உங்கள் எதிர்காலம்—அதைப்பற்றி அறிய மேம்பட்ட ஒரு வழி
1962-ல் “மகா இராசி சின்னத்தில் எட்டு கிரகங்களின் விநோதமான சந்திப்பின் காரணமாக” இந்திய சோதிடர்கள் உலகளாவிய ஓர் அழிவை முன்னறிவித்தார்கள். ஆனால் அவ்விதமாக எதுவும் நடக்கவில்லை. வெகு அண்மையில், 1980-ன் முடிவில் அப்பொழுது ஃப்ரான்ஸில் ஜனாதிபதியாக இருந்த ஜிஸ்கார்ட் டி’ஸ்டாங், இரண்டாவது காலப் பகுதிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதாக பெரும்பாலான பிரெஞ்சு சோதிடர்கள் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற ஃப்ரான்கோ மிட்டரான்ட் வெற்றி பெற்றார். இப்படிப்பட்ட தோல்விகள், எதிர்காலத்தை அறிய சோதிடம் நிச்சயமான ஒரு வழியாக இல்லை என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றன.
அப்படியென்றால் வேறு ஒரு வழி இருக்கிறதா? உதாரணமாக, எதிர்காலத்தை முன்னறிவிக்க, விஞ்ஞானிகளின் முயற்சி உங்களுக்கு உதவக்கூடுமா? சரி, 1980-ல் என்ன நடக்கும் என்பதைப் பற்றி 1970-ல் (ஐக்கிய மாகாணங்களின்) மக்ரா ஹில் நிறுவனத்தின் முன்னறிவிப்பு இவ்வாறு கூறிற்று: “புற்று நோயை முறியடிக்க மருந்துகள், மார்ஸ் மற்றும் வீனஸ் கிரகங்களுக்கு மனிதனின் விண்வெளி பயணங்கள், சந்திரனில் நிரந்தரமான ஒரு தளம், மின் சக்தியில் ஓடும் மோட்டார் வண்டிகள், பொதுவாக எங்கும் வீடுகளில் கம்ப்யூட்டர்கள், உங்களுக்கு என்ன குழந்தை வேண்டும் என்பதை தெரிவு செய்யும் சாத்தியம் மற்றும் மூன்று கோண டெலிவிஷன்களும் சினிமாவும்.”
1970-ல் இந்த நிறுவனத்தின் விஞ்ஞானிகள் பின்வருமாறு சொன்னார்கள்: “நிபுணர்களின் ஒரு தொகுதியின் ஒருமித்த கருத்தின் மூலமாக நம்பத்தக்க ஒரு முன்மதிப்பீட்டை முயன்று அடைவதே இந்த முறையின் குறிக்கோளாக இருக்கிறது.” ஆனால் இந்த நிபுணர்களின் முன்னறிவிப்புகள் இந்தத் துறைகளிலும், அரசியல், பொருளாதாரம் போன்ற மற்ற துறைகளிலும் தவறாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தகவலின் ஒரு நிச்சயமான ஊற்றுமூலம்
என்ன நடக்கப் போகிறது என்பதைக் குறித்து எந்த நிச்சயத்தோடும் சோதிடர்களாலும் விஞ்ஞானிகளாலும் முன்னறிவிக்க முடியாவிட்டால், எதிர்காலத்தைப் பற்றி நம்பத்தக்க தகவலைப் பெற்றுக்கொள்வது கூடாத காரியம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? நம்பிக்கையை இழந்து விடுவதற்கு முன்பாக இந்தப் பொருளைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் சரிபார்க்க வேண்டும். பைபிளின் ஆசிரியராகிய யெகோவா, “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும் இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வ கால முதற்கொண்டும் அறிவிக்கிறவர்” என்பதாக விவரிக்கப்பட்டிருப்பது நினைவிருக்கட்டும்.—ஏசாயா 46:10.
கடவுளுடைய வார்த்தையில் அநேக தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன. சோதிடர்களின் முன்னறிவிப்புகளிலிருந்து அவை எவ்விதமாக வித்தியாசமாக இருக்கின்றன? தலைச் சிறந்த கருத்துக்கள் என்ற தலைப்புடைய புத்தகத்தின் பதில் பின்வருமாறு: “அற்ப ஆயுசுள்ள மனிதனின் முன்னறிவைப் பொறுத்தவரையில், எபிரெய தீர்க்கதரிசிகள் ஈடிணையற்றவர்களாக தோன்றுகிறார்கள். வருவது உரைக்கும் புறமதஸ்தரை அல்லது குறிசொல்வோரைப் போலில்லாமல், . . . தெய்வீக இரகசியங்களை நுட்பமாக ஆராய அவர்கள் மந்திர சாலத்தை அல்லது உபாயங்களைப் பயன்படுத்துவதில்லை . . . அவர்களுடைய தீர்க்கதரிசன உரைகள் பெரும்பாலும் ஆவி உலகத்தோடு தொடர்பு கொள்கிறவர்களின் செய்தியைப் போலில்லாமல், தெளிவாக இருப்பது போல தோன்றுகிறது. இப்படிப்பட்ட காரியங்களின் மீது தெய்வத்தின் போக்கை மறைப்பதை அல்ல ஆனால் அவர்தாமே விரும்பும் வகையில் மனிதனைக் காணச் செய்வதே அதன் நோக்கமாக இருப்பது தெரிய வருகிறது.”
இதற்கு உதாரணமாக, இயேசுவின் பிறப்புக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, அவரைப் பற்றிய ஏராளமான தகவல்கள் பைபிளில் பதிவு செய்யப்பட்டன. அவர் பெத்லகேம் நகரிலும், தாவீது ராஜாவின் தகப்பனாகிய ஈசாவின் வம்ச வழியிலும் பிறப்பார் என்பதாக தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருந்தது. (மீகா 5:2; ஏசாயா 11:1, 10) அவர் கழுமரத்தில் கொல்லப்படுவார் என்றும் இப்படியாக கொலைச் செய்யப்படுகையில், பழக்கமாக இருந்தது போல, அவருடைய எலும்புகள் முறிக்கப்படுவதில்லை என்றும்கூட வேத வசனங்கள் முன்னுரைத்தன. இந்த விவரங்கள் உண்மையாக நடந்தேறின. இயேசுவில் நிறைவேறியதாக ஒரு பைபிள் அறிஞர் குறிப்பிடும் 120-க்கும் அதிகமான தீர்க்கதரிசனங்களில் ஒரு சில உதாரணங்களாக இவை இருக்கின்றன.—சங்கீதம் 22:16, 17; 34:20.
இன்று நிறைவேறும் ஒரு தீர்க்கதரிசனம்
மேலுமாக, நம்முடைய நாளின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும் அநேக தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இருக்கின்றன. இவைகளில் மிக முக்கியமான ஒன்றை நாம் சிந்திக்கலாம். கடவுளுடைய ராஜ்யம், பூமிக்குரிய விவகாரங்களின்மீது குறுக்கிடுவதற்கு சற்றே முன்னால் இருக்கும் காலப்பகுதியை அடையாளங் காண்பிக்கும் சம்பவங்களை அது விவரிக்கிறது. உலகப்போர்கள் கொள்ளை நோய்கள், பஞ்சங்கள் மற்றும் அக்கிரமம் மிகுதியாதல் ஆகியவை இந்தச் சம்பவங்களில் உள்ளடங்கும். நம்முடைய 20-ம் நூற்றாண்டின்போது, இந்தக் காரியங்கள் தீவிரமடைந்திருப்பது உலக செய்திகளில் முக்கியமாக இடம் பெறுகின்றன அல்லவா?—மத்தேயு 24:3, 7-14; லூக்கா 21:7, 10, 11; 2 தீமோத்தேயு 3:1-5.
மரங்கள் தளிர்ப்பது வசந்தகாலம் வருவதை நிச்சயமாக தெரிவிப்பது போலவே, இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் அவருடைய ராஜ்யத்தின் வருகையை தெரிவிப்பதாக இருக்கும் என்பதாக இயேசு விளக்கினார். அவை ஒரே ஒரு சந்ததிக்குள் நிறைவேற வேண்டும் என்றும்கூட அவர் குறிப்பாகச் சொன்னார். மேல் சொல்லப்பட்ட விவரங்கள் உட்பட, அடையாளத்தின் அனைத்து அம்சங்களும் 1914 முதற்கொண்டு நம்முடைய கண்களுக்கு எதிரே நிறைவேற்றமடைந்திருக்கின்றன.a ஆகவே ராஜ்யம் விரையில் நடவடிக்கை எடுக்கும் என்று நாம் முழு நம்பிக்கையோடிருக்கலாம்.—லூக்கா 21:29-33.
இந்தக் காலத்துக்கு முன்னுரைக்கப்பட்ட மற்றொரு அம்சம் “வெளியேற வழி தெரியாமல் தேசங்களின் தத்தளிப்பாக” இருக்கிறது. (லூக்கா 21:25) இப்பொழுது சோதிடமும் வேறு விதமான மாய மந்திரங்களும் ஏன் இன்று இத்தனை கவர்ச்சிமிக்கதாக இருக்கின்றன? பிரெஞ்சு தினசரி லி மான்டி டைமான்சி பதிலளிக்கிறது: “நெருக்கடியை எதிர்படுகையில் இழந்து விட்ட நம்பிக்கையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக எவ்வகையிலும் பயனற்றதாக இருக்கும் எதினிடத்திற்கும் மக்கள் போவார்கள்.” மனோதத்துவம் சிறிய முயற்சிக்கு அதிகமான ஆறுதலைத் தருகிறது. அணுசக்தியின் அருஞ்செயல்கள் மற்றும் ஜீன்களை இணைத்தல் போன்ற பயத்தை உண்டுபண்ணும் விஞ்ஞான சாதனைகளின் இந்தச் சகாப்தத்தில், ஆட்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை மீண்டும் கண்டு பிடிக்கும் முயற்சியில், இன்னதென்று தெரியாத ஒன்றுக்கும் அறிவுக்குப் பொருந்தாத ஒன்றுக்கும் தப்பித்துக்கொண்டு போய்விட தூண்டப்படுகிறார்கள்.” ஆகவே சோதிடம் போன்ற மாய மந்திர பழக்கங்களில் எல்லா இடங்களிலும் அக்கறையிருப்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. இயேசுவினுடைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக மக்கள் அனுபவித்து வரும் “தத்தளிப்புக்கு” இது ஓர் அறிகுறியாக இருக்கிறது.
‘உங்கள் தலைகளை உயர்த்துங்கள்’
இந்தக் காரியங்கள் அனைத்தையும் காணும்போது கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களைச் சுற்றியுள்ள மக்களைப்போல பயப்பட வேண்டுமா? இயேசு பின்வரும் புத்திமதியைக் கொடுத்தார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால் நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.”—லூக்கா 21:28.
உங்கள் எதிர்காலத்தை அதிக விவரமாக தெரிந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? பைபிளை ஆழமாக ஆராயவும் “ஆவியால் ஏவப்பட்ட வசனிப்புகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறிய”வும் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். (1 யோவான் 4:1) பைபிள் தீர்க்கதரிசனங்களையும் நம்முடைய நாளுக்கு அவைகளின் பொருத்தத்தையும் பற்றி ஒழுங்காக கலந்தாலோசிக்கும் காவற்கோபுரம் பத்திரிகையின் உதவியோடு இதை நீங்கள் செய்யலாம். இவ்விதமாக, தற்போதைய குழப்பங்கள் நிறைந்த உலகத்தின் முடிவு அருகாமையில் உள்ளது என்பதைக் நீங்கள் உறுதியாக நம்புகையில், நீங்களும்கூட உங்கள் தலைகளை உயர்த்தக் கூடியவர்களாக இருப்பீர்கள். எல்லா நேர்மையான இருதயமுள்ள மக்களின் நன்மைக்காகவும், உலக விவகாரங்களில் விரைவில் குறுக்கிடப்போகும் மேசியானிய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவித்துக் களிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூட நீங்கள் கற்றறிவீர்கள். (w87 3/1
[அடிக்குறிப்புகள்]
a 1914 முதற்கொண்டு நிறைவேறும் தீர்க்கதரிசனங்களைப்பற்றி மேலுமான விவரங்களுக்காக, உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியால் வெளியிடப்பட்ட மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—நீங்கள் அதை கண்டடைவது எப்படி? என்ற ஆங்கில புத்தகத்தில் அதிகாரம் 7 காணவும்.
[பக்கம் 5-ன் பெட்டி]
“அடையாளம் . . . உண்மையில் நடந்தேறுகிறது”
குறிசொல்பவரிடம் போவதில் அல்லது செய்தித் தாளில் உங்கள் ஜாதகத்தை வாசிப்பதில் என்ன தவறு? அது தீங்கற்ற வெறும் ஒரு வேடிக்கை விளையாட்டல்லவா?
பைபிள் இந்த விஷயத்தை அத்தனை விளையாட்டாக கருதுவதில்லை. ஆவி உலகத்தோடு தொடர்பு கொள்கிறவர்கள் மற்றும் குறி சொல்கிறவர்களுக்கு எதிராக உண்மையில் அது நம்மை விழிப்பாயிருக்கும்படி எச்சரிக்கிறது. உபாகமம் புத்தகத்தில் யெகோவா பின்வரும் எச்சரிப்பைக் கொடுக்கிறார்: “உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும் சொப்பனக்காரனாகிலும் எழும்பி . . . வேறே தேவர்களைப் பின்பற்றுவோம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும் அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும் அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக.”—உபாகமம் 13:1-3.
அஞ்சனம் பார்க்கிறவர்களின் மற்றும் சோதிடர்களின் ஒரு சில முன்னறிவிப்புகள் உண்மையாக நடந்தேறக்கூடும் என்பதைக் குறித்து வேதவசனங்கள் சந்தேகமெழுப்புவதில்லை என்பதை கவனியுங்கள். மாறாக, இந்த முன்னறிவிப்புகள் வானத்திலுள்ள அடையாளங்களின் அல்லது குறி சொல்வதிலுள்ள மற்ற முறைகளின் அடிப்படையிலோ சொல்லப்பட்டால் அவை பிசாசுகளிடமிருந்து வருவதாயும் அவை ஏமாற்றுவதாயும், மனிதர்களை மெய் கடவுளை விட்டு விலகிச் செல்லும்படியாகச் செய்யவும் கூடும் என்பதாக பைபிள் நம்மை எச்சரிக்கிறது.—அப்போஸ்தலர் 16:16-18 பார்க்கவும்.
சோதிடர்களுக்கோ அல்லது எதிர்காலத்தை முன்னறிவிப்பதாக உரிமை பாராட்டும் மற்றவர்களுக்குகோ செவி சாய்ப்பது, வினைமையான ஆவிக்குரிய பிரச்னைகளை வருவித்துக் கொள்ளும் அபாய நேர்வுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டு கடைசியாக “வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கு” அடிமையாகிவிடுவதை அர்த்தப்படுத்தக்கூடும். (எபேசியர் 6:12) இதன் காரணமாக இப்படிப்பட்டவர்களைக் கலந்து பேசுவது கடவுளால் வினைமையான ஒரு பாவமாக கருதப்படுகிறது; இப்படிப்பட்ட காரியங்களை அப்பியாசிக்கிறவர்கள் அவருடைய பார்வையில் அருவருப்பானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அவருடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க மாட்டார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 22:15.
ஆகவே நம்முடைய சொந்த நன்மைக்காகவே சோதிடத்துக்கும் மற்ற எல்லா விதமான குறிசொல்லுதலுக்கும் எதிராக பைபிள் நம்மை விழிப்புள்ளவர்களாக இருக்கச்செய்கிறது.
[பக்கம் 6-ன் பெட்டி]
முன்கூட்டியே பைபிள் இவைகளை முன்னறிவித்தது:
● இயேசு பெத்லகேமில் பிறப்பார்.—மீகா 5:2
● அவர் தாவீது ராஜாவின் தகப்பனான ஈசாவின் குடும்பத்தில் பிறப்பார்.—ஏசாயா 11:1, 10.
● அவர் கழுமரத்தில் கொல்லப்படுவர்.—சங்கீதம் 22:16, 17.
● அவருடைய எலும்புகளில் ஒன்றாகிலும் முறிக்கப்படுவதில்லை.—சங்கீதம் 34:20.