யெகோவாவிடத்தில் அன்பு மெய் வணக்கத்தை ஊக்குவிக்கிறது
“நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்.”—1 யோவான் 5:3.
1, 2. யெகோவாவை நாம் என்ன உள்நோக்கத்துடன் சேவிக்க வேண்டும்?
ஜப்பானிலிருந்து வந்த 80 பார்வையாளர்களின் ஒரு குழு, அ.ஐ.மா.-ல் கலிஃபோர்னியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அசெம்பிளி மன்றத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அமெரிக்கப் பறவைகளோடும் புறாக்களோடும் சின்னஞ் சிறு பறவைகளோடும் நிறைவு பெற்றிருந்த ஒரு தோட்டம் உட்பட, மனரம்மியமான சுற்றுப்புறச்சூழல், அவர்களைத் தங்கள் மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவா தேவனிடம் இன்னும் அதிக நெருக்கமாக உணரச் செய்தது. அவர்களுடைய சுற்றுப்பயண வழிகாட்டி, ஏறக்குறைய தொகுதியிலிருந்த அனைவருமே முழுநேரம் சேவை செய்யும் பயனியர்களாக இருப்பதை விரைவில் உணர்ந்துகொண்டார். பின்னர், அந்தத் தொகுதியிடம், அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது: “ஜப்பானில் ஏன் இத்தனை அநேக பயனியர்கள் இருக்கிறார்கள்?” ஒரு கணம் மெளனம் நிலவியது. பின்னர் இளம் பெண் ஒருத்தி பதிலளிக்க முன்வந்தாள்: “ஏனென்றால் நாங்கள் யெகோவாவை நேசிக்கிறோம்.”
2 யெகோவாவிடத்தில் அன்பு—இது எப்படி அவருடைய சேவையில் வைராக்கியமாக இருக்க நம்மைத் தூண்டுகிறது! உண்மைதான், எல்லாராலும் பயனியர் செய்ய முடியாது. ஆம், நாற்பது லட்சத்துக்கும் மேலான நம்முடைய ராஜ்ய பிரஸ்தாபிகளில் பெரும்பான்மையினர் இந்தச் சிலாக்கியத்துக்கு இடமளிக்க இயலாதவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அனுமதிக்கின்ற சூழ்நிலைமைகளுள்ள அநேகர், அதை அடைய நாடுகிறார்கள். இவர்கள் தவிர மீதமுள்ள நாமும்கூட, சீஷராக்கும் வேலையில் கணிசமான பங்கைக் கொண்டிருப்பதன் மூலம் நம்முடைய அன்பைக் காண்பித்து “யெகோவாவை நம்பி நன்மை” செய்யலாம். யெகோவாவின் ஒப்புக்கொடுத்த வணக்கத்தார் அனைவரும், பயனியர் செய்பவர்களுக்கு அன்பான ஆதரவைக் காட்டி பயனியர் ஆவியை வளர்ப்பதில் பங்குகொள்ளலாம்.—மத்தேயு 24:14; 28:19.
3. கிறிஸ்தவர்களென உரிமைப்பாராட்டும் பெரும்பாலானோருக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்குமிடையே என்ன வேறுபாடு கவனிக்கப்படுகிறது?
3 மதத்தை வசதியாக தங்கள் வாழ்க்கைக்கு ஒரு பிற்சேர்க்கையாக மாத்திரமே கருதுகின்ற, கிறிஸ்தவர்களாகத் தங்களை உரிமைபாராட்டிக் கொள்ளும் பெரும்பாலானோருக்கு நேர் எதிர்மாறாக, யெகோவாவின் சாட்சிகள் கடவுளிடமாக ஊக்கமான அன்பைக் காண்பிக்கிறார்கள். இது “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடிக்” கொண்டிருக்க அவர்களைத் தூண்டுகிறது. இது தியாகத்தை கேட்பதாய் இருந்திருக்கிறது, ஆனால் அந்தத் தியாகம் எத்தனை தகுதியுள்ளதாக இருந்திருக்கிறது! (மத்தேயு 6:33; 16:24) இது முதலாவதாக மோசேயினால் சொல்லப்பட்டதும், இயேசு கிறிஸ்துவினால் திரும்பச் சொல்லப்பட்டதுமான முதலாவது பிரதானக் கட்டளையோடு இணக்கமாக இருந்திருக்கிறது: “நம்முடைய தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.”—மாற்கு 12:29, 30; உபாகமம் 6:4, 5.
4, 5. யார் உண்மையுள்ளவர்களாய் இருப்பவர்களாக கருதப்பட வேண்டும்? உண்மைத்தன்மை எவ்விதமாகக் காண்பிக்கப்படலாம்?
4 முழு நேர ஊழியத்தில் 70-க்கும் மேலான ஆண்டுகளைச் செலவழித்திருக்கும் காவற்கோபுரம் சங்கத்தின் தலைவரான 98 வயது நிரம்பிய F. W. ஃபிரான்ஸிடம், யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலய பணியாளர்களில் ஒருவர், “உண்மையுள்ளவராயிருப்பதில் நீங்கள் மிக நேர்த்தியான முன்மாதிரியாக இருந்திருக்கிறீர்கள்,” என்பதாக அண்மையில் குறிப்பிட்டார். சகோதரர் ஃபிரான்ஸ், “ஆம்! நீங்கள் கட்டாயமாகவே உண்மையுள்ளவராயிருக்க வேண்டும்,” என்று பதிலளித்தார். இது காரியத்தை தொகுத்துரைத்துவிடுகிறது. ராஜ்ய நடவடிக்கையின் எந்த அம்சத்தில் நாம் சேவித்தாலும், நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க முடியும்.—1 கொரிந்தியர் 4:2; கலாத்தியர் 3:9.
5 உண்மைதான், அநேகர் இன்னுமதிகத்தை யெகோவாவின் சேவையில் செய்ய விரும்பக்கூடும், ஆனால் வேதபூர்வமான உத்தரவாதங்கள் அல்லது உடல்நலப் பிரச்னைகள் அவர்களை ஓரளவு கட்டுப்படுத்திடக்கூடும். என்றபோதிலும், பயனியர் செய்ய முடியாதவர்கள் குறைவாக உண்மையுள்ளவர்களாயிருப்பதாக கருதப்படக்கூடாது. ஆம், அவர்கள் உண்மையுள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள்! அவர்கள் யெகோவாவிடம் அன்பு காண்பித்து அவருடைய தேவராஜ்ய ஏற்பாடுகளுக்கு இருதயப்பூர்வமான ஆதரவைக் கொடுத்து ஊக்கமாக சேவித்து வந்திருக்கிறார்கள். பயனியர் சேவையில் அவர்கள் ஆழ்ந்த அக்கறையை எடுத்துக்கொண்டு, பின்னால் பயனியர்களாகும் வாய்ப்புடையவர்களை, அநேகமாகத் தங்களுடைய பிள்ளைகளை மற்ற எல்லாவற்றையும் விட மேம்பட்டதாயிருக்கும் பயனியர் சேவையை வாழ்க்கைப் பணியாக எடுத்துக் கொள்ள வேலை செய்யும்படியாக உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.—உபாகமம் 30:19, 20 ஒப்பிடவும்.
6, 7. 1 சாமுவேல் 30:16-25-ல் குறிப்பிடப்பட்ட முன்னோடி நிகழ்ச்சி இன்று எவ்வாறு பொருந்துகிறது?
6 இன்று கடவுளுடைய மக்கள் அனைவருடைய செயல் நடவடிக்கையின் அன்புள்ள ஐக்கியத்தை 1 சாமுவேல் 30:16-25-லுள்ள பதிவைக் கொண்டு விளக்கலாம். அமலேக்கியருக்கு எதிராக யுத்தத்தில், “தாவீது அன்று சாயங்காலந் தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்து” அதிகமான கொள்ளைப் பொருளைக் கொண்டு வந்தார். கூடாரத்துக்குத் திரும்பி வந்த போது, தாவீதின் யுத்த மனுஷரில் சிலர் யுத்தக் காலத்தில் தங்களோடு வராதவர்களுக்குக் கொள்ளையுடைமைகளில் எதுவும் கொடுக்கப்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் தாவீது இவ்விதமாக பதிலளித்தார்: “இந்தக் காரியத்தில் உங்கள் சொற்கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்க வேண்டும்; சரி பங்காகப் பங்கிடுவார்களாக.”
7 அதே நியமம் இன்று பொருந்துகிறது. பயனியர்கள் நம்முடைய ஆவிக்குரிய போர்நடப்பில் முன்னணியில் நிற்கின்றார்கள். ஆனால் சபையிலுள்ள மற்ற அனைவரும் முழு இருதயத்தோடு உண்மையான ஆதரவைக் கொடுக்கின்றனர். 1991-ன் போது ஒருங்கிணைந்த அவர்களுடைய நடவடிக்கையின் மகத்தான பலன் ஊழிய வருட அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க ஓர் அறிக்கை
8. (எ) மொத்த பிரஸ்தாபிகள் குறித்தும் அவர்கள் யெகோவாவின் சேவையில் செலவிட்டுள்ள மணிநேரங்களைக் குறித்தும் உலகளாவிய அறிக்கை வெளிப்படுத்துவது என்ன? (பி) அறிக்கையில் புதிதாக தோன்றியிருக்கும் தேசங்களில் என்ன அக்கறைக்குரிய குறிப்புகளை நீங்கள் கவனிக்கிறீர்கள்?
8 ஆம், யெகோவாவின் வைராக்கியமுள்ள வணக்கத்தார் அனைவருடைய ஐக்கியப்பட்ட முயற்சிகளும், 1991-ன் போது கிளர்ச்சியூட்டும் உலகளாவிய விரிவாக்கத்துக்கு உதவியிருப்பதை 1991 ஊழிய ஆண்டு அறிக்கை காண்பிக்கிறது. ராஜ்ய பிரஸ்தாபிகளில் தனிப்பட குறிப்பிடத்தக்க ஒரு புதிய உச்சநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது—6.5 சதவீத அதிகரிப்பு. இவர்கள் 95,18,70,021 மணிநேரங்களை (ஏறக்குறைய 100 கோடி) ஊழியத்தில் செலவிட்டிருக்கிறார்கள். உலகளாவிய அறிக்கையில் புதிதாக தோன்றியிருக்கும் தேசங்களில்—பல்கேரியா, காமரூன், செக்கோஸ்லவாகியா, எதியோபியா, மோசாம்பிக், நிக்கராகுவா, ருவாண்டா மற்றும் சோவியத் குடியரசு —நம்முடைய சகோதரர்கள் எடுத்திருக்கும் மகத்தான முயற்சியைக் கவனியுங்கள்.
9, 10. (எ)கடினமான காலங்களின் சவாலுக்குப் பயனியர்கள் எவ்விதமாக பிரதிபலித்திருக்கின்றனர்? (பி) பயனியர் சேவையில் பிரவேசிப்பதற்கு என்ன ஊக்குவிப்பு அளிக்கப்படுகிறது?
9 அண்மை ஆண்டுகளில், பயனியர் ஆவி உலகம் முழுவதிலும் பரவி வந்திருக்கிறது. அண்மையில்தானே வணக்க சுயாதீனம் வழங்கப்பட்டுள்ள தேசங்களிலும்கூட, பயனியர் அணி பெரிதாக வளர்ந்து வருகிறது. கடுமையான பொருளாதார நிலைமைகள், மனவுரம் வாய்ந்த சாட்சிகளை யெகோவாவின் வணக்கத்துக்குத் தங்களுக்கிருக்கும் அனைத்தையும் அர்ப்பணிப்பதிலிருந்து தடைசெய்வதில்லை. (2 கொரிந்தியர் 11:23, 27 ஒப்பிடவும்.) மாத சராசரியாக எல்லா ராஜ்ய பிரஸ்தாபிகளிலும் 14 சதவீதத்தினர் பயனியர் செய்து கொண்டிருக்கிறார்கள். பயனியர்களின் உச்ச எண்ணிக்கை, 7,80,202 எல்லா பிரஸ்தாபிகளிலும் மிக நேர்த்தியான 18 சதவீதமாக உள்ளது.
10 பயனியர்கள் அனுபவித்துவரும் சந்தோஷங்களை பார்க்கையில், மற்றவர்களும்கூட இந்தச் சேவையை எடுத்துக் கொள்ள உற்சாகப்படுத்தப்படுகின்றனர். நீங்கள் இன்னும் பயனியர் செய்து கொண்டில்லை என்றால், யெகோவாவிடமாக உங்கள் அன்பு ஏசாயா 6:8-ல் நாம் வாசிப்பது போல, “இதோ, அடியேன் இருக்கிறேன்,” என்பதாக சொல்ல உங்களை தூண்டிடுமா? அல்லது உங்களுடைய ஊக்கமான பைபிள் படிப்பின் மூலமாக, வெறுமனே பயனியர் சேவைக்குள் பிரவேசிக்கும் கூடுதலான படியை எடுப்பதற்காக கடவுளுடைய வார்த்தை உங்கள் இருதயத்தில் கொழுந்துவிட்டெறியும் ஆசையைத் தூண்டிடுமா? சோதனையான காலத்திலும்கூட, யெகோவாவின் வார்த்தை எரேமியாவை ஊக்குவித்த காரணத்தால் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.—எரேமியா 20:9.
மனிதகுலத்துக்கு அன்பான சேவை
11. வீட்டு வேதபடிப்பு வேலை எவ்விதமாக வெற்றிபெற்றிருக்கிறது?
11 வருடாந்தர அறிக்கையின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், இலவச பைபிள் படிப்புகளின் எண்ணிக்கையில் வளர்ச்சியாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு மாதமும் 39,47,261 படிப்புகள் ஒழுங்காக நடத்தப்படுகின்றன. யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு வேலையில் கண்டுபிடிக்கும் அக்கறையுள்ள ஆட்களுக்கு இப்படியாக உதவிசெய்வதன் காரணமாக இது ஓர் அன்பான ஏற்பாடாக இருக்கிறது. அனைத்து தேசீய அல்லது இன பின்னணிகளையுடைய ஆட்களோடும் பைபிள் படிப்புகளை நடத்துவதில், பவுல் அப்போஸ்தலன் காண்பித்த அதே மெய்யார்வத்தோடு வேலை செய்வதில் நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். அவர் ‘யூதருக்கும், கிரேக்கருக்கும் முழுமையாக சாட்சி கொடுத்ததானது’ சத்தியத்தைப் பல மணிநேரங்கள் போதிப்பதைத் தேவைப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. (அப்போஸ்தலர் 20:20, 21) இன்று அவ்விதமாகவே இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள், “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” உதவி செய்துகொண்டிருக்கிறார்கள்.—1 தீமோத்தேயு 2:4.
12-14. ஐரோப்பாவிலிருந்து என்ன சந்தோஷமான அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன?
12 கிழக்கு ஐரோப்பாவில் அதிகரிக்கப்பட்ட பைபிள் படிப்பு வேலையைப் பற்றிய அறிக்கைகள் எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் உள்ளது! பல பத்தாண்டுகளாக அங்குள்ள நம்முடைய சகோதரர்கள் சிறிய தொகுதிகளில் கூடிவந்தார்கள். தொகுதியிலுள்ள அனைவருக்குமே ஒருவேளை பழைய ஒரு காவற்கோபுரம் பிரதியினுடைய அதிகமாக பயன்படுத்தி கந்தலான கையெழுத்துப் படிவமே இருந்தது. ஆனால் இப்பொழுது ஏராளமான பைபிள்களும் பைபிள் பிரசுரங்களும் இந்தத் தேசங்களுக்குள் வந்து குவிகின்றன. அது உன்னதப்பாட்டு 2:4-ஐ நினைப்பூட்டுகிறது. இது வாசிப்பதாவது: “[கிறிஸ்து இயேசு] என்னை [ஆவிக்குரிய] விருந்துசாலைக்கு அழைத்துக் கொண்டு போனார்; என் மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.” தங்கள் தனிப்பட்ட பிரதிகளைக் கொண்டவர்களாய், அநேகர், “சத்திய வசனத்தை சரியாக” கையாள ஆயத்தமாகிக் கொண்டு வருகிறார்கள்.—2 தீமோத்தேயு 2:15, NW..
13 ரஷ்யாவில் சேய்ன்ட் பீட்டர்ஸ்பர்கில் 103 பிரஸ்தாபிகளைக் கொண்ட சபை அண்மையில் 300-க்கும் அதிகமான வீட்டு பைபிள் படிப்புகளை அறிவிப்பு செய்தது. இந்த பைபிள் படிப்பு முயற்சியின் பலனாக, 53 புதிய சாட்சிகள் எட்டே மாதங்களில் முழுக்காட்டப்பட்டனர். சபையிலுள்ள பாதிக்கும் மேலானவர்கள் சத்தியத்தில் எட்டு அல்லது குறைவான மாதங்களே இருந்திருக்கிறார்கள்! மேலும் அவர்களுக்கு மூப்பர்கள் இல்லை—அவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் கவனிக்க ஒரே ஒரு உதவி ஊழியர் மட்டுமே இருக்கிறார்.
14 எஸ்டோனியாவிலுள்ள ஒரு ராஜ்ய பிரஸ்தாபி ஒரு பைபிள் மாணாக்கரிடம், படிப்புக்கு அவளுடைய நண்பர்களில் சிலரை அழைக்க முடியுமா என்பதாக கேட்டார். தொடர்ந்து வந்த வாரத்தில், சாட்சி வீட்டுக்கு வந்தபோது, அங்கே 50-க்கும் மேலான ஆட்கள் கூடியிருப்பதை அவர் கண்டார்! நிச்சயமாகவே, அக்கறை காண்பித்த அவர்கள் அனைவரையும் தொடர்ந்து கவனிக்க விசேஷ ஏற்பாடுகள் தேவைப்பட்டன.
15. ஞாபகார்த்த ஆஜர் எண்ணிக்கையையும் முழுக்காட்டுதல்களையும் பற்றி என்ன சொல்லப்பட வேண்டும்?
15 படித்துக்கொண்டிருக்கும் அநேகர், இயேசுவின் மரண ஞாபகார்த்த ஆசரிப்புக்கு ஆஜராவதன் மூலம் கிறிஸ்தவ ஐக்கியத்தை முதல்முறையாக ருசிபார்க்கிறார்கள். கடந்த ஆண்டு, ஆஜரானவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 1 கோடியை தாண்டியது, மகிழ்ச்சியான இந்த நிகழ்ச்சிக்கு 66,207 சபைகளில் உலகம் முழுவதிலும் 1,06,50,158 பேர் ஒன்றுகூடி வந்திருந்தனர். மிகப் பல லத்தீன்-அமெரிக்க, ஆப்பிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய தேசங்களில் ஆஜராயிருந்தவர்கள் ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் மூன்று அல்லது நான்கு மடங்காக இருக்கின்றனர். இப்பொழுது நாம் இந்த வருடம் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17-ம் தேதி நடக்கவிருக்கும் ஞாபகார்த்த ஆசரிப்புக்காக தயாரிக்க ஆரம்பிக்க வேண்டும். ஞாபகார்த்த ஆசரிப்புக்கு ஆஜராயிருக்கும் புதிய பைபிள் மாணாக்கர்களில் பெரிய எண்ணிக்கையான ஆட்கள், முழுக்காட்டுதலிடமாக தொடர்ந்து முன்னேறிச் செல்வார்கள் என்று நம்பப்படுகிறது. முழுக்காட்டுதல்களைப் பொறுத்த மட்டில் 1991-ல் நாம் மறுபடியுமாக 3,00,000-க்கும் அதிகமான பேர் யெகோவா தேவனுக்கு தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்துவதை நாம் கண்டோம்.
தெய்வீக சுயாதீனப் பிரியர்
16. “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாடுகளிலிருந்து என்ன கிளர்ச்சியூட்டும் அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன?
16 1991-ம் ஊழிய ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சம் இப்பொழுது நிலவுலகின் வட அரைக்கோளத்தில் முடிவுக்கு வந்திருப்பதும், ஆனால் நிலவுலகின் தென் அரைக்கோளத்தில் 1992-லும் தொடர்ந்து நடை பெற்றுவரும் “சுயாதீனப் பிரியர்” மாவாட்ட மாநாடுகளின் தொடராகும். முதல் முறையாக, முழு மாநாடு நிகழ்ச்சிநிரலும் பல கிழக்கு ஐரோப்பிய தேசங்களில் நடைபெற்றது. இங்கே நம்முடைய சகோதரர்கள் புதிதாக கிடைக்கப்பெற்ற சுயாதீனத்தை யெகோவாவின் துதிக்காக பயன்படுத்த சந்தோஷமுள்ளவர்களாயிருக்கின்றனர். அக்டோபர் 1991-ல் முதல் 705 மாநாடுகளில், 54 தேசங்களில் அறிவிக்கப்பட்டிருந்த மொத்த ஆஜர் எண்ணிக்கை 47,74,937-ஆக இருந்தது.
17 இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) இன்று, பைபிள் சத்தியம் இலட்சக்கணக்கானோரை கிறிஸ்தவமண்டல கோட்பாடுகளிலிருந்து விடுதலையாக்கியிருக்கிறது. யெகோவாவின் ஏற்பாடாக இருக்கும் இயேசுவின் மீட்கும் பலி, மனித குலம், “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்” கொள்வதை சாத்
தியமாக்குகிறது என்பதை இந்த லட்சக்கணக்கானோர் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். (ரோமர் 8:19-22) அது என்னே மகத்தான சுயாதீனமாக இருக்கும்—யெகோவா அன்பாக தீர்மானிக்கும் தகுதியான எல்லைக்குள் பரதீஸான பூமியில் என்றும் வாழ்வது!—ஏசாயா 25:6-8; அப்போஸ்தலர் 17:24-26 ஒப்பிடவும்.
17, 18. (எ)யெகோவாவின் வணக்கத்தார் என்ன சுயாதீனங்களை அனுபவிக்கவும் எதிர்நோக்கியிருக்கவும் செய்கின்றனர்? (பி) தெய்வீக சுயாதீனம் எவ்விதமாக உலகப்பிரகாரமான சுயாதீனங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது?
18 யெகோவாவின் சாட்சிகள் இப்பொழுது அனுபவித்து வருவதும், கடவுளுடைய புதிய காரிய ஒழுங்கில் அதிக நிறைவாக அனுபவிக்க எதிர்பார்த்துக்கொண்டிருப்பதுமான சுயாதீனங்கள் நம்முடைய கடவுளாகிய யெகோவாவிடமிருந்து வருகின்றன. (2 கொரிந்தியர் 3:17) அவர்கள் எந்த ஓர் அரசியல் அல்லது புரட்சிகரமான இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்தவர்களாக இல்லை. (யாக்கோபு 1:17) இந்தக் குறிப்பின் பேரில் எந்த ஒரு தப்பெண்ணத்துக்கு எதிராக முன்னெச்சரிக்கையாய் இருப்பதற்காக, ஒரு சில கிழக்கு ஐரோப்பிய தேசங்களில் யெகோவாவின் சாட்சிகள் அணிந்து கொண்டிருந்த 1991 மாநாடு அட்டைகள் வெறுமனே “சுயாதீனப் பிரியர்” என்பதற்கு பதிலாக “தெய்வீக சுயாதீனப் பிரியர்” என்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தன.
யெகோவாவிடம் ஊக்கமான அன்பு
19. யெகோவாவோடு ஜெபசிந்தையோடுகூடிய நெருக்கம் எவ்விதமாக நம்மைக் காத்துக்கொள்ள முடியும்?
19 யெகோவாவிடம் நம்முடைய அன்பும், அவரில் நம்முடைய விசுவாசமும், ஜெபத்தில் அவரிடமாக நெருங்கியிருக்க நம்மைச் செய்விக்கும். யெகோவாவிடம் இந்த நெருக்கம் தானே, அநேக இன்னல்களையும் துன்புறுத்தல்களையும் சகித்திருக்க நம்முடைய சகோதரர்களுக்கு உதவியிருக்கிறது. (சங்கீதம் 25:14, 15) இயேசு, தமக்கு கடுஞ் சோதனையாக இருந்த மணிநேரத்தில், ஜெபத்தின் மூலமாக தம்முடைய தகப்பனோடு நெருக்கத்தைக் காத்துக்கொண்டார். (லூக்கா 22:39-46) யெகோவாவோடு ஜெபத்தில் இப்படிப்பட்ட ஒரு நெருக்கம், ஸ்தேவானை அவருடைய உயிர்த்தியாக வேதனைகளினூடே காத்துக் கொண்டது. கல்லெறிந்து கொல்லப்பட இருந்த அந்தச் சமயத்தில் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு அவர் சொன்னதாவது: “இதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் [இயேசு] தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்.”—அப்போஸ்தலர் 7:56.
20-22. கடவுள் ஜெபங்களைக் கேட்கிறார் என்பதை ஓர் அனுபவம் எவ்விதமாக விளக்குகிறது?
20 யெகோவாவின் வணக்கத்தார் அநேக சமயங்களில் அனுபவித்திருக்கும் வண்ணமாக, யெகோவா, தம்முடைய சித்தத்துக்கு இசைவாக இருக்கும் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். உதாரணமாக, சாட்சிகளுடைய வேலை தடை செய்யப்பட்டுள்ள ஓர் ஆப்பிரிக்க தேசத்தில், பேருந்தில் வடக்கு நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்த ஒரு விசேஷித்த பயனியர் விநியோகிப்பதற்கு ராஜ்ய பிரசுரங்களையும் உறைகளையும் கொண்ட ஒரு பெரிய பையை வைத்திருந்தார். பேருந்துக்குள் சரக்கேற்றிக்கொண்டிருந்த பணியாள் சகோதரரிடம் “பையிலிருப்பது என்ன?” என்பதாக கேட்டார். சகோதரர், அவருடைய மனதுக்கு முதலில் வந்த காரியத்தைக் குறிப்பிட்டார்: “அஞ்சல் கட்டு.”
21 போகிற வழியில், பேருந்து வழக்கமான சாலை சோதனை நிலையத்தில் இடையில் நிற்காமல் வேகமாகச் சென்றது. போக்குவரத்து காவல் துறையினர், அது கள்ளச்சரக்கை ஏற்றிச் செல்கிறது என்ற சந்தேகத்தின் பேரில் அதை துரத்திச் சென்று அதை நிறுத்தினர். பயணிகள் அனைவரும் பேருந்தைவிட்டு இறங்கும்படியும், எல்லா சாமான்களும் சோதிக்கப்படும்படியும் உத்தரவிட்டனர். இது ஒரு நெருக்கடியான நிலையாக இருந்தது! சகோதரர், முணுமுணுத்துக் கொண்டிருந்த கூட்டத்திடமிருந்து விலகிச் சென்று, முழங்காலில் நின்று, யெகோவாவிடம் ஜெபித்தார். அவர் கூட்டத்தோடு வந்து சேர்ந்து கொண்டபோது, பயணிகள் ஒவ்வொருவரின் சாமானும் திறக்கப்பட்டு மிக கவனமாக ஆராயப்பட்டன. சகோதரரின் பை திறக்கப்பட இருந்த சமயத்தில், அவர் மெளனமாக உதவிக்காக யெகோவாவை நோக்கி கூப்பிட்டார்.
22 “இது யாருடைய பை, இதில் என்ன இருக்கிறது?” என்று காவலாளர் கத்தினார். சகோதரர் பேசுவதற்கு முன், பேருந்து பணியாளர் பதிலளித்து இவ்விதமாகச் சொன்னார்: “இது —— அஞ்சல் அலுவலகத்திலிருந்து —— அலுவலகத்துக்கு அஞ்சல் கட்டு.” “நல்லது” என்று அதிகாரி சொன்னார். அவர் பையை எடுத்து அதை பணியாளரிடம் கொடுத்தார். “பயணத்தின் போது அதை மிகவும் பாதுகாப்பான ஓரிடத்தில் வைக்க நிச்சயமாயிருங்கள்,” என்று அவரிடம் அழுத்தமாகக் கூறினார். விசேஷித்த பயனியர் மறுபடியுமாக ஜெபத்தைக் கேட்கிறவருக்கு நன்றி செலுத்த தன் முழங்காலில் நின்றார்.—சங்கீதம் 65:2; நீதிமொழிகள் 15:29.
23. யெகோவா என்ன காண்பித்திருக்கிறார்? இருந்தபோதிலும் சில சமயங்களில் துன்புறுத்தல் அதன் முழு அளவுக்குச் செல்ல அவர் ஏன் அனுமதிக்கிறார்?
23 இது யெகோவாவின் வணக்கத்தார் துயரம் உண்டுபண்ணும் சம்பவங்களிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. ஒரு சில நிலைமைகளில், பைபிள் காலங்களிலும், இன்றும், யெகோவா தம்முடைய மக்களை விடுவிக்க முடியும் என்பதை காண்பித்திருக்கிறார். ஆனால் உத்தமத்தன்மையின் பிரச்னையைத் தீர்ப்பது போல, சில சமயங்களில் அவர் துன்புறுத்தல் அதனுடைய முழு அளவுக்குச் செல்ல அவர் அனுமதிப்பது போல் தெரிகிறது. (மத்தேயு 26:39 ஒப்பிடவும்.) மேலுமாக பைபிள் அடிப்படையில் அமைந்த நடைமுறையான ஞானம் மதிப்புள்ளதாக இருந்தபோதிலும், யெகோவா தம்முடைய மக்களை விபத்துகள், உள்நாட்டுப் போர்கள் அல்லது குற்றச்செயல்களிலிருந்து தன்னியல்பாகக் காப்பாற்றுவது இல்லை. (நீதிமொழிகள் 22:3; பிரசங்கி 9:11) ஆனால் சோதனையான நிலைமைகளிலிருந்து நாம் காப்பாற்றப்பட்டாலும், காப்பாற்றப்படாவிட்டாலும், நம்முடைய உண்மைத்தன்மைக்கு, அவசியமானால் ஓர் உயிர்த்தெழுதலின் மூலமாகவும்கூட பலனளிக்கப்படும் என்பதைக் குறித்து நாம் நம்பிக்கையாய் இருக்கலாம்.—மத்தேயு 10:21, 22; 24:13.
24. என்ன அன்புள்ள ஈவுகளை யெகோவா அளித்திருக்கிறார்? அவருடைய அன்புக்கு நாம் எவ்விதமாக பிரதிபலிக்கலாம்?
24 யெகோவாவின் அன்புள்ள ஈவுகள் எத்தனை மகத்தானவையாக இருக்கின்றன! மனிதகுலத்துக்கு அவருடைய ஈவாக இருக்கும் இந்த பூமியும் அதன் மீதுள்ள அனைத்தும் அவருடைய அன்பின் குறிப்பிடத்தக்க வெளிக்காட்டல்களாக இருக்கின்றன. (சங்கீதம் 104:1, 13-16; 115:16) மேலும் மனிதகுலத்தைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டுக்கொள்வதற்கு கடவுளுடைய இரக்கமுள்ள ஈவாக இருக்கும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவே எக்காலத்திலும் கொடுக்கப்பட்டிருப்பதுள் மிக அதிக அன்புள்ள ஈவாக இருக்கிறார். “தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.” (1 யோவான் 4:9, 10) அந்த அன்புக்குப் பிரதிபலிக்கும் வகையில், “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும் வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று” நாம் நிச்சயமாயிருப்போமாக.—ரோமர் 8:38, 39. (w92 1/1)
இந்தக் கட்டுரையின் விமர்சனம்
◻ உண்மையுள்ளவர்களாய் இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
◻ என்ன செயல்நடவடிக்கைகளில் நாம் யெகோவாவிடமாக நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்த முடியும்?
◻ ஊழிய அறிக்கையின் என்ன அம்சங்கள் உங்களுக்கு மிகவும் அக்கறைக்குரியதாயிருந்தது?
◻ யெகோவாவின் அன்புள்ள ஈவுகளுக்கு நாம் எவ்விதமாக போற்றுதலைக் காண்பிக்கக்கூடும்
[பக்கம் 15-ன் பெட்டி]
ஏன் இத்தனை அநேக பயனியர்கள்?
2,600 ஆண்டுகளாக ஜப்பானியர்கள் தீவிர பேரரச வணக்கத்தாராக இருந்து வந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த 20-ம் நூற்றாண்டு போர்களில் மாத்திரமே, முப்பது லட்சத்துக்கும் அதிகமான ஜப்பானிய யுத்த மனிதர்கள் தங்கள் பேரரசன்-தெய்வத்துக்காக மரிப்பதைக் காட்டிலும் அதிகமான சிறப்பு இல்லை என்பதாக நினைத்த காரணத்தால், தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். ஆனால் புத்த-ஷின்டோ போர் மனப்பான்மை இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்தது. அதற்குப் பிற்பாடு பேரரசர் தன் தெய்வத்துவத்தை துறந்துவிட்டார். மத சம்பந்தமான வெற்றிடத்தை எது நிரப்பக்கூடும்? மகிழ்ச்சிதரும் வண்ணமாக யெகோவாவின் சாட்சிகளுடைய மிஷனரிகளாலும், பின்னால் உள்ளூர் சாட்சிகளாலும் நடத்தப்பட்ட வீட்டு பைபிள் படிப்புகள் உண்மையான கடவுளாகிய யெகோவாவை கண்டு கொள்ளவும் தங்கள் வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுக்கவும் அநேகருக்கு உதவியது. இந்த ஒப்புக்கொடுத்தல் அந்த ஜப்பானிய சாட்சிகளுக்கு அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. முற்காலங்களில் அவர்கள் ஒரு பேரரசன்-தெய்வத்துக்கு தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யக்கூடியவர்களாக இருந்திருப்பார்களேயானால், ஜீவனுள்ள கடவுளும் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகருமான கர்த்தராகிய ஆண்டவர் யெகோவாவை வணங்குவதில் இப்பொழுது பயனியர்களாக இன்னும் எத்தனை அதிகமான வைராக்கியத்தோடு தங்களுடைய சக்திகளை அவர்கள் அர்ப்பணிப்பார்கள்!
[பக்கம் 16-ன் படம்]
தெய்வீக சுயாதீனப் பிரியர்—பிரேக் மாநாட்டில் யெகோவாவின் வணக்கத்தார், ஆகஸ்ட் 9-11, 1991