தெற்றுவாயரின் பிரச்னையை விளங்கிக்கொள்ளுதல்
அதிக உஷ்ணமான நாட்களில் உள்ளூரில் உள்ள ஐஸ்-கிரீம் கடைக்கு செல்வது குடும்பத்தாரின் பரம்பரை வழக்கமாக இருந்தது. கார்ல் என்பவனுக்கு ‘பட்டர்-பெக்கன்’ என்ற குறிப்பிட்ட பெயருள்ள கோன் ஐஸ்-கிரீம்தான் அதிக பிரியம். ‘என் அப்பா கொடுத்த காசை என்னுடைய ஈரமான கைகளில் வாங்கிக்கொண்டேன். என்னுடைய இருதயம் துடித்தது. என் முகத்தின் இருபக்கங்களிலும் வியர்வை வழிந்தோடுவதை என்னால் உணரமுடிந்தது. எனக்குப் பிரியமான கோன் ஐஸ்கிரீமை வாங்கிக்கொடுக்கும்படி துணிந்து கேட்க விரும்பினேன். ஆனால் அவர் என்ன சொல்லுவார் என்பது இதற்குள்ளாக எனக்குத் தெரிந்திருந்தது: “அவ்வளவு கண்டிப்பாக உனக்கு கோன் ஐஸ்-கிரீம் வேண்டுமல்லவா? அப்படியானால் நீயே அதைக் கேட்டு வாங்கிக்கொள்.” இப்படிக் கடந்த சமயங்களில் பலமுறை அவர் சொல்லியிருக்கிறார். அதற்காக நான் அவரை வெறுத்தேன். அது என்னை எந்தளவுக்குப் புண்படுத்தும் என்பது அவருக்குத் தெரியவில்லையா? அதிக உயரமான பளபளக்கும் அந்த மேஜைக்கு முன்னால் நடுக்கத்துடன் நான் அமைதியாக நின்றேன். என் கால்களின் முன்விரல்களை ஊன்றி எட்டி நின்றவாறு என் கையிலிருந்த காசை அம்மைவார்த்த முகமும் போலி சிரிப்பும் கொண்ட அந்த உயர்நிலைப்பள்ளிப் பையனிடம் கொடுத்தேன்.
“உனக்கு எந்த ஐஸ்-கிரீம் வேண்டும், தம்பி?”
“எனக்கு பப் . . . ப . . . பபப ப . . . பபப . . .
“என்னுடைய உதடுகள் இறுக மூடிக்கொண்டது. நான் மவுனத்தில் கஷ்டப்பட்டு போராடிக்கொண்டிருந்தேன். அந்தப் பையன் என் தலைக்கு மேலே என் அப்பாவை பார்ப்பதை நான் கவனித்தேன். அந்தப் பார்வையைத்தானே தெற்றுவாயர்கள் அனைவரும் மிக நன்றாக உணர்ந்துகொள்ள முடியும். அந்தப் பார்வை, “நீங்கள் உதவக்கூடுமா? இந்தச் சிறுவன் பேசுவதற்குக் கஷ்டப்படுகிறான், என் பொறுமையை இழக்கச் செய்கிறான்,” என்று சொல்வதைப்போல் இருந்தது. மெய்தான் இது என்னுடைய கடும் போராட்டத்தை அதிகரித்தது. நான் கோபமும் தர்ம சங்கடமுமான நிலையை அடைந்தேன். மூச்சுத்திணறினேன். இறுதியில், “பட்டர் பெக்கன்” என்ற வார்த்தை சடாரென்று வெளிவந்தது. எனக்கு உடலெங்கும் அதிக வேதனையாக இருந்தது. ஆனால் காரியம் சாதிக்கப்பட்டது.”—The Best of Letting Go, Newsletter, San Francisco, U.S.A.
கார்ல் என்ற அந்தச் சிறுவன் கோன் ஐஸ்-கிரீம் கேட்டுவாங்கும் அச்சமயத்தில் நீங்கள் அங்கு நின்று கவனித்து கொண்டிருந்திருப்பீர்களேயானால் என்ன செய்திருப்பீர்கள்? டாக்டர் ஆலிவர் பிளட்ஸ்டீன் 37 ஆண்டுகளாக இந்தத் தெற்றுவாய்ப் பிரச்னைகளை ஆராய்ந்தவராக பின்வரும் ஆர்வத்துக்குரிய இந்தக் குறிப்பைக் கொடுக்கிறார்: “ஒரு விசேஷ காரணம் இல்லாதவரையில் திக்கிப்பேசுவது எந்தளவுக்குத் திகிலையும் மனமுறிவையும் ஏற்படுத்துகிறது என்பதைத் திக்குவாயராக இல்லாதவர்கள் புரிந்துகொள்வது வெகு அபூர்வமே.” ஆம், அநேக தெற்றுவாயருக்கு பேச்சு என்பது தீராத மனக்கிலியாக இருக்கிறது.” தொடர்ச்சியான ஆழ்ந்த கவலையை அல்லது ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு காரியம்” என்று வெப்ஸ்டரின் ஒன்பதாவது புதிய காலிஜியேட் டிக்ஷனரி விவரித்தது.
மறுபட்சத்தில் நீங்கள் சரளமாக பேசுகிறவரா? அப்படியானால் இந்தக் கவலையை நீங்கள் புரிந்துகொள்வது கடினமாக இருக்கக்கூடும். ஏன்? ஏனெனில் பெரும்பாலும் நாம் பேச்சைக் குறித்து கவலைப்படுகிறதில்லை. நாம் பசியாயிருக்கும் சமயத்தில் ஒரு சிற்றுண்டி சாலைக்குள் சென்று தேவைப்படும் உணவை கேட்கிறோம். ஒரு வெகுமதி பொருளை வாங்க விரும்பினால் கடைக்கரரிடம் சாதாரணமாக கேட்டுவிடுகிறோம். தொலைபேசி மணி ஒலிக்கையில் அதை எடுத்து பதில் பேச நாம் தயங்குவதில்லை. ஆனால் தெற்றுவாயருக்கோ இப்படிப்பட்ட அனுதின நிகழ்ச்சிகள் பெருங்கவலைக்குரிய காரியங்களாக இருக்கக்கூடும்.
‘ஆனால் பிரச்னை உண்மையில் அவ்வளவு பெரிதான ஒன்றா?’ என்று நீங்கள் கேட்கக்கூடும். ஒரு தெற்றுவாயனுக்கு வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? அவனுடைய நிலைமையை நன்கு புரிந்துகொள்வதற்கும், பிறர்பேரில் பரிவை வளர்த்துக்கொள்வதற்கும் அவனுடைய உட்புர உலகத்தை வந்துப்பாருங்கள், அவனுடைய உணர்ச்சிகளில் பங்குகொள்ளுங்கள்.
அந்த உட்புர உலகம்
ஜோ: “தெற்றுவாயை நான் ஒரு பேச்சுத்தடை என்று அழைப்பதில்லை, மாறாக நான் அதை ஒரு வாழ்க்கைத்தடை என்றே அழைக்கிறேன். இயல்பான முறையில் செயல்படுவதிலிருந்து அது நம்மை தடுத்து வைக்கிறது. அது நமது கல்விசார்ந்த ஆசைகளையும் நமது தொழில்சார்ந்த பேராவலையும் மேலும் நம்முடைய சமுதாய உறவுகளையும் தடை செய்கிறது. திருமணமாகாத ஆட்களையுங்கூட எனக்குத் தெரியும் . . . அவர்களுக்கு நண்பர்கள் இல்லை. அவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள், பிரிந்து வாழ்கிறார்கள், சமுதாயத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்ட நிலையிலிருக்கிறார்கள்.
டோனா: நான் சுமார் ஒன்பது வயதாக இருந்தது முதற்கொண்டு தெற்றிப் பேசுகிறேன். நான் 27 வயதாக ஆனபோது அது அவ்வளவு கடுமையாக இருந்தமையால் வீட்டில் தொலைபேசி மணி அடித்தாலும்கூட நான் அதில் பதில் பேசுவது இல்லை. என்னுடைய பெயர் என்னவென்று நீங்கள் கேட்டுவிடுவீர்களோ என்ற ஒரே பயம். நான் உங்களுக்கு என்னுடைய பெயரை சொல்ல வேண்டும். “டோனா” என்று சொல்லுவதென்றால் எனக்கு அதிக கஷ்டம். இரண்டு ஆண்டுகளில் நான் வித்தியாசப்பட்ட பெயர்களை 122 தடவை உபயோகித்திருக்கிறேன்.’
பெயர் அறியப்படாதவர்: திக்குவாயில் என் வாழ்க்கை எப்படிக் கடந்துபோகிறது என்பதை நான் உங்களிடம் சொல்வதற்குச் சிறந்தவழி இன்று என்ன நடந்தது என்பதைப்பற்றி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன். காலை என்னுடைய சிற்றுண்டியை முடிக்கும் வரையில் நான் நன்றாகத்தான் இருந்தேன், ஏனெனில் நான் ஒன்றும் பேசவில்லை. பின்பு நான் தெருமுனையிலிருக்கும் ஒரு மருந்துகடைக்கு சென்றேன். ஏனெனில் நான் அதிகமாக தூங்கிவிட்டேன். சொல்லப்போனால் அந்த நாளின் விவகாரங்களுக்குப் பயந்து படுக்கையிலேயே புரண்டுகொண்டிருந்தேன். எனக்கு காபியும் சுருள் அப்பமும் தேவையாக இருந்தது, ஆனால் நானோ பாலும் ஓட்ஸ் கூழும் கேட்டு வாங்கினேன். ஏனெனில் காபி, அப்பம் என்ற வார்த்தைகள் உச்சரிக்கையில் நான் அதிகமாக தெற்றுவேன். ஆகவே எனக்கு அதை பரிமாறும் பெண் என்பேரில் பரிதாப உணர்ச்சியடையக்கூடாது என்பதற்காக நான் அப்படிச் செய்தேன். ஓட்ஸ் கூழ் எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்காது.
‘பள்ளியில் ஆசிரியர் விடைசொல்வதற்கு என்னை அழைத்தார், எனக்கு விடை தெரிந்திருந்தபோதிலும் நான் மவுனமாக இருந்து தெரியாது என்று தலையை அசைத்துவிட்டேன். பின்பு புறக்கணிக்கப்பட்டவனைப்போல் உணர்ந்தேன். வகுப்பறையில் பாடம் முடிந்தவுடன் நான் நூல் நிலையத்தை நோக்கி விரைந்துசென்று, ஒரு புத்தகத்தை எடுத்து, எனக்குத் தெரிந்தவர்கள் கடந்துபோகையில் அதிக உன்னிப்பாக படிப்பதைப்போல் பாசாங்கு செய்தேன்.
என்னிடம் இருந்த பணம் தீர்ந்துவிட்டது, ஆகையால் என் அப்பாவிடம் கேட்பதற்காக ஒரு கடிதம் எழுதினேன். அதன்மீது விசேஷ டெலிவரி தபால்தலை ஒன்றை ஒட்டுவதற்கு விரும்பினேன். ஆனால் கடந்தமுறை தபால் அலுவலகத்திற்கு சென்று அந்த விசேஷ தபால்தலை ஒன்றை வாங்க நான் முயற்சி செய்தபோது ஏற்பட்ட சம்பவம் என் நினைவுக்கு வந்தது. விஸ் . . . விஸ் . . . விஸ் . . . விஸ் . . . விஸ் என்று தொடர்ந்து திக்கிக்கொண்டிருந்தேன். குமாஸ்தா பொறுமையை இழந்துவிட்டார். எனக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்களும் பொறுமையை இழந்துவிட்டார்கள், என்னால் அதை சகிக்க முடியவில்லை. பின்பு நான் வழக்கமான ஒரு தபால்தலையை வாங்கி அந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டேன். இப்பொழுது நான் சாப்பிடுவதற்கு என்னிடம் மிச்சமாக இருப்பது 30 காசுகள் மட்டுமே.”
W.J.: “நான் ஒரு திக்குவாயன். நான் மற்றவர்களைப் போன்று இல்லை. நான் வித்தியாசமாக யோசிக்கவேண்டும். வித்தியாசமாக செயல்பட வேண்டும். வித்தியாசமாக வாழவேண்டும்—ஏனெனில் நான் தெற்றிப் பேசுகிறேன். மற்ற தெற்றுவாயரைப்போல, சிறை கைதிகளைப்போன்றே என்னுடைய வாழ்நாள் முழுவதிலும் நான் பெரும் துயரம், பெரும் நம்பிக்கை ஆகிய இரண்டையும் அறிந்திருக்கிறேன். நான் இப்பொழுது என்ன வகையான ஆளாக இருக்கிறேனோ அவ்வகையான ஆளாக அவை என்னை உண்டுபண்ணிவிட்டன. மோசமான ஒரு நாவு என் வாழ்க்கையை அமைத்திருக்கிறது.”
பெயர் அறியப்படாதவர்: நான் ரயில் இஞ்சினில் தீ மூட்டும் பணியாளனாக ரயில் பெட்டிகளைப் பாதை மாற்றும் பகுதியில் பணிபுரிந்து வந்தேன். ஒரு நாள் சில ரயில் பெட்டிகளை பிரதான தடத்தின் ஒரு பகுதிக்கு மாற்றிக்கொண்டிருந்தோம். இன்னொரு அரை மணிநேரத்திற்கு அந்தத் தண்டவாளத்தில் எந்த ரயிலும் வருவதாக நாங்கள் அறியவில்லை. நான் வேறு எதோ ஒன்றை பரிசோதனை செய்வதற்காக வெளியே எட்டிப்பார்த்தபோது திடீரென்று ஒரு சரக்கு ரயில், அதே தடத்தில் வருவதை பார்த்தேன். என்னுடனிருக்கும் இயந்திர பொறியாளர் வண்டியினுள்ளே ஏதோ வேலையாக இருந்தார். நான் அவரிடம் அதைச் சொல்ல முயற்சி செய்தேன், என்றாலும் ஒரு வார்த்தையும் என்னால் சொல்லமுடியவில்லை. நான் திக்கிப் பேசவும் முடியவில்லை. அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. அந்தச் சரக்கு ரயில் அவ்வளவு வேகமாகவும் வரவில்லை, ஆனால் இரண்டு ரயில் இன்ஜின்களும் நாசமாகிவிட்டன. எவரும் கொல்லப்படவில்லை. ஆனால் என்னோடு இருந்த அந்தப் பொறியாளர் ஒரு காலை இழந்துவிட்டார். என்னை நான் மன்னித்துக்கொள்ள முடியாதவனாயிருக்கிறேன். நான் அவருக்கு எச்சரிக்கை மட்டும் கொடுத்திருக்க முடிந்திருந்தால்.”
ஐந்து ஆட்கள். அவர்களுடைய கருத்துக்களும் அனுபவங்களும் நமக்குக் கொஞ்சம் தெளிவை கொடுக்கின்றன. இந்தத் தெற்றுவாயர்கள் தங்களுடைய அனுதின வாழ்க்கையில் எதிர்படக்கூடிய மனமுறிவு, கவலை, அவமானம் ஆகியவற்றைப் பற்றி ஓரளவு நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த அனுபவங்களை 150 இலட்சம் ஆட்களின் வாழ்க்கையோடு பெருக்கிப் பாருங்கள். அப்படியானால் தெற்றுவாயானது ஏன் ஒரு இடையூறாக இருக்கிறது என்பதை உங்களால் இப்பொழுது உணரமுடிகிறதா?
திக்கிப்பேசும் ஒரு நண்பர் உங்களுக்கு இருந்தால் அந்தக் காரியத்தைக் குறித்து அவர் எப்படி உணருகிறார் என்பதைக் கேட்டுப்பாருங்கள். அனுதின வாழ்க்கை காரியங்களுக்கும்கூட எந்தளவுக்கு தைரியமும் தீர்மானமும் வேண்டும் என்பதை அறியும்போது அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும்
இரக்க உணர்ச்சியை காட்டுங்கள்
இந்த உடல் கோளாறு பெரும்பாலும், அதனால் அவதியுறும் ஆட்களுக்கு மனம் மற்றும் உணர்ச்சி சம்பந்தமாக வெகு ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும் இயல்புள்ளாத இருப்பதால் இப்படிப்பட்டவர்களிடத்தில் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அதற்காக நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டுமா? அவர்களைத் தவிர்க்க வேண்டுமா? அவர்களைக் குழந்தைகளைப் போல மென்மையாக நடத்த வேண்டுமா? இந்த உடற்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதனால் வேதனைப்படக்கூடிய அநேக ஆட்களிடம் விழித்தெழு! இதே கேள்விகளைக் கேட்டது. இதோ, அவர்கள் அளித்த ஒருசில பதில்கள்.
தயவுசெய்து எங்களை ஏளனஞ்செய்யாதீர்கள்
இருபத்தொன்பது வயது ஃபிராங்கிற்கு பத்து வயது முதற்கொண்டே இந்தத் தெற்றும் பிரச்னை இருந்தது. “தெற்றிப்பேசும் ஆட்களுக்கும்கூட உள்ளுணர்ச்சிகளும் மனக்கிளர்ச்சிகளும் இருக்கிறதென்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தனிமனிதராகக் கருதப்பட வேண்டும். அவர்களை ஏளனஞ்செய்யக்கூடாது என்பதே என் விருப்பம்,” என்று அவன் சொல்லுகிறான். “தெற்று வாயருக்கு ஒரு கோளாறு இருக்கிறது அவ்வளவுதான். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது. அவ்வாறே அந்தத் தெற்றும் கோளாறு அசம்பாவிதமாக என்னை பாதித்துவிட்டது.” ஒரு பிரபலமான கட்டுரை ஆசிரியர் ஒரு சமயம் சொன்னதுபோல், இந்தத் தெற்று வாய் கோளாறு உயிருக்கு ஆபத்தான ஒரு கோளாறு அல்ல, எனவே அது மட்டுமே வெளிப்படையாய் பரிகசிக்கப்படக்கூடிய உடல் ஊனமாக இருப்பதாகத் தோன்றுகிறது. ராபர்ட் அதை ஒப்புக்கொள்கிறான். ஆம் அவன் பேசக்கூடிய முறையை நண்பர்கள் எந்த ஒரு கரிசனையுமில்லாமல் பரிகசிப்பார்கள். “என்னை அது சங்கடப்படுத்துவதில்லை,” என்று ஒரு புன்சிரிப்போடு அவன் சொல்லுகிறான். “ஏனெனில் அது வெறும் ஒரு கேளிக்கை என்பதை நான் அறிந்திருக்கிறேன்.” என்றாலும் ஆளுக்கு ஆள் இது வேறுபடுகிறது. தெற்றிப் பேசும் ஒரு சிலர் சிறிது நையாண்டி குறும்பை பொருட்படுத்தமாட்டார்கள். ஆனால் உடன் மனிதருக்கு இரக்க உணர்ச்சியை காட்டுவது ஞானமான ஒரு செயல் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? திக்குவாயரை நடத்தும் விஷயத்தில், அப்படிப்பட்டதோர் சூழ்நிலைமையில் நாமிருந்தால், நாம் என்ன விரும்புவோமோ அவ்வாறே அவர்களை நடத்த வேண்டுமல்லவா?
தயவுசெய்து எங்களுக்காக பரிதபிக்க வேண்டாம். “புரிந்துகொள்ளுதலோடு நடந்துகொள்ளும் ஆட்களைத் தெற்றுவாய் உள்ள ஒருவன் நிச்சயமாகவே போற்றக்கூடும். என்றாலும் பரிதபிக்கப்படுவதை ஆட்சேபிக்கிறான்.” “எங்களுக்காக மக்கள் வருத்தம் தெரிவிப்பதை நாங்கள் விரும்புகிறதில்லை. ஆனால் எங்களுக்கு அவர்களுடைய பொறுமை தேவைப்படுகிறது” என்று 25 ஆண்டுகாலமாக தெற்றுவாயாக இருக்கும் காரல் சொல்லுகிறாள். “தெற்றுவாயாக இருக்கும் எனக்காக மக்கள் மனம் வருந்துவதை நான் விரும்பவில்லை” என்று சொல்லுகிறாள். கேத்தி, இவள் இப்போது 60-ம் வயதில் இருக்கிறாள். “மற்றவர்கள் என்னையும் ஒரு நபராக கருதவேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் இந்தத் தெற்றுவாய் பிரச்னையைக் காட்டிலும் படுமோசமான பிரச்னைகள் நம்மை சுற்றிலும் இருக்கின்றன என்பதை மதித்துணர வேண்டும். தெற்றுவாய் வெறும் ஒரு சிறிய குறைபாடே.”
தயவுசெய்து நாங்கள் முட்டாள்கள் அல்லது மூளைக் கோளாறுள்ளவர்கள் என்று நினைக்காதீர்கள். “மக்கள் அதை அதிக ஆழமாக பார்ப்பதற்கு மற்றும் அல்லது அறிவதற்கு மனநிலை பகுப்பாய்வு செய்வதற்குப் பிரயாசப்படாமலிருப்பதை நான் விரும்புகிறேன்” என்று சொல்லுகிறான் ராபர்ட். “எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்” என்கிறாள் காரல். “நாங்கள் தொற்று நோயுள்ளவர்கள்” அல்ல. தாய்மார்கள் எங்களிடமிருந்து பிள்ளைகளைத் தடுத்துவைக்க வேண்டியதில்லை. தெற்றுவாயுள்ள எங்களை மக்கள் கண்ணியமாகவும் மரியாதையுடனும் நடத்துவதை நான் விரும்புகிறேன். நாங்கள் மற்றவர்களைப் போலவே அறிவுத்திறனுள்ளவர்கள். எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை எங்களால் எடுத்துச்சொல்ல முடியவில்லை அவ்வளவுதான். மற்றும் எங்களுடைய சைகைகள் சாடை குறிப்புகள் விகாரமான முகபாவனைகள் அகிய இவையனைத்தும் எங்கள் வாயில் உள்ள வார்த்தையை வெளியே கொண்டுவருவதற்கு நாங்கள் படும் பிரயாசையின் ஒரு பாகமாகவே இருக்கிறது.”
‘தெற்றுபவர்கள் எப்படி உணருகிறார்கள்’ என்பதை அறிந்துகொள்வது நல்லது. மேலும் இது வரக்கூடிய நாட்களில் எனக்கு உதவியாக இருக்கும் என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆனால் ‘இதை அவர்கள் எப்படி மேற்கொள்ளுகிறார்கள்?’ இதையே நான் யோசிக்கிறேன் என்று நீங்கள் கேட்கக்கூடும். இது நிச்சயமாகவே சிந்திக்கப்பட வேண்டிய ஒரு நல்ல கேள்வி.
சிலர் எப்படி மேற்கொண்டார்கள்
இந்தக் கேள்விக்கு விடைக்காக யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலிருக்கும் ஒரு சிலரை விசாரித்தோம். ஏனெனில் முக்கியமாக அவர்களுடைய நிலைமையானது ஒரு சவால் மிகுந்த ஒன்று. உதாரணமாக தேவராஜ்ய ஊழியப்பள்ளி என்ற வாராந்தர கூட்டமொன்றில் பெரிய கூட்டத்தார் மத்தியில் பேசுவதற்கு அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். தெற்றுவாயுள்ளவர்களும்கூட அந்தப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். அதோடு ஒவ்வொரு சாட்சியும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பகிரங்கமாக பிரசங்கிக்கிறான். இதை பெரும்பாலும் அவன் வீடுவீடாக செய்கிறான். ஆகவே கடினமான சூழ்நிலைமையின் கீழும் மிகுதியான உறையாடல் தேவைப்படுகிறது என்பது தெளிவாக இருக்கிறது. இதை அவர்கள் எப்படிச் செய்கின்றனர்? இரண்டு காரியங்கள் உதவி செய்கிறது. மற்றவர்களுடைய முன்மாதிரியை நினைவுகூருவதும் ஜெபமும்.
கேத்தி என்பவள் எப்பொழுதுமே தனக்கு முன்பாக மோசேயின் முன்மாதிரியை வைக்கிறாள். மோசே சாதாரணமாக ஏதோ ஒரு வகையான பேச்சு தடங்கலை கொண்டிருந்ததாக எண்ணப்படுகிறது. யெகோவா தேவனால் கட்டளையிடப்பட்டு இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வழிநடத்தும்படியாக சொல்லப்பட்டபோது மோசே பதிலுரைத்ததாவது: ‘நான் வாக்கு வல்லவன் அல்ல, . . . நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்.” (யாத்திராகமம் 4:10) எனவே யெகோவா தயவாக அவனுடைய சகோதரன் ஆரோனை அவனுக்குப் பதிலாக பேசும் வாயாக இருக்கும்படி ஏற்பாடு செய்தார். என்றபோதிலும் இந்த ஏற்பாடு நிரந்தரமான ஒன்றாக இருப்பதற்கில்லை. பிற்பாடு உபாகமம் புத்தகத்திலே மோசே இஸ்ரவேலர்களுக்கு அளித்த ஏவுதலளிக்கும் சொற்பொழிவுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை காண்கிறோம். அச்சமயத்தில் அவனுக்கு ஆரோன் தேவையாக இருக்கவில்லை. மோசே இறுதியில் தனது குறிப்பிட்ட பேச்சு தடங்கலை மேற்கொண்டான் என்பதை தெரிந்து கொண்டதானது கேத்தி என்பவளுக்கு ஒரு மாபெரும் உற்சாகமூட்டுதலாக இருந்தது.
ராபர்ட் தன் சபையில் ஒரு மூப்பனாக இருக்கிறான். “பேச்சு கொடுப்பதற்கு மேடைக்குச் செல்லும் முன்பு நான் எப்பொழுதுமே ஜெபம் செய்கிறேன்” என்று அவன் சொல்லுகிறான். இதனால் பலனுண்டா? “ஆம். அது உண்மையிலேயே அமைதல் தரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.” மேயி என்பவள் இப்பொழுது தன் 50-ம் வயதில் இருக்கிறாள். கடந்த 11 ஆண்டுகளாக அவள் திக்கிப் பேசுகிறாள். அவள் வீட்டுக்கு-வீடு ஊழியத்துக்குப் போவதுண்டு. ஆனால் நான் பார்வையாளராக மட்டுமே போய் வருவதுண்டு, என்று அவள் சொல்லுகிறாள். ஒரு நாள் ஒரு சாட்சியோடு அவள் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது அந்தச் சாட்சி இவளைப் பார்த்து “ஜனங்களிடம் பேசவில்லை என்றால் ஊழியத்துக்கு வருவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?” என்று தயவாக கேட்டார். அவர் கேட்டது சரிதான். எனவே இவள் அவரிடம், ‘நான் பேச என்ன செய்யலாம்’ என்று கேட்டாள். அவருடைய அறிவுரை என்ன? ஜெபம் செய்யுங்கள். மேயி என்பவள் பல ஆண்டுகளாக ஒரு பயனியராக சேவை செய்து ராஜ்ய நற்செய்தியை ஜனங்களுக்கு அறிவிப்பதில் ஒவ்வொரு மாதமும் 90 மணி நேரங்களைச் செலவிட்டாள். “வீட்டுக்கு-வீடு ஊழியத்தில் பேசும்போது நான் தெற்றினாலும்கூட நான் உடனே ஜெபம் செய்கிறேன் அப்பொழுது நான் மீண்டும் நன்றாக பேசுகிறேன்” என்று அவள் சொல்லுகிறாள்.
இந்த இடையூறு அகற்றப்படுதல்
எந்த ஒரு திக்குவாயருடனும் நெருங்கிப் பழகும் ஆட்களில் நீங்களும் ஒருவரா? தன் நண்பனைக் குறித்து ஒரு இளம் பெண் பின்வருமாறு சொன்னாள்: “அவன் அருமையானவன், அனலும் அக்கறையும் உள்ளவன். அவன் அதிகத்தைக் கொடுப்பவன். ஆனால் அதை வாயின் வார்த்தைகளால் வெளிக்காட்ட முடியாதவன்.” நீங்களும் அவ்வாறே உணருகிறீர்களா? அப்படி உணர்ந்தால் சுகமடைவதற்காக அவன் ஏங்குவதை போன்றே நீங்களும் ஏங்குகிறீர்கள்.
தெற்றுவாயுள்ள ஒருவரிடம், ‘நீங்கள் இதைச் செய்து பாருங்கள். இதனால் நிச்சயம் பலன் கிடைக்கும்!’ என்று ஒருவேளை நீங்கள் சொல்லக்கூடும். அப்படி நடந்தால் அது நல்லதுதான், ஆனால் உண்மையில் அப்படி இருப்பதில்லை. திக்குவாய் என்பது ஒரு சிக்கல் வாய்ந்த கோளாறு. மேலும் தெற்றுவாயுள்ள ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட விதமான தேவைகளையுடையவராக இருக்கிறார். ஆகையால் தெற்றுவாயைக் கட்டுப்படுத்த, ஒருவருக்கு உதவக்கூடிய காரியம் மற்றொருவருக்கு உதவாது. அப்படியானால் தெற்றுவாயர் நம்பிக்கையிழந்து ஒரு வாழ்க்கையினுள் கைவிடப்பட்ட நிலையிலிருக்கிறார்களா?a
ராபர்ட், மேயி மற்றும் கேத்தி பரிகாரம் உண்டு—அதுவும் விரைவில் உண்டு—என்பதை நிச்சயத்தோடு சொல்வார்கள். ‘ஊமையன் நாவு கெம்பீரிக்கும்’ என்ற கடவுளுடைய வாக்குறுதியின் பேரில் தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை மகிழ்ச்சியோடு உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். பேச்சுத் தடைகளைக் கொண்டிருந்த ஒரு மனிதனை இயேசு சுகப்படுத்தின விஷயத்தை உங்களுக்கு அவர்கள் சொல்லுவார்கள் அல்லது இயேசு கிறிஸ்து விரைவில் கடவுளுடைய ராஜ்யத்தின் மகிமைபடுத்தப்பட்ட அரசராக பூமியின் மீது தம்முடைய கவனத்தைத் திருப்பும் காலம் வருகிறது என்பதைப் பற்றி அவர்கள் விளக்கிக் காண்பிப்பார்கள். இயேசு தம்முடைய கவனத்தை பூமியினிடமாக திருப்பும்போது பல ஆண்டுகளுக்கு முன்பாக அந்த மனிதனுக்கு என்ன செய்தாரோ அதையே அவர் (இயேசு) அநேகருக்குச் செய்வார். ஆம், ‘சகல ஆறுதல்களின் தேவனாகிய’ யெகோவா, குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து இந்த இடையூறை நிரந்தரமாக அகற்றுவதில் இன்பங்கொள்வார் என்பதே அவர்களுடைய நம்பிக்கை.—2 கொரிந்தியர் 1:3, 4.
அப்படியானால், எதிர்காலத்தில் நல்ல சுகம் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் தற்காலத்தைப்பற்றியதென்ன? ராபர்ட், மேயி, கேத்தி, மற்றும் அவர்களைப் போன்ற மற்றவர்கள் தங்களுடைய பிரச்னையின் மத்தியிலும் கூடிய மட்டும் இன்முகத்தோடு வாழ முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பாரமான உத்திரவாதத்தை அவர்கள் மட்டுமே தனிமையில் சுமக்க வேண்டுமா? அப்படியிராது என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களுக்கு நம்முடைய மரியாதையைக் கொடுப்பதன் மூலம் நாம் உதவலாம். நாம் எப்பொழுதுமே தயவோடும் புரிந்துகொள்ளும் தன்மையோடும் பொறுமையோடுமிருக்கலாம். அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதற்குச் செவி கொடுப்போம். ஆம் தெற்றுவாயர்களுடைய தீராத மனக்கிலியை புரிந்துகொள்வதற்கு நாம் மனவிருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இந்தப் பிரச்னையை எளிதாக கருதுவது பெரும்பாலும் அதன் பேரிலேயே சார்ந்திருக்கிறது. (g86 11/8)
[அடிக்குறிப்புகள்]
a சிகிச்சைமுறை மற்றும் சுய-உதவி ஆகியவற்றைப்பற்றிய சில குறிப்புகளுக்காக பின்வரும் பக்கங்களில் காணப்படும் பேட்டியைத் தயவுசெய்து பாருங்கள். அதோடுகூட “பேச்சுத் தடங்கலைக் குறைக்கலாம்” என்ற மே 8, 1966 ஆங்கில விழித்தெழு! இதழில் தோன்றிய கட்டுரையைப் பாருங்கள்.
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
“தெற்றுவாயரை மக்கள் கண்ணியமாகவும் மரியாதையுடனும் நோக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
“தெற்றுவாயர் பேசுகையில் அவர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள் என்பதை கவனிப்பதற்கு மாறாக அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதற்கு நாம் செவி கொடுக்கும்போது செவி கொடுப்பவர்களாகிய நாம் அவர்களுக்குச் சிறந்த விதத்தில் உதவக்கூடும்.”—டாக்டர் ஆலிவர் பிளட்ஸ்டீன், பேச்சு நல ஆய்வு வல்லுநர்.
[பக்கம் 26-ன் பெட்டி]
“பேசுவது வெள்ளி, பேசாமலிருப்பது பொன்”
இந்த அர்த்தமுடைய ஒரு பழமொழி கிழக்கத்திய மூலத்தையுடையது. இதற்கு ஒத்த எபிரேயு பழமொழி: “ஒரு வார்த்தை ஒரு ஷேக்கல் மதிப்பு என்றால் மவுனம் இரண்டு ஷேக்கல் மதிப்புள்ளது.”—Brewer’s Dictionary of Phrase and Fable
பண்டைய காலத்து ஞானி ஒருவன் சுருங்கச் சொன்னதாவது: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு. வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு சமயமுண்டு. . . . மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.”—பிரசங்கி 3:1, 7.
[பக்கம் 24-ன் படம்]
ஒரு தெற்றுவாயரின் வாழ்க்கை எப்படி இருக்கக்கூடும் என்பதை நீங்கள் எப்பொழுதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?