“தெய்வீக நீதி” மாவட்ட மாநாடுகள்
நீதியில்லாமையின் காரணமாக உலகில் எவ்வளவு மிகுதியான துன்பங்கள் இருக்கின்றன! ஒருசில அரசியல் அதிகாரிகள் வெகுவாக அதிகார துர்பிரயோகம் செய்திருப்பது, அநியாயமான துன்பங்களில் விளைவடைந்திருக்கிறது. பேராசைமிக்க வர்த்தகர்கள், ஜனங்களை ஒடுக்குவதால் அதிகமான இன்னல்களுக்கு இது காரணமாக இருக்கிறது. இன்னும் மதத்தலைவர்களின் ஒடுக்குதலை இன்று காணமுடிகிறது. இயேசுவின் நாளிலிருந்த அவர்களுடைய கூட்டாளிகளைப் போலவே இவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் குறித்து, இயேசு பின்வருமாறு சொன்னார்: “சுமப்பதற்குரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின் மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொட மாட்டார்கள்.” (மத்தேயு 23:4) குடும்ப வட்டாரங்களிலும்கூட மிகுதியாக அதிகார துர்பிரயோகமும் இதன் விளைவாக அநீதியும் இருந்து வருகிறது.
அபூரண மனிதர்கள் எத்தனை நல்லெண்ணம் படைத்தவர்களாக இருந்த போதிலும், இப்படிப்பட்ட காரியங்களைச் சரிசெய்வதற்கு அவர்களை நம்பியிருப்பது வீணாக இருக்கும் என்பதை சரித்திரம் காண்பிக்கிறது. ஆனால் பரலோகத்திலே உன்னதமானவரும் நியாயாதிபதியுமாகிய யெகோவா இருக்கிறார். அவர் நீதியுள்ள கடவுளாக இருக்கிறார். சரியாகவே, மோசே பின்வருமாறு பாடினான்: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”—உபாகமம் 32:4.
யெகோவா நீண்ட காலமாக இந்த உலகின் எல்லா அநியாயங்களையும் சகித்துக்கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அவர் எப்பொழுதும் அவ்விதமாகச் செய்து கொண்டிருக்கமாட்டார். அவர் செயல்படுவதற்கு அவருக்கு ஒரு நியமிக்கப்பட்ட காலமிருக்கிறது. அப்போது ஏசாயா 14:4-7-ல் காணப்படும் தீர்க்கதரிசனம் நிறைவேறும். இது எல்லா விதமான அடக்குமுறைகளும் ஒழிக்கப்பட்டு ‘பூமி முழுதும் இளைப்பாறி அமைந்திருக்கும்’ என்பதாக வாக்களிக்கிறது.
யெகோவாவின் சாட்சிகள் இந்தத் தீர்க்கதரிசன வாக்குத்தத்தங்களில் உறுதியான விசுவாசத்தைக் கொண்டிருப்பதன் காரணமாக, முழுமையாக ராஜ்ய ஆட்சியைக் கொண்டுவருவதன் மூலம் யெகோவா சீக்கிரத்தில் எல்லா அடக்கு முறைக்கும் அநீதிக்கும், அநியாயத்துக்கும் ஒரு முடிவைக் கொண்டுவருவார் என்பதை எல்லா இடங்களிலும் அறிவிப்பதில் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். அப்பொழுது எவருமே எந்தத் தீங்கையும் அல்லது கேட்டையும் செய்யமாட்டார்கள். ஏனென்றால், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:9.
யெகோவாவின் நீதியான நியாயத்தீர்ப்புகளில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காக, “தெய்வீக நீதி” என்பது 1988 மாவட்ட மாநாடுகளின் பொருளாக இருக்கும். இந்தப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தெய்வீக நீதிக்கான நம்முடைய நம்பிக்கையை அறிவிப்பதற்கு நம்மை தூண்டுவது மட்டுமல்லாமல், நம்முடைய எல்லா செயல்தொடர்புகளிலும் தெய்வீக நீதிக்கு இசைவாக செயல்படவும்கூட நம்மை உற்சாகப்படுத்தும்.
நம்முடைய முதல் பெற்றோரின் மீறுதலின் காரணமாகவே நம்முடைய மனச்சாய்வு சுயநலத்திடமாக, அநியாயத்திடமாக இருக்கிறது என்பதை யெகோவாவின் ஊழியர்களாக நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். ஆகவே, பைபிள் பேச்சுகள், நடிப்புகள், பேட்டிகள் மற்றும் தெய்வீக நீதியை உறுதியாக கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நாடகங்கள் வாயிலாக நாம் பெற இருக்கும் மிகச் சிறந்த தகவலை நாம் போற்றுகிறவர்களாக இருப்போம். ‘நியாயஞ்செய்து, இரக்கத்தை சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கும்’படியாக மீகா 6:8-ல் சொல்லப்பட்ட கட்டளைக்கு இசைவாக இது இருக்கிறது. இது ஒத்திசைவுக்கும் மனநிறைவுக்கும் சந்தோஷத்துக்கும் வழி செய்வதாக இருக்கிறது; பூமி முழுவதிலும் நற்செய்தியின் பிரசங்கிப்பை மேம்படுத்தவும் கூட இது உதவி செய்யும்.
சில குறிப்பிட்ட நாடுகளில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினர்களின் விசேஷித்த பேச்சுகளுக்காக, அநேக பட்டணங்கள் ஒன்றிணைக்கப்படுவது இந்த மாநாடுகளின் விசேஷ அம்சமாக இருக்கும். மேலுமாக இந்த மாநாடுகளுக்கு உலகம் முழுவதிலுமுள்ள மிஷனரிமார்களின் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்; அவர்கள் தங்களுடைய குடும்பங்களை மறுபடியுமாக சென்றுபார்க்க இது உதவியாக இருக்கும்.
யெகோவாவுக்குச் சித்தமானால், “தெய்வீக நீதி” மாவட்ட மாநாடுகள் வியாழன் பிற்பகல் 1.30-க்கு ஆரம்பமாகி, ஞாயிறு மாலை 4.00 மணிக்கு முடிவடையும். நிகழ்ச்சிநிரல் துவங்கும்போது அங்கிருக்கவும் ஒவ்வொரு நாளும் முடிவான பாட்டு ஜெபம் நடைபெறும் வரையாக அங்கிருக்கவும் நம்முடைய காரியங்களைத் திட்டமிடுவோமாக. நல்ல ஆவிக்குரிய பசியார்வத்துடனும், குறிப்புகளை எடுத்துக்கொள்ள தயாராகவும் வரவும். நம்மை பலப்படுத்தவும், நமக்கு முன்னாலிருக்கும் வேலைக்கு நம்மை ஊக்குவிக்கவும் யெகோவா நமக்காக நல்ல “விருந்தை” வைத்திருக்கிறார் என்பதைக் குறித்ததில் நம்பிக்கையாயிருக்கலாம்.—ஏசாயா 25:6; உன்னதப்பாட்டு 2:4.
ஆம், “தெய்வீக நீதி” மாவட்ட மாநாடுகளிலிருந்து கூடிய அளவு மிக அதிகமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தோடும் ஒவ்வொருவரும் வருவோமாக.
“தெய்வீக நீதி” மாவட்ட மாநாடுகள் இந்தியாவில் செப்டம்பர் 1988 முதல் ஜனவரி 1989 வரை நடைபெற இருக்கும் இடங்களும் தேதிகளும் பற்றிய தகவல்களுக்கு இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளருக்கு தயவுசெய்து எழுதவும்