தன் முத்திரையை பதித்துச்சென்ற அச்சாளர்
நீங்கள் எப்போதாவது பைபிளில் ஒரு வசனத்தைக் கண்டுபிடிக்க விரும்பி, அது எங்கிருக்கிறது என்று ஞாபகப்படுத்த முடியாமல் போனதுண்டா? எனினும், ஒரேவொரு வார்த்தையை ஞாபகத்தில் வைப்பதனால், பைபிள் கன்கார்டன்ஸைக் கொண்டு உங்களால் அதைக் கண்டுபிடித்து விட்டிருக்க முடியும். இல்லையெனில், ஒரு கிறிஸ்தவ கூட்டத்திற்கு நீங்கள் சென்றிருக்கலாம், அங்கே ஆஜராயிருந்த நூற்றுக்கணக்கான, அல்லது ஆயிரக்கணக்கான ஆட்களுங்கூட, வசனம் சொல்லப்பட்ட ஒருசில நொடிகளிலேயே தங்கள் பைபிளைத் திறந்து வாசிப்பவர்களாக இருந்திருப்பார்கள்.
எதுவாயிருந்தாலும், உங்களுக்குப் பரிச்சயமாயிராத ஒரு மனிதனுக்கு நீங்கள் நன்றி செலுத்தக் கடன்பட்டிருக்கிறீர்கள். அவரே பைபிளைச் சுலபமாகப் படிப்பதற்கு உதவினார், மேலும் இன்று நாம் திருத்தமான பைபிள்களைப் பெற்றிருக்கும்படி நிச்சயப்படுத்திக் கொள்ளவும் செய்தார். அநேக பைபிள்களின் பக்கங்கள் அமைந்திருக்கும் விதத்தையுங்கூட செல்வாக்கு செலுத்தினார்.
ராபெர் ஏட்டியெனே அந்த மனிதனாவார்.a அவர் ஓர் அச்சாளராக இருந்தார்; ஓர் அச்சாளரின் மகனாக, அநேகமாக 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரான்ஸிலுள்ள பாரிஸில் பிறந்தார். அதுவே மறுமலர்ச்சிக் காலமாகவும் கிறிஸ்தவ சமயச் சீர்திருத்த இயக்கத்தின் காலமாகவும் இருந்தது. அச்சகம் இவ்விரண்டிற்கான மூலமாக ஆனது. ராபெரின் தந்தையாகிய ஆன்ரீ ஏட்டியென் பெயர்பெற்ற ஓர் அச்சாளராக இருந்தார், மறுமலர்ச்சிக் காலத்தின்போது வெகு சிறந்த புத்தகப் பதிப்புகள் சிலவற்றை வெளியிட்டார். அவருடைய வேலையானது பாரிஸ் பல்கலைக்கழகத்திற்கும் அதன் இறையியல் பள்ளியாகிய சார்பாணுக்கும் பாடபுத்தகங்களையும் பைபிள் புத்தகங்களையும் வெளியிடுவதை உள்ளடக்கியது.
ஆனால், மகனாகிய ராபெர் ஏட்டியென்மீது நாம் கவனம் செலுத்தலாம். அவருடைய முறைப்படியான கல்வியைக் குறித்து சிறிதளவே அறியப்பட்டிருக்கிறது. எனினும், சிறு வயதுமுதல், அவர் லத்தீனில் தேர்ச்சி பெற்று, கிரேக்கையும் எபிரெயுவையும் சீக்கிரத்தில் கற்றுக்கொண்டார். தன் தந்தையிடமிருந்து ராபெர் அச்சுக் கலையைப் பயின்றார். 1526-ல் ஆன்ரீயின் அச்சகத்தை எடுத்து நடத்தியபோது, ராபெர் ஏட்டியென் ஏற்கெனவே உயர்ந்த மொழித் தராதரங்களில் நிபுணராக அறியப்பட்டிருந்தார். லத்தீன் இலக்கியங்களின் விமர்சனப் பதிப்புகளையும் இதர புலமைசான்று பெற்ற புத்தகங்களையும் பிரசுரித்தபோதிலும், அவருடைய முதலாவதான, மறுக்கமுடியாத பிரியம் பைபிள்பேரில் இருந்தது. லத்தீன் இலக்கியங்களுக்கு ஏற்கெனவே செய்யப்பட்டிருந்ததை லத்தீன் பைபிளுக்குச் செய்யவேண்டிய ஆர்வத்தோடு, ஜெரோமின் லத்தீன் வல்கேட் பைபிளின் ஐந்தாம் நூற்றாண்டு மூலப்பிரதியை, கூடியவரை அதேபோல இருக்க திரும்ப நிலைநாட்ட செய்வதில் ஏட்டியென் இறங்கினார்.
கலப்படமற்ற வல்கேட்
ஜெரோம், பைபிளின் மூலபாஷைகளாகிய எபிரெய, கிரேக்கிலிருந்து மொழிபெயர்த்திருந்தார், ஆனால் ஏட்டியெனின் நாளுக்குள்ளாக வல்கேட் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்திருந்தது. பல தலைமுறைகளாக வல்கேட்டைப் பிரதியெடுத்ததன் விளைவாக பல பிழைகளும் கலப்படங்களும் நுழைந்துவிட்டிருந்தன. மேலும், இடைக்காலத்தின்போது கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்ட பைபிளின் வார்த்தைகள் இடைக்காலத்திய கட்டுக்கதைகள், பொழிப்புரைகள், பொய் இடைச்செருகுதல்கள் ஆகியவை நிறைந்த குழப்படியால் மூடிமறைக்கப்பட்டிருந்தன. இவை பைபிள் வாசகத்தோடு அவ்வளவு விரவியிருந்ததால், ஏவப்பட்டெழுதப்பட்ட எழுத்துக்களாக ஏற்கப்படத் தொடங்கின.
மூலப்பிரதியில்லாததை எல்லாம் களைவதற்கு ஏட்டியென் சாஸ்திரிய நூலின் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட பாடபேதத் திறனாய்வு முறைகளைப் பொருத்தினார். கிடைக்கப்பெற்ற மிகப் பழமைவாய்ந்த, மிகச் சிறந்த கையெழுத்துப் பிரதிகளை அவர் தேடிக் கண்டுபிடித்தார். பாரிஸிலும் பாரிஸைச் சுற்றிலும் இருந்த நூலகங்களிலும் ஏவ்ரா, சுவாஸோன் ஆகிய இடங்களில் இருந்த நூலகங்களிலும் பல பழமையான கையெழுத்துப் பிரதிகளைக் கண்டுபிடித்தார், அதில் ஒன்று ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தோன்றியது. ஏட்டியென் பகுதிபகுதியாக வித்தியாசப்பட்ட லத்தீன் வாசகங்களை கவனமாக ஒத்துப்பார்த்து, அதிக ஆதாரப்பூர்வமாகவுள்ள பகுதிகளை மாத்திரம் தெரிவுசெய்தார். இதன் பலனாக, 1528-ல் ஏட்டியென் பைபிள் முதன்முதலாகப் பிரசுரிக்கப்பட்டது, பைபிளின் பாடபேத திருத்தத்தைத் தீர்மானிப்பதில் ஒரு விசேஷ முன்னேற்றப் படியாகத் திகழ்ந்தது. அதன்பின்பு ஏட்டியெனின் திருத்தியமைக்கப்பட்ட பதிப்புகள் வெளியிடப்பட்டன. அவர் வாழ்வதற்கு முன்பு இருந்த பிற ஆட்கள் வல்கேட்டைத் திருத்த முயற்சி செய்திருந்தனர், ஆனால் ஒரு திறமையான விமர்சன முறையை அளிப்பதற்கு இவருடைய பதிப்பே முதல் பதிப்பாக இருந்தது. பக்கவோரங்களில், ஏட்டியென் தான் விட்டுவிட்டிருக்கிற சில சந்தேகமுள்ள பகுதிகளை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புச் சாத்தியமாயிருக்கிற பகுதிகளைக் குறிப்பிட்டார். இந்தத் திருத்தங்களுக்கு ஆதாரத்தை அளித்த கையெழுத்துப் பிரதி மூலங்களையும் அவர் குறித்து வைத்தார்.
16-ம் நூற்றாண்டிற்கு வெகு புதிதாக இருந்த மற்றநேக அம்சங்களை ஏட்டியென் அறிமுகம் செய்து வைத்தார். தள்ளுபடி ஆகமங்களுக்கும் கடவுளுடைய வார்த்தைக்கும் இடையே வித்தியாசத்தை உண்டாக்கினார். சுவிசேஷ புத்தகங்களுக்குப் பின்பும் பவுலின் நிருபங்களுக்கு முன்பும் அப்போஸ்தலர் புத்தகத்தை வரிசைப்படுத்தினார். ஒவ்வொரு பக்கத்தின் மேற்புறத்தில், குறிப்பிட்ட பகுதிகளைக் கண்டுபிடிக்க வாசகருக்கு உதவ ஒருசில முக்கிய வார்த்தைகளை அளித்தார். இன்று பொதுவாக அழைக்கப்படும் பக்கந்தோறும் திரும்பத் திரும்ப வருந்தலைப்பு (Running head) என்பதற்கான மிகப் பழமையான மாதிரியாகும் இது. ஜெர்மனியில் முதன்முதல் ஆரம்பமான செறிவுமிக்க கோதிக்கை அல்லது ஆங்கில அச்சு எழுத்தைப் பயன்படுத்துவதற்கு மாறாக, இப்பொழுது புழக்கத்திலிருக்கும் செறிவல்லாத, வாசிப்பதற்குச் சுலபமாயிருக்கும் நெட்டெழுத்து வடிவ எழுத்துக்களில் முழு பைபிளையும் அச்சடிப்பதில் ஏட்டியெனே முதல் நபராவார். மேலும் சில பகுதிகளைத் தெளிவுபடுத்துவதற்கு, அநேக குறுக்கு வசனங்களையும் மொழி ஆய்வு சார்ந்த குறிப்புகளையும் தந்தார்.
ஏட்டியென் பைபிளைப் பல உயர்குடியினரும் மதகுருக்களும் பாராட்டினர், ஏனெனில் வல்கேட்டின் வேறெந்த அச்சுப் பதிப்பைவிட அது சிறந்ததாயிருந்தது. நயத்திற்கும் வேலைப்பாட்டிற்கும் பயன்பாட்டிற்கும் அவருடைய பதிப்பே மாதிரியாகத் திகழ்ந்து, ஐரோப்பாவெங்கும் விரைவில் பின்பற்றப்பட்டது.
அரசருக்கான அச்சாளர்
“தன் வேலையில் சாமர்த்தியமுள்ளவனைப் பார்த்தால் அவன் . . . அரசன்முன் நிற்பானே,” என்று நீதிமொழிகள் 22:29 (திருத்திய மொழிபெயர்ப்பு) சொல்கிறது. ஏட்டியெனின் புதுமையான வேலைப்பாடும் மொழித் திறனும் பிரான்ஸ் அரசனாகிய ஒன்றாம் ஃபிரான்சிஸின் கவனத்தைத் தப்பவில்லை. ஏட்டியென் லத்தீனிலும் எபிரெயுவிலும் கிரேக்கிலும் அரசருக்கான அச்சடிக்கும் அச்சாளராக ஆனார். இந்த முறையில், தற்போது வரை பிரெஞ்சு அச்சுக்கலையின் ஒருசில சாதனைகளாக இருப்பவற்றை ஏட்டியென் வெளியிட்டார். 1539-ல், பிரான்ஸில் அச்சடிக்கப்பட்ட முதலாவதான, மிகவும் நேர்த்தியான முழு எபிரெய பைபிளை வெளியிடத் தொடங்கினார். 1540-ல் தன் லத்தீன் பைபிளில் விளக்கப்படங்களை அறிமுகப்படுத்தினார். ஆனால் இடைக்காலத்துக்குச் சகஜமாயிருந்த பைபிள் நிகழ்ச்சிகளின் வழக்கமான அழகுபடைத்த வர்ணனைகளுக்கு மாறாக, ஏட்டியென் அகழாராய்ச்சியினுடைய சான்றின் அல்லது பைபிளிலேயே உள்ள அளவுகளின் அடிப்படையிலும் விவரங்களின் அடிப்படையிலும் படிப்பினை அளிக்கிற படங்களை வரைந்தார். இந்தச் சித்திரப் பதிப்பு மரப்பாள அச்சுகள், உடன்படிக்கை பெட்டி, பிரதான ஆசாரியரின் உடைகள், ஆசரிப்புக் கூடாரம், சாலொமோனின் ஆலயம் போன்ற காரியங்களை விளக்கமாக சித்தரித்துக் காட்டின.
அரசன் திரட்டிய கையெழுத்துப் பிரதிகளை அச்சடிப்பதற்கு, தான் ஆர்டர் செய்திருந்த விசேஷ கிரேக்க அச்செழுத்தைப் பயன்படுத்தி, ஏட்டியென் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களின் முதல் விமர்சன பதிப்பைத் தயாரிக்க ஆரம்பித்தார். டெசிடிரீயஸ் இராஸ்மஸின் இலக்கியப் படைப்பைக் காட்டிலும் ஏட்டியெனின் கிரேக்க வாசகம் அடங்கிய முதல் இரு பதிப்புகள் சற்று பரவாயில்லை என்றாலும், ஏட்டியென் 1550-ல் வெளியிட்ட தன்னுடைய மூன்றாம் பதிப்பில், பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டு கோடெக்ஸ் பிஸையும் செப்டூவஜன்ட் பைபிளும் உட்பட, சுமார் 15 கையெழுத்துப் பிரதிகளிலிருந்து ஒப்பாய்வுகளையும் குறிப்புரைகளையும் சேர்த்தார். ஏட்டியெனின் இந்தப் பதிப்பு மிகவும் பரவலாக ஏற்கப்படத்தக்கதாக ஆனது; இதனால் பின்னர் இதுவே டெக்ஸ்டஸ் ரிசப்டஸ் அல்லது பெறப்பட்ட வாசகம் என்றழைக்கப்பட்டதற்கான ஆதாரமாக ஆனது, அல்லது 1611-ல் வெளிவந்த கிங் ஜேம்ஸ் வர்ஷன் உட்பட பின்னர் வெளிவந்த அநேக மொழிபெயர்ப்புகள் இதையே ஆதாரமாகக் கொண்டிருந்தன.
சார்பாணுக்கும் கத்தோலிக்க சீர்திருத்த இயக்கத்திற்கும் போட்டி
ஐரோப்பா எங்கும் லூத்தரின் கொள்கைகளும் பிற சீர்திருத்தவாதிகளின் கொள்கைகளும் பரவிவர, கத்தோலிக்க சர்ச், மக்கள் வாசிப்பதைச் சீராக்குவதன் மூலம் அவர்கள் எண்ணத்தைக் கட்டுப்படுத்த நாடியது. ஜூன் 15, 1520-ல், “முரண் சமய கருத்துக்கள்” அடங்கிய எந்தவொரு புத்தகத்தையும் எந்தக் கத்தோலிக்க நாடெங்கும் அச்சடிக்கவோ விற்கவோ வாசிக்கவோ கூடாது என்ற ஆணையைப் பத்தாம் போப் லியோ பிறப்பித்தார்; மேலும் உலக அதிகாரங்கள் அந்த ஆணையைத் தங்கள் ஆட்சி எல்லைகளில் அமல்படுத்துமாறு கோரினார். இங்கிலாந்தில், அரசர் எட்டாம் ஹென்ரி தணிக்கை செய்யும் வேலையைக் கத்பர்ட் டண்ஸ்டல் என்ற கத்தோலிக்க பிஷப்பிடம் விட்டுவிட்டார். என்றபோதிலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியில், பாரிஸ் பல்கலைக்கழகத்திலுள்ள இறையியலர் குழுவாகிய சார்பாணே, போப்புக்கு அடுத்து கொள்கை விஷயத்தில் வாத எதிர்ப்பற்ற அதிகாரமாயிருந்தது.
வைதீக கத்தோலிக்கத்தின் கருத்து வெளியீடாக சார்பாண் இருந்தது. நூற்றாண்டுகளாக கத்தோலிக்க நம்பிக்கையின் கொத்தளமாக அது கருதப்பட்டு வந்தது. சார்பாணின் சென்ஸார் ஆட்கள் வல்கேட்டினுடைய எல்லா விமர்சன பதிப்புக்களையும் உள்நாட்டு மொழியில் தயாரிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளையும் எதிர்த்து, அத்தகைய புத்தகங்களை “சர்ச்சுக்குப் பயனற்றவை”யாக மாத்திரம் கருதாமல் “கெடுதி விளைவிப்பவை”யாகவும் கருதினார்கள். வேதாகம அதிகாரத்தின் ஆதாரமற்ற சர்ச் கொள்கைகளையும் ஆசாரங்களையும் மரபுரைகளையும் சீர்திருத்தவாதிகள் கேள்விக்கிடமாக்கும் சமயத்தில் இது ஆச்சரியமாயில்லை. என்றபோதிலும், சார்பாணைச் சேர்ந்த இறையியலர் பலர் பைபிளைத் திருத்தமாக மொழிபெயர்ப்பதைவிட சர்ச் மதிக்கும் கொள்கைகளை அதிமுக்கியமாகக் கருதினர். ஓர் இறையியலர் சொன்னார்: “கொள்கைகளைப் பெற்றுவிட்டால், ஒரு சுவர் கட்டப்பட்டதும் நீக்கப்படுகிற சாரத்தைப்போல வேதாகமங்கள் இருக்கின்றன.” அந்தக் குழு அங்கத்தினர்களில் பெரும்பான்மையர், எபிரெயுவையும் கிரேக்கையும் அறியாதவர்களாக இருந்தனர்; இருந்தாலும் பைபிளில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளின் மூல அர்த்தங்களை அலசியாராய்ந்த ஏட்டியெனின் ஆய்வுகளையும் பிற மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த வல்லுநர்களின் ஆய்வுகளையும் அலட்சியப்படுத்தினர். “கிரேக்க, எபிரெயுவைப் பற்றிய அறிவைப் பிரச்சாரம் செய்வது சகல மத அழிவையும் தூண்டுவிக்கும்,” என்று சார்பாண் பேராசிரியர் ஒருவர் துணிகரமாகச் சொல்லவுஞ்செய்தார்.
சார்பாண் தாக்குதல்கள்
ஏட்டியென் தயாரித்த வல்கேட்டின் ஆரம்ப பதிப்புகள் அந்தக் குழுவின் தணிக்கையாளர்களால் கவனியாமல் போனதென்றாலும், அது சர்ச்சைக்கு உள்ளாகாமல் இல்லை. 13-ம் நூற்றாண்டில், வல்கேட்டானது பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ பைபிளாகப் பரிசுத்தமாய்க் கருதப்பட்டது, அநேகருக்கு அதன் வாசகம் தவறில்லாததாக இருந்தது. வல்கேட்டைப் படைத்ததற்காக அந்தக் குழு, பெயர்பெற்ற வல்லுநராகிய இராஸ்மஸைக் கண்டிக்கவும் செய்தது. உள்ளூர் பாமர அச்சாளர் ஒருவர் அதிகாரப்பூர்வ வாசகத்தைத் திருத்திய துணிச்சலைக் கண்டு சிலர் திடுக்கிட்டார்கள்.
எதைக் காட்டிலும் ஏட்டியெனின் பக்கவோரக் குறிப்புகளே இறையியலரை மனக்கலக்கமடையச் செய்திருக்கலாம். அந்தக் குறிப்புகள் வல்கேட் வாசகத்தின் சட்டப்படியான ஒப்புதலின் பேரில் சந்தேகத்தைக் கிளப்பின. சில பகுதிகளைத் தெள்ளெனவாக்குவதற்கான ஏட்டியெனின் ஆவல், இறையியல் வட்டாரத்திற்குள் தலையிட்டதற்காகக் குற்றஞ்சாட்டப்படுவதில் விளைவடைந்தது. தன்னுடைய குறிப்புகள் வெறும் சிறு சுருக்கங்களாக அல்லது மொழியியல்பு உள்ளவையாய் இருப்பதாக வாதாடி அந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். உதாரணமாக, “நரகம்” [லத்தீனில், இன்-பர்னம் (infernum)] என்ற வார்த்தை பொல்லாதவர்களைத் தண்டிக்கிற இடமாக அங்குப் புரிந்துகொள்ள முடியாது என்று ஆதியாகமம் 37:35-ற்கான குறிப்பு விளக்கியது. ஆத்துமா அழியாமையையும் “புனிதவான்க”ளின் மத்தியஸ்தம் செய்யும் ஆற்றலையும் மறுத்தாரென அந்தக் குழு குற்றஞ்சாட்டியது.
என்றபோதிலும், ஏட்டியென் அரசரின் தயவையும் பாதுகாப்பையும் பெற்றிருந்தார். முதலாம் ஃபிரான்சிஸ் மறுமலர்ச்சிக் கால ஆய்வுகளில், குறிப்பாக அவருடைய அரசருக்கான அச்சாளரின் இலக்கியப் படைப்பில் பேரார்வம் காட்டினார். அறிக்கையின் பிரகாரம், முதலாம் ஃபிரான்சிஸ் ஏட்டியெனை விஜயமும் செய்தார்; ஒரு முறை, ஒரு வாசகத்திற்கு சில கடைசி நிமிட திருத்தங்களை ஏட்டியென் செய்கையில் அவருக்காகப் பொறுமையாகக் காத்திருக்கவும் செய்தார். அரசனின் ஆதரவோடு, ஏட்டியென் சார்பாணை எதிர்த்து நின்றார்.
இறையியலர் அவருடைய பைபிள்களுக்குத் தடை விதிக்கின்றனர்
என்றாலும், 1545-ல் நடந்த சம்பவங்கள் சார்பாண் குழுவினர் முழுக் கோபாவேசத்தையும் ஏட்டியென்மீது ஒருமுகப்படுத்தும்படி செய்தன. சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக ஒருங்கே நிற்பதன் பலனாக வரும் நன்மையைக் கண்டுணர்ந்து, கொலோன் (ஜெர்மனி)), லூவன் (பெல்ஜியம்), மேலும் பாரிஸ் ஆகிய கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் வைதீகமற்ற போதனைகளை தணிக்கை செய்வதில் ஒத்துழைக்க முன்னமே ஒப்புக்கொண்டன. லூவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இறையியலர், கண்டனம் செய்யப்பட்ட பாரிஸ் புத்தகப் பட்டியலில் ஏட்டியெனின் பைபிள்கள் காணப்படவில்லை என்ற தங்களது ஆச்சரியத்தைச் சார்பாணுக்கு எழுதித் தெரிவிக்கையில், தாங்கள் பார்த்திருந்தால் அவற்றைக் கட்டாயமாகக் கண்டித்திருப்பர் என்று சார்பாண் பொய்யான மறு உத்தரவு தந்தது. லூவன் குழுவும் பாரிஸ் குழுவும் சேர்ந்த அதிகாரக்குழு முதலாம் ஃபிரான்சிஸினுடைய அச்சாளரின் தவறுகளைக் குறித்து அவரைச் சம்மதிக்க வைக்க போதுமானதாயிருக்கும் என்று அந்தக் குழுவிலுள்ள ஏட்டியெனின் விரோதிகள் இப்போது நம்பியிருந்தனர்.
இதற்கிடையில், தன் விரோதியின் உத்தேசங்களைக் குறித்து எச்சரிக்கப்பட்டவராக, ஏட்டியெனே முதலில் அரசரிடம் சென்றார். இறையியலர் தாங்கள் கண்டுபிடித்த எந்தத் தவறுகளையும் பட்டியலிட்டுத் தந்தால், இறையியலரின் திருத்தங்களோடு இவற்றை அச்சடித்து, விற்கப்படும் ஒவ்வொரு பைபிளோடும் அவற்றைச் சேர்த்துக்கொள்வதில் தான் மனமுள்ளவராயிருப்பதாக ஏட்டியென் சொன்னார். இந்தப் பரிகாரம் அரசரின் தயவைச் சம்பாதித்தது. இந்த விஷயத்தைக் கவனிக்கும்படி அவர் ராஜாங்க பூசையின் பாட வாசகராகிய பீயர் டியு ஷாஸ்டெல் என்பவரைக் கேட்டுக்கொண்டார். அக்டோபர் 1546-ல், ஏட்டியெனின் பைபிள்கள் “நம் விசுவாசத்தை மறுதலிப்பவர்களுக்குப் போஜனமாகவும் நடப்பிலுள்ள . . . சமய மறுப்புக் கருத்துக்களை ஆதரிப்பதாகவும்” இருந்தன; மேலும் அவ்வளவு தவறுகள் இருந்ததால் அவை “அறவே இல்லாதபடிக்கு முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும்” என்று ஆட்சேபம் தெரிவித்து, டியு ஷாஸ்டெலுக்கு அந்தக் குழு எழுதியது. நம்பாதவராக, அரசர்தானே, ஏட்டியென் பைபிள்களுடன் அச்சடிக்கப்படக்கூடும்படி அந்தத் தவறுகளை எழுதித் தரும்படி அக்குழுவை இப்போது ஆணையிட்டார். இதைக் கட்டாயம் செய்வதாக அவர்கள் சொன்னார்கள், ஆனால் உண்மையில் அவர்கள், தவறுகளாக எண்ணியவற்றை விவரமாகப் பட்டியலிடுவதைத் தவிர்க்க எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார்கள்.
முதலாம் ஃபிரான்சிஸ் மார்ச் 1547-ல் மரித்தார், அவரோடே சார்பாணின் வல்லமைக்கு எதிராக இருந்த ஏட்டியெனின் அதிவல்லமை வாய்ந்த நட்பும் போனது. இரண்டாம் ஹென்ரி சிங்காசனத்தில் அமர்ந்தபோது, அந்தக் குழு அதன் தவறுகளைக் காட்டும்படியான தன்னுடைய தந்தையின் ஆணையை மறுபடியும் பிறப்பித்தார். எனினும், அரசியல் இலக்குகளை அடைய ஜெர்மானிய பிரபுக்கள் எவ்வாறு சீர்திருத்த இயக்கத்தைப் பயன்படுத்தி வந்தனர் என்பதைக் கவனித்து, இரண்டாம் ஹென்ரி பிரான்ஸைக் கத்தோலிக்கமயமாகவும் அதன் புதிய அரசரின்கீழ் ஐக்கியமாகவும் வைப்பதைக் காட்டிலும் அரசருக்கான அச்சாளராயிருந்தவரின் பைபிள்களில் இருப்பதாக எண்ணிய அனுகூலங்களை அல்லது பிரதிகூலங்களைப் பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை. டிசம்பர் 10, 1547-ல், இறையியலர் தவறுகள் அடங்கிய தங்கள் பட்டியலைத் தரும்வரை ஏட்டியென் பைபிள்கள் விற்பனைக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று அரசப் பேரவை முடிவெடுத்தது.
சமயபேதமுள்ளவரென குற்றஞ்சாட்டப்படுவது
சமய மறுப்பு வழக்குகளைக் கையாள புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட விசேஷ கோர்ட்டினிடம் ஏட்டியெனின் வழக்கை ஒப்படைக்க அந்தக் குழு இப்போது வழிவகையை நாடியது. ஏட்டியெனுக்கு இருந்த அபாயத்தை உணர்த்த நினைப்பூட்டுதலே தேவையில்லை. அந்தக் கோர்ட் ஸ்தாபிக்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில், அது ஷான்ப்ரா ஆர்டான்ட் (chambre ardente) அல்லது “எரியும் அறை” என்றழைக்கப்படலானது. ஏட்டியெனின் வாசலிலிருந்து ஒருசில நிமிடங்கள் நடந்துபோனால் இருக்கும் ப்லாஸ் மொபெர் என்ற இடத்தில், உயிரோடு எரிக்கப்பட்ட சில அச்சாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் அடங்கலாக, சுமார் 60 பலியாட்கள் மரத்தில் அறையப்பட அனுப்பப்பட்டனர். ஏட்டியெனுக்கு விரோதமாக ஏதாவது நூலிழை அளவான சாட்சியம் கிடைக்குமா என்று பார்ப்பதற்கு அவருடைய வீடு திரும்பத்திரும்ப சோதனையிடப்பட்டது. 80-க்கும் மேலான சாட்சிகள் வினவப்பட்டனர். அவரைச் சமயபேதமுள்ளவராகக் குற்றஞ்சாட்டினால், அவருடைய சொத்தில் நான்கு பங்கு இனாமாகக் கொடுக்கப்படும் என்று தகவலறிவிப்பவர்கள் உறுதியளிக்கப்பட்டனர். இப்பொழுதும் அவர்களுக்கிருக்கும் ஒரே அத்தாட்சியானது ஏட்டியென் வெளியரங்கமாகத் தன் பைபிள்களில் அச்சடித்திருப்பதாகும்.
அந்தக் குழுவின் தணிக்கைகளடங்கிய பட்டியல் தன்னுடைய அரசப்பேரவைக்கு ஒப்படைக்கும்படி அரசர் திரும்பவும் ஆணையிட்டார். அடக்கமுடியாதவர்களாக, ‘இறையியலர், ஒன்றைச் சமய மறுப்பாக கருதுவதற்கான காரணங்களை எழுத்தில் தரும் பழக்கமில்லை என்றும் அதற்கு மாறாக, பேச்சினால் மாத்திரம் மாறுத்தரம் அளிக்கையில் ஒருவர் நம்பித்தான் ஆகவேண்டும், இல்லையெனில் எழுதுவதற்கு முடிவேயில்லை என்றும்’ அந்தக் குழு பதிலளித்தது. ஹென்ரி சம்மதித்தார். இறுதியான தடையானது விதிக்கப்பட்டது. எப்பொழுதும் இல்லாமல் ஏட்டியென் எழுதிய கிட்டத்தட்ட எல்லா பைபிள் புத்தகமும் கண்டனத்திற்குள்ளாயின. ப்லாஸ் மொபெர் என்ற இடத்தின் தணல்களைத் தப்பியபோதிலும், தன்னுடைய பைபிள்கள் முழுமையாகத் தடை விதிக்கப்பட்ட சூழ்நிலையில் மேலுமான தொல்லைகளுக்கான சாத்தியத்தை எண்ணி, பிரான்ஸை விட்டு வெளியேற முடிவெடுத்தார்.
நாட்டை விட்டு வெளியேறிய அச்சாளர்
நவம்பர் 1550-ல், ஏட்டியென் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஜெனிவாவுக்கு மாறிச் சென்றார். வல்கேட்டைத் தவிர வேறெந்தப் பைபிள் பிரசுரிப்பையும் அந்தக் குழு சட்டப்பூர்வமற்றதாகச் செய்தது. தனக்கு இஷ்டப்பட்டதைப் பிரசுரிக்கும் உரிமையுடையவராக இப்போது, தன்னுடைய கிரேக்க ‘புதிய ஏற்பாட்டை’ 1551-ல் மறுபதிப்பு செய்தார், இரண்டு லத்தீன் மொழிபெயர்ப்புகளை (வல்கேட்டையும் இராஸ்மஸினுடையதும்) இணையான பத்திகளில் மறுபதிப்பு செய்தார். 1552-ல் இராஸ்மஸின் லத்தீன் வாசகத்திற்கு இணையாகக் கிரேக்க வேதாகமங்களின் பிரெஞ்சு மொழிபெயர்ப்போடு இதைப் பின்தொடர்ந்தார். இந்த இரு பதிப்புகளிலும் ஏட்டியென் பைபிள் வாசகத்தை எண்ணிடப்பட்ட வசனங்களாகப் பகுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்—இந்த முறையே இன்று எங்கும் உபயோகிக்கப்படுகிறது. வசன பகுப்புக்கு வித்தியாசப்பட்ட வழிவகைகளை மற்ற ஆட்கள் ஏற்கெனவே முயற்சி செய்திருந்தபோதிலும், ஏட்டியெனுடையது ஏற்கப்பட்ட முறையாக ஆனது. 1553-ல் பிரசுரிக்கப்பட்ட பிரெஞ்சு பைபிளே அவருடைய வசன பகுப்புகளை அளிக்கும் முதல் முழு பைபிளாகும்.
1557-ல் ஏட்டியென் பிரசுரித்த இரு-மொழிபெயர்ப்பு லத்தீன் பைபிளானது, எபிரெய வேதாகமங்கள் முழுவதும் யெஹோவா என்ற கடவுளின் தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்துவதற்கும் பெயர்பெற்றிருக்கிறது. எபிரெய நான்கெழுத்துச் சொல்லுக்குப் (יהוה) பதிலாக அதோனை (ʼAdho·naiʹ) என்ற சொல் யூத மூடநம்பிக்கையின் பேரிலேயே சார்ந்திருந்ததால் விலக்கப்பட வேண்டும் என்று இரண்டாம் சங்கீதத்தின் பக்கவோரத்தில் குறிப்பிட்டார். இந்தப் பதிப்பில், ஏட்டியென் எபிரெயுவின் கருத்தை முழுமையாக்குவதற்கு சேர்க்கப்பட்ட லத்தீன் வார்த்தைகளை குறிப்பதற்காகச் சாய்வெழுத்துக்களைப் பயன்படுத்தினார். இந்தச் சம்பிரதாயம் பிற பைபிள்களில் பின்னர் ஏற்கப்பட்டது, அழுத்தத்தைக் காட்டுவதற்கு சாய்வெழுத்துக்களைப் பயன்படுத்தும் நவீன உபயோகத்திற்கு பழக்கப்பட்டுப்போன இன்றைய வாசகருக்கு இம்மரபு அடிக்கடி வியக்க வைப்பதாக இருந்திருக்கிறது.
தான் கற்ற காரியங்களைப் பிறருக்கும் கிடைக்கச் செய்ய உறுதிபூண்டவராக, ஏட்டியென் பரிசுத்த வேதாகமத்தை வெளியிட தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தார். இன்று கடவுளுடைய வார்த்தையை மதிக்கும் ஆட்கள், அவருடைய முயற்சிகளுக்காகவும் மூலப்பிரதியில் எழுதியிருக்கிறபடி பைபிளிலுள்ள வார்த்தைகளை வெளிப்படுத்த சிரமப்பட்டு பிரமப்பிரயத்தனம் செய்த பிற ஆட்களின் உழைப்புக்காகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். பழமையான மொழிகளைப் பற்றிய மேலும் திருத்தமான அறிவைப் பெற்று, கடவுளுடைய வார்த்தையின் புராதனமான, அதிதிருத்தமான கையெழுத்துப் பிரதிகளைக் கண்டுபிடிக்கையில் அவர்கள் துவக்கிவைத்த செய்முறை தொடருகிறது. தன் மரணத்திற்குச் சற்று முன்பாக (1559), ஏட்டியென் கிரேக்க வேதாகமங்களின் புதிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தார். “அதை யார் வாங்குவார்? அதை யார் வாசிப்பார்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. அவர் நம்பிக்கையோடு பதிலளித்தார்: ‘தேவபக்தியுள்ள எல்லா கல்வியறிவுள்ள மனிதர்களும்.’
[அடிக்குறிப்புகள்]
a மேலும் அவருடைய லத்தீன் பெயராகிய ஸ்டெஃப்பனஸ் என்பதாலும் அவருடைய ஆங்கில வடிவ பெயராகிய ஸ்டீவன்ஸ் என்பதாலும் அவர் அறியப்பட்டிருந்தார்.
[பக்கம் 10-ன் படம்]
ராபெர் ஏட்டியெனின் முயற்சிகள் பல தலைமுறை அடங்கிய பைபிள் மாணாக்கருக்கு உதவியிருந்திருக்கின்றன
[பக்கம் 12-ன் படம்]
ஏட்டியெனின் படிப்பினை அளிக்கிற படங்கள் பல தலைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன
[படத்திற்கான நன்றி]
Bibliothèque Nationale, Paris