வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: நாகூம் 1:1–3:19
கடவுள் பழிவாங்கும்போது இரட்சிப்பு கூடிய காரியமாகும்
“இன்னும் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்.” (சங்கீதம் 37:10) இந்த வார்த்தைகள் நிறைவேறும் என்பது நாகூமும் ஆபகூக்கும் எழுதிய பைபிள் புத்தகங்களில் வலிமையாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. தைரியமான இந்த மனிதர்கள் பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டின் பிற்பகுதியில், யூதா ராஜ்யத்தில் தங்கள் தீர்க்கதரிசனப் பதிவுகளை எழுதி முடிக்கிறவர்களாக இருந்தார்கள்.
முதலாவதாக, நாகூம் அறிவித்த கடவுளின் தீர்க்கதரிசனத்தைச் சிந்தியுங்கள். அதில் என்ன பாடங்கள் இருக்கின்றன?
கடவுள் பழிவாங்குவது நிச்சயமாகும்
யெகோவா தனிப்பட்ட பக்தியைக் கேட்கிறார். (யாத்திராகமம் 20:5) இப்படிப்பட்ட பக்தியை அவருக்குக் கொடுக்காத சத்துருக்களின் மீது கடவுளுடைய பழிவாங்குதல் நிறைவேற்றப்படும் என்பதை அசீரியாவின் தலைநகராகிய நினிவேக்கு எதிராக அறிவித்த ஒரு தீர்ப்புச் செய்தியில் நாகூம் காண்பிக்கிறான். ஏன், அவருக்கு முன்பாக பர்வதங்கள் அதிர்ந்து, மலைகள் கரைந்து, பூமி எடுபட்டுப் போகிறது! அவருடைய எரிச்சலின் அக்கினிக்கு முன்பாக யாரால் நிற்கமுடியும்?—1:1–6.
ஓர் அடைக்கலமாக நாம் யெகோவாவை நம்பியிருக்கலாம். ஆம், தம்மில் அடைக்கலம் நாடுகிறவர்களை கடவுள் பாதுகாக்கிறார். அவருடைய சத்துருக்கள் பூண்டோடழிக்கப்படுவதன் காரணமாக இடுக்கண் மறுபடியும் உண்டாகாது. மெய் வணக்கத்துக்குத் தடங்கல் ஏற்படாதிருக்கப் போவதால் அது யூதாவுக்குச் சமாதானத்தின் நற்செய்தியாக இருக்கிறது.—1:7–2:2.
அநீதியுள்ளவர்கள் வெற்றிப் பெற மாட்டார்கள். நினிவேக்கு நடந்த சம்பவத்திலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. அவள் சிறைப்பிடித்துக் கொண்டு போனவர்களைக் கொடூரமாக நடத்தியதன் காரணமாக இது அவளை “இரத்தப் பழிகளின் நகரமாக்கிற்று.” சிங்கங்களின் வாசஸ்தலம் போல அரணிப்பான இந்தப் பட்டணம் அதன் கனமான மதில்களுக்குப் பின்னால் பாதுகாப்பாக இருப்பது போல இருந்தது. ஆனால் கடவுளுடைய தீர்ப்பின்படி நினிவே, நைல் நதியின் மீதிருந்த பூர்வ நோ-அம்மோனுக்கு அல்லது தேபேசுக்கு அவள் செய்தவிதமாக, அதே கதி அவளுக்கு நேரிட வேண்டும். அவளுடைய பாவங்களுக்காக அசீரியாவின் தலைநகரம் பாழக்கப்படும். பாபிலோனிய ராஜாவாகிய நபோபோலாஸரும் மேதியனான சையாக்ஸாரிஸும் சேர்ந்து பொ.ச.மு. 632-ல் பகைமையோடு நினிவேயைக் கைப்பற்றிய போது இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைந்தது.—2:3–3:19. (w89 5⁄15)
வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: ஆபகூக் 1:1–3:19
யெகோவா தம்மடைய சொந்த உரிய நேரத்தில் இரக்கமில்லா சத்துருக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என்பதை ஆபகூக் கற்றுக்கொண்டான். ஆனால் ‘தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.’ (2:4) என்றபோதிலும் இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து வேறு என்ன கூடுதலான பாடங்களை நாம் கற்றறியலாம்?
விசுவாசமுள்ளவர்களுக்கு இரட்சிப்பு
யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் வேண்டுதல்களுக்குச் செவிகொடுக்கிறார். ஆபகூக் கேட்கிறான்: “யெகோவாவே நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே?” ஆம், நியாயம் அங்கில்லை, துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான். ஆனால் கடவுள் நிச்சயமாகவே செவிகொடுக்கிறார். தம் சார்பாக தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவர் “கல்தேயரென்னும் ஜாதியாரை” எழுப்புகிறார். என்றபோதிலும் அவரால் எவ்விதமாக யுத்தத்தைப் போன்ற வல்லமையை பயன்படுத்தமுடியும்? கண்டனத்தை எதிர்பார்த்து தீர்க்கதரிசி கடவுளுடைய பதிலுக்காகக் காத்திருக்கிறான்.—1:1–2:1.
நீதிமானும் விசுவாசமுள்ளவனும் மாத்திரமே பிழைத்திருப்பான். யெகோவா ஆபகூக்குக்கு இதை உறுதியளிக்கிறார். தாமதிப்பது போல தோன்றினாலும், கடவுளுடைய நியமிக்கப்பட்ட சமயத்தில் தீர்க்கதரிசனக் காட்சி “நிச்சயமாய் வரும்.” தேசங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் தற்பெருமையுள்ளச் சத்துரு அவனுடைய இலக்கை அடைய மாட்டான். ஆம், கல்தேயர்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட மாட்டார்கள்.—2:2–5.
துன்மார்க்கர்களுக்கு ஐயோ!
அநீதியான இலாபத்தையும், வன்முறையையும் விக்கிரகாராதனையையும் தவிர்த்திடுங்கள். ஏன்? ஏனென்றால் தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்கிறவனுக்கும், பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கும் இரத்தப் பழியாலே பட்டணத்தைக் கட்டுகிறவனுக்கும் உயிரற்ற விக்கிரகத்தை நம்புகிறவனுக்கும் நிச்சயம் ஐயோ! கடவுள் இப்படிப்பட்டவர்களுடைய கிரியைகளை அழித்திடுவார். பூமி அனைத்தும் யெகோவாவின் மகிமையை அறியும்படியும் அவருக்கு முன்பாக அனைவரும் பயபக்தியோடு மெளனமாக நிற்கும்படியும் செய்யப்படுவர்.—2:6–20.
இரட்சிப்புண்டாக யெகோவாவின் மீது பொறுமையோடே காத்திரு. ஜெபத்தில் ஆபகூக் கடந்த காலங்களில் கடவுள் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினதை நினைவுகூருகிறான். மற்றக் காரியங்களோடுக்கூட யெகோவா பூமியை அளந்து, புறஜாதிகளை கோபத்தில் கரையப் பண்ணினார். தம்முடைய ஜனத்துக்கு இரட்சிப்புண்டாகவும்கூட அவர் ஏறிச் சென்றார். இதனால் உணர்ச்சி மிகுந்தவனாய் ஆபகூக், “இக்கட்டு நாளுக்காக அமைதியாக காத்திருக்க” தீர்மானமாயிருக்கிறான். எத்தனை மோசமான சமயங்களை எதிர்ப்பட வேண்டியிருந்தாலும் அவன் யெகோவாவில் மகிழ்ந்து இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவான்.—3:1–19. (w89 5⁄15)
[பக்கம் 31-ன் பெட்டி]
வேத வசனங்களை ஆராய்தல்
● 1:4—பாசானும், கர்மேலும் லீபனோனும் அழகுக்கும் வளத்துக்கும் செழிப்புக்கும் பேர்போன இடங்களாக இருந்தன. அவை சோர்ந்து வாடிப் போவது, அவைகளை நம்பியிருப்பவர்களுக்குப் பேராபத்தைக் குறிக்கும். இது யெகோவாவின் கோபாக்கினை ஊற்றப்படுகையில் அதன் உக்கிரத்தை வலியுறுத்திக் காண்பிக்கிறது.
● 1:10—நினிவே தன்னை சன்னபின்னலாயிருக்கிற முட்செடியாக, தன்னுள் எவராலும் நுழையமுடியாது என்பதாக கருதினாள். ஆனால் முழுவதும் காய்ந்துபோன செத்தையை நெருப்பு எரித்துவிடுவது போல எளிதில் எரிக்கப்பட்டுப் போவாள். அதேவிதமாகவே, கடவுளின் நவீன நாளைய மக்களின் எதிரிகள் யெகோவாவின் அக்கினியாலான நியாயத்தீர்ப்புகளை எதிர்த்து நிற்கக்கூடாதவர்களாயிருப்பர்.
● 2:6—நினிவேயின் மீது கொண்டுவரப்பட்ட தாக்குதலின் சமயத்தில் பெய்த அடை மழையினால் டைக்ரஸ் நதி பொங்கி வழிந்தோடியது. இதன் காரணமாக நகரின் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட, மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன் காரணமாக அசீரிய தலைநகரத்தைக் கைப்பற்றுவது எதிரிகளுக்குச் சுலபமாக இருந்தது.
● 2:11–13—காட்டு மிருகங்களைப் போல அசீரியர்கள் தேசங்களை அச்சுறுத்தி ஆட்சி செய்து சூறையாடினர். சிங்கம் அவர்களுடைய தேசிய சின்னமாக இருந்ததாக தெரிகிறது. நினிவேயின் இடிபாடுகளில் சிங்கங்களின் பல சின்னங்கள் காணப்பட்டன.
● 3:3, 4—ஒரு வேசியைப் போல, நினிவே நட்புக் கொள்ள ஆறுதலாக முன்வருவதன் மூலமும் ஆதரவுத் தருவதாக நம்பிக்கையூட்டுவதன் மூலமும் தேசங்களை வஞ்சித்தது. ஆனால் இவ்விதமாகக் கண்ணியில் மாட்டிக் கொண்டவர்கள் வெகு சீக்கிரத்தில் யூதாவின் ராஜாவாகிய ஆகாஸினுடைய விஷயத்தில் காண்பிக்கப்பட்டபடியே, அவளுடைய கொடிய நுகத்தின் கீழ் வேதனையை அனுபவித்தார்கள்.—2 நாளாகமம் 28:16, 20, 21.
[பக்கம் 32-ன் படம்]
வேத வசனங்களை ஆராய்தல்
● 1:2–4—தீவினையைப் பொறுத்துக் கொள்ளாத யெகோவாவில் ஆபகூக்கின் விசுவாசம் அக்கிரமம் ஏன் நிலவுகிறது என்று கேட்கும்படியாக அவனைத் தூண்டியது. தன்னுடைய சிந்தனையைச் சரிசெய்துகொள்ள அவன் மனமுள்ளவனாக இருந்தான். (2:1) ஒரு சில காரியங்கள் ஏன் அனுமதிக்கப்படுகிறது என்பதாக நாம் யோசிக்கும் போது, யெகோவாவுடைய நீதியின் மேல் நம்முடைய நம்பிக்கை, அதேவிதமாக நம்முடைய சமநிலையைக் காத்துக் கொள்ளவும் அவருக்காகக் காத்திருக்கவும் நமக்கு உதவி செய்ய வேண்டும்.—சங்கீதம் 42:5, 11.
● 2:5—பாபிலோனியர்கள் தேசங்களைக் கைப்பற்ற தன் போர் இயந்திரத்தைப் பயன்படுத்திய ஒரு கூட்டு மனிதனாக இருக்கின்றனர். ஷியோலும் ஹேடீஸும் எப்பொழுதும் திருப்தியடையாதிருப்பது போலவே அவன் இராணுவத்தின் துணையினால் இன்னும் அதிகமான தேசங்களைக் கைப்பற்ற விரும்பினான். (நீதிமொழிகள் 30:15, 16-ஐ ஒப்பிடவும்.) அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துகையில் ஏற்படுவது போலவே வெற்றிகளினால் அவன் வெறித்துப் போனான். ஆனால் பொ.ச.மு. 539-ல் பாபிலோன் வீழ்ச்சியடைந்தபோது தேசங்களைக் கைப்பற்றும் அவன் போர்கள் முடிவுக்கு வந்தன.
● 3:13—கடவுளுடைய தெரிந்து கொள்ளப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட இஸ்ரவேல் ஜனம் அவருடைய இரட்சிக்கும் வல்லமையை அடிக்கடி நேரில் அனுபவித்தது. (சங்கீதம் 28:8, 9) குறித்தக் காலத்தில் அது, மேசியாவை, கடவுளுடைய பரலோக “ஸ்திரீ”யின் வித்தைப் பிறப்பித்தது. (ஆதியாகமம் 3:15) அந்த “வித்தின்” மீந்திருக்கும் உறுப்பினர்களாகிய இயேசுவின், ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்களில் மீதியானோரை யெகோவா, சாத்தானும் தேசங்களும் கொண்டு வருகின்ற தாக்குதலிலிருந்தும்கூட பாதுகாப்பார்.—வெளிப்படுத்துதல் 12:17.
[பக்கம் 31-ன் படம்]
தொல்பொருளாய்வாளர் A.H. லேயார்டு தீட்டிய வண்ணப்படம் ஓர் அசீரிய அரண்மனையைச் சித்தரிக்கிறது
[படத்திற்கான நன்றி]
Courtesy of the Trustees of the British Museum, London