குறி சொல்வது—இன்னும் வழக்கில் இருந்து வருகிறது
“அறிவும் கல்வியும் வெகுவாக பரவியுள்ள இந்த நாளில் மந்திரத்தையும் மூட நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட கருத்துகளை அம்பலப்படுத்துவது அவசியமற்றது என்பதாக ஒருவர் நினைக்கக்கூடும்.” நோபெல் பரிசு பெற்ற 18 பேர் உட்பட 186 மதிப்புக்குரிய விஞ்ஞானிகள் கையொப்பமிட்ட வாசகத்தின் ஒரு பகுதியாக இது இருந்தது. அவர்கள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள்? நட்சத்திரங்களைப் பார்த்து குறி சொல்வதில், சாதாரணமாக இடம் பெறும் சோதிடம் என்பது அவர்களின்படி, “நவீன சமுதாயத்தில் எங்கும் பரவியிருக்கிறது.” ஏதாவது ஒரு வகையான குறி சொல்லுதலை நீங்கள் தனிப்பட்ட வகையில் நம்புகிறீர்களா? அல்லது ஒருவேளை நீங்கள் முழுவதுமாக அதை நம்பிவிட மறுக்கிறவராக அல்லது இந்தப் பிரபல விஞ்ஞானிகளைப் போல பலமாக இதை எதிர்க்கிறவர்களாகவும் கூட இருக்கிறீர்களா? இந்த விஷயத்தைப் பற்றிய உங்கள் கருத்து முக்கியமாக இருக்கிறது. ஏன் என்று நாம் பாக்கலாம்?
இந்த வழக்கம் எல்லா இடங்களிலும் பரவலாக இருந்து வருகிறது. பாரிஸில் குறி சொல்கிறவர்களின் பேரவை ஒன்றின் பிரதிநிதியின்படி, ஒவ்வொரு ஆறுமாதமும் பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த 40 இலட்சம் பேர், ஆவிகளுடன் தொடர்பு கொள்கிறவர்களிடத்தில் போகிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் 1,75,000 பகுதி நேர சோதிடர்களும் 10,000 முழு நேர சோதிடர்களும் இருக்கிறார்கள். க்ரேட் பிரிட்டனில் இவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இங்கே இவர்களுக்குச் சொந்தமாக பள்ளிக்கூடங்களும் உண்டு. ca m’ interesse (அது அக்கறையூட்டுவதாக உள்ளது) என்ற பிரெஞ்சு பத்திரிகை இவ்விதமாகச் சொல்கிறது: “மிகவும் வளர்ச்சியடைந்துள்ள சமுதாயங்களிலும் உட்பட, எல்லா இடங்களிலும் இதே விதமான புள்ளி விவரங்களையே நாம் பார்க்கிறோம். ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் நம்முடைய நூற்றாண்டின் முடிவில் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் தகவல் கேட்பது யார்?—ஏன்?
மாயமந்திர “விஞ்ஞானங்களில்” அதிக பிரபலமாக இருக்கும் சோதிடத்தில், அவ்வளவு கல்வியறிவில்லாத பிற்பட்ட வகுப்பினர் மாத்திரமே அக்கறையுள்ளவர்களாக இருப்பார்கள் என்று சில ஆட்கள் நினைக்கக்கூடும். ஆனால் பிரபல பிரெஞ்சு சோதிடர் திருமதி சோலில் பின்வருமாறு சொல்கிறார்: “இடது சாரிகளோ அல்லது வலது சாரிகளோ, எல்லாவிதமான நோக்குநிலைகளையுடைய அரசியல் வாதிகளும், அரசின் வெளிநாட்டு முதல்வர்களும் ஆகிய அனைவரும் என்னிடத்தில் வருகிறார்கள். மதகுருக்களும் கம்யூனிஸ்டுகளும் கூட வருகிறார்கள்.” இதற்கிசைவாகவே, மந்திரவாதியான பிரெட்ரிக் டியுடோன் மரித்த போது, இதற்கு “இவருடைய வாடிக்கையாளர்களான பெர்சிய பிரமுகர்கள், அமைச்சர்கள் உயர் அதிகாரிகள், எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் பெரும் எண்ணிக்கையில்” வருகை தந்திருந்ததை லி ஃபிக்காரோ என்ற ஒரு பிரெஞ்சு தினசரியில் வெளியான ஒரு கட்டுரை குறிப்பிட்டிருந்தது. சூதாடுகிறவர்கள் தங்கள் பந்தயப் பொருளை எவ்விதமாக வைப்பது என்பதைத் தெரிந்துகொள்ள சோதிடர்களைக் கலந்து பேசுகிறார்கள். வியாபாரிகள் தங்கள் பணத்தை எவ்விதமாக முதலீடு செய்வது என்பதைக் கண்டு பிடிக்க அவர்களிடம் போகிறார்கள். ஒரு பயணத்துக்கு எப்பொழுது புறப்படுவது என்பதையும் அல்லது என்ன சமைப்பது என்பதையுங்கூட உங்களுக்குச் சொல்ல சோதிடர்கள் தயாராக இருக்கிறார்கள். குறிகேட்பது மற்ற துறைகளிலும் கூட நுழைந்திருக்கிறது. பல்வேறு தேசங்களிலுள்ள காவல் துறைகளும் குற்றவாளிகளை அல்லது காணாமற்போன ஆட்களைக் கண்டு பிடிப்பதற்குக் குறிசொல்பவர்களின் உதவியை நாடுகிறார்கள். பிரெஞ்சு வார இதழான லி ஃபிக்காரோ-வின் படி, “சோவியத் ருஷ்யாவிலுள்ள இரகசிய இராணுவ தளத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிய தகவல் தெரிவிக்க, எதிர்காலத்தை அறியும் வரம் பெற்றுள்ள 34 ஆட்களை அமெரிக்க ஐக்கிய மாகாண இராணுவ நிறுவனம் வேலையில் அமர்த்தியிருக்கிறது. “ருஷ்யர்களும் கூட அதேவிதமாக ஆவி ஆற்றலின் உதவியை நாடுவதாக ஐக்கிய மாகாணங்களின் காங்ரஸைச் சேர்ந்த சார்ல்ஸ் ரோஸ் தெரிவிப்பதாக அதே பத்திரிக்கை குறிப்பிடுகிறது.
சோதிடம் ஏன் இன்னும் இப்படியாக வழக்கில் இருந்து வருகிறது, அது தீங்கற்ற ஒரு பொழுது போக்கா? எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அதுவே சிறந்த வழியாக இருக்கிறதா—அல்லது மேம்பட்ட ஒரு வழி இருக்கிறதா? முக்கியமான இந்தக் கேள்விகளுக்கு விடைகாண முடியுமா என்று நாம் பார்க்கலாம். (w87 3/1)