பொய் வணக்கத்தை ஆதரிப்பதாக கிறிஸ்தவ மண்டலம் வெளிப்படுத்தப்படுகிறது
“தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேளாமலும் புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற ஜாதி இதுதான்.”—எரேமியா 7:28, NW.
“மெய்யான அசைக்கமுடியாத நம்பிக்கையின் அக்கினி அவனுள் எரிந்துக்கொண்டிருந்தது; சத்தியத்தைப் பேசவும் மென்மையாக கடிந்துகொள்ளவும் ஆனால் ஆறுதல் சொல்லவும்கூட விலக்கமுடியாத ஒரு சக்தி அவனுள் இருந்தது.” இரண்டு எபிரேய கல்விமான்கள் இந்த வார்த்தைகளில் எரேமியாவின் பாத்திரத்தை விவரிக்கிறார்கள். கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அவனுடைய வேலை மிகப் பெரியதாகவும் பயத்தைத் தோற்றுவிக்கக்கூடியதாகவும் இருந்தபோதிலும், யூதா தேசத்திடமாக தன்னுடைய உத்தரவாதத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன்தானே இதை இவ்விதமாகச் சொல்கிறான்: “யெகோவாவுடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும் பரிகாசமுமாயிற்று. ஆதலால் நான் அவரை பிரஸ்தாபம் பண்ணாமலும் இனி யெகோவாவுடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்.” ஆம், அழுத்தமும் துன்புறுத்தலும் அவனுக்கு அளவுக்கு மிஞ்சினதாக ஆனது. ஆனால் அவன் நம்பிக்கை இழந்துவிட்டானா?—எரேமியா 20:8, 9, NW.
2 எரேமியா தொடர்ந்து சொன்னான்: “அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைப்பட்டு எரிகிற அக்கினியைப் போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.” (எரேமியா 20:9) யூதாவுக்கு கடவுளின் நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கும் தன்னுடைய பொறுப்பை எரேமியா தட்டிக் கழித்துவிடவில்லை.—எரேமியா 6:10, 11.
இன்றைய எரேமியா
3 எரேமியாவும் கிறிஸ்து இயேசுவும் பூர்வ கிறிஸ்தவ சீஷர்களும் யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய விரும்பப்படாத செய்தியை தைரியமாக அறிவித்து வந்தார்கள். பிரசங்கித்தற்காக, ஏற்கெனவே காவலில் வைக்கப்பட்டிருந்தபோதிலும், பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும், தங்கள் மத சம்பந்தமான எதிரிகளுக்கு தைரியமாக இவ்விதமாக பதிலளித்தார்கள்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் அரசராக தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” அவர்களுடைய தைரியத்துக்காக, மதத்தலைவர்களின் உத்தரவின் பேரில் அவர்கள் அடிக்கப்பட்டார்கள். அப்போஸ்தலர்கள் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்? “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.”—அப்போஸ்தலர் 5:29, 40-42; மத்தேயு 23:13-33.
4 இவ்விதமாக அபிஷேகம் பண்ணப்பட்ட பூர்வ கிறிஸ்தவர்கள் எரேமியாவின் முன்மாதிரிக்கு இணையாக செயல்பட்டார்கள். சமாளிக்க முடியாத பெரிய அளவில் சச்சரவுகளையும், பிடிவாதமான மத சம்பந்தமான சத்துருக்களையும் எதிர்பட்டபோதிலும் அவர்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை அறிவித்து வந்தார்கள். இப்பொழுது இந்த 20-ம் நூற்றாண்டில் அதே முன்மாதிரியை பின்பற்றியிருப்பவர்கள் யார்? இந்தக் காரிய ஒழுங்கின்மீது, விசேஷமாக எருசலேமுக்கு ஈடாக இருக்கும் கிறிஸ்தவ மண்டலத்தின் மீது வர இருக்கும் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை வெளியரங்கமாகவும் வீடுகள்தோறும் அறிவித்து வந்திருப்பது யார்? சிறியதாக ஆனால் தைரியமுள்ளதாக இருக்கும் யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சாட்சிகளின் தொகுதியே தற்கால எரேமியா வகுப்பாக இருந்து வந்திருக்கிறது என்பதைக் காண்பிக்க 68 வருடங்களுக்கும் மேலாக சரித்திர அத்தாட்சி குவிந்துகொண்டே வந்திருக்கிறது. 1935 முதற்கொண்டு வளர்ந்து வரும் இலட்சக்கணக்கான “திரளான கூட்டமாகிய ஜனங்களான” மனமுவந்து முன்வரும் அவர்களுடைய தோழர்களால் இவர்கள் பெரியதாக வளர்ந்து அவர்களால் உதவப்பட்டுமிருக்கிறார்கள். இவர்களுங்கூட யெகோவாவின் சாட்சிகளென்றே அழைக்கப்படுகிறார்கள். பொய் மதம் ஒரு கண்ணியாகவும் மறைவான சூழ்ச்சியாகவும் இருப்பதாக அதை கண்டனம் செய்வதன் மூலம் அவர்கள் எரேமியாவின் வேலையை ஒருமித்து செய்துவருகிறார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 14:1-5; 7:9, 10.
கிறிஸ்தவ மண்டலம் ஏன் எருசலேமுக்கு தற்கால கால இணையாக உள்ளது?
5 ஆனால், பூர்வ எருசலேமுக்கும் கிறிஸ்தவ மண்டலத்துக்குமிடையே நாம் எங்கே இசைவு பொருத்தத்தைக் காண்கிறோம்? பெருமையுள்ள கிறிஸ்தவ மண்டலத்தில் இன்று அதே போன்ற மனநிலைகளும் நிலைமைகளும் காணப்படுகின்றன. ஒரு சிலவற்றைக் குறிப்பிட வேண்டுமாயின் அவர்கள் ரோம், எருசலேம், கான்டர்பரி, பாத்திமா, குவாடிலோப், மற்றும் சராகோஸா போன்ற தங்களுடைய ‘பரிசுத்த நகரங்களிலும்’ நினைவுச் சின்னங்களிலும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய கத்தீட்ரல்களையும் பாஸலிக்காக்களையும், ஆலயங்களையும் சர்ச்சுகளையும் மிகவும் உயர்த்தி, இவை கடவுளோடு ஒரு விசேஷித்த நிலைநிற்கையை அவர்களுக்குக் கொடுப்பதுபோல இவைகளின் தொல் பழமையையும் கட்டடக் கலையையும் குறித்து பெருமையடித்துக்கொள்ள விரும்புகிறார்கள். தங்களுடைய மத சம்பந்தமான கட்டடங்கள் “கடவுளுடைய மகிமைக்காக” கட்டப்பட்டதாகவும்கூட அவர்கள் சொல்கிறார்கள். என்றபோதிலும், இந்தக் கட்டடங்களில் எத்தனை, உண்மையில் யெகோவா தேவனின் நாமத்தை தாங்கியதாக இருக்கின்றன? மறுபட்சத்தில் ஒருவர் அவைகளைத் திட்டமிட்ட கலைஞர்களையும், அவைகளை அலங்கரித்த ஓவியர்களையும் மற்றும் சிற்பிகளையும், அவைகள் கட்டப்படுவதற்குக் காரணமாயிருந்த செல்வந்தர்களையும், அவை அர்ப்பணம் செய்யப்பட்ட “புனிதர்களை”யும் பற்றியுமே நினைப்பூட்டப்படுகிறார். தொல் பழமையிலும் பாரம்பரியத்திலும் கிறிஸ்தவ மண்டலத்தின் நம்பிக்கை யூதா அதனுடைய பரிசுத்த ஆலயத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் போலவே ஏமாற்றக்கூடியதாக இருக்கிறது.—எரேமியா 7:4.
6 யூத ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் எரேமியா கண்டனம் செய்ததற்கு இசைவாக இன்று கிறிஸ்தவ மண்டல மதத் தலைவர்களைப் பற்றி என்ன சொல்லப்படலாம்? எரேமியாவைப் போலவே ஒளிவு மறைவின்றி இயேசு, யூத குருவர்க்கத்தைப் பற்றிய ஒரு வருணனையைக் கொடுத்தார். இது இன்றைய கிறிஸ்தவ மண்டல குருமார்களுக்குப் பொருத்தமாக உள்ளது: “அவர்கள் சொல்லுவதைச் செய்யாதிருக்கிறார்கள் . . . மனுஷர் காணவேண்டுமென்றே எல்லாவற்றையும் செய்கிறார்கள் . . . விருந்துகளில் முதன்மையான இடங்களையும் ஜெப ஆலயங்களிலும் முதன்மையான ஆசனங்களை விரும்புகிறார்கள்.” (மத்தேயு 23:3-7, எருசலேம் பைபிள்) முக்கிய மதகுருமார்களும் பிரசங்கிமார்களும் அரசியல் மற்றும் தேசீய கூட்டங்களிலும் பேரணிகளிலும் கலந்துகொண்டு அவைகளை ஆசீர்வதிப்பதையும் அரசியல்வாதிகளோடு பொது மக்கள் காணும் வகையில் பிரதான இடங்களில் தங்களை நிறுத்திக்கொள்வதையும் நாம் எவ்வளவு அடிக்கடி பார்க்கிறோம்!
7 இப்பொழுது இந்த டெலிவிஷன் சகாப்தத்தில், பொதுமக்களை வசியப்படுத்தவும் மந்தையின் பணப்பையை காலியாக்கவும், உணர்ச்சிகளைத் தூண்டுகிற எல்லாவிதமான சூழ்ச்சிமுறைகளையும் மனோதத்துவ உபாயங்களையும் துணையாகக்கொண்டு இந்தச் சாதனத்தை தன்னலத்துக்காக பயன்படுத்திக்கொள்ளும் டெலிவிஷன் பிரசங்கிமார்கள் இருக்கிறார்கள். சுமார் 2,600 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பொழுதும்கூட எரேமியாவின் கண்டன வார்த்தைகள் எத்தனை பொருத்தமாக உள்ளது! “அவர்களில் சிறியோர் முதல் பெரியோர் மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள் முதல் ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்.” அதே சமயத்தில், ஜனங்களை முகமுகமாக வீட்டுக்கு வீடு சென்று சந்தித்து மெய்யான கிறிஸ்தவ ஊழியத்தை செய்யும் சவாலை ஏற்றுக்கொள்ள அவர்களில் ஒருவரும் பிரியப்படுவதில்லை. யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே, அபிஷேகம் பண்ணப்பட்ட எரேமியா வகுப்பாரும் அவர்களுடைய தோழர்களாகிய திரள் கூட்டத்தாரும் மட்டுமே, இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.—எரேமியா 6:13; அப்போஸ்தலர் 20:20, 21.
கிறிஸ்தவ மண்டலம் இரட்சிக்கப்பட்டுவிட்டதா?
8 இதே டெலிவிஷன் பிரசங்கிமார்கள், “மறு பிறப்பு” “ஒருமுறை இரட்சிக்கப்பட்டால் எப்போதும் இரட்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்” என்பதாக பாகுபாடில்லாமல் குரலெழுப்பிக்கொண்டும், இறைமையியலின் மூலமாகவும், பொதுமக்களைத் தவறான பாதுகாப்புணர்வுக்குள் அமைதிபடுத்தி வருகிறார்கள். கிறிஸ்தவ மண்டலத்தின் ஒவ்வொரு மதபிரிவிலுமுள்ள இலட்சக்கணக்கான ஆட்கள் தாங்கள் “மறுபடியுமாக பிறப்பிக்கப்பட்டவர்களும்” “இரட்சிக்கப்பட்டவர்களு”மாயிருப்பதாக நம்பும்படி வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். வெட்கங்கெட்ட அரசியல் வாதிகளும் கவலையின்றி அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், அவர்களுக்குப் பிரியமான பிரசங்கிமார்கள், அவர்கள் “இரட்சிக்கப்பட்டு”விட்டதால் கடவுளோடு சமதானமாயிருக்கிறார்கள் என்பதாக அவர்களுக்குச் சொல்கிறார்கள். மதத்திலும் அரசியலிலும் தேச வாரியாகவும் அவர்கள் பிரிந்திருந்தபோதும் இவ்விதமாகச் சொல்கிறார்கள்! எரேமியாவின் நாளிலிருந்தது போலவே மக்கள் அதை விரும்புகிறார்கள். (எரேமியா 5:31; 14:14) கடவுளுடைய அர்மகெதோன் நியாயத்தீர்ப்பின் செயல் எல்லைக்கு தாங்கள் அப்பாற்பட்டவாகள் என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.—எரேமியா 6:14; 23:17; 1 கொரிந்தியர் 1:10; வெளிப்படுதின விசேஷம் 16:14, 16.
9 என்றாலும் கடவுளுடைய வார்த்தையையும் கிறிஸ்துவின் போதகங்களையும் கவனமாக ஆழ்ந்து படிக்கும்போது, குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையான ஆட்கள் மாத்திரமே மறுபடியுமாக பிறக்கும் சிலாக்கியத்தில் பங்குகொண்டு ‘ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்து இவ்விதமாக கிறிஸ்துவோடு பரலோக ஆட்சியில் பங்குகொள்கிறார்கள் என்பது தெரிகிறது. (யோவான் 3:3-5; ரோமர் 8:16, 17; வெளிப்படுத்தின விசேஷம் 14:1-3) இன்று மெய் கிறிஸ்தவர்களாக இருக்கும் திரளான கூட்டமான ஜனங்கள் மறுபடியுமாக பிறப்பது அவசியமில்லை. ஏனென்றால் அவர்களுடைய நித்திய ஜீவனின் நம்பிக்கை பரலோகத்துக்குரியதாக இல்லாமல் பூமிக்குரியதாக இருக்கிறது. (2 பேதுரு 3:13; வெளிப்படுத்தின விசேஷம் 21:3, 4) மேலுமாக கிறிஸ்தவ மண்டலத்தின் போதனை, இரட்சிக்கப்பட தேவையிலிருக்கும் ஒரு சாவாமையுள்ள ஆத்துமா மனிதனுக்கு இருக்கிறது என்ற பொய்யான கூற்றை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கோட்பாட்டுக்குப் பைபிளில் எந்த ஆதாரமுமில்லை. இது உண்மையில் பூர்வ கிரேக்க தத்துவத்திலிருந்து பெறப்பட்ட கோட்பாடாக உள்ளது.a
அவருடைய வார்த்தையிலோ அவருடைய நாமத்திலோ விருப்பமில்லை
10 பூர்வ எருசலேமுக்கும் நவீன கிறிஸ்தவ மண்டலத்துக்குமிடையே ஒப்பான மற்ற விஷயங்களும் உள்ளன. எரேமியா சொன்னான்: “யெகோவாவுடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.” (எரேமியா 6:10) மதகுருமார்கள், யெகோவாவுடைய வார்த்தைக்குப் பதிலாக தத்துவ ஞானிகளையும் விஞ்ஞானிகளையும் மேற்கோள் காண்பிக்க விரும்புகிறார்கள். அநேகர் பைபிளைக் குறித்து வெட்கப்படுகிறார்கள்; அவர்களுடைய “முற்போக்கான விமர்சனத்தின்” மூலமாக அவர்கள் அதை கேலியும் செய்கிறார்கள். அது நல்ல ஒரு இலக்கியமாக, கட்டுக்கதைகளும் புராணகதைகளும் அடங்கியதாக இருப்பதாகவும்கூட சொல்கிறார்கள். (எரேமியா 7:28) ஆசிரியரின் பெயரை பொறுத்தமட்டில் அதை அவர்கள் வெறுத்து ஒதுக்கிவிடுகிறார்கள். இவ்விதமாக உறுதியாகச் சொல்வதற்கு நமக்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
11 எபிரேய நான்கெழுத்து (יהוה)(YHWH) எபிரேய வேதாகமத்தில் சுமார் 7000 தடவைகள் தோன்றியபோதிலும், “யெகோவா” அல்லது “யாவே” என்ற பெயருக்குப் பதிலாக அநேக ஆங்கில மொழிப்பெயர்ப்புகளில் பெயர் அறியப்படாத “கர்த்தர்” என்ற வார்த்தைகள் போடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக தென்னாப்பிரிக்க-டச்சு மொழியின் தற்போதைய பைபிள் மொழிப்பெயர்ப்புகளில் அவை முற்றிலுமாக விடப்பட்டிருக்கின்றன. ஸ்பானிய மொழிப்பெயர்ப்பு அதன் மூல பதிப்பில் பெயரை உபயோகப்படுத்தியிருக்கிறது. திருத்திய மொழிபெயர்ப்பு பிரசுரிக்கப்பட்டபோது, தெய்வீகப் பெயருக்குப் பதில் “சீனியார்” (Señor, கர்த்தர்) என்று போடப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ மண்டல மொழிப்பெயர்ப்புகள் கடவுளுடைய நாமத்தை பயன்படுத்துகையிலும்கூட, மதகுருமார்கள் அபூர்வமாகவே அதைப் பயன்படுத்துகிறார்கள். என்றபோதிலும் எரேமியா அவனுடைய தீர்க்கதரிசன செய்தியில் கடவுளின் தனிப்பட்ட பெயரை 726 தடவைகள் பயன்படுத்தியிருக்கிறான்.”b
“வானராக்கினியும்” விக்கிரகாராதனையும்
12 எருசலேமுக்கு எரேமியா கொண்டு சென்ற செய்தியை நாம் ஆராய்ந்து பார்க்கையில், மற்றொரு இசைவு பொருத்தத்தை நாம் காண்கிறோம். ஜனத்துக்காக விண்ணப்பம் பண்ண வேண்டாம் என்பதாக யெகோவா தம்முடைய தீர்க்கதரிசிக்குச் சொன்னபோது அதற்கான காரணத்தையும் அவர் சுட்டிக் காண்பித்தார்: “யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா? பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.” என்ன வைராக்கியமான நடவடிக்கையில் முழு குடும்பமும் ஈடுப்பட்டிருந்தது? “வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படிக்கு!”—எரேமியா 7:16-18; 44:15, 19.
13 யூத விளக்கவுரை ஒன்று இவ்விதமாகச் சொல்கிறது: “வானராக்கினி வழிபாடு ஆர்வத்துடனும் பகிரங்கமாகவும் செய்யப்பட்டு வந்தது.” யூதா தேசம், பாபிலோனியர் வழிபட்டு வந்த மூன்றில் ஒன்றான இஷ்டார் என்ற பாபிலோனிய செழுமையின் கடவுளுக்கு விக்கிரகாராதனை செய்து வந்தது என்பது நம்புவதற்குரியதாக இருக்கிறது. அல்லது இந்த “ராக்கினி” இதற்கொத்த கானானிய தேவதையான அஸ்தரோத்தாக இருந்திருக்கலாம்.—1 இராஜாக்கள் 11:5, 33.
14 இந்தத் தேவதை வணக்கத்தோடுகூட, அவர்கள் மற்ற விக்கிரகாராதனையிலும் ஈடுபட்டுவந்தார்கள். இதற்காக யெகோவா அவர்களைக் கண்டனம் செய்து பின்வருமாறு சொன்னார்: “அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன?” அவர் தொடர்ந்து பின்வருமாறு குற்றஞ்சாட்டினார்: “என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும் தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும் தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்கள்.” (எரேமியா 8:19; 9:14) கிறிஸ்தவ மண்டலம் அதே கண்ணிக்குள் விழுந்துவிட்டிருக்கிறதா?
15 ப்ராட்டஸ்டண்டுகள், கத்தோலிக்கர்கள், ஆத்தடாக்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்களின் எந்தச் சர்ச்சுக்கு அல்லது கத்தீட்ரலுக்கு நீங்கள் உண்மையில் சென்றுபார்த்தாலும் அங்கே குறைந்த பட்சம் ஒரு சிலுவையின் சொரூபத்தையாகிலும் நீங்கள் காண்பீர்கள். ஆனால் கத்தோலிக்க மற்றும் ஆத்தடாக்ஸ் ஆலயங்களில், “மெய் கடவுளின் தாயாகிய நித்திய கன்னிமரியாளின்” சொரூபங்கள் எண்ணற்ற பல்வேறு பின்னணிகளிலும் நிலைகளிலும் காணப்படுகின்றன.c “பரலோக அரசி” “சர்வலோக அரசி” உட்பட மிக உயர்ந்த எல்லா பட்டப்பெயர்களும் அவள்மீது குவிக்கப்பட்டிருக்கின்றன.d மறுபட்சத்தில் எரேமியா வகுப்பார், மரியாளுக்கு, இயேசுவின் தாயாகவும் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு விசுவாசியாகவும் மரியாதைக்கொடுக்கையில் “விக்கிரகங்களுக்கு விலகி உங்களைக் காத்துக்கொள்வீர்களாக” என்ற அப்போஸ்தலனின் புத்திமதியைக் கவனமாக பின்பற்றியிருக்கிறார்கள்.—1 யோவான் 5:21; எரேமியா 10:14.
கர்த்தராகிய ஆண்டவர் யெகோவாவின் இடத்தில் திருத்துவம் வைக்கப்படுகிறது
16 ஆனால் இந்த வணக்கமும் மரியாள் வழிபாடும் எவ்விதமாக வந்தது என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கக்கூடும். பூர்வ விசுவாச துரோகச் சர்ச் புறமதவணக்கத்தாரை இழுத்துக்கொள்ள செய்த மற்றொரு நடவடிக்கையின் விளைவாக இது வந்தது. புற மத உலகில் ஒரே கடவுளில் மூன்றுபேர் என்ற கருத்து மிகப்பரவலாக ஆதரிக்கப்பட்டு வந்தது. பூர்வ ரோமர்களின் ஆலயங்களில் மும்மூன்று அறை தொகுதிகள் காணப்பட்டன. இவை “நம்பிக்கையிலும் வணக்கத்திலும் சம்பந்தப்பட்டிருந்த மும்மூன்று தெய்வங்களுக்கு அர்ப்பணம்” செய்யப்பட்டிருந்தன. யூப்பித்தர் ஆப்டிமஸ்மாக்ஸிமஸ் ஆலயம் மும்மூர்த்திகளாகிய யூப்பித்தர்—ஜுனோ—மினர்வாவுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டதாக இருந்தது.”e
17 மூன்றாவது மற்றும் நான்காவது நூற்றாண்டுகளில் பிரபலமாகி வந்த “மகாப் பரிசுத்த திருத்துவ” கோட்பாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க, பின்வரும் எரேமியாவின் வார்த்தைகளில் அத்தனை தெளிவாக வெளியிடப்பட்டிருந்த எபிரேயர்களின் நம்பிக்கையை உள்ளடக்கி வைப்பது கத்தோலிக்க சர்ச்சுக்கு அவசியமாக இருந்தது: “யெகோவாவே உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது. யெகோவாவே மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா.” இயேசு, “இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா” என்பதாக மேற்கோள் காண்பித்தபோது அந்தப் புரிந்துகொள்ளுதலை உறுதி செய்திருந்தார்.—எரேமியா 10:6, 10; மாற்கு 12:29; உபாகமம் 6:4, NW.
18 யூதர்களின் மூட நம்பிக்கையின் காரணமாக “யாவே” அல்லது “யெகோவா” என்பது உச்சரிக்கப்படாமலிருக்க, விசுவாச துரோக கிறிஸ்தவ மண்டலம் கடவுளின் பெயரை உபயோகிப்பதை விட்டுவிட்டது. இதனால் மதகுருமார்கள் “பரிசுத்த திருத்துவத்தால்” நிரப்பிடமுடியாத ஒரு வெற்றிடம் இறைமையியலில் உருவானது.”f
19 இவ்விதமாக கிறிஸ்தவ மண்டலம் யூதர்களும் கிறிஸ்துவும் மெய்கிறிஸ்தவர்களும் அறவே அறிந்திராத திருத்துவ கடவுளாகிய “வேறொரு கடவுளோடு நடக்க” ஆரம்பித்தார்கள். “மூவரில் ஒருவர்” என்ற இந்த இரகசியத்தை காப்பாற்றுவதற்காக கிறிஸ்தவ மண்டல மொழிபெயர்ப்பாளர்கள், தங்களுடைய கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு பைபிளிலும்கூட மோசடி செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.g மேலுமாக திருத்துவ போதனையின் நியாயமான பின்விளைவாக கிறிஸ்தவ மண்டலத்தின் பெரும்பகுதியான ஆட்கள் “வானராக்கினியின்” வணக்கத்தினுள்ளும் அல்லது வழிபாட்டினுள்ளும்கூட வீழ்ந்துவிட்டிருக்கிறார்கள்.—எரேமியா 7:17, 18, நியு இன்டர்நேஷனல் வெர்ஷன்.
மதகுருமார் துன்புறுத்தலை ஊக்குவிக்கிறார்கள்
20 மேலே சொல்லப்பட்டிருப்பவற்றின் நிமித்தமாக, எரேமியாவின் கேள்வி, கிறிஸ்தவ மண்டல மதகுருமாருக்கு பொருத்தமாக இருக்கிறது: “நாங்கள் ஞானிகளென்றும் யெகோவாவுடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது. . . . இதோ! யெகோவாவுடைய சொல்லை வெறுத்துப் போட்டார்கள்; அவர்களுக்கு ஞானமேது?” (எரேமியா 8:8, 9, NW) அவர்கள் யெகோவாவையும் அவருடைய பிரதிநிதிகளாகிய அவருடைய சாட்சிகளையும் வெறுத்துப் போட்டார்கள். ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் எரேமியாவைத் துன்புறுத்தியது போலவே, கிறிஸ்தவ மண்டல மதகுருமார்கள் இந்த நூற்றாண்டின் முழுவதிலுமாக யெகோவாவின் சாட்சிகள் கொடுமையாக துன்புறுத்தப்படுவதற்குப் பெரும்பாலும் காரணமாயிருந்திருக்கிறார்கள்.
21 ஆனால் அவர்கள் ஏன் இந்தத் துன்புறத்தலை ஊக்குவித்திருக்கிறார்கள்? அவர்கள் எரிச்சலடைவதற்கும் கொதித்தெழுவதற்கும் சாட்சிகள் என்ன செய்திருக்கிறார்கள்? அடுத்த வெளியீட்டில் நீங்கள் காணக்கூடிய இந்தத் தொடரின் கடைசி கட்டுரை இவைகளையும் இதோடு சம்பந்தப்பட்ட மற்ற கேள்விகளையும் ஆராயவிருக்கிறது. (w88 4/1)
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் குறிப்புகளைப் பற்றிய விவரமான விளக்கத்துக்கு, இங்க், உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிடி வெளியிட்டுள்ள, வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்துக் காண்பித்தல் என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 76-80, 356-361, 379-380 பார்க்கவும்.
b தெய்வீக நாமத்தை வெளிப்படுத்தாது அதை மறைத்து வைத்திருப்பதைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் ஆண்டு டிராக்ட் சொஸைடி வெளியிட்டிருக்கும் என்றுமாக நிலைத்திருக்கப் போகிற தெய்வீக நாமம் புரோஷூரில் பக்கம் 32-ஐ பார்க்கவும்.
c (ஜோடிப்ரான்ட் ஸ்மித்தின் குவாடிலோப்பின் சொரூபம்—கற்பனையா அல்லது அற்புதமா?, பக்கம் 6)
d (அல்போன்ஸல் டி லிக்கோரியின் மரியாளின் மகிமை, பக்கம் 424)
e Los Grandes Religiones Ilustradas, பக்கம் 408.
f திருத்துவ போதனையின் பேரில் தகவலுக்கு வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்துக் காண்பித்தல் என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கம் 405-426 பார்க்கவும்
g 1 யோவான் 5:7 பொய்யாக கூட்டப்பட்டும் மத்தேயு 24:36-ல் “குமாரனும் அறியான்” என்பது வேண்டுமென்றே விடப்பட்டுமிருக்கிறது. உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைடி வெளியிட்டுள்ள The Emphatic Diaglott-ன் கீழ்க்குறிப்பு பக்கம் 803-ஐயும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் தர்மகர்த்தாக்கள் வெளியிட்டுள்ள The Coder Sinaiticus and the Codex Alexandinus பக்கம் 27 பார்க்கவும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻இன்றைய எரேமியா வகுப்பு எவ்விதமாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது?
◻பூர்வ எருசலேமுக்கும் கிறிஸ்தவ மண்டலத்துக்குமிடையேயுள்ள இசைவு பொருத்தங்களில் சில யாவை?
◻மதகுருமார்கள் எவ்விதமாக மக்கள் கடவுளோடு சமாதானமாயிருப்பதாக நம்பும்படி செய்து அவர்களை அமைதிப்படுத்தியிருக்கிறார்கள்?
◻என்ன அசட்டை மனப்பான்மையும் விக்கிரகாராதனையும் கிறிஸ்தவ மண்டலத்தில் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கிறது?
[கேள்விகள்]
1, 2. கடவுளால் கொடுக்கப்பட்டிருந்த வேலைக்கு எரேமியா எவ்விதமாக பிரதிபலித்தான்?
3. தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலையினிடமாக இயேசுவும் சீஷர்களும் என்ன மனநிலையைக் கொண்டிருந்தார்கள்?
4. 20-ம் நூற்றாண்டில் எரேமியாவின் முன்மாதிரியை பின்பற்றியிருப்பது யார்? இதை அவர்கள் எவ்விதமாகச் செய்திருக்கிறார்கள்?
5. கிறிஸ்தவ மண்டலம் என்ன விதங்களில் பூர்வ எருசலேமுக்கு ஒத்திருக்கிறது?
6. இயேசு யூத மதகுருமாரை கண்டனம் செய்தது எவ்விதமாக கிறிஸ்தவ மண்டல மதகுருமார்களுக்குப் பொருத்தமாக இருக்கிறது?
7. (எ) பிரசங்கிமார்களில் சிலர் எவ்விதமாக பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள்? (பி) என்றபோதிலும் மதகுருமார் என்ன சவாலை தட்டிக்கழித்துவிட்டிருக்கின்றனர்?
8. கிறிஸ்தவமண்டலம் தான் அர்மகெதோனின் செயல் எல்லைக்கு அப்பாற்பட்டதாக நினைப்பதற்குக் காரணமென்ன?
9. (எ) “மறு பிறப்பு” உண்மையில் யாருக்குப் பொருந்துவதாக இருக்கிறது? (பி) ஆத்துமாவைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (இரண்டு கேள்விகளுக்கும் ஆதாரத்தை வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்துக் காண்பித்தல் ஆங்கில புத்தகத்திலிருந்து பெற்றுக்கொள்ளவும்)
10. மதகுருமார் பைபிளை எவ்விதமாக கருதுகிறார்கள்?
11. கடவுளுடைய பெயரின் உபயோகத்தில் கிறிஸ்தவ மண்டலத்துக்கும் எரேமியாவுக்குமிடையே என்ன வேறுபாடு இருக்கிறது?
12-14. (எ) யூத குடும்பங்கள் என்ன வைராக்கியமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன? (பி) அவர்களுடைய வணக்கத்தை யெகோவா எவ்விதமாக கருதினார்?
15. (எ) விக்கிரகாராதனையின் சம்பந்தமாக இன்று கிறிஸ்தவ மண்டலத்தில் என்ன நிலையை நாம் காண்கிறோம்? உள்ளூர் உதாரணங்களைக் கொடுக்கவும்? (பி) மரியாளின் சம்பந்தமாக மெய் கிறிஸ்தவர்கள் என்ன நிலைநிற்கையை எடுக்கிறார்கள்? (வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்துக்காண்பித்தல் ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 254-261 பார்க்கவும்)
16. என்ன போதனை மரியாள் வழிபாட்டுக்கு வழியை திறந்துவைத்தது? எவ்விதமாக?
17, 18. (எ) திருத்துவ போதனை பிரபலமாவதை அனுமதிக்கும் வகையில் எது உள்ளடக்கி வைக்கப்பட்டது? (பி) வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்துக் காண்பித்தல் புத்தகத்திலிருந்து கூடுதலான காரணகாரிய விளக்கங்களைக் கொடுக்கவும்.
19. (எ) கிறிஸ்தவ மண்டலம் திருத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதன் விளைவுகளில் சில என்னவாக இருந்திருக்கின்றன? (பி) திருத்துவ விவாதத்தை காப்பாற்றுவதற்காக என்ன மோசடி முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன?
20, 21. இப்பொழுது என்ன கேள்விகள் பொருத்தமாக இருக்கின்றன?
[பக்கம் 27-ன் படம்]
1938-ல் சாட்சிகள் தைரியமாக பொய்மதத்தை கண்டனம் செய்தார்கள்
[பக்கம் 28-ன் படம்]
எருசலேமில் யூதர்கள் செய்ததுபோலவே கிறிஸ்தவ மண்டலம் தன்னுடைய ஆலயங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களின் தொல்பழமையை நம்பியிருக்கின்றது
[பக்கம் 29-ன் படம்]
கிறிஸ்தவமண்டல டெலிவிஷன் பிரசங்கிமார்கள், இலட்சக்கணக்கானோரை அவர்கள் “இரட்சிக்கப்பட்டுவிட்டார்கள்” அல்லது “மறு பிறப்பு அடைந்துவிட்டார்கள்” என்று நம்பும்படி செய்து அமைதிப்படுத்தி வருகிறார்கள்