நீங்கள் எப்படி வழிபடுகிறீர்கள் என்பது முக்கியத்துவமுடையதா?
அந்தச் சிறிய ஆப்பிரிக்க நகரம் உச்சி வெயிலில் காய்ந்துகொண்டிருக்கிறது. அருகாமையிலுள்ள ஒரு பள்ளத்தாக்கிலிருந்து ஆவேசமான கொட்டுமேளம், பாடல், மற்றும் ஆரவார கைத்தட்டலின் சத்தத்தைக் கேட்கலாம். ஆனால் இது எந்தச் சமூக நிகழ்ச்சியும் அல்ல. இது பாரம்பரிய ஆப்பிரிக்க வழிபாடு. என்றாலும், இந்த ஒலிகள் அருகேயுள்ள ஒரு காரிஸ்மாட்டிக் சர்ச்சிலிருந்து வரும் வெறுப்பூட்டும் ஒலியோடு போட்டியிடுகின்றன. அங்கு பரவசமடையும் வணக்கத்தார் அற்புதகரமான “குணப்படுத்தல்கள்” செய்து, பல பாஷைகளில் பேசுகின்றனர். நகரத்தின் மறுமுனையில் மற்றுமொரு வழிபாட்டு வகை இருக்கிறது. சக முஸ்லீம் வணக்கத்தாரை, தொழும்படி அழைக்கும் இஸ்லாமிய தொழுகை அழைப்பாளருடைய உரத்தக் குரல் கேட்கிறது.
ஆம், அநேக ஆப்பிரிக்க மாநகரங்களிலும் நகரங்களிலும் மத பக்தியை பல்வேறு வகைகளில் காணலாம். பல தலைமுறைகளாக ஆப்பிரிக்கர் தங்கள் சொந்த மத பாரம்பரியங்களைப் பின்பற்றுவதில் திருப்தியாய் இருந்தனர். ஆனால், பின்னர் வெவ்வேறு ஐரோப்பிய தேசங்களின் படைகளைப் பின்பற்றிக்கொண்டு கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் வந்தனர்; கருணையற்றவிதத்தில் எல்லாரையும் “கிறிஸ்தவர்களாக்க” முயன்றனர்—அவர்களுடைய பெயர்களை மாற்றவும் முற்பட்டனர்.
அதன் விளைவு? பாரம்பரிய ஆப்பிரிக்க நம்பிக்கைகளும் பழக்கங்களும் இறக்குமதி செய்யப்பட்ட மத நம்பிக்கைகளோடு கலந்த ஒரு வகையான மதம். இந்நாள் வரையாக அநேக “கிறிஸ்தவ” வணக்கத்தார் பாரம்பரிய மந்திரப் பொருட்களையும் தாயத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். என்றாலும், கிறிஸ்வமண்டல மிஷனரிகள் பேரளவில் உண்மை கிறிஸ்தவத்தைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்து, வெறுக்கத்தக்க மரபுரிமையை விட்டுச்சென்றனர். இன்று சில ஆப்பிரிக்கர் மத்தியில் நிலவும் பைபிளிடமாக மனதை மூடிக்கொள்ளும் மனநிலைக்கு அவர்களே பெரிதும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
என்றபோதிலும், ‘கிறிஸ்தவத்தின்’ பல வகைகள் இன்னும் பரவலாக புழக்கத்திலிருக்கின்றன. சமீப வருடங்களில், காரிஸ்மாட்டிக் மதத் தொகுதிகள் குறிப்பாகப் பிரபலமாகி இருக்கின்றன; விசுவாச-சுகமளிக்கும் சர்ச்சுக்கள் பெருகியிருக்கின்றன. செய்தித்தாள் எழுத்தாளர் ஒருவர் இந்தச் சர்ச்சுக்கள் ஏற்கப்படுவதற்கான காரணத்தை ‘மதத்தைப் பற்றிய ஆப்பிரிக்க கருத்து பெரும்பாலும் பயனீட்டுக் கொள்கையைச் சார்ந்தது,’ என்று குறிப்பிடுவதன்மூலம் விளக்கினார். ‘ஆப்பிரிக்க மனதுக்கு, மதம் என்பது மனித வாழ்க்கைக்கு நேரடியான பொருள்சம்பந்தமான திருப்தியைக் கொடுக்கமுடிகிறதாய் இருக்கவேண்டும். ஆகவே, ஏறக்குறைய எல்லாவற்றிலும் ஆவிக்குரிய ஏதுக்கள் அத்தியாவசியமானவை என நம்பும் ஆப்பிரிக்கனுக்கு, ஆன்மீக [அல்லது விசுவாச-சுகமளிக்கும்] சர்ச்சுக்களின் செயல்முறை, அவனுடைய வாழ்க்கை முறையின் தேவைகளுக்கு இசைவானதாக இருக்கிறது.’ என்றாலும், வருத்தகரமாக, அநேக காரிஸ்மாட்டிக் சர்ச்சுக்கள் பணம் திரட்டும் நிறுவனங்களேயாகும் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
இன்று, 6,000-ற்கும் மேலான மத உட்பிரிவுகள் ஆப்பிரிக்காவில் செயல்படுகின்றன. இந்த எல்லா மதங்களும் மத உட்பிரிவுகளும் இரட்சிப்பிற்கான திறவுகோலைக் கொண்டிருக்கின்றன என்று நீங்கள் ஒருவேளை உணர்ந்திருக்கலாம். ஆனால் நிஜமான கேள்வி என்னவென்றால், கடவுள் எப்படி உணருகிறார்?
வெறுமனே எந்தவொரு மதமும் கடவுளைப் பிரியப்படுத்த முடியுமா?
நிச்சயமாகவே, இதைக் குறித்து நமக்கு எந்த வழிநடத்துதலும் இல்லாமல் சர்வலோக சிருஷ்டிகர் நம்மை விட்டுவிடமாட்டார். (ஆமோஸ் 3:7; அப்போஸ்தலர் 17:26, 27) கடவுளுடைய வழிநடத்துதலை பைபிளில் காணமுடியும் என்பதற்கான அத்தாட்சி மேலோங்கி நிற்கிறது. இல்லை, சிலர் அழைப்பதுபோல், பைபிள் வெள்ளையனின் புத்தகம் அல்ல. உண்மையில், எந்த மனிதனும்—வெள்ளையனோ கறுப்பனோ—அதற்கான பெயரை எடுத்துக்கொள்ள முடியாது. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது,” என்று 2 தீமோத்தேயு 3:16 சொல்கிறது. பைபிளின் உண்மையுள்ள, நடைமுறையான போதனைகள், அதன் தொல்பழமை, கடுமையான தாக்குதல்களுக்கு எதிரிலும் அது தொடர்ந்து நிலைத்திருப்பது, அதன் துல்லியமான தீர்க்கதரிசனங்கள் மற்றும் ஒப்பிடப்படமுடியாத உலகளாவிய விநியோகம்—இவை கடவுளே அதன் நூலாசிரியர் என்பதற்குத் தெளிவான அத்தாட்சிகளாகும்.
அந்தப் புத்தகம் நமக்கு எதைக் கற்பிக்கிறது? ஒரு காரியம் என்னவென்றால், ஒரே ஒரு ‘மெய் தேவனே’ இருக்கிறார் என்று அது நமக்குச் சொல்லுகிறது. (யோவான் 17:3) அவ்வாறு இருக்கையில், எல்லா மதங்களிலும் எப்படி உண்மை இருக்கமுடியும்? கடவுள் யார் மற்றும் அவருடைய இயல்பைப்பற்றிய காரியங்களில்தானே மத தொகுதிகள் ஒன்றோடொன்று முரண்படுகின்றன அல்லவா? பைபிள் எழுத்தாளர் யாக்கோபு, “தூய்மையும் உண்மையுமான மதம்” பற்றி பேசினார். (யாக்கோபு 1:27, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) உண்மை மதத்தை அடையாளம் காண்பதற்கான தேவை இருந்தால், பொய் அல்லது போலி மதமும் இருக்கவேண்டும். எல்லா மதங்களும் கடவுளை அணுகுவதற்கான வித்தியாசமான வழிகளே என்ற கருத்துக்கு இது முரண்படுவதாக இருக்கும்.
வழிபாட்டிற்கான சிருஷ்டிகரின் தராதரங்கள்
கடவுளை வழிபடுவதற்கான சரியான வழி என்ன? உண்மையான வணக்கம் திருத்தமான அறிவில் வேரூன்றப்பட்டதாய் இருக்கிறதென்று பைபிள் நமக்குப் போதிக்கிறது. பெரிய தீர்க்கதரிசியாகிய இயேசு கிறிஸ்து ஒருமுறை ஒரு சமாரிய பெண்ணிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்.” (யோவான் 4:22) ஒருவேளை, உங்களைக் குறித்ததிலும் இது உண்மையாக இருக்கக்கூடுமா? சர்வவல்லமையுள்ள கடவுளின் தனிப்பட்ட பெயர் யெகோவா என்பதாக நீங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்களா? (சங்கீதம் 83:17) மனிதனையும் பூமியையும் குறித்து அவருடைய நோக்கங்கள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? (மத்தேயு 6:9, 10; எபேசியர் 1:9, 10; 3:9) உங்கள் மதம் ஒரு மேம்பட்ட எதிர்காலத்திற்கான நிஜமான நம்பிக்கையை அளிக்கிறதா? மேலும் நீங்கள் உங்களை ஒரு கிறிஸ்தவராகக் கருதினால், உங்களுடைய நம்பிக்கைகளை வேத எழுத்துக்களிலிருந்து விளக்க முடியுமா, அல்லது அவை உங்களால் ஆராயப்படாத, வெறுமனே உங்களிடம் கடத்தப்பட்ட மரபுரிமையாக இருக்கின்றனவா?
நீங்கள் திருத்தமான அறிவில் குறைவுபடுவதாகக் கண்டால், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் படிப்பதன்மூலம் அதைப் பெறலாம். அந்தப் பரிசுத்த புத்தகம் என்ன போதிக்கிறது என்பதைத் தம்முடைய உண்மை வணக்கத்தார் நன்கு அறிந்திருக்கவேண்டும் என்று யெகோவா தேவன் எதிர்பார்க்கிறார். அதற்கும் மேலாக, அவர்கள் அதைத் தங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பின்வருமாறு சொன்ன சங்கீதக்காரனுடைய மனநிலையைப்போன்று நம்முடையதும் இருக்கவேண்டும்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105) பைபிளைப் பற்றி அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் உங்கள் மதம் எந்தளவுக்கு உங்களுக்கு உதவியிருக்கிறது?
உண்மை வணக்கத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இயேசு கிறிஸ்துவை ஒரு பெரிய தீர்க்கதரிசியாக மட்டுமல்லாமல், கடவுளுடைய ஒரேபேறான குமாரன் என்று விசுவாசிப்பதாகும். இயேசுவை “ஜீவாதிபதி” என்று வேத எழுத்துக்கள் தெளிவாக அறிவிக்கின்றன. (அப்போஸ்தலர் 3:15; 4:12) அநேகர் இயேசுவில் விசுவாசம் வைத்திருப்பதாக உரிமைபாராட்டுகின்றனர்; ஆனால் அவர்களுடைய விசுவாசம் எவ்வளவு நிஜமானது? கிறிஸ்துவில் உண்மையான விசுவாசம், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை உட்படுத்துகிறது. இவ்வாறு அறிவித்தபோது கடவுள்தாமே இதை உற்சாகப்படுத்தினார்: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்.” (மாற்கு 9:7) இவ்வாறாக உண்மை வணக்கத்தார் இயேசுவின் அடிச்சுவடுகளை முடிந்தளவுக்கு நெருக்கமாகப் பின்பற்றி நடக்க முயலுகின்றனர். (1 பேதுரு 2:21) அவர்கள் அதைச் செய்கிற ஒரு வழி என்னவென்றால், அவர் தொடங்கி வைத்த வெளிப்படையான பிரசங்க வேலையில் ஈடுபடுவதன் மூலமாகும். (மத்தேயு 4:17; 10:5-7) இந்த வேலையில் ஒரு தனிப்பட்ட பங்கைக் கொண்டிருக்கும்படி உங்களுடைய மதம் உங்களை உற்சாகப்படுத்துகிறதா?
உண்மையான வணக்கத்திற்கு அன்பும் தேவையான ஓர் அம்சமாகும். யெகோவா தேவன் அன்பின் உருவாகவே விளக்கப்படுகிறார்; மேலும் இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம், அவர்கள் தங்களுக்குள் காண்பிக்கிற அன்பினால் அடையாளம் கண்டுகொள்ளப்படுவார்கள் என்று கூறினார். (யோவான் 13:34, 35; 1 யோவான் 4:8) இன்று கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டும் பல லட்சக்கணக்கான மக்களை எண்ணிப்பார்க்கையில், உலகம் நடைமுறையில் அன்பு ததும்பியதாய் இருக்கவேண்டும் அல்லவா? இருந்தாலும், நிஜத்தில், நம் உலகம் மிகவும் அன்பற்ற ஓர் இடமாக நிரூபித்திருக்கிறது. இந்த நூற்றாண்டில் மட்டுமே போர்கள் லட்சக்கணக்கான உயிர்களை மாய்த்திருக்கிறது. குற்றச்செயலும் வன்முறையும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. ஆகவே உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், ‘எல்லாரும் என்னுடைய மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், உலகம் இன்னுமதிக அன்பான ஓர் இடமாக இருக்குமா?’
கடைசியாக, கடவுளை அறியாத உலகிலிருந்து உண்மை வணக்கத்தார் பிரிந்திருக்கவேண்டும் என்று பைபிள் காண்பிக்கிறது. தூய வணக்கத்தின் பொறுப்பாளராக பண்டைய இஸ்ரவேல் தேசத்தைத் தனியாகக் கடவுள் பிரித்து வைத்தபோது, அவர்களைச் சுற்றியிருந்த தரக்குறைவான தேசங்களுடன் நெருங்கிய கூட்டுறவைத் தவிர்க்கும்படி கடவுள் தம்முடைய மக்களை எச்சரித்தார். (உபாகமம் 7:1-6) யோவான் 17:16-ல் கிறிஸ்து இயேசு அதேவிதமாகவே தம்மைப் பின்பற்றியவர்களிடம் கூறினார்: “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” கடவுளின் உண்மை வணக்கத்தார், அரசியல், ஒழுக்கயீனம், பேராசைமிக்க வியாபாரம், அல்லது கடவுளை அவமதிக்கும் எந்தத் தத்துவங்களிலும், எவ்வித பாகத்தையும் கொண்டிருக்கமாட்டார்கள். (யோவான் 18:36; 1 யோவான் 2:15-17) அவர்கள் ரோமர் 12:2-லுள்ள இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” இருங்கள். இதையே நீங்கள் செய்யும்படி உங்களுடைய மதம் உங்களை உற்சாகப்படுத்துகிறதா?
உதவி கிடைக்கிறது
ஆம், நீங்கள் வழிபடும் விதம் உண்மையிலேயே கடவுளுக்கு முக்கியத்துவமுள்ளதாய் இருக்கிறது. அவரைப் பொறுத்தவரையில், ஒரேவொரு உண்மை மதமே இருக்கிறது. (எபேசியர் 4:4-6) நம்முடைய சுருக்கமான கலந்தாராய்வு பைபிள் போதனையின் சில அடிப்படை குறிப்புக்களை கவனித்திருக்கிறது. ஏன் அதிகத்தைக் கற்றுக்கொள்ள முயலக்கூடாது?
உங்களுடைய மதப் பின்னணி என்னவாக இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகள் இதைக் குறித்ததில் உங்களுக்கு உதவுவார்கள். அவர்கள் தங்களுடைய மும்முரமான பைபிள் போதிக்கும் வேலைக்காக உலகளாவ அறியப்பட்டிருக்கின்றனர். எல்லா இன மற்றும் மதப் பின்னணிகளிலுள்ள மக்களும் பைபிளைப்பற்றி ஆழமான புரிந்துகொள்ளுதலை அடைய உதவுவதற்குக் கடமைப்பட்டவர்களாக தங்களைக் கருதுகின்றனர். (நீதிமொழிகள் 2:1-6) நன்கு ஆராயப்பட்ட பைபிள் பிரசுரங்களைப் பிரசுரிக்கின்றனர்.a உண்மையில், உங்களுக்கு தனிப்பட்ட விதத்தில் இலவசமாக பைபிளைக் கற்பிக்கும்படி உங்கள் வீட்டிற்குக்கூட வருவார்கள். இந்த பைபிள் போதனா திட்டத்தால், உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் தற்போது பயன்பெறுகின்றனர். நீங்களும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? உண்மையில், அவ்வாறு செய்வது அத்தியாவசியமானது, ஏனென்றால் நீங்கள் எப்படி வழிபடுகிறீர்கள் என்பது உண்மையில் முக்கியத்துவமுடையது.
[அடிக்குறிப்புகள்]
a 1990-ல், உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட கடவுளுக்காக மனிதவர்க்கம் தேடுதல் (Mankind’s Search for God) அப்படிப்பட்ட பிரசுரங்களில் ஒன்றாகும். உலகின் முக்கியமான மதங்களைப்பற்றிய புத்திக்கூர்மையுள்ள, அறிவாற்றல்மிக்க அதன் கலந்தாராய்வை அநேக மக்கள் பாராட்டியிருக்கின்றனர்.
[பக்கம் 5-ன் படம்]
கிறிஸ்வமண்டல மிஷனரிகள் பேரளவில் உண்மை கிறிஸ்தவத்தைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்தனர்
[பக்கம் 5-ன் படம்]
அநேக காரிஸ்மாட்டிக் சர்ச்சுக்கள் பணம் திரட்டும் நிறுவனங்களேயாகும்
[பக்கம் 6-ன் படம்]
இயேசுவில் விசுவாசம் உண்மை வணக்கத்தின் ஒரு முக்கிய பாகமாகும்
[பக்கம் 7-ன் படம்]
இலவச வீட்டு பைபிள் படிப்புகள் மூலமாக திருத்தமான அறிவைப் பெறுவதற்கு யெகோவாவின் சாட்சிகள் லட்சக்கணக்கானோருக்கு உதவிசெய்கின்றனர்