எமது வாசகரிடமிருந்து
உலகை கவனித்தல் நான் ஒரு செய்தித்தாள் நிருபர்; என் சக ஊழியர்கள் தங்களது நிருபர் வேலைக்கு வேண்டிய கருப்பொருளுக்காக “உலகை கவனித்தல்” பகுதியை ஆவலுடன் வாசிப்பார்கள். இப்படிப்பட்ட கட்டுரைகள் என்னைக் கவர்ந்தன என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் புரூஃப்ரீடர்களின் பணியை பாராட்டுகிறேன். பத்திரிகை அல்லது செய்தி உலகில் பயன்படுத்தப்படும் மொழியில் இப்படிப்பட்ட உயர்ந்த தரத்தைப் பார்ப்பது அரிது.
ஜெ. பி., செகியா
பல வருடங்களுக்கு முன்பு நான் விழித்தெழு! பத்திரிகையை படிக்க ஆரம்பித்தபோது “உலகை கவனித்தல்” பகுதிதான் எனக்கு ஆர்வமில்லாப் பகுதியாக இருந்தது. ஆனால் இப்போதோ அது அதிக தகவல் நிறைந்ததாக இருக்கிறது. உண்மையில் டிவி செய்திகளில் வராத, ஆனால் உலகில் நடந்த ஏராளமான விஷயங்களை “உலகை கவனித்தல்” பகுதியில் காணமுடிகிறது. இந்த அருமையான வேலையை தொடர்ந்து நல்ல முறையில் செய்யவும்!
ஐ. கே. எம். சி., பிரேஸில்
கொள்ளைநோய் “கொள்ளைநோய்—அது என்றாவது தீருமா?” (நவம்பர் 22, 1997) கட்டுரையில் இவ்விதம் குறிப்பிடப்பட்டிருந்தது: “1996-ல் மட்டுமே ஐந்து கோடிக்கும் அதிகமான மக்களை கொல்லுவதன் மூலமாக, இன்று தொற்று நோய்கள் மரணத்தை ஏற்படுத்துவதில் முன்னணியில் நிற்கின்றன.” ஆனால் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, 1996-ல் 5.2 கோடிக்கும் அதிகமான மரணங்கள் நேரிட்டுள்ளன; 1.7 கோடிக்கும் மேற்பட்ட மரணங்கள் தொற்று நோய்களால் வந்தவை.
பி. பி., ஐக்கிய மாகாணங்கள்
“நாசௌவிஷி நோயி பிரஸி” என்ற ஜெர்மன் செய்தித்தாளின் அடிப்படையில் அந்தக் கருத்தை வெளியிட்டோம். இந்தச் செய்தித்தாளில் வந்த கட்டுரை, உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை ஒருவேளை தவறாக வெளியிட்டிருக்கலாம். நீங்கள் இவ்விதம் தெளிவுபடுத்தியதற்கு உங்களுக்கு நன்றி.—ED.
திக்குவது “திக்குவதன் பயத்தைப் புரிந்துகொள்ளுதல்” (நவம்பர் 22, 1997) என்ற கட்டுரைக்கு நன்றி. எங்களது சபையில் இந்தப் பிரச்சினை சில இளைஞர்களுக்கு இருக்கிறது; அவர்களோடு பழகுவது எனக்கு எப்போதும் கடினமாகவே இருந்திருக்கிறது. ஆகவே திக்கித் திக்கிப் பேசுபவர்களோடு எவ்விதம் பழகலாம் என்பதில் உதவுவதற்காக நீங்கள் அளித்த நடைமுறை ஆலோசனைகளுக்கு நன்றி. அவர்களுக்கு ஆதரவு அளிக்க நீங்கள் எங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள், அதை எவ்விதம் செய்வது என்பதற்கான வழியையும் காட்டியிருக்கிறீர்கள்.
ஒய். என்., ஜப்பான்
என்னுடைய வகுப்பில் இரண்டு திக்குவாயர்கள் இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் வகுப்பில் பதில் சொல்லமாட்டார்கள். உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல் அவர்களை சத்தமாக வாசிக்க சொன்னால் பயப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும். வகுப்பில் பேசுவது என்றால் அதற்காக எப்படிப்பட்ட பயத்தை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை உங்களுடைய கட்டுரையின் மூலம் நான் புரிந்துகொண்டேன்.
எஸ். எல்., ஜெர்மனி
எனக்கு வயது 16; நான் ஒரு திக்குவாயன். இந்தக் கட்டுரையை படித்தபோது நான் அடைந்த உற்சாகத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது உள்ளப்பூர்வமான நன்றி. நாங்கள் செய்ய விரும்பும் எல்லாவற்றையும் செய்ய முடியவில்லையே என்பதால் சிலசமயம் மனம் சோர்ந்துவிடுகிறோம். ஆகவே எங்களைப் பற்றியும் யெகோவா எவ்விதம் நினைக்கிறார், எவ்விதம் உற்சாகப்படுத்துகிறார் என்பதை தெரிந்துகொள்ளும்போது சந்தோஷமாக இருக்கிறது. எந்தளவிற்கு திக்குவாயர்கள் முயற்சி செய்கின்றனர் என்பதை இந்தக் கட்டுரையை படிக்கும் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்பதாக நம்புகிறோம்.
எஸ். டி. எ., இத்தாலி
இந்தக் கட்டுரை எத்தனையோ வேதனைகளை ஞாபகப்படுத்தியது. ஆனால் அதே சமயத்தில் எந்த அளவிற்கு யெகோவா அக்கறையாக இருக்கிறார் என்பதையும் இத்தனை ஆண்டுகளில் அவர் என்னை எவ்வளவு ஆசீர்வதித்திருக்கிறார் என்பதையும்கூட எடுத்துக்காட்டியது. நான் 11 வயதில் முழுக்காட்டப்பட்டபோது, ஒரு பொதுப் பேச்சாளராக யெகோவாவைத் துதிக்க வேண்டும் என கொள்ளை ஆசை இருந்தது. அதற்காக கடவுளுடைய புதிய உலகம் வரை காத்திருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் கடந்த 37 ஆண்டுகளில் நான் எத்தனையோ இடங்களில் பொதுப் பேச்சுகளும், வட்டார மற்றும் மாவட்ட மாநாடுகளில் பேச்சுகளும் கொடுக்குமளவிற்கு தேவன் என்னை ஆசீர்வதித்திருக்கிறார்.
ஆர். எஃப். டி., இங்கிலாந்து
நான் ஒரு திக்குவாயனாக இருப்பதால், சபைகளில் பதில் சொல்வதற்கு தயங்குவேன். அதைப் போலவே, வீட்டுக்கு வீடு பிரசங்கத்தின்போது உடன் வருபவர் சரளமாக பேசக்கூடியவராக இருந்தால் நான் பேசுவதற்கு மிகவும் பின்வாங்குவேன். இந்தக் கட்டுரையிலிருந்து யெகோவா என் நிலையைப் புரிந்துகொள்கிறார் என்று என்னால் உணர முடிந்தது.
சி. சி. எல்., பிரேஸில்