மதம் உங்கள் தேவைகளை நிறைவுசெய்கிறதா?
காற்று, தண்ணீர், உணவு, தங்குமிடம்—இவை மனித தேவைகள் என்று எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவை இல்லாவிட்டால் நீங்கள் அத்தியாவசிய தேவைகளின் இழப்பையும் மரணத்தையும் எதிர்ப்படுவீர்கள். என்றாலும், வெகு காலத்திற்கு முன், இஸ்ரவேல தலைவராகிய மோசே, உணவையோ தண்ணீரையோவிட அதிக முக்கியமான மற்றொரு மனித தேவைக்குக் கவனத்தை ஈர்த்தார். மோசே சொன்னார்: “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, [யெகோவாவுடைய, NW] வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”—உபாகமம் 8:3.
இந்த அறிவாழமுள்ள வார்த்தைகளின்மூலம், மோசே நம்முடைய மதம்சார்ந்த அல்லது ஆவிக்குரிய தேவைகளை நிறைவுசெய்வதன் முக்கியத்துவத்தைக் காண்பித்தார். நம் வாழ்க்கையே அவற்றைத் திருப்திசெய்வதில் சார்ந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்! இஸ்ரவேலர் தங்களுடைய 40-வருட வனாந்தர பயணத்தின்போது, சொல்லர்த்தமாகவே ‘யெகோவாவின் வாயிலிருந்துவந்த வார்த்தைகளால்’ வாழ்ந்தனர். மற்றபடி சாவுக்கேதுவானதாக இருந்திருக்கக்கூடிய ஓர் அனுபவத்தை அவர்கள் தப்பிப்பிழைத்தனர். கடவுளுடைய கட்டளையின்படி, மன்னா எனப்பட்ட உணவு வானங்களிலிருந்து அற்புதகரமாக விழுந்தது. அவர்களுடைய தாகத்தைத் தீர்ப்பதற்கு பாறைகளிலிருந்து தண்ணீர் வந்தது. ஆனால் அவர்களுடைய சரீரப்பிரகாரமான தேவைகளைக் கவனிப்பதைவிட அதிகத்தைக் கடவுள் செய்தார். மோசே சொன்னார்: “ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார்.”—உபாகமம் 8:4, 5; யாத்திராகமம் 16:31, 32; 17:5, 6.
இஸ்ரவேலர், ஒழுக்கச் சம்பந்தமாகவோ மதச் சம்பந்தமாகவோ எது சரி அல்லது எது தவறு என்பதைத் தாங்களாகவே கண்டுபிடிப்பதற்கு விடப்படவில்லை. அவர்கள் கடவுளிடமிருந்தே வழிநடத்துதலைப் பெற்றார்கள். அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தை அவர் கொடுத்தார்; அது ஓர் ஆரோக்கியமான உணவுதிட்ட முறையை, ஒரு கண்டிப்பான சுகாதார சட்டத் தொகுப்பை, குறைவற்ற ஒழுக்க மற்றும் மத நியமங்களை வரையறுத்த குறிப்பிடத்தக்க சட்டத் தொகுப்பாக இருந்தது. ஆகவே, கடவுள் இஸ்ரவேலின் உடல்நலத்தையும் ஆவிக்குரிய நலத்தையும் கவனித்துக்கொண்டார். அவர்கள் ‘யெகோவாவின் வாயிலிருந்துவந்த வார்த்தைகளால்’ வாழ்ந்தார்கள்.
இவ்வாறு இஸ்ரவேல் மற்ற தேசங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நின்றது. மோசேயின் நாளில், எகிப்து தலைசிறந்த உலக வல்லரசாக ஆட்சிசெய்தது. அது மிகவும் மதப்பற்றுள்ள தேசமாக இருந்தது. உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “பல்வேறு தெய்வங்கள் (தேவர்களும் தேவதைகளும்) இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு மனித செயலையும் செல்வாக்கு செலுத்தியதாக பண்டைய எகிப்தியர் நம்பினர். ஆகவே அவர்கள் பல தெய்வங்களை வழிபட்டனர். . . . ஒவ்வொரு எகிப்திய மாநகரத்திலும் நகரத்திலும், பிரதான தெய்வங்களோடுகூட தங்களுடைய சொந்த விசேஷித்த தெய்வத்தை மக்கள் வழிபட்டனர்.”
இந்தப் பல-தெய்வ வழிபாடு எகிப்தியரின் ஆவிக்குரிய தேவைகளை நிறைவுசெய்ததா? இல்லை. எகிப்து, மூட நம்பிக்கைகளிலும் தரங்கெட்ட பாலுறவு பழக்கங்களிலும் ஊறிப்போன தேசமாக ஆனது. வாழ்க்கையையும் உடல்நலத்தையும் முன்னேற்றுவிப்பதற்கு மிகவும் மாறாக, எகிப்திய வாழ்க்கைமுறை ‘கொடிய நோய்களுக்கு’ வழிநடத்தியது. (உபாகமம் 7:15) ‘நரகலான விக்கிரகங்கள்’ என்பதாக அழைத்து, எகிப்தின் கடவுட்களைப்பற்றி பைபிள் அருவருப்புடன் பேசியதில் ஆச்சரியமேயில்லை.—எசேக்கியேல் 20:7, 8.
அதேபோன்ற நிலைமை இன்று நிலவுகிறது. அநேக மக்கள் ஏதோ ஒரு வகையான மதச் சார்பான விசுவாசத்தையாவது உடையவர்களாய் இருக்கின்றனர்; சிலரே தங்களை கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். என்றாலும், தெளிவாகவே, மதம் பொதுவாக மனிதகுலத்தின் ஆவிக்குரிய தேவைகளைத் திருப்திசெய்ய தவறியிருக்கிறது. மக்கள் உண்மையிலேயே “கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்” வாழ்ந்துவந்தால், போர், இன வேறுபாடு, பட்டினி, கடுமையான வறுமை ஆகிய பிரச்னைகள் இன்று இருக்குமா? நிச்சயமாகவே இருக்காது! அப்படியிருந்தும், சில மக்களே தங்கள் மதத்தை மாற்றுவது பற்றி யோசிப்பார்கள். ஏன், சிலர் மதத்தைப் பற்றி கலந்துபேச அல்லது புதிய மதக் கருத்துக்களுக்குக் கவனம் செலுத்துவதற்குக்கூட மனமில்லாதவர்களாய் இருக்கிறார்கள்!
உதாரணமாக, மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கானாவைச் சேர்ந்த ஒரு மனிதன், கிறிஸ்தவ ஊழியர் ஒருவரிடம் இவ்வாறு சொன்னார்: “கடவுள்தாமே தம்மை யூதர்களுக்கு, அவர்களுடைய தீர்க்கதரிசிகள் மூலமாக வெளிப்படுத்தியதுபோல, ஆப்பிரிக்கர்களாகிய எங்களுக்குச் சக்தியுள்ள எங்களுடைய மதக் குருக்கள் மற்றும் பெண் மதக் குருக்களின் மூலமாகத் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். ஆப்பிரிக்கர்களாகிய எங்களில் சிலர் எங்கள் சொந்த மதக் குருக்களை அங்கீகரிப்பதற்குப் பதிலாக இயேசு, முகம்மது, இன்னும் மற்றவர்களைப் பற்றி பேசுவது வருந்தத்தக்க ஒரு காரியம்.”
அநேக பாரம்பரிய ஆப்பிரிக்க சமுதாயங்களில், கிறிஸ்தவம் வெள்ளையனின் மதமாக—நன்மையைக்காட்டிலும் அதிக தீமையையே செய்திருக்கிற இறக்குமதி செய்யப்பட்ட ஓர் ஒழுங்கமைப்பாக நோக்கப்படுகிறது. ஆனால் மனதை மூடிக்கொள்ளும் ஒரு மனநிலை உங்கள் ஆவிக்குரிய தேவைகளை நிறைவுசெய்யும் முயற்சிகளுக்கு உதவி செய்யுமா அல்லது தடை செய்யுமா? ஆப்பிரிக்க பழமொழி ஒன்று சொல்கிறது: “நீங்கள் பசியாக இருப்பதன் காரணமாக உங்கள் இரு கைகளையும் உணவு கோப்பையினுள் முக்குவதில்லை.” அப்படிப்பட்ட உணவு பழக்கம், பண்பற்றதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறது—முக்கியமாக அந்தக் கோப்பையினுள் என்ன இருக்கிறது என்று நீங்கள் அறியாதிருந்தால்! இருந்தாலும், அநேகர் கவனமான ஆராய்வின் அடிப்படையில் தங்கள் மதத்தைத் தேர்ந்தெடுக்காமல், உணர்ச்சி அல்லது குடும்ப பாரம்பரியத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கின்றனர்.
உங்கள் ஆவிக்குரிய தேவைகளை நிறைவுசெய்யும் வழிபாடு “உங்களுடைய நியாயம் காணும் திறனுடன் செய்யப்பட்ட ஒரு பரிசுத்த சேவை”யாக இருக்கவேண்டும். (ரோமர் 12:1, NW) அது தகவலறிந்த, புத்திக்கூர்மையுள்ள ஒரு தெரிவாக இருக்கவேண்டும். ஆகவே, ஆப்பிரிக்க கோணத்திலிருந்து ஒருவருடைய மதத்தைத் தேர்ந்தெடுக்கும் பிரச்னையை நாம் ஆராய்ந்து பார்ப்போம். என்றபோதிலும், பின்வருபவை எவ்விடத்திலுமுள்ள வாசிப்போருக்கு அக்கறையூட்டுவதாக இருக்கும்.
[பக்கம் 3-ன் படம்]
நம்முடைய ஆவிக்குரிய தேவையை நிறைவுசெய்வதன் முக்கியத்துவத்தை மோசே காண்பித்தார்
[பக்கம் 4-ன் படம்]
கிறிஸ்தவமண்டல மிஷனரிகளுடனிருந்த ஆப்பிரிக்காவின் அனுபவம் பைபிளிடமாக சிலருடைய மனங்களை மூடியிருக்கிறது