நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப்படுகிறீர்களா?
நிச்சயமாகவே நீங்கள் கவலைப்படுகிறீர்கள்! உங்களுடைய பிள்ளைகளுக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என்று நீங்கள் அறிந்திருக்கிறவற்றில், நோயும் போதை மருந்தின் துர்பிரயோகமும் இளம் குற்றவாளிகளின் குற்றச் செயல்களும் மூன்று பிரச்னைகளாக இருக்கின்றன. தங்களுடைய பிள்ளைகளைப் பற்றி அக்கறையாக இருப்பதும் அவர்களைப் பற்றி கவலைப்படுவதும்கூட பெற்றோருக்கு இயல்பானவையாகவே இருக்கிறது.
பைபிள் காண்பிக்கிற விதமாகவே, சரித்திரம் முழுவதிலுமாக பெரும்பாலான பெற்றோர்கள் இவ்விதமாகவே இருந்திருக்கிறார்கள். யாக்கோபு, யோசேப்பை அவனுடைய சகோதரர்களுடைய க்ஷேமம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவர அனுப்பியதை நினைவுபடுத்திப் பாருங்கள். யாக்கோபு அவர்களைக் குறித்து அக்கறையுள்ளவனாக இருந்தபடியால் அப்படிச் செய்தான். (ஆதியாகமம் 37:13, 4) தன்னுடைய மகன்கள் வளர்ந்து பெரியவர்களாகி சொந்தமாக அவரவருடைய குடும்பங்களைக் கொண்டிருந்த போதிலுங்கூட யோபு அவர்களைக் குறித்து கவலைப்பட்டான். அவன், “ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள்” என்று நினைத்தான்.—யோபு 1:4, 5,
ஏன், யோசேப்பும் மரியாளும்கூட தங்களுடைய பரிபூரண குமாரனாகிய இயேசுவைக் குறித்து அக்கறையுள்ளவர்களாக இருந்தார்கள்! உண்மையில் ஒரு சமயம் இயேசு 12 வயதானவராக இருந்தபோது அவர் காணாமற்போனதை கவனித்தபோது, குறிப்பாக அவரைக் குறித்து கவலைப்பட்டார்கள். என்றபோதிலும் அவர்களுடைய பிள்ளையாகிய இயேசு அவர்களுக்குக் கனத்தைக் கொண்டு வருபவராக இருந்தார். அவர்கள் தங்களைப் பழித்துக்கொள்ள எந்தக் காரணமும் இருக்கவில்லை. மறக்கமுடியாத அந்தச் சமயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும் அதிலிருந்து தற்கால பெற்றோர்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் நாம் பார்க்கலாம்.
காணாமற்போன மகன்
நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், மரியாள் இயேசுவிடம் குறைகூறும் வகையில், “மகனே! ஏன் எங்களுக்கு இதைச் செய்தாய்? உன் தகப்பனும் நானும் மிகவும் கவலையோடே உன்னைத் தேடினோமே” என்று சொன்னபோது அவளுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை நீங்கள் ஒருவேளை புரிந்துகொள்ளக்கூடும். யோசேப்பும் மரியாளும் மூன்று நாட்களாக இயேசுவை விட்டு பிரிந்திருந்தார்கள். 12 வயது பையன் எங்கே இருக்கிறான் என்பதைக் குறித்து அவர்கள் ஏன் கவலைப்பட்டார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளக்கூடும்.—லூக்கா 2:48, இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு.
யோசேப்பும் மரியாளும் ஏன் இயேசுவை தவறவிட்டார்கள்? பிரசித்திப்பெற்ற ஒரு உரையாசிரியர் அவர்களை இதற்காக குறைகூறுபவராய் பின்வருமாறு எழுதுகிறார்: “தாங்கள் உடைமையாகப் பெற்றிருந்தது எத்தனை மதிப்புள்ளது என்பதை அறிந்திருந்தும் அத்தனை நீண்ட நேரமாக அதைத் தேடாமல் எப்படி இருக்க முடியும்? ஒரு தாயின் கனிவும் மென்மையான அக்கறையும் எங்கே போனது?” ஆனால் உண்மையில் நாம் பார்க்க போகிறபடி, பதிவை உன்னிப்பாக அலசி ஆராய்வது, யோசேப்பையும் மரியாளையும் வினைமையான குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாக இருக்கிறது.
உண்மை என்னவென்றால், மரியாள் ஒரு சிறந்த பெண்ணாகவும் நல்ல தாயாகவும் இருந்ததாக பைபிள் காண்பிக்கிறது. காபிரியேல் தூதன் இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்க வந்தபோது அவள் “தேவனிடத்தில் கிருபைப் பெற்றவள்” என்பதாக சொன்னான். (லூக்கா 1:28, 30) இந்த விசேஷமான மனித குழந்தையை பிறப்பிக்கும் வேலையையும், அதோடுகூட அவரை வளர்த்து பயிற்றுவிக்கும் கனத்த உத்தரவாதத்தையும் அவள் மனமுவந்து ஏற்றுக்கொண்டாள். அவள் மனத்தாழ்மையையும் கடவுளில் பலமான விசுவாசத்தையும் கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாள். இயேசுவின் பிறப்புக்குப் பின் யெகோவாவின் நியாயப்பிரமாணம் தேவைப்படுத்திய அனைத்தையும் “எழுதியிருக்கிறபடியே” அவள் செய்தாள்.—லூக்கா 1:38, 45-48; 2:21-23, 39.
மரியாளை விவாகம் செய்துகொண்டு இயேசுவின் வளர்ப்பு தகப்பனாக ஆன யோசேப்பும்கூட நான்கு சந்தர்ப்பங்களில் யெகோவாவின் தூதனோடு பேசிய மிகச் சிறந்த நீதிமானாக இருந்தான். (மத்தேயு 1:19, 20; 2:13, 19, 22) யெகோவா தம்முடைய மிகவும் அருமையான ஒரே பேறான குமாரனை வளர்ப்பதற்கு யோசேப்பையும் மரியாளையும் தெரிந்துகொண்டார் என்பது நினைவிருக்கட்டும். இந்தக் குமாரன் தெய்வீக ஞானத்தில் வளருவதற்கு, உதவி செய்வதில் நன்றாகச் செய்கிற தம்பதியை தெரிந்துகொள்வதைவிட குறைவானதை செய்திருப்பாரா?
நிச்சயமாகவே இன்று பெற்றோர்களும் அதே விதமாகவே, தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆபத்தான மற்றும் கடமையில் தவறும் சூழ்நிலைமை இருக்கும் காரணத்தால் கவலைப்படுகிறார்கள். இயேசுவைப்போல தங்களுடைய பிள்ளைகள் பரிபூரணர் அல்ல என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். என்றாலும்கூட யோசேப்பு மரியாள் மற்றும் இயேசுவின் முன்மாதிரியிலிருந்து நாம் நன்மையடையலாம். (w87 2/15)