கடவுளுடைய படைப்பிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
புறாக்கள் தங்கள் தலையிலும் கழுத்திலும் கொத்துக்கொத்தாய் அமைந்துள்ள காந்தச் சக்தி படிகங்களைப் பயன்படுத்தித் தங்கள் திசைகளைக் கண்டுகொள்கின்றன. சில மீன்கள் மின்சக்தியை உண்டுபண்ணுகின்றன. பல வகை பறவைகள் தாங்கள் குடிக்கும் கடல் தண்ணீரிலிருந்து மிதமிஞ்சிய உப்பை வெளியகற்றுகின்றன. சில சிப்பி உயிரினங்கள் உடலில் வெற்றிடங்களைக் கொண்டிருக்கின்றன, நீரில் மூழ்குவதற்கு இவற்றை நீரால் நிரப்பிக் கொள்ளலாம் அல்லது மறுபடியும் மேற்பரப்புக்கு வர வாயுவால் நிரப்பிக்கொள்ளலாம்.
ஆம், மனிதன் இதை உணர்ந்தாலும் உணராவிடினும், தான் ஒரு திசையறி கருவியைப் பயன்படுத்துகையில், மின்சக்தியை உண்டுபண்ணுகையில், நீர்மூழ்கிக் கப்பலைத் திட்டமிடுகையில், அல்லது கடல் நீரிலிருந்து உப்பை அகற்றுகையில், அவன் உண்மையில் கடவுளுடைய படைப்பையே வெறுமென பின்பற்றுகிறான்.
நிச்சயமாகவே, கடவுளுடைய படைப்பு மனிதனுக்கு அத்தனைப் பல பாடங்களைக் கொண்டிருப்பதால் அது சில சமயங்களில் “இயற்கை புத்தகம்” என அழைக்கப்படுகிறது. உதாரணமாக, பயோனிக்ஸ் என்பது, படைப்பில் காணப்படும் ஒழுங்குமுறைகளைச் செயல்முறையில் பொருத்திப் பயன்படுத்துவதற்கு முயற்சியை முழுவதும் ஈடுபடுத்தும் விஞ்ஞானப் பகுதியாகும். பறவைகளின் சிறகுகளின் உருவமைப்புகளைக் கொண்ட ஆகாயவிமான சிறகுகள், கடற்பன்றிகளைப்போன்று உருவமைத்துள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள், மனித எலும்புகளின் மாதிரியைப் போன்று திட்டமிட்டு உருவாக்கின காரைக்கட்டு கட்டிட அமைப்புகள் ஆகியவை இவற்றில் அடங்கியிருக்கின்றன. ஆனால் இந்த “இயற்கை புத்தகம்” அளிப்பதற்கு இருப்பதெல்லாம் இந்தத் தொழில் நுட்ப அறிவு ஒன்றுதானா?
இல்லை, இது சிலசமயங்களில் ஒழுக்க இயல்பானவற்றிலும் நடைமுறை பாடங்களை அளிக்கிறது. உதாரணமாக, சுறுசுறுப்புடனிருப்பதற்கு எறும்புக்கு இருக்கும் இயல்புணர்ச்சியைக் குறிப்பிட்டு, பைபிளிலுள்ள நீதிமொழிகளின் புத்தகம் பின்வருமாறு அறிவுரை கூறுகிறது: “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.”—நீதிமொழிகள் 6:6-8.
எனினும், மிருக நடத்தைப்போக்கிலிருந்து பாடங்களை எடுப்பதாக உரிமைபாராட்டும் விஞ்ஞானமாகிய எத்தாலாஜி என்பது அதன் மட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. மனித நடத்தையை மிருகங்களின் நடத்தைக்குரிய அதே சம வகைப்பிரிவில் வைக்கமுடியாது. மொழி மற்றும் மனிதனிலுள்ள முடிவில்லாத மேம்பட்ட செயற்கைப்பண்பாட்டு சிந்தனைப் போக்கு, ஆகியவற்றைப்போன்ற கவனிக்கத்தக்க வேறுபாடுகளை எண்ணிப்பார்க்க வேண்டும். விஞ்ஞானி ஒருவர் சொன்னபிரகாரம்: “நாம் வெறும் மேலும் கூரறிவுத்திறம் வாய்ந்த வாலில்லாக் குரங்குகள் அல்லர்.” நம்முடைய மனம் “நம்மை மற்ற எல்லா உயிர் வகைகளிலிருந்து தனிப் பண்படிப்படையில் வேறுபட்டவர்களாக்குகிறது.”
மேலும், வெறும் படைப்பின் நுட்ப ஆராய்ச்சி மாத்திரமே ஒருபோதும் பதில்தர முடியாத சில கேள்விகள் இருக்கின்றன. இவற்றில் பின்வருபவை அடங்கியிருக்கின்றன: வாழ்க்கைக்கு நோக்கமுண்டா? கடவுள் இருக்கிறாரா, இருக்கிறாரென்றால், அவர் நம்மைப் பற்றி அக்கறை கொள்கிறாரா? இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமாவென இப்பொழுது நாம் பார்க்கலாம். (w88 3⁄1)
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
படைப்பு இதை முதல் கொண்டிருந்தது: ஒலியலை எதிரழுத்த அமைப்பு
ஒலியலை எதிரழுத்த அமைப்புக்கு ஒருவாறு ஒத்த ஓர் அமைப்பு வெளவால்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது, ஒலிகளை அனுப்பி எதிரொலிகளைப் பகுத்தாராய்வதன்மூலம் அவை தங்கள் இரை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அதன் ஓட்டங்களைப் பின்தொடரக்கூடியதாக்குகிறது. ஆனால் ஒரு வகை விட்டில் பூச்சு (டாக்பேன் டைகர் என்பது) இடையிட்டு அழுத்தும் எதிர்ப்புக் குறியைக் கொண்டிருக்கிறது. இது அதன் எதிரி அனுப்புவதற்கு ஒத்த ஒலியலைகளை அனுப்புகிறது. இந்த எதிர் குறியைப் பெறுகையில் அந்த வெளவால், அது தடங்கலா இல்லையாவென பகுத்தாராய்வதற்குப் போதிய நேரமில்லாமல், விடாது தொடரும் பழக்கமாக அந்த விட்டிலைத் தவிர்க்கிறது.
கானடாவிலுள்ள டொரான்டோ சர்வகலாசாலையின் பேராசிரியர் ஜேம்ஸ் ஃபுல்லர்ட், வியப்புக்குரிய தம் பாராட்டலைப் பின்வருமாறு தெரிவித்தார்: “அதிசயமான காரியம் என்னவெனில், வெளவால்களும் விட்டில் பூச்சுகளும், வெகு மட்டுப்பட்ட நரம்பு செல்களைப் பயன்படுத்தி, தகவல்களைச் செயல்முறைக்குள்ளாக்கி மிக ஆழ்ந்த நரம்பாராய்ச்சிநூலுக்கடுத்தத் தீர்மானங்களைச் செய்யும் தெள்ளந்தெளிந்தத் தகவலின் பேரளவேயாகும். மனித விமானத்தொடர்புடைய போர்த்திற வல்லுநர் பொறாமைகொள்ளக்கூடிய ஓரளவு சிக்கனத்தையும் நுணுக்கப் பண்பாட்டையும் அவை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.”
[பக்கம் 4-ன் பெட்டி/படம்]
படைப்பு இதை முதல் கொண்டிருந்தது: மூழ்கு மணிக்கூண்டு
ஏறக்குறைய 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், லியோனார்டோ டா வின்சி என்பவர் மூழ்குக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அர்கிரொனெட்டா அக்குவாட்டிக்கா எனப்பட்ட ஒருவகை சிலந்தி தண்ணீருக்குள்ளிருந்து சுவாசிக்கும் ஓர் அமைப்பு முறையை ஏற்கெனவே தனிச் சிறப்புடன் செய்து முடித்திருந்தது. உயிர்வாழும் ஜந்துக்கள் பயன்படுத்தும் கருவிகள் என்ற தன் புத்தகத்தில் ஆண்ட்ரீ டீட்ரி விளக்குகிற பிரகாரம், இந்தச் சிலந்தி “மெள்ள ஓடும் நீரோட்டங்களில் அமிழ்ந்துள்ள நீரினுள் வளரும் செடிகளுக்குள் தங்கி அவற்றுக்குள் கிடைநிலையில் மிக நுண்ணிய பின்னல்வேலையை நெய்கிறது, இது தளர்ந்த நிலையில் மிகுதியான நூல்களைக்கொண்டு உறுதியாய் ஒட்டவைக்கப்பட்டிருக்கிறது. மேற்பரப்புக்குத் திரும்ப வந்து, . . . இந்தச் சிலந்தி, திடீர் துள்ளுதலுடன் அதன் நீர்-ஒட்டாத அடிவயிற்று மயிர்களில் காற்றுக் குமிழைப் பற்றிக்கொள்ளுகிறது. . . . மறுபடியும் இந்தச் சிலந்தி கீழே சென்று அந்தக் காற்றுக் குமிழை அந்தப் பட்டுப்போன்ற மென்மையான வலைப்பின்னல் வேலையின்கீழ் விடுகிறது. அந்தக் காற்றுக் குமிழ் அப்பொழுது எழும்பி அந்த வலையில் சிறிது வீக்கத்தை உண்டுபண்ணுகிறது.” திரும்பத் திரும்ப இவ்வாறு சென்று வந்து காற்றுக் குமிழ்களை விடுவதனால் அதன் மணிக்கூட்டின்கீழ் அந்நாளை செலவிடுவதற்குப் போதிய காற்றைச் சிலந்தி சேர்த்து வைத்துக்கொள்ளுகிறது, இரவில் தான் பிடித்த இரையை அங்கே அது உண்கிறது. இதைக் குறித்து டீட்ரி மேலும் சொல்வதாவது: “ஆகையால் மனிதனின் மூழ்குக் கருவிகள், இயற்கையில் கூர்ந்து கவனிக்கப்படும் மிக அதிகத் தனிச் சிறப்புவாய்ந்த மாதிரிகளோடு ஒத்திருக்கிறது.”