வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
“கோராசினே, உனக்கு ஐயோ!”—ஏன்?
உங்களுக்கு ஐயோ என்பதாக கடவுள் அறிவிப்பதை நீங்கள் நிச்சயமாகவே விரும்பமாட்டீர்கள், இல்லையா? அப்படியென்றால், கடவுளுடைய குமாரனும் நியாயாதிபதியுமாக இருந்தவர் பின்வருமாறு அறிவித்த போது, மூன்று கலிலேயப் பட்டணங்களிலிருந்த யூதர்கள் எவ்விதமாக உணர்ந்திருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்:
“கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்பு நாளிலே உங்களுக்கு நேரிடுவதைப் பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் . . . கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்.”—மத்தேயு 11:21–23.
மேலேயிருக்கும் காட்சி அந்தப் பட்டணங்களில் ஒன்றின் படமாக இருக்கிறது—கோராசின். இந்தப் படம் ஜூலை/ஆகஸ்ட் 1989 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டியிலும்கூட காணப்படுகிறது. மத்தேயு 11:21–23-லுள்ள இயேசுவின் வார்த்தைகள், ஆகஸ்ட் மாதத்தின் போது யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. அப்படியென்றால் கோராசினைப் பற்றி நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?
பூர்வ கோராசின் எங்கே அமைந்திருந்தது என்பதைக் கவனியுங்கள். அதன் இடிபாடுகளை நீங்கள் இந்தப் புகைப்படத்தின் முன்புறத்தில் காணலாம். அடுத்ததாக, கலிலேயா கடலின் வடகரையோரத்து மரங்களைக் கவனியுங்கள். அங்குதானே சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கப்பர்நகூமிருந்தது. மேலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தின் தொலைவுத்தோற்றத்தில் அது சமதளமான நிலப்பகுதியாக இருப்பதாகத் தோன்றக்கூடும், ஆனாலும் கோராசின் உண்மையில் கடற்கரைக்கு மேலே சுமார் 270 மீட்டர்கள் உயரத்தில் அமையப்பெற்றிருக்கிறது.
கரையோரமாக கப்பர்நகூமிலிருந்து சுமார் அதே தொலைவில் பெத்சாயிதா இருந்ததைத் தெரிந்து கொள்வதுகூட உதவியாக இருக்கிறது. இவ்விதமாக, இந்த மூன்றுப் பட்டணங்களை கண்டனம் செய்கையில், இயேசு கலிலேயாவில் அவருடைய ஊழியத்தின் மையப்பகுதியைச் சுற்றியிருந்த ஒரு சிறியப் பகுதியின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டிருந்தார். (மத்தேயு 4:13; மாற்கு 2:1; லூக்கா 4:31) இயேசு ஏன் அவர்களுக்கு ஐயோ என்று சொன்னார்?
இயேசு அப்போஸ்தலர்களோடு இந்தப் பகுதியில் அதிக நேரத்தை செலவழித்து இங்கே அநேக அற்புதமான செயல்களை நடப்பித்தார். பெத்சாயிதாவின் அருகே அவர் அற்புதமாக 5,000-க்கும் மேற்பட்டவர்களுக்குப் போஷித்து, குருடனுக்குப் பார்வையை மீட்டுக் கொடுத்தார். (மாற்கு 8:22–25; லூக்கா 9:10–17) கப்பர்நகூமில் அல்லது அதற்கு அருகே அவர் செய்த அற்புதங்களில், தூரத்திலிருந்தே ஒரு நோயுற்ற வாலிபனை குணப்படுத்தியது, அசுத்த ஆவி பிடித்திருந்த மனிதனைச் சுகப்படுத்தியது, திமிர்வாதக்காரனை நடக்கச் செய்தது, ஜெபஆலயத்தலைவரின் மகளை உயிர்த்தெழுப்பியதும் அடங்கும். (மாற்கு 2:1–12; 5:21–43; லூக்கா 4:31–37; யோவான் 4:46–54) என்ன “பலத்த செய்கைகள்” கோராசினோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை பைபிள் நமக்கு விவரமாக குறிப்பிடாவிட்டாலும், மத்தேயு 11:21 அவ்விடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் இயேசு அற்புதங்களை நடப்பித்தார் என்பதாகச் சுட்டிக்காட்டுகிறது. என்றபோதிலும் ஜனங்கள் மனந்திரும்பி கடவுளுடைய ஆதரவைக் கொண்டிருந்த மேசியாவாக அவரில் விசுவாசம் வைக்கக்கூடாதவர்களாக இருந்தனர்.
இயேசு இப்படிப்பட்ட செய்கைகளைச் செய்வதைக் காட்டும் காட்சியைப் படத்தில் காண்கையில், ‘கோராசின் மக்கள் எவ்விதமாக இத்தனை கடினமாக இருக்கக்கூடும்?’ என்பதாக நீங்கள் கேட்கலாம். புதைப்பொருள் ஆய்வாளர்கள் தோண்டியெடுத்திருக்கும் பொ.ச. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த இடிபாடுகள் மத்தியில் காணப்படும் கறுப்பு பாறைக் கற்களில் ஒரு குறிப்பைக் காணமுடிகிறது. இந்த அழியாப்பகுதிகளில் நகரத்தின் மையத்தில் ஒரு ஜெபஆலயமும் அருகே குடியிருப்புப் பகுதிகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஜெப ஆலயத்திலிருந்த ஒரு சில கற்களில் அசாதாரணமான சிற்ப வேலைபாடுகள் காணப்பட்டன. எதைப் பற்றி? கிரேக்கப் புராணத்தில் வரும் பாதி மனிதனும் பாதி குதிரையுமான பாம்புகளைத் தலைமயிராகக் கொண்ட யூத அணங்கு மற்றும் கலப்பினப் பிறவிகளின் உருவங்கள். யூதேய மதம் இப்படிப்பட்ட விக்கிரகாராதனைக்குரிய சிற்ப வேலைகளைத் தீவிரமாக எதிர்த்திருக்க வேண்டுமாதலால் கோராசினிலிருந்த யூத தலைவர்கள் இவர்களைத் தங்கள் ஜெபஆலயங்களில் ஏன் அனுமதித்திருக்கப் போகிறார்கள்?
“அவ்வட்டாரத்தில் பரந்த மனநிலை சம்பிரதாய முறையாக இருந்திருக்கலாம்” என்பது ஒரு கருத்தாக இருக்கிறது. இயேசு அப்பட்டணத்தில் நல்ல பிரதிபலிப்பு கிடைக்கக்கூடும் என்று நம்புவதற்கு இது காரணமாக இருந்திருக்கலாம்.a ஆனால் இயேசுவின் நாளிலிருந்த மனநிலையைக் குறித்து இந்த ஜெபஆலய அலங்காரம் எதையாவது குறிப்பாக தெரிவிக்கிறதென்றால், கோராசினிலிருந்த பெரும்பாலானோர் “பிதாவை ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்வது பற்றி குறிப்பாக அக்கறையில்லாதவர்களாக இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். (யோவான் 4:23) அதை அவர்கள், அற்புதங்களைச் செய்த மேசியாவை ஏற்றுக் கொள்ளாதிருப்பதன் மூலம் காண்பித்தார்கள்.
இயேசு 70 சீஷர்களை அனுப்பியபோது, மறுபடியுமாக அவர் கோராசின், பெத்சாயிதா மற்றும் கப்பர்நகூமின் மக்களின் கடினமானத் தன்மையை உட்படுத்திய உயர்வுநவிற்சியையே பயன்படுத்தினார். இயேசுவின் பலத்த செய்கைகளை நன்கு அறிந்திருந்த கோராசினில் அவருடைய உடன் கலிலேயர்கள் சாதகமாகப் பிரதிபலிக்கவில்லையென்றால், வேறு சில பட்டணங்களில் சீஷர்கள் பிரசங்கித்தப் போது அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அவர்கள் ஆச்சரியப்படக்கூடாது.—லூக்கா 10:10–15.
ஆகவே கோராசினின் உயிரற்ற கறுப்பு நிற இடிபாடுகளைப் பற்றி நாம் சிந்திக்கையில், இயேசுவின் “ஐயோ” என்ற எச்சரிப்பில் தொக்கி நிற்கிற பொருளை நாம் இருதயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். மனந்திரும்ப, கடவுளுடைய ஜனங்களால் செய்யப்பட்டுவரும் அவருடைய செயல்களுக்கு பிரதிபலிக்கத் தவறுவது, சிறுமையடைவதற்கும் மகிழ்ச்சியற்ற ஓர் எதிர்காலத்துக்கும் வழிநடத்தக்கூடும். (w89 7/1)
[அடிக்குறிப்புகள்]
a நியு யார்க்கிலுள்ள எட்யுக்கேஷனல் ஹெரிட்டஜ், இன்க். 1959-ல் வெளியிட்ட பைபிளின் உலகம் புத்தகம் 5, பக்கம் 44.
[பக்கம் 16-ன் வரைப்படம்]
கோராசின்
பெத்சாயிதா
கப்பர்நகூம்
கலிலேயா கடல்
திபேரியா
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel
[பக்கம் 16-ன் படங்களுக்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.