோவா ஆட்சி செய்யும் முறையின் சரியானதன்மையைக்குறித்து சாத்தான் சவால்விட்டிருந்தான். கடவுளிடமிருந்து பிரிந்து சுதந்திரமாகச் செயல்படுவது பேரழிவைக் கொண்டு வரும் என்பது நிரூபிக்கப்படுவதற்கு கடவுள் ஞானமுள்ளவராக, காலம் கடந்துசெல்லும்படி அனுமதித்தார். ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக, அந்தக் கலகக்காரர் கொஞ்ச காலத்திற்குத் தொடர்ந்து வாழும்படி யெகோவா அனுமதித்தார்.—ஆதியாகமம் 3:14-19.

ஆதாமின் வம்சத்தினர் பெரும்பாலானோர் யெகோவாவின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிராதபோதிலும், கடவுள் தம்முடைய வணக்காத்தாருடன் செயல்தொடர்பு கொண்டவிதத்தின்மூலம் அவருடைய ஆட்சியின் மேம்பட்ட தன்மை வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. யெகோவாவின் அதிகாரத்தைச் சரியான விதத்தில் ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சியையும் உண்மையான பாதுகாப்பையும் கொண்டுவருகிறது. மறுபட்சத்தில், சாத்தானின் செல்வாக்கின்கீழுள்ள மனித ஆட்சியில், துயரமும் பாதுகாப்பின்மையும் விளைந்திருக்கின்றன. ஆம், “தனக்கே கேடுண்டாக மனிதன் மனிதனை ஆளுகைசெய்திருக்கிறான்.” (பிரசங்கி 8:9, NW) சாத்தானின் அதிகாரத்திலிருக்கும் இந்த உலகில் மனித ஆட்சியின்கீழ் மனிதர்கள் உண்மையான பாதுகாப்பையும் நிரந்தரமான மகிழ்ச்சியையும் கண்டடையவில்லை. என்றபோதிலும், நம்பிக்கை கொள்வதற்கு நம்பத்தக்க காரணம் இருக்கிறது.

சாத்தானுக்குக் கொஞ்சகாலமே இருக்கிறது!

பூமியில் சாத்தானின் செல்வாக்குத் தற்காலிகமானதே. யெகோவா இன்னுமதிகமான காலத்திற்குச் சாத்தானிய ஆட்சியைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்! சீக்கிரத்தில் பிசாசு செயலற்றுப்போகும்படி செய்யப்படுவான். புதிய ஆட்சியாளர் ஒருவர் பூமியின்மீது அதிகாரத்தை ஏற்றுக்கொள்வார்; அவர் கடவுளாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட நீதியுள்ள ராஜாவாக இருப்பார். அந்த ராஜா இயேசு கிறிஸ்து. அவர் பரலோகத்தில் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டதைக் குறித்து வெளிப்படுத்துதல் இவ்வாறு சொல்கிறது: “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் [யெகோவாவுக்கும்], அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின.” (வெளிப்படுத்துதல் 11:15) பைபிளின் காலக்கிரம அட்டவணையும், அதோடு வேதப்பூர்வ தீர்க்கதரிசன நிறைவேற்றமும் சேர்ந்து, இந்தச் சம்பவம் 1914-ம் வருடத்தில் நிகழ்ந்ததை நிரூபிக்கின்றன.—மத்தேயு 24:3, 6, 7.

இயேசு சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டபின் சிறிது காலத்தில் என்ன நடந்தது என்றும் பைபிள் விவரிக்கிறது. அது சொல்கிறது: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் [இயேசு கிறிஸ்துவும்] அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே [பிசாசாகிய சாத்தானுடன்] யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.”—வெளிப்படுத்துதல் 12:7-9.

சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதன் விளைவு என்னவாக இருக்கும்? பரலோகத்திலுள்ளவர்கள் களிகூர முடிந்தது; ஆனால் பூமியில் குடியிருந்தவர்களைப் பற்றி என்ன? “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்,” என்று வெளிப்படுத்துதல் 12:12 சொல்கிறது. உண்மையில், பரலோகத்திலிருந்து சாத்தான் வெளியேற்றப்பட்டது பூமிக்கு ஆபத்தைக் கொண்டுவந்திருக்கிறது. தி கொலம்பியா ஹிஸ்டரி ஆஃப் தி உவர்ல்ட் இவ்விதமாகக் குறிப்பிடுகிறது: “1914–1918 வரையான நான்கு வருட போரின் பேரழிவானது . . . மேற்கத்திய உலகம், நாகரிகத்தை அதன் சொந்த மூடத்தனத்திலிருந்து அல்லது கெட்டதைச் செய்யும் தூண்டுதலிலிருந்து பாதுகாக்க முடியவில்லை என்பதை அதற்குக் காண்பித்தது. மேற்கத்திய உலகின் மனவுரம் அப்போது நொறுங்கியதிலிருந்து உண்மையில் ஒருபோதும் மீளவில்லை.”

இந்தச் சந்ததியின் ஆபத்துக்கள் ஒரு நொறுங்கிய மனவுரத்தைக் காட்டிலும் அதிகத்தைக் குறிக்கின்றன. இயேசு இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.” (மத்தேயு 24:7, 8; லூக்கா 21:11) மேலுமாக, சாத்தானின் காரிய ஒழுங்குமுறையின் “கடைசிநாட்களில்,” அநேகர் “தற்பிரியராயும், பணப்பிரியராயும், . . . தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், . . . இணங்காதவர்களாயும்” இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. மக்கள் “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” இருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:1-5.

போர்கள், கொள்ளைநோய்கள், உணவுப் பற்றாக்குறைகள், பூமியதிர்ச்சிகள், ஒழுக்கத் தராதரங்களில் சீரழிவு ஆகிய எல்லா காரியங்களும் பைபிளில் முன்னறிவிக்கப்பட்டபடியே 1914 முதற்கொண்டு முன்னொருபோதும் இல்லாத அளவில் சம்பவித்திருக்கின்றன. கடவுளுக்கும் மனிதனுக்கும் பகைவனான கோபத்திலிருக்கும் பிசாசாகிய சாத்தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டிருப்பதால் தன்னுடைய கோபத்தை பூமியின் எல்லைக்குள் மட்டுமே காண்பிக்க முடியும் என்பதை அவை குறிப்பிடுகின்றன. ஆனால் சாத்தான் செயல்படும்படியாக அதிக நாட்களுக்கு விட்டுவைக்கப்பட மாட்டான் என்றும் பைபிள் காண்பிக்கிறது. சாத்தான் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிற உலக ஒழுங்குமுறையை அர்மகெதோனில் கடவுள் அழிக்கும் வரையாக அவனுக்கு ‘கொஞ்சக்காலம்’ மட்டுமே மீதமிருக்கிறது.

அதற்குப் பின்பு சாத்தானுக்கு என்ன நடக்கும்? அப்போஸ்தலன் யோவான் எழுதினார்: “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, . . . அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.” (வெளிப்படுத்துதல் 20:1, 2) துன்புறும் மனிதகுலத்திற்கு என்னே நிம்மதி!

ராஜ்ய ஆட்சியின்கீழ் களிகூருதல்

தலையிடுவதற்கு இனிமேலும் சாத்தான் இல்லாமல், இயேசு கிறிஸ்துவின்கீழ் கடவுளுடைய ராஜ்யம் மனிதகுலத்தின் விவகாரங்களைத் தன் முழு கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளும். பூமியில் பல அரசாங்கங்கள் இருப்பதற்குப் பதிலாக, ஒரே ஒரு பரலோக அரசாங்கமே முழு கிரகத்தின்மீதும் ஆட்சி செய்யும்படி நிலைத்திருக்கும். போர் என்பது கடந்தகால காரியமாகியிருக்கும்; எங்கும் அமைதி நிலவும். கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ், அன்பான சகோதரத்துவத்தில் அனைவரும் ஒன்றாக வசிப்பார்கள்.—சங்கீதம் 72:7, 8; 133:1; தானியேல் 2:44.

இயேசு என்ன விதமான ஆட்சியாளராக நிரூபிப்பார்? அவர் பூமியில் இருந்தபோது, மக்களுக்காக ஆழ்ந்த அன்பைக் காண்பிப்பவராக இருந்தார். பசியாய் இருந்தவர்களுக்கு இயேசு பரிவுடன் உணவளித்தார். அவர் நோயுற்றிருந்தோரைக் குணப்படுத்தி, குருடருக்கு மீண்டும் பார்வை அளித்து, ஊமையர்களைப் பேசச்செய்து, ஊனமுற்றோரை திடனடையும்படி செய்தார். இயேசு இறந்தவர்களைக்கூட உயிருக்குக் கொண்டுவந்தார்! (மத்தேயு 15:30-38; மாற்கு 1:34; லூக்கா 7:11-17) அவர் ராஜாவாகும்போது இன்னும் செய்யப்போகும் மகத்தான காரியங்களுக்கு அந்த அற்புதங்கள் சுருக்கமான முற்காட்சிகளாகவே இருந்தன. அப்படிப்பட்ட நன்மைபயக்கும் ஆட்சியாளர் ஒருவரைக் கொண்டிருப்பது எவ்வளவு நன்றாக இருக்கும்!

யெகோவாவின் அரசாட்சிக்குக் கீழ்ப்படிகிறவர்களால் முடிவுறா ஆசீர்வாதங்கள் அனுபவிக்கப்படும். வேதவசனங்கள் இவ்வாறு வாக்களிக்கின்றன: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” (ஏசாயா 35:5, 6) அந்த மகத்தான நாளை எதிர்நோக்கி சுட்டிக்காண்பிப்பவராய் அப்போஸ்தலன் யோவான் எழுதினார்: “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.

யெகோவா தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்மூலமாக செய்யப்படும் அவருடைய ஆட்சியால் வழங்கப்பட்ட சந்தோஷங்கள், பிசாசாகிய சாத்தானால் ஆதிக்கம் செலுத்தப்படும் தற்போதைய காரிய ஒழுங்குமுறையில் நாம் அனுபவித்திருக்கக்கூடிய எந்தத் துன்பத்தையும் தாராளமாக ஈடுசெய்யும். கடவுளால் வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகில், ‘உண்மையில் ஆட்சி செய்வது யார்?’ என்று மக்கள் யோசிக்கமாட்டார்கள். (2 பேதுரு 3:13) ஆவி மண்டலத்திலுள்ள அன்பான ஆட்சியாளர்களாகிய யெகோவா மற்றும் கிறிஸ்துவின் பூமிக்குரிய ஆட்சி எல்லைக்குள் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்தினர் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள். அந்த ஆட்சியாளர்களுடைய பிரஜைகளின் மத்தியில் இருக்கும் நம்பிக்கையை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது?

[பக்கம் 7-ன் படம்]

கடவுளுடைய ஆட்சியின் பூமிக்குரிய எல்லைக்குள் மனிதகுலம் பாதுகாப்பாக இருக்கும்

[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]

NASA photo

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்