தெய்வீக ஞானத்தில் வளருவதற்கு ஒரு பிள்ளைக்கு உதவுதல்
அநேக தேசங்களிலும் பின்னணிகளிலுமுள்ள ஆலோசிக்கும் திறமையுள்ள ஆட்கள், இயேசு ஒரு மகத்தான போதகராகவும் ஒழுக்க சீலராகவும் இருந்ததை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இளமைப் பருவத்தில் அவர் பெற்றுக்கொண்ட பயிற்றுவிப்பில் சில காரியங்கள் இதற்கு உதவியாக இருந்ததா? அவருடைய குடும்ப வாழ்க்கையிலிருந்தும் வளர்ப்பிலிருந்தும் இன்றைய பெற்றோர்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றி பைபிள் நமக்கு அதிகத்தைச் சொல்வதில்லை. அடிப்படையில் அவருடைய முதல் 12 ஆண்டுகள் இரண்டே வசனங்களில் அடங்கியிருக்கின்றன: “யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் (யோசேப்பும் மரியாளும்) செய்து முடித்த பின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள். பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது, தேவனுடைய கிருபையும் அவர் மேல் இருந்தது.” (லூக்கா 2:39, 40) ஆனால் இங்கே பெற்றோர்கள் கற்றுக்கொள்வதற்குப் பாடங்கள் இருக்கின்றன.
பிள்ளை “வளர்ந்தது,” ஆகவே அவருடைய பெற்றோர்கள் சரீரபிரகாரமாக அவரை கவனித்து வந்திருக்கிறார்கள். மேலுமாக அவர் தொடர்ந்து “ஞானத்தில் நிறைந்த”வராக ஆகிக்கொண்டிருந்தார்.a இப்படிப்பட்ட ஞானத்துக்கு அடிப்படையாக இருக்கும் அறிவையும் புத்தியையும் அவருக்குப் போதிப்பது யாருடைய உத்தரவாதமாக இருந்தது?
மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் இது அவருடைய பெற்றோரின் கடமையாக இருந்தது. இஸ்ரவேல பெற்றோருக்கு நியாயப்பிரமாணம் இவ்விதமாகச் சொன்னது: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும் படுத்துக்கொள்ளுகிறபோதும் எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசக்கடவாய்.” (உபாகமம் 6:6, 7) இயேசு தொடர்ந்து “ஞானத்தில் நிறைந்த”வராயிருந்ததும் “தேவனுடைய கிருபை அவர் மேல் இருந்ததும்” யோசேப்பும் மரியாளும் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது.
இயேசு பரிபூரணமான ஒரு பிள்ளையாக இருந்ததால், அவர் வளர்க்கப்பட்ட முறை மற்ற பிள்ளைகளை வளர்ப்பதற்கு உண்மையில் நடைமுறைக்குப் பயனுள்ள மாதிரியாக இருக்காது என்பதாகச் சிலர் நினைக்கக்கூடும். ஆனால் யோசேப்பும் மரியாளும் பரிபூரணராக இல்லை என்றாலும் அவர்கள் தொடர்ந்து அவருடைய சரீரபிரகாரமான மற்றும் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்து வந்திருக்கிறார்கள். விரிவாகிக் கொண்டிருந்த குடும்பத்தின் அழுத்தங்களின் மத்தியிலும் இதை அவர்கள் செய்திருக்கிறார்கள். (மத்தேயு 13:55, 56) மேலும் இயேசு பரிபூரணராக இருந்தபோதிலும்கூட அவர் குழந்தை பருவத்திலிருந்து பிள்ளை பருவத்துக்கும், வளரிளமைப் பருவத்துக்கும் முழு வளர்ச்சிப் பருவத்துக்கும் வளர வேண்டியவராக இருந்தார். வளரும் பருவத்தில் அவருடைய பெற்றோருக்குச் செய்வதற்கு வேலை அதிகமிருந்தது. அதை அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது,
12 வயதில் இயேசு
“அவருடைய தாய்தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்” (லூக்கா 2:41) கடவுளுடைய நியாயப்பிரமாணத்தின்படி ஆண்மக்கள் அனைவரும் பண்டிகைகளில் அவருடைய சந்ததிக்கு முன்பாக வரவேண்டியவர்களாக இருந்தார்கள். (உபாகமம் 16:16) ஆனால் பதிவு “அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் போவார்கள்” என்று சொல்லுகிறது. யோசேப்பு மரியாளையும் குடும்பம் முழுவதையும் அழைத்துக்கொண்டு சந்தோஷமான அந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்காக எருசலேமுக்கு 60 மைல்கள் (100 கி.மீ) பயணம் செய்தான். (உபாகமம் 16:6, 11) அது அவர்களுடைய பழக்கமாக—அவர்களுடைய வாழ்க்கையின் வழக்கமான பாகமாக இருந்தது. மேலுமாக, அவர்கள் வெறும் ஒப்புக்காக அங்கு செல்லவில்லை; அவர்கள் பண்டிகையின் எல்லா நாட்களுக்கும் அங்கே தங்கியிருந்தார்கள்.—லூக்கா 2:42, 43.
இன்று பெற்றோர்களுக்கு இதில் பயனுள்ள ஒரு பாடம் இருக்கிறது. எருசலேமில் ஆண்டுதோறும் நடைபெற்ற இந்தப் பண்டிகைகள் பயபக்தியான சபை கூட்டத்துக்கும் களிகூருவதற்குமுரிய காலங்களாக இருந்தன. (லேவியராகமம் 23:4, 36) அவை யோசேப்புக்கும் மரியாளுக்கும் இளைஞனான இயேசுவுக்கும் ஆவிக்குரிய வகையில் மேம்படுத்தும் அனுபவத்தை அளித்தன. இன்று பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் கிளர்ச்சியூட்டும் ஒரு மாற்றத்தையும் ஆவிக்குரிய கட்டியெழுப்புதலையும் அனுபவித்துக்களிக்க அதே போன்ற சமயங்களைக் கண்டு பிடிக்க முயலுவது சிறப்பாக இருக்கும். யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பெற்றோர், வருடத்தில் ஒழுங்கான இடைவெளிகளில் நடத்தப்படும் அசெம்ளிகளுக்கும் பெரிய மாநாடுகளுக்கும் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்வதன் மூலம் இதைச் செய்கிறார்கள். இவ்விதமாக பிள்ளைகள் பிரயாணம் செய்து ஒரு சில நாட்களுக்கு நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான உடன் விசுவாசிகளோடு கூடி உறவாடும் கிளர்ச்சியூட்டும் அனுபவத்தையும் கொண்டிருக்கிறார்கள். பத்து பிள்ளைகளை வெற்றிகரமாக வளர்த்து ஆளாக்கிய ஒரு தகப்பன் பெரும்பாலும் தன்னுடைய வெற்றிக்குக் காரணம் 45 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கிறிஸ்தவனாக தான் முழுக்காட்டப்பட்ட சமயம் முதற்கொண்டு எந்த மாநாட்டின் ஒரு பகுதியையும் கூட தவற விடாதிருப்பதே என்பதாகச் சொல்கிறார். தம்முடைய குடும்பத்தையும் அவ்விதமாக தவற விடாதபடிக்கு அவர் உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
ஒரு கவனக்குறைவு
இயேசு சிறு பிள்ளையாய் இருந்தபோது, பெரிய நகரமாகிய எருசலேமுக்கு ஆண்டுதோறும் பிரயாணம் செய்கையில், நிச்சயமாகவே தம்முடைய பெற்றோரின் பக்கத்திலேயே இருந்திருக்க வேண்டும். என்றபோதிலும் அவர் சற்று வளர்ந்தபோது அவருக்கு அதிகமான சுதந்தரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவர் 12 வயதானபோது, முழு வளர்ச்சியை நோக்கிய ஒரு பாதையில் முக்கியமான ஒரு மைல்கல்லாக ?யூதர்கள் கருதிய ஒரு வயதில் இருந்தார். இந்தப் பொதுநிலையான மற்றும் இயல்பான மாற்றத்தின் காரணமாக, யோசேப்பின் குடும்பத்துக்கு எருசலேமை விட்டு புறப்பட்டு வீடுதிரும்பும் சமயம் வந்தபோது கவனக்குறைவு ஏற்பட்டிருக்க வேண்டும். பதிவு இவ்விதமாக வாசிக்கிறது: “பண்டிகை நாட்கள் முடிந்து திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து ஒரு நாள் பிரயாணம் வந்து உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.”—லூக்கா 2:43, 44.
இந்தச் சம்பவத்தில் பெற்றோர்களும் இளைஞர்களுமாகிய இருவருமே கவனிக்கக்கூடிய சில அம்சங்கள் இருக்கின்றன. என்றபோதிலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. இயேசு பரிபூரணராக இருந்தார். அவர் யோசேப்புக்கும் மரியாளுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருந்தபடியினால் அவர் அவர்களோடு செய்திருந்த ஏதோ ஒரு ஏற்பாட்டுக்குக் கீழ்ப்படிய தவறிவிட்டதாக நாம் கற்பனை செய்ய முடியாது. (லூக்கா 2:52) பேச்சுத் தொடர்பில் ஒரு முறிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. அவருடைய பெற்றோர்கள், இயேசு உறவினரோடும் அறிமுகமானவர்களோடும் இருப்பார் என்பதாக நினைத்து கொண்டிருந்தார்கள். (லூக்கா 2:44) எருசலேமை விட்டு புறப்படும் அவசரத்தில் தங்களுடைய இளைய குழந்தைகளுக்கு முதல் கவனத்தைச் செலுத்தி மூத்த மகனாகிய இயேசுவும்கூட தங்களோடு வந்துகொண்டிருக்க வேண்டும் என்பதாக நினைத்துக் கொள்வதை கற்பனை செய்வது எளிதாக இருக்கிறது.
என்றபோதிலும், இயேசு, தாம் எங்கே இருப்பார் என்பதைப் பெற்றோர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள் என்பதாக நினைத்தார். அவர் பின்னால் அதற்குக் கொடுத்த பதிலில் இதைத் தெரிந்துகொள்கிறோம்: “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?” அவர் இங்கே அவமரியாதையாக பேசவில்லை. அவருடைய வார்த்தைகள் தம்மை எங்கே தேடுவது என்பதை பெற்றோர்கள் அறிந்திராததைக் குறித்த அவருடைய ஆச்சரியத்தை தானே வெளிப்படுத்தின. வளர்ந்துவரும் பிள்ளைகளையுடைய அநேக பெற்றோர்கள் மதித்துணரக்கூடிய, தவறாக புரிந்துகொள்ளும் ஒரு காரியமாக இது இருந்தது.—லூக்கா 2:49.
முதல் நாளின் முடிவிலே இயேசுவை காணவில்லை என்பதைக் கண்டபோது, யோசேப்புக்கும் மரியாளுக்கும் ஏற்பட்ட கவலையை எண்ணிப்பாருங்கள். இரண்டு நாட்களாக அவர்கள் அவருக்காக எருசலேமில் தேடியபோது அவர்களுக்கு மிகுதியாகிவிட்ட கவலையை சிந்தித்துப் பாருங்கள். என்றபோதிலும் இந்த நெருக்கடியின்போது அவர்கள் இயேசுவுக்குக் கொடுத்திருந்த பயிற்றுவிப்பு சரியான பலனைக் கொடுத்தது! இயேசு கெட்ட ஆட்களோடு சகவாசம் வைத்துக்கொண்டில்லை. அவர் அவருடைய பெற்றோருக்கு அவமானத்தைக் கொண்டுவரவில்லை. அவர்கள் இயேசுவை கண்டபோது, அவர் “தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும் அவர்களை வினாவவும் கண்டார்கள். அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங் குறித்து பிரமித்தார்கள்.”—லூக்கா 2:46, 47.
அவர் இப்படியாக தம்முடைய நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்ததும் வேதாகம நியமங்களை அவர் நேர்த்தியாக புரிந்துகொண்டிருந்ததும்கூட அந்தக் கட்டம் வரையாக யோசேப்பும் மரியாளும் அவருக்குக் கொடுத்திருந்த பயிற்றுவிப்புக்கு நல்ல சான்றாக இருக்கிறது. என்றபோதிலும் மரியாளின் பிரதிபலிப்பு கவலையுள்ள ஒரு தாயினுடையதைப் போல இருக்கிறது: முதலாவதாக தன்னுடைய மகன் பத்திரமாக இருப்பதை கண்டு நிம்மதி; அடுத்ததாக இவளுடைய கவலையையும் ஏமாற்றத்தையும் அவள் வெளியிடுகிறாள்: “மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே.” (லூக்கா 2:48) பெற்றோர் இருவரின் கவலையைக் குறித்தும் வெளியிடுவதில் யேசேப்புக்கு மரியாள் முந்திக்கொண்டது எதிர்பாராததாக இல்லை. இந்தப் பதிவை வாசிக்கும் அநேக பருவ வயதினர், “இது என்னுடைய அம்மாவைப் போலவே” என்று சொல்வார்கள்.
கற்றுக்கொள்ளப்படும் பாடங்கள்
இந்த அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? பருவ வயதினர் தாங்கள் நினைக்கும் காரியங்களைப் பெற்றோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதாக ஊகித்துக்கொள்ளும் மனச்சாய்வை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி: “ஆனால் உங்களுக்குத் தெரியும் என்று நான் நினைத்தேன்” என்பதாக சொல்வதை கேட்க முடிகிறது. பெற்றோர்களே, தவறாகப் புரிந்துகொண்ட ஒரு நிலையில் இவ்விதமாக பருவ வயதிலுள்ள உங்கள் பிள்ளை சொல்லியிருந்தால் நீங்கள் மட்டுமே இந்தப் பிரச்னையைக் கொண்டிருப்பவராக இல்லை.
உங்கள் பிள்ளைகள் வளரிளமைப் பருவத்தை நெருங்குகையில், அவர்கள் பெற்றோரை சார்ந்து இருப்பது படிப்படியாக குறைகிறது. இந்த மாற்றம் இயற்கையானதாக இருக்கிறது. இதற்கு இடமளிக்க பெற்றோர் தங்கள் சிந்தனையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். என்றபோதிலும் மிகச் சிறந்த பயிற்றுவிப்பிருந்தாலும்கூட, தவறாக புரிந்துகொள்ளுதல் ஏற்படுவதும், பெற்றோர்களும் அவர்களுக்குரிய கவலைகளைக் கொண்டிருப்பதும் சாத்தியமே. என்றபோதிலும் அவர்கள் யோசேப்பு மற்றும் மரியாளின் நேர்த்தியான முன்மாதிரியை பின்பற்றுவார்களேயானால் நெருக்கடிகள் எழும்போது கொடுக்கப்பட்ட பயிற்றுவிப்பு அவர்களுடைய பிள்ளைகளுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
பருவ வயது முழுவதிலுமாக இயேசுவின் பெற்றோர் அவரோடுகூட சேர்ந்து வேலை செய்து வந்திருக்கிறார்கள். இப்பொழுது தானே நாம் சிந்தித்த அந்தச் சம்பவத்துக்குப் பின்பு அவருடைய சொந்த ஊருக்கு கீழ்ப்படிதலுடன் “அவர் அவகளுடனே கூடப் போய்” அங்கே “அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்.” என்ன விளைவுகளோடு? “இயேசுவானவர் ஞானத்திலும் வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” ஆகவே இந்தச் சம்பவம் சுமுகமாய் முடிந்தது. (லூக்கா 2:51, 52) யோசேப்பு மற்றும் மரியாளின் முன்மாதிரியை பின்பற்றி, தெய்வீக ஞானத்தில் வளருவதற்கு தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவி செய்து ஒரு நல்ல சூழ்நிலைமையை அவர்களுக்கு வீட்டில் அளித்து, தெய்வீக கூட்டுறவின் சிறந்த செல்வாக்குகளுக்கு வழிசெய்து கொடுக்கும் பெற்றோர், அதே போன்ற ஏதோ ஒன்று தங்களுடைய பிள்ளைகளுக்கு நேரிடும் சாத்தியத்தை அதிகரிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகள், பொறுப்புள்ள முழு கிறிஸ்தவ வளர்ச்சியை நோக்கி வளருகையில் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்துக் களிக்க அதிகமாக வாய்ப்பிருக்கிறது. (w87 2/15)
[அடிக்குறிப்புகள்]
a இங்கே இயேசு “ஞானத்தில் நிறைந்தவரானார்” என்ற கருத்தின் மூல கிரேக்க சொற்றொடர் இது இடையறாத படிப்படியான ஒரு வளர்ச்சியாக இருந்ததைக் குறிப்பிடுகிறது.