உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w89 7/1 பக். 6-11
  • இயற்கை புத்தகமும் பைபிளும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயற்கை புத்தகமும் பைபிளும்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடிகாரம் உண்டாக்குபவரைப் பற்றி கடிகாரம் நமக்குக் கற்பிப்பது
  • இந்தக் கடிகாரம் நமக்குச் சொல்லாதவை
  • பைபிளிலிருந்து ஈடிணைவற்ற அறிவு
  • படைப்பாளர் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கூட்ட முடியும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
    “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
  • இதோ, வடிவமைப்பாளர்!
    விழித்தெழு!—2000
  • கடவுளுக்கு ஆரம்பம் இருந்ததா?
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
w89 7/1 பக். 6-11

இயற்கை புத்தகமும் பைபிளும்

“இந்தச் சர்வலோகம் எனக்குத் திகைப்பூட்டுகிறது! இத்தகைய ஒரு ‘கடிகாரம்,’ கடிகாரம்-உண்டாக்குபவர் ஒருவர் இல்லாமல் தோன்றியிருக்கக்கூடுமென என்னால் கற்பனைசெய்து பார்க்க முடிகிறதில்லை.”

—வால்டேர், 18-வது நூற்றாண்டு பிரெஞ்ச் தத்துவஞானி.

சரி நுட்பமாய் ஓடும் கைக்கடிகாரம் அதை உண்டாக்கினவருடைய தனித் திறமையையும் அறிவாற்றலையும் வியந்து பாராட்டும்படி தூண்டுகிறது. ஆனால் நம்மைச் சுற்றியுள்ள சர்வலோகத்தைப் பற்றியதென்ன? அது ஓரளவாவது, அதைப் படைத்தவரின் தனிச் சிறப்பியல்பை வெளிப்படுத்த முடியுமா?

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்னால், பைபிள் எழுத்தாளரில் ஒருவனாகிய அப்போஸ்தலன் பவுல், இந்தக் கேள்விக்குப் பின்வருமாறு பதில் கொடுத்தான்: “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய [கடவுளுடைய] நித்திய வல்லமையும் தெய்வத்துவமும் படைக்கப்பட்டவைகளின் மூலமாய் உலக சிருஷ்டிப்பு முதற்கொண்டு கவனிக்கிறவர்களுக்குத் தெளிவாய்க் காணப்படு”கின்றன.” (ரோமர் 1:20, தி.மொ.) ஆகவே, இந்த இயற்கை புத்தகத்தைக் கூர்ந்து கவனிப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

கடிகாரம் உண்டாக்குபவரைப் பற்றி கடிகாரம் நமக்குக் கற்பிப்பது

கம்பீரமான நீர்வீழ்ச்சி, கடும் புயலின்போது கடல், இரவில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் நிரம்பிய தெளிவான வானம்—இவை, வல்லமைவாய்ந்த படைப்பவரை நினைக்கும்படி நம்மைச் செய்விக்கும் சில காரியங்களாகும். கிரகங்கள் கோளப்பாதைகளில் சுற்றிவருவதன் துல்லியம், வால்டேரை நினைப்பூட்டினதுபோல், இந்தப் படைப்பவர் மிக மேன்மையான அமைப்பாளரெனவும், கைதேர்ந்த கடிகாரம் உண்டாக்குபவரெனவும் நமக்கு நினைப்பூட்டலாம்.—சங்கீதம் 104:1.

நாம் ஏராளமாய்ப் பெற்றுக்கொள்ளும் பழங்களும் காய்க்கறிகளுமான—பூமியின் விளைபொருட்களின் பல்வேறு வகைகளும் கடவுளுடைய தயாளத் தன்மைக்குச் சாட்சி பகருகின்றன. கடவுள் “நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை,” என்று பவுல் அறிவித்தபோது இதற்கு உறுதிச் சான்றளித்தான்.—அப்போஸ்தலர் 14:17.

இந்தக் கடிகாரம் நமக்குச் சொல்லாதவை

இயற்கை புத்தகத்தை மேலும் ஆராய்வது கடவுளின் இன்னும் மற்றப் பண்புகளைப் பற்றி நமக்குக் கற்பிக்கும். ஆனால் படைப்பிலிருந்து நாம் கற்பவற்றின்பேரில் மாத்திரமே நாம் நம்பி சார்ந்திருந்தால், கடவுளைப்பற்றிய நம் அறிவு எப்பொழுதும் மட்டுப்பட்டதாகவே இருக்கும். பிரெஞ்ச் எழுத்தாளன் ராபர்ட் லெநோபிள், இயற்கை கருத்தின் ஒரு சுருக்கச் சரித்திரம் (Esquisse d’une histoire de l’idee de Nature) என்ற தன் புத்தகத்தில் இதைப் பின்வருமாறு விளக்குகிறார்: “மனிதன், இயற்கையின் மறைபொருளை ஊடுருவி அதன் இரகசியத்தை—ஓர் ஆராய்ச்சி சாலையிலிருந்து ஒருபோதும் வெளிவரப்போகாத ஓர் இரகசியத்தைக் கண்டுபிடிப்பதற்குத் தன் கவனத்தை எப்பொழுதும் திருப்பிக்கொண்டிருப்பான்.” கத்தோலிக்க தினசரி லா கிராய்க்ஸ் (La Croix) பொது மதிப்பாய்வு நடத்தினதில் —விசுவாசிகளாயினும் நாத்திகராயினும்—பாதிக்கு மேற்பட்ட பிரெஞ்சுக்காரர் இதைச் சம்மதித்து, “சர்வலோகத்தைப் பற்றிப் போதிய விளக்கத்தை விஞ்ஞானம் ஒருபோதும் அளிக்க முடியாது, ஏனெனில் மிகுதியான காரியங்கள் தத்துவ ஞானத்துக்கு அல்லது மதத் துறைக்கு உரியவை,” என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன்னால், உண்மையுள்ள யோபு இதே முடிவுக்கு வந்தான். அவன் பின்வரும் கேள்வியை எழுப்பினான்: “ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?” இந்த ஞானம் இயற்கை புத்தகத்தில் காணப்படுமா? “ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.”—யோபு 28:12, 14, 21.

அப்படியானால், இந்த ஞானத்தைக் கண்டடைய நாம் எங்கே செல்லவேண்டும்? அதே புத்தகம் பதில் தருகிறது: “தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.” (யோபு 28:23) கடவுள் பைபிளைக் கருவியாகக் கொண்டு அதிசயமான வகையில் தம்முடைய ஞானத்தை மனிதவர்க்கத்தோடு பகிர்ந்திருக்கிறார்.

பைபிளிலிருந்து ஈடிணைவற்ற அறிவு

மனிதவர்க்கத்தின் தொடக்கத்தைக் காணும் ஈடிணைவற்ற உள்நோக்கை பைபிள் நமக்குக் கொடுக்கிறது. கடவுள் இந்தப் பூமியை ஆயத்தஞ்செய்து பின்பு முதல் மனித ஜோடியை அங்கே வைத்தாரென அது நமக்குச் சொல்லுகிறது. நம்முடைய முதல் பெற்றோர் பரிபூரண சூழ்நிலைமைகளில் நித்தியகாலம் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் கலகஞ்செய்து, தங்கள் பாவத்தால்—பாவமும் மரணமும் உட்பட— மனிதவர்க்கத்தைத் துயருறுத்தின எல்லாத் தீமைகளுக்கும் வழியைத் திறந்து வைத்தார்கள்.—ஆதியாகமம், 1-3 அதிகாரங்கள்; ரோமர் 5:12-21.

இந்த நிலைமையைச் சீர்ப்படுத்த கடவுள் எடுத்தப் படிகளையும் நுட்பவிவரமாய் பைபிள் நமக்குச் சொல்லுகிறது. ஆதாம் ஏவாளுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின், கடவுளுடைய சொந்தக் குமாரனான இயேசு, மனிதவர்க்கம் கடவுளுடன் ஒப்புரவாவதற்கு வாய்ப்பு தரும்படி பூமிக்கு வந்தார். இவ்வாறு கிறிஸ்து, தம்மில் விசுவாசங்காட்டி தம்முடைய பலியின் மதிப்பைக் கண்டுணருவோருக்கு, பரதீஸாக மாற்றப்படவிருக்கும் பூமியில் நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பை ஏற்கும்படி நீட்டினார்.—லூக்கா 23:43; யோவான் 3:16.

இந்த நம்பிக்கை நம் ஒவ்வொருவருக்கும் நீட்டப்படுகிறது. இதை அடைய ‘ஒரே மெய்க் கடவுளையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய திருத்தமான அறிவை’ நாம் பெறவேண்டும். மேலும் நாம் இந்த நம்பிக்கைக்குப் பொருந்திய வாழ்க்கை நடத்தவும் வேண்டும். இந்தத் திருத்தமான அறிவு பைபிளில் காணப்படுகிறது.—யோவான் 17:3, NW; யாக்கோபு 2:24-26.

மனிதன் எங்கிருந்து வந்தான்? மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது? மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்குக் காரணங்கள் யாவை? அவை ஏதோவொரு நாளில் தீர்க்கப்படுமென்ற நம்பிக்கை ஏதாவது உண்டா? மனிதவர்க்கத்துக்குப் பரிபூரண நிலைமைகளைக் கடவுள் எப்பொழுது எவ்வாறு கொண்டுவருவார்? ஆகியவற்றைப்போன்ற கேள்விகளுக்கு நுட்பவிவரமான பதிலை அடைய உங்களுக்கு விருப்பமா? அப்படியானால், பைபிளை ஆராய்ந்து பார்க்கும்படி நாங்கள் உங்களை ஊக்கப்படுத்துகிறோம், அதுவே சர்வலோகக் கடவுளிடமிருந்துவரும் பதில்களை உங்களுக்குக் கொடுக்கும் ஒரே புத்தகம், மேலும் ‘நித்திய ஜீவனுக்குரிய நம்பிக்கையின் ஆதாரம்’ அடங்கிய ஒரே புத்தகமும் ஆகும். இந்தப் பதில்களை உங்கள் பைபிளில் நீங்கள் கண்டடைய உங்களுக்கு உதவிசெய்வதே உவாட்ச் டவர் சங்கத்தின் பிரசுரங்களின் நோக்கமாகும்.—தீத்து1:1-3, NW. (w88 3⁄1)

[பக்கம் 10-ன் படம்]

சர்வலோகம் கடவுளுடைய பண்பியலின் அம்சங்களை வெளிப்படுத்துகிறது

[பக்கம் 6-ன் படம்]

மனிதனுக்கும் பூமிக்கும் கடவுள் கொண்டுள்ள நோக்கங்களைப் பற்றி பைபிள் மாத்திரமே நமக்குச் சொல்ல முடியும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்