வணக்கத்தாரை அறுவடை செய்தல்
அப்போஸ்தலனாகிய யோவானுக்கு, “கர்த்தருடைய நாளில்” சம்பவிக்க இருந்த உலகை-அதிரச்செய்யும் சம்பவங்களைப் பற்றிய ஒரு தரிசனம் கொடுக்கப்பட்டது. பரலோக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரு வெள்ளைக் குதிரையினால் வருணிக்கப்பட்டபடி நீதியான யுத்தத்துக்கு ‘ஜெயிக்கிறவராகவும் ஜெயிப்பவராகவும்’ புறப்பட்டுச் செல்வதைக் கண்டார். அவர் செய்யும் முதல் காரியம், கடவுளுடைய பிரதான சத்துருவாகிய சாத்தானை பரலோகத்திலிருந்து கீழே பூமிக்குத் தள்ளுவதாகும். சாத்தான், முன்னொருபோதும் சம்பவித்திராத கொலை, பஞ்சம் மற்றும் நோயினால் மனித குலத்தை வாதிப்பதன் மூலம் இதற்கு, பிரதிபலிக்கிறான்—இது அடையாள அர்த்தமுள்ள சவாரியாளர்களாலும் அவர்களுடைய சிவப்பு, கறுப்பு மற்றும் மங்கின நிறமுள்ள குதிரைகளாலும் வருணிக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 1:10; 6:1-8; 12:9-12) இந்த ஆபத்துகள் முதலில் 1914-ம் ஆண்டில் வெளிப்பட ஆரம்பித்து அந்தச் சமயம் முதற்கொண்டு வேகமாக பெருகியிருக்கின்றன. வெகு சீக்கிரத்தில், அவை இயேசு விவரித்த, “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவத்தில்” உச்சக் கட்டத்தை எட்டும்.—மத்தேயு 24:3-8, 21.
யெகோவாவின் வணக்கத்தார் அந்தச் சமயத்தில் எவ்வாறு முன்னேறிச் செல்வார்கள்? வெளிப்படுத்துதல் அதிகாரம் 7, வசனங்கள் 1 முதல் 10, இந்த வணக்கத்தார் கூட்டிச்சேர்க்கப்படும் வரையாக, தேவதூத சேனைகள் அழிவின் காற்று அடியாதபடி “பிடித்திருப்பதாக” பேசுகிறது. 1914 முதலாக உள்ள காலப்பகுதியின் போது, 1,44,000 எண்ணிக்கையான ஆவிக்குரிய இஸ்ரவேலில் பூமியிலுள்ள கடைசியானவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். பின்பு, “இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும், ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்” கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். இந்தத் திரள் கூட்டம் ஏற்கெனவே இலட்சக்கணக்காக இருக்கிறது. இவர்கள், ஒரு பழிபாவமறியாத ஆட்டுக்குட்டியைப் போல கொல்லப்பட்ட இயேசுவின் மீட்கும் இரத்தத்தில் விசுவாசத்தை அப்பியாசிப்பதன் காரணமாக கடவுளுடைய சிங்காசனத்துக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக நிற்கிறார்கள். “அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.” வைராக்கியமுள்ள இந்த வணக்கத்தார், இன்னும் மற்றவர்களைப் பார்த்து “வா!” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களும்கூட “மகா உபத்திரவத்தி”னூடாக இரட்சிக்கப்படுவதற்காக கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:14-17; 22:17.
“பூமியெங்கும்”
பக்தியுள்ள இந்த வணக்கத்தாரைப் பற்றி இவ்விதமாகச் சொல்லப்படலாம்: “அவர்களின் சத்தம் பூமியெங்கும் அவர்களின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்கிறதே.” (ரோமர் 10:18) அவர்களுடைய கடின உழைப்புக்குக் குறிப்பிடத்தக்க பலன்களால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மெக்ஸிக்கோ இப்பொழுது 3,35,965 சுறுசுறுப்பான யெகோவாவின் வணக்கத்தாரை அறிக்கைச் செய்கிறது. இது மூன்றே ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் அதிகரிப்பாகும்! ஏன் இத்தனைப் பெரிய விஸ்தரிப்பு? பின்வரும் பதிவு இதை விளக்க உதவக்கூடும். ஒளரேலியோ என்ற பெயர் கொண்ட ஓர் இளம் மனிதன் கத்தோலிக்க சர்ச் ஒன்றில் மணியக்காரனாக இருந்தார். யெகோவாவின் சாட்சிகள் அந்தக் கிராமத்துக்குள் வந்த ஒவ்வொரு சமயமும், எவரும் அவர்களுக்குச் செவிசாய்ப்பதைத் தடை செய்வதற்காக சர்ச் மணியை அவர் அடிப்பதுண்டு. காலப்போக்கில் அவர் கத்தோலிக்க எருசலேம் பைபிள் ஒன்றை வாங்கி அதை வாசிக்க ஆரம்பித்தார், ஆனால் அவரால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர் ஒரு நாள் அவர் தன் கையில் புதிய உலக மொழிபெயர்ப்பின் ஒரு பிரதியை வைத்திருந்த தன் நண்பனைப் பார்த்தார். ஒளரேலியோ அவர் வைத்திருக்கும் பைபிள் உண்மையற்றதென்று சொல்லி அவரை அதட்டி, “உண்மையான” பைபிளை அவருக்குக் காண்பிப்பதாகச் சொல்லி தன் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றார். அவருடைய நண்பர், “யாத்திராகமம் 20-ம் அதிகாரம் வாசியுங்கள்,” என்று சொல்லிவிட்டு பின்னர் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அதிகாரம் 1-லிருந்து ஆரம்பித்து மணியக்காரர் யாத்திராகமம் அதிகாரம் 20, வசனங்கள் 4 மற்றும் 5 வரையாக வாசித்தார். விக்கிரகங்களைக் குறித்து தன்னுடைய கத்தோலிக்க பைபிள் சொன்ன காரியத்தை வாசித்து அதிர்ச்சியடைந்தார். அடுத்த ஞாயிறு அன்று பூசைக்குப் பின், அவர் விக்கிரகங்களைப் பற்றிய வசனங்களோடு பாதிரியாரை போய் சந்தித்தார். முதலில் பாதிரியார் தானே விக்கிரகங்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும், ஆனால் அவைகளை வணங்குவதில்லை என்றும் சொன்னார். இது ஒளரேலியோவை திருப்தி செய்யவில்லை என்பதை உணர்ந்த பாதிரியார், அவர் பைபிளை யெகோவாவின் சாட்சிகளோடு படிப்பதாக குற்றஞ்சாட்டினார். ஒளரேலியோ இதை மறுத்தார், ஆனால் “இப்பொழுது அதைச் செய்வேன்,” என்பதாகச் சொன்னார்.
அடுத்த முறை சாட்சிகள் கிராமத்துக்கு வந்தபோது ஒளரேலியோ அவர்களோடு தொடர்பு கொண்டு பைபிளை அவர்களோடு படிக்க ஆரம்பித்தார். அவர் சர்ச்சில் வேலை செய்வதை நிறுத்திவிட்டு முன்றே மாதங்களில் யெகோவாவின் சாட்சிகளோடு பொது ஊழியத்தில் பங்கு கொள்ள தகுதிபெற்றவரானார். அவர் சந்தித்த முதல் வீடு பாதிரியினுடையதாய் இருந்தது. முன்னாள் மணியக்காரரை ஒரு ராஜ்ய பிரசங்கியாரின் இடத்தில் கண்டபோது அவரால் தன் கண்களை நம்ப முடியவில்லை. பாதிரியார், அவரை திருச்சபை நீக்கம் செய்வதாக மிரட்டினார். ஆனால் ஒளரேலியோ தான் ஏற்கெனவே சர்ச்சை விட்டு வந்துவிட்டபடியால் அதற்கு அவசியமிராது என்று அவரிடம் சொன்னார். அவருடைய தைரியமான நடவடிக்கை, ஏற்கெனவே யெகோவாவின் சாட்சிகளோடு படித்துக்கொண்டிருந்த அநேகரை உற்சாகப்படுத்தியது. அடுத்த மாவட்ட மாநாட்டில் ஒளரேலியோவும் அந்த கிராமத்திலிருந்த இன்னும் 21 பேரும் முழுக்காட்டப்பட்டார்கள். இந்தப் பகுதியில் வளர்ச்சி அத்தனை வேகமாக இருப்பதன் காரணமாக, முழுக்காட்டுதல் பெரும் இந்தத் தொகுதியிடம் கேள்விகளை விமர்சிக்க ஒரே ஒரு மூப்பர் மாத்திரமே இருந்தார்.
“அவர்களின் சத்தம்”
ராஜ்ய பிரசங்கிப்பிலிருந்து தப்பிக்க வழியில்லை. இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கர், யெகோவாவின் சாட்சிகள் அவரை வந்து சந்தித்த ஒவ்வொரு சமயமும் எரிச்சலடைவது வழக்கமாக இருந்தது. ஆகவே அவருடைய கம்பெனி, அவரை சிங்கப்பூருக்கு மாற்றல் செய்த போது, கடைசியாக அவர்களுடைய தொந்தரவு இராது என்பதாக அவர் நினைத்துக்கொண்டார். ஆனால் அங்கும்கூட சாட்சிகள் இருந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆகவே அவர் அடுத்த முறை சந்திக்க வரும் சாட்சிகளைத் தாக்குவதற்கு இரண்டு மூர்க்கமான நாய்களைப் வாங்கினார். இரண்டு சாட்சிகள் அவருடைய வீட்டுக்கு வந்தபோது அந்த நாய்கள் வெளியே பாய்ந்தன. திகிலடைந்து போன பெண்கள் ஒரு சாலை சந்திப்பில் வெவ்வேறு திசையில் உயிர் தப்பிக்க ஓடினர். நாய்களில் ஒன்று சாட்சியை வந்து பிடித்த போது, சாட்சிகளில் ஒருத்தி செய்வதறியாது தன் பையிலிருந்து இரண்டு புரோஷுர்களை எடுத்து திறந்திருந்த நாயின் வாயில் வைத்து அடைத்தாள். அப்போது நாய் அவளைத் துரத்துவதை நிறுத்திவிட்டு பின்னால் திரும்பி வீட்டை நோக்கி நடைபோட ஆரம்பித்தது.
அடுத்த வாரம் அதே இரண்டு சாட்சிகள் தெருவுக்குக் குறுக்கே ஒரு வீட்டில் மறுசந்திப்பு செய்துகொண்டிருந்தனர். நாய்களின் சொந்தக்காரர் தோட்டத்தில் இருந்தார். ஆச்சரியமுண்டாகும் வகையில், அவர் அந்தப் பெண்களுக்கு வாழ்த்துதல் சொல்லி அவர்களைத் தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தான் ஒருபோதும் யெகோவாவின் சாட்சிகளோடு பேசியதோ அல்லது அவர்களுடைய பிரசுரங்களில் எதையும் வாசித்ததோ இல்லை என்பதாக அவர் அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர் தன்னுடைய நாய்களில் ஒன்றின் வாயில் புரோஷுர்களைப் பார்த்த போது ஆச்சரியமடைந்தார். அன்று மாலை அவர் புரோஷுரை வாசித்தார். அது அவரை உண்மையில் கவர்ந்துவிட்டிருந்தது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கத்தோலிக்கராக இருந்தபோதிலும், அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க விரும்பியதை தெரிவித்தார்.
அந்த மனிதன் திரும்பவும் இத்தாலிக்கு மாற்றப்பட்டதன் காரணமாக, அங்கே யெகோவாவின் சாட்சிகளோடு படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரும் அவருடைய மனைவியும் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்த போது பங்கு தந்தை கோபத்தோடு அவர்களை மிரட்டினார். யாரோ ஒருவர் அவர்களுடைய தோட்டத்துக்கு தீ வைத்த போது, தம்பதி சர்ச்சோடு தங்களுக்கிருந்த உறவை துண்டித்துவிட்டார்கள். இந்த மனிதன் இப்பொழுது சொல்கிறார்: “நான் ஏற்கெனவே என்னுடைய குடும்ப அங்கத்தினர்கள் பலருக்கும் சாட்சி கொடுத்து வருகிறேன், ஏனென்றால் யெகோவாவே ஒரே மெய்க் கடவுள் என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
“பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்கிறது”
பூச்சக்கரத்தின் கடைமுனையிலிருந்து வரும் மற்றொரு அனுபவம், ராஜ்ய செய்தி எவ்வாறு போற்றப்படுகிறது என்பதையும் வாழ்க்கையை மாற்றியமைக்க உதவுகிறது என்பதையும் காண்பிக்கிறது. பேறுகாலத்திற்கு முந்தி நடத்தப்படும் வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஆஸ்திரேலியாவில் ஒரு சாட்சி, அநேக கெட்டப் பழக்கங்களைக் கொண்டிருந்தவளும், கருவுற்றிருந்த போதும்கூட புகைப்பிடித்தலை நிறுத்திவிட மறுத்தவளுமான ஒரு பெண்ணைச் சந்தித்தாள். சாட்சி அவளுடைய மனநிலையைக் கண்டு மிகவும் மனம் குழம்பிப் போயிருந்தாள். அவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்திலும் மருத்துவமனையின் ஒரே படுக்கைத் தொகுதியிலும் குழந்தை பிறக்க நேரிட்டதால், அவர்களுக்கு பேசிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் இருந்தது. அந்தப் பெண் சிறு பிராயத்தில் அநேக பிரச்னைகளை உடையவளாக இருந்ததும், இப்பொழுது அவளுடைய திருமணம் முறிந்துவிடும் நிலையில் இருந்ததும் தெரிய வந்தது. ஆகவே மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்பு சாட்சி அந்தப் பெண்ணைச் சந்தித்து உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தை உபயோகித்து அவளோடு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தாள்.
அந்தப் பெண்ணின் கணவன், “அது யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத வரை!” என்ற ஒரு நிபந்தனையோடு தான் மெய் மதத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கடவுளிடம் ஜெபித்துக் கொண்டிருந்தார். இருந்தபோதிலும், தன்னுடைய மனைவி சாட்சிகளோடு படித்துக்கொண்டிருப்பதை அறிய வந்த போது அவர் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான், படிப்பில் கலந்து கொள்ளும்படி அவர் அழைக்கப்பட்டார். இதை அவர் செய்தார், விரைவில் சபை கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தார். இப்பொழுது கணவனும் மனைவியும் முழுக்காட்டப்பட்டுவிட்டார்கள். அவர்களுடைய திருமண உறவு வெகுவாக முன்னேறிவிட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட இலக்கியங்களின் அடிப்படையில் நடத்தப்படும் வீட்டு பைபிள் படிப்புகள், அநேக புதிய வணக்கத்தார் கூட்டிச் சேர்க்கப்படுவதில் விளைவடைந்திருக்கிறது. புரட்சிகள், உள் நாட்டுப் போர் அல்லது அரசாங்க கட்டுப்பாடுகளை யெகோவாவின் சாட்சிகள் சமாளிக்க வேண்டியதாயிருக்கும் தேசங்களில் வீட்டு வேத படிப்பு வேலை அதிகரித்திருக்கிறது. அநேக ஆண்டுகளாக, அங்கோலாவில் உள்நாட்டுப் போர் நடந்து வந்தது, சாட்சிகள் அதிகமான துன்புறுத்தலையும் இன்னல்களையும் அனுபவித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆரம்பத்தில், ஒவ்வொரு பிரஸ்தாபியும் சராசரியாக சுமார் மூன்று வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவதையும், ஆனால் பிரஸ்தாபிகள் பைபிள் இலக்கியங்களை அவ்வளவாகக் கொண்டில்லை என்பதையும் அறிக்கைகள் காண்பித்தன. பிரயாண கண்காணிகள் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய தொகுதியை சேவித்தனர், பகல் பொழுதில் வெளி ஊழியத்தையும் ஒவ்வொரு மாலை வேளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்தனர். போர் நிலவரம் முடிவுக்கு வந்து வெகுவாக தேவைப்பட்ட 42 டன்கள் பைபிள் இலக்கியங்கள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திறங்கிய போது என்னே மகிழ்ச்சி! நிச்சயமாகவே, இப்பொழுது “அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ள” முடிகிறவர்களாயிருக்க, இந்தச் சகோதரர்களின் அன்பு “அறிவிலும் எல்லா உணர்விலும் அதிகமதிகமாய்ப் பெருகும்.” (பிலிப்பியர் 1:9, 10) கையில் ஏராளமான பைபிள் படிப்பு உதவி புத்தகங்களை வைத்திருப்பவர்களுக்கு யெகோவா இத்தனைக் கருணையோடு நமக்குச் செய்யும் ஏற்பாட்டை முழுமையாக அனுகூலப்படுத்திக் கொள்ள என்னே ஒரு தூண்டுதல்!—1 தீமோத்தேயு 4:15, 16.
இந்த உண்மையுள்ள வணக்கத்தாரின் மகிழ்ச்சி, மலைப் பிரசங்கத்தில் இயேசுவின் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகிறது: “ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது. . . . நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது. . . . சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.” (மத்தேயு 5:3-12, NW) அங்கோலாவில் ஏற்கெனவே என்னே ஓர் அறுவடை நடந்துவருகிறது!
உலகின் மற்ற பகுதிகளில், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையின் மேல் போடப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன அல்லது நீக்கப்பட்டு வருகின்றன. இயேசு தம்முடைய நாளில் இவ்வாறு சொன்னார்: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.” (மத்தேயு 9:37) இன்று இது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! அதிகப்படியான வேலையாட்களுக்கான தேவை எப்போதும் இருக்கிறது. நம்முடைய வணக்கம், அறுப்பைக் கூட்டிச் சேர்ப்பதை உட்படுத்துவது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். யெகோவா தேவனுக்கு நம்முடைய பலன்தரும் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியத்தைக் காட்டிலும் இன்று பூமியில் அதிகமான சந்தோஷம் வேறு எதிலும் காணப்பட முடியாது.
ஆனால் இப்படிப்பட்ட சந்தோஷத்தையும் வைராக்கியத்தையும் காண்பிக்க யெகோவாவின் வணக்கத்தாரை ஊக்குவிப்பது என்ன? நாம் பார்க்கலாம். (w92 1/1)