வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
உடன்படிக்கை செல்லத்தக்கதாவதற்கு உடன்படிக்கை செய்பவர் மரிக்க வேண்டும் என்று எபிரெயர் 9:16 சொல்கிறது. ஆனால் கடவுள் புதிய உடன்படிக்கையைச் செய்தார், அவர் மரிக்கவில்லை. ஆகவே இந்த வசனத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளலாம்?
எபிரெயர் 9:15-17-ல் நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்தி செய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாக வேண்டும். எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரண சாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.”a
புதிய உடன்படிக்கையை உண்மயில் செய்கிறவர் யெகோவாவே. எரேமியா 31:31-34-ல் கடவுள், தம்முடைய மக்களோடு தாமே ஒரு புதிய உடன்படிக்கையை செய்யப்போவதாக திட்டவட்டமாக முன்னுரைத்தார். அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வேதவசனத்தை எபிரெயர் 8:8-13-ல் மேற்கோள் காண்பிக்கிறார். கடவுள்தாமே, இந்தத் தெய்வீக உடன்படிக்கையை துவக்கி வைத்ததை பவுல் மதித்துணர்ந்ததை இந்த வேதவசனம் காண்பிக்கிறது.
என்றபோதிலும், எபிரெயர் 9-ம் அதிகாரத்தில் பவுல் புதிய உடன்படிக்கையின் சம்பந்தமாக இயேசு வகித்த பல்வேறு பாகங்களைக் குறித்து தொடர்ந்து பேசினார். கிறிஸ்து இந்த உடன்படிக்கையின் பிரதான ஆசாரியராக வந்தார். மற்றொரு நோக்குநிலையிலிருந்து இயேசு புதிய உடன்படிக்கைக்கு பலியாக இருந்தார்; “கிறிஸ்துவினுடைய இரத்தம்” மாத்திரமே “மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிக்க” முடியும். மோசே நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருந்தது போலவே கிறிஸ்து இந்த உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும்கூட இருக்கிறார்.—எபிரெயர் 9:11-15.
கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையே உடன்படிக்கைகள் செல்லத்தக்கதாவதற்கு மரணம் தேவையாயிருந்தது என்று பவுல் குறிப்பிட்டார். மோசேயின் நியாயப்பிரமாணம் ஓர் உதாரணமாகும். மோசே அதன் மத்தியஸ்தராக, கடவுளுக்கும் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலுக்குமிடையே இந்த ஒப்பந்தத்தைக் கொண்டு வருகிறவராக இருந்தார். இவ்விதமாக மோசே ஒரு முக்கிய பங்கை வகித்தார், இஸ்ரவேலர் உடன்படிக்கைக்குள் வந்துகொண்டிருந்த போது, அவர்களோடு செயல்தொடர்பு கொண்ட மனிதனாக இருந்தார். இதன் காரணமாக யெகோவாவிடமிருந்து தோன்றிய நியாயப்பிரமாண உடன்படிக்கையை எழுதின மனிதனாக மோசே கருதப்படலாம். ஆனால் நியாயப்பிரமாண உடன்படிக்கை அமலுக்கு வருவதற்கு மோசே தன் உயிர் இரத்தத்தைச் சிந்த வேண்டுமா? இல்லை, மாறாக, மோசேயின் இரத்தத்தை செலுத்தப்பட்ட மிருகங்களின் இரத்தம் ஈடுசெய்தன.—எபிரெயர் 9:18-22.
யெகோவாவுக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேல் தேசத்திற்குமிடையிலான புதிய உடன்படிக்கையை பற்றி என்ன? யெகோவாவுக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலுக்குமிடையே தரகராக, மத்தியஸ்தராக இருக்கும் மகத்தான பங்கை இயேசு கிறிஸ்து கொண்டிருந்தார். யெகோவா இந்த உடன்படிக்கையை ஏற்படுத்திய போதிலும், அது இயேசு கிறிஸ்துவையே மையமாகக் கொண்டிருந்தது. அதன் மத்தியஸ்தராக இருப்பது தவிர, இயேசு மாம்சத்திலிருந்த போது இந்த உடன்படிக்கையினுள் முதலாவதாக எடுத்துக்கொள்ளப்பட இருந்தவர்களோடு நேரடியாக செயல்தொடர்பு கொண்டவராக இருந்திருக்கிறார். (லூக்கா 22:20, 28, 29) மேலுமாக, உடன்படிக்கையை செல்லத்தக்கதாக்க தேவையான பலியை அளிக்க தகுதியுள்ளவராக அவர் இருந்தார். இந்தப் பலி வெறுமனே மிருகங்களினுடையதாக இல்லாமல், பரிபூரண மனித ஜீவனாக இருந்தது. ஆகவே பவுல் கிறிஸ்துவை புதிய உடன்படிக்கையை எழுதின மனிதனாக குறிப்பிட முடிகிறது. கிறிஸ்து “பரலோகத்தில்தானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்த” பிற்பாடு, புதிய உடன்படிக்கை செல்லத்தக்கதானது.—எபிரெயர் 9:12-14, 24.
மோசேயையும் இயேசுவையும் உடன்படிக்கை எழுதின மனிதர்களாக பேசுகையில், உண்மையில் கடவுளே ஏற்படுத்தியிருந்த உடன்படிக்கைகளை இவர்களிடமிருந்து தோன்றியதாக பவுல் தெரிவித்துக்கொண்டில்லை. மாறாக அந்த இரண்டு மனிதர்களும் அந்தந்த உடன்படிக்கைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதில் மத்தியஸ்தர்களாக மிகநெருக்கமாக உட்பட்டிருந்தார்கள். ஒவ்வொன்றின் காரியத்திலும் மரணம் தேவைப்பட்டது—மோசேக்கு பதிலாக மிருகங்களும், புதிய உடன்படிக்கையிலிருப்பவர்களுக்கு இயேசு தம்முடைய சொந்த உயிர் இரத்தத்தையும் அளித்தார்.
[அடிக்குறிப்புகள்]
a “உடன்படிக்கையை எழுதின மனிதன்” என்பதற்கு இங்கே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் இரண்டு கிரேக்க வார்த்தைகள், “சுய உடன்படிக்கைக்காக செய்தவன்” அல்லது “உடன்படிக்கையை செய்பவனுடைய” என்று சொல்லர்த்தமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.—காவற்கோபுர பைபிள் சங்கம் பிரசுரித்த கிரேக்க வேதாகமங்களின் கிங்டம் இன்டர்லீனியர் மொழிபெயர்ப்பு மற்றும் டாக்டர் ஆல்ஃபிரட் மார்ஷல் எழுதிய இன்டர்லீனியர் கிரேக்க-ஆங்கில புதிய ஏற்பாடு.