தாறுமாறான வானிலை
கார்பனைச் சார்ந்த எரிபொருட்களையே நாம் பலவித உபயோகங்களுக்கு நம்பியிருக்கிறோம். நாம் உபயோகிக்கும் கார் அல்லது மற்ற ஊர்திகள் பெட்ரோல் அல்லது டீசலில் ஓடுகின்றன. நாம் மின்சாரத்தை உபயோகிக்கிறோம்; அதை தயாரிக்கும் தொழிற்சாலைகள் கரி, இயற்கை வாயு அல்லது எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கின்றன. நாம் உணவு தயாரிக்க அல்லது சூடாக்க மரக்கட்டை, கரி, இயற்கை வாயு, நிலக்கரி போன்றவற்றை உபயோகிக்கிறோம். இந்த எல்லா செயல்பாடுகளும் காற்று மண்டலத்தில் கார்பன்-டைஆக்சைடை சேர்த்துவிடுகின்றன. இந்த வாயு, உஷ்ணத்தை வெளியேறவிடாமல் தடுத்துவிடும்.
இதைப்போலவே உஷ்ணத்தை வெளியேற விடாமல் தடுக்கும் வேறு சில வாயுக்களையும் நாம் காற்று மண்டலத்திற்கு அனுப்பிவிடுகிறோம். விவசாயத்தில் உபயோகிக்கப்படும் நைட்ரஜன் உரங்களிலுள்ள நைட்ரஸ் ஆக்ஸைடு காற்று மண்டலத்தோடு சேர்க்கப்படுகிறது. நெல் வயல்களிலிருந்தும் கால்நடை தீவனங்கள் பயிர் செய்யும் இடங்களிலிருந்தும் மீத்தேன் என்ற வாயு வெளியாகிறது. பிளாஸ்டிக் நுரைகள் தயாரிப்பதாலும் இதர தொழிற்சாலை செயல்பாடுகளாலும் க்ளோரோஃப்ளூரோகார்பன் (CFCs) வெளிப்படுகிறது. CFCs வெறுமனே உஷ்ணத்தை வெளிவிடாமல் தடுப்பது மட்டுமன்றி பூமியின் மீவளி மண்டலத்திலுள்ள ஓசோன் பகுதியை அழிக்கின்றது.
உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்கள் காற்றுமண்டலத்திற்குள் மிக அதிகமான அளவுகளில் தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றன; CFCs-வாயுக்களை மட்டுமே தற்சமயம் கட்டுப்படுத்த ஏற்பாடுகள் உள்ளன. ஜனத்தொகை பெருக்கம், ஆற்றல் உபயோகத்தில் அதிகரிப்பு, தொழிற்சாலை செயல்பாடுகள், விவசாயம் என்பவைகூட ஓரளவு காரணமாகின்றன. மனிதர்கள் ஒரு வருடத்திற்கு 600 கோடி டன் கார்பன்-டைஆக்சைட் மற்றும் உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்களை வெளியேற்றுகின்றனர் என்று வாஷிங்டனில் செயல்படும் என்விரான்மென்டல் ப்ரொட்டெக்க்ஷன் ஏஜென்சி தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்கள் உடனடியாக மறைந்து விடுவதில்லை; அவை காற்று மண்டலத்தில் பல பத்தாண்டுகள் தொடர்ந்திருக்க வாய்ப்பிருக்கின்றன.
அடிப்படையான இரண்டு விஷயங்களில் விஞ்ஞானிகள் மிகத்தெளிவாக இருக்கின்றனர். முதலாவது, சமீபத்திய பத்தாண்டுகளிலும் நூற்றாண்டிலும் கார்பன்-டைஆக்சைட் மற்றும் உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்களின் அளவு காற்று மண்டலத்தில் அதிகரித்திருப்பது. இரண்டாவது, கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பம் 0.3-லிருந்து 0.6 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரித்திருப்பது.
ஆகவே எழும்பக்கூடிய கேள்வி என்னவென்றால், மனித நடவடிக்கையால் வெளியேற்றப்பட்ட உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்களுக்கும் உலகளாவிய வெப்பத்துக்கும் தொடர்பிருக்கிறதா? ஒருவேளை தொடர்பில்லாமல் இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் சொல்கின்றனர்; ஏனெனில் இவ்விதம் அதிகரித்திருக்கும் வெப்பம் இயற்கையில் எந்தளவு அதிகரிக்குமோ அந்த விகிதத்தைத் தாண்டவில்லை, ஆகவே இதற்குக் காரணம் சூரியனாகக்கூட இருக்கலாம். ஆகிலும், சீதோஷ்ணநிலை மாற்றத்தைக் குறித்து இன்டர்கவர்ன்மென்டல் பானல் ஆன் கிளைமேட் சேஞ்ச் அளித்த அறிக்கையை அநேக சீதோஷ்ணநிலை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அது இவ்விதம் குறிப்பிட்டது: வெப்பத்தின் அதிகரிப்பு “முற்றிலும் இயற்கையாக நடந்திருக்க முடியாது,” மேலும் “அத்தாட்சிகளின் அடிப்படையில் நாம் கவனித்தால் தற்போதைய உலகளாவிய சீதோஷ்ணநிலையின் மாற்றத்திற்கு மனிதனுடைய செல்வாக்கு காரணமாக இருக்கலாம் என்பது தெளிவாகிறது.” ஆனாலும், மனிதனுடைய நடவடிக்கைகள்தான் இந்தக் கிரகத்தை உஷ்ணமாக்கியிருகிறதா என்பதில் தெளிவற்ற நிலை இருக்கின்றது; முக்கியமாக 21-ஆம் நூற்றாண்டில் எவ்வளவு வேகமாக இந்த உலகம் வெப்பமடையும், அதன் விளைவுகள் எவ்விதம் இருக்கும் என்பவையெல்லாம் தெளிவாக இல்லை.
ஐயப்பாடுகள் தர்க்கத்தை எழுப்புகின்றன
எதிர்காலத்தில் கண்ணாடி அறை விளைவு ஏற்படும் என்று சீதோஷ்ணநிலை நிபுணர்கள் குறிப்பிடுகையில், அதற்காக அவர்கள் சீதோஷ்ணநிலை மாடல்களை (climate models) சார்ந்திருக்கின்றனர்; அவை உலகத்தின் மிக வேகமான, அதிக சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்களால் இயக்கப்படுகின்றன. ஆகிலும் பூமியின் சுழற்சி, காற்று மண்டலம், சமுத்திரங்கள், ஐஸ், நிலப்பரப்பின் அம்சங்கள், சூரியன் போன்றவற்றின் மிகவும் சிக்கலான செயல் விளைவுகளே பூமியின் சீதோஷ்ணநிலையை முடிவு செய்கின்றன. இவ்விதம் அநேக காரணிகள் மிகப்பரந்த அளவில் செயல்படும்போது, இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப்பின் என்ன நடக்கும் என்பதை எந்த ஒரு கம்ப்யூட்டராலும் முன்கூட்டியே குறிப்பிட்டு சொல்ல முடியாது. சயன்ஸ் பத்திரிகை சமீபத்தில் இவ்விதம் அறிவித்தது: “மனித நடவடிக்கைகள்தான் பூமியை உஷ்ணமாக்க ஆரம்பித்துவிட்டன என்ற கருத்து தெளிவற்றது என்று அநேக சீதோஷ்ணநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்—முக்கியமாக கண்ணாடி அறை விளைவு ஏற்பட்டு பூமியை பாதிக்கும்போது நிலைமை எவ்வளவு மோசமாகும் என்பது யாருக்குமே தெரியாது.”
ஐயப்பாடுகள் இருப்பதால், பயப்படும் அளவிற்கு எந்த அபாயமும் இல்லை என்று மறுப்பதற்கு சுலபமாக வழி இருக்கின்றது. உலகளாவிய வெப்பத்தைப்பற்றி சந்தேகப்படக்கூடிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்துகொண்ட செல்வாக்குள்ள தொழிற்சாலைகள், தங்களுக்கு இருக்கும் பொருளாதார அக்கறைகளின் அடிப்படையில் தங்களுடைய அந்தஸ்தை நிலைநாட்டுவதற்காக பின்வருமாறு குறிப்பிடுகின்றனர். தற்போதிருக்கும் அறிவின் அடிப்படையில் எப்படிப்பட்ட பணச்செலவு பிடித்த தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதைச் சொல்ல முடியாது என்று அவர்கள் விவாதிக்கிறார்கள். அவர்கள் சொல்வது என்னவென்றால் சிலர் நினைப்பதுபோல் எதிர்காலம் ஒன்றும் அவ்வளவு மோசமாக இருக்காது.
விஞ்ஞானப்பூர்வமான ஐயப்பாடுகள் இருப்பதால் சட்டத்தை நிறைவேற்றுபவர்கள் ஏனோதானோ என்று சும்மா இருந்துவிடக்கூடாது என்று சூழலியலர்கள் பதிலுக்கு வாதிடுகின்றனர். எதிர்கால சீதோஷ்ண நிலை சிலர் பயப்படும் அளவிற்கு அவ்வளவு மோசமடையாது என்பது ஒருவேளை உண்மையாக இருந்தாலும், அதைவிட மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன என்பதே உண்மை! எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது துல்லியமாக தெரியாது என்பதால் ஆபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இப்பொழுது கைகளை கட்டிக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல என்று அவர்கள் விவாதிக்கிறார்கள். ஒரு உதாரணத்திற்கு, புகைபிடிப்பதை நிறுத்துபவர்கள், தொடர்ந்து புகைபிடித்தால் 30 அல்லது 40 ஆண்டுகளுக்குப் பிறகு நுரையீரல் புற்றுநோய் வரும் என்பதற்கு துல்லியமான விஞ்ஞானப்பூர்வ அத்தாட்சியை முதலில் தரவேண்டும் அப்பொழுதுதான் புகைப்பதை நிறுத்துவேன் என்று யாரும் அடம் பிடிப்பதில்லை. அவர்கள் புகைப்பதை நிறுத்திவிடுகின்றனர்; ஏனென்றால் அது ஆபத்தானது, ஆகவே அதைக் குறைக்கவேண்டும் அல்லது விட்டொழிக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்கின்றனர்.
என்ன செய்யப்பட்டிருக்கின்றது?
உலகளாவிய வெப்பம் என்ற பிரச்சினை எந்த அளவிற்கு இருக்கின்றது என்றும்—உண்மையில் இப்படியொரு பிரச்சினை இருக்கிறதா என்றும்—ஓயாத விவாதங்கள் இருப்பதால், இதைக்குறித்து என்ன செய்யவேண்டும் என்பதில் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகின்றன. பல ஆண்டுகளாக சூழலியலர்களின் தொகுதிகள் மாசுபடுத்தாத எரிபொருட்களை உபயோகிப்பதற்கு அதிக ஊக்கமளித்தனர். சூரிய ஒளி, காற்று, ஆறுகள், நிலத்தடி வெந்நீர் ஊற்று மற்றும் நீராவியிலிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைப்பதற்கு சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று சூழலியலர்கள் அரசாங்கங்களை வற்புறுத்துகின்றனர். இதற்கு செவிகொடுக்கும் விதமாக, அரசாங்கங்கள், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதுடன் நிறுத்திக்கொண்டன. ஒரு உதாரணத்திற்கு 1992-ல் பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜனீரோவில், பூமி மாநாட்டின்போது சுமார் 150 நாடுகளின் பிரதிநிதிகள் உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்கள் வெளியேற்றப்படுவதை, குறிப்பாக கார்பன்-டைஆக்சைடை குறைப்பதற்கான தங்களுடைய பொறுப்புக்களை வலியுறுத்தி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வருடம் 2000-த்தில் தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்களை வெளியேற்றுவதன் அளவை 1990-ல் வெளியேற்றிய அளவிற்கு குறைக்கவேண்டும் என்பது அந்த மாநாட்டின் இலக்கு. இந்த விஷயத்தில் சில நாடுகள் முன்னேற்றங்களைச் செய்திருக்கின்றன, என்றாலும் அநேக பணக்கார நாடுகள் தாங்கள் ஒப்புக்கொண்ட இந்த வாக்குறுதிக்கு எந்தக் கவனமும் செலுத்தவில்லை. இப்படிப்பட்ட வாயுக்கள் வெளியேற்றப்படுவதை தடுப்பதற்கு பதில் அநேக நாடுகள் எப்போதையும்விட பல மடங்கு அதிக அளவில் வெளியேற்றியிருக்கின்றன! உதாரணத்திற்கு அமெரிக்க மாகாணங்களில், வருடம் 2000-த்தில் கார்பன்-டைஆக்சைடின் அளவு 1990-ல் இருந்ததைவிட 11 சதவீதம் அதிகமிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து நாட்டு ஒப்பந்தங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயங்களை நடைமுறைப்படுத்த சமீப காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1992-ஆம் வருடத்தில் ஒப்புக்கொண்டபடி, உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்கள் வெளியேற்றப்படுவதை தாங்களாகவே குறைப்பதற்கு பதில் இலக்குகளை நிர்ணயித்து அவற்றை கட்டாயமாக பின்பற்றவேண்டும் என்று கோரிக்கைகள் எழும்பியுள்ளன.
மாற்றம் செய்வதற்காகும் செலவு
அரசியல் தலைவர்கள் தங்களை பூமியின் நண்பர்களாகக் காட்டிக்கொள்ளவே விரும்புகின்றனர். அதே சமயத்தில் மாற்றத்தை செய்யும்போது அது பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர். தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை குறிப்பின்படி, உலகில் 90 சதவீதத்தினர் கார்பன் அடிப்படையிலான எரிபொருட்களையே நம்பியிருப்பதால், அவற்றைப் பயன்படுத்துவதிலிருந்து மாற்றுப்பொருளை பயன்படுத்த நாடினால் அதனால் பெரிய மாற்றங்கள் ஏற்படும்; அதற்காகும் செலவு எவ்வளவு என்பது அதிகமாக தர்க்கிக்கப்படுகிறது.
1990-ல் இருந்ததைவிட 2010-ல் 10 சதவீதம் குறைவாக உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்களை வெளியேற்ற வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு செலவாகும்? இதற்கான பதில், நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதைப் பொருத்ததே. உலகின் நாடுகளிலேயே மிக அதிகமான உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்களை வெளியேற்றும் அமெரிக்க மாகாணங்களில் இருப்பவர்களின் கருத்துக்களை கவனியுங்கள். இப்படிப்பட்ட குறைப்பு, ஒவ்வொரு வருடமும் ஐ.மா.-வின் பொருளாதாரத்திற்கு கோடிக்கணக்கான டாலரை நஷ்டப்படுத்துவதோடு 6,00,000 பேர் வேலையிழக்கவும் செய்யும் என்று தொழிற்சாலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கு முற்றிலும் எதிராக சூழலியலர்கள், இப்படிப்பட்ட இலக்கை எட்டுவதால் பொருளாதாரத்திற்கு கோடிக்கணக்கான டாலரை ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படுத்தலாம் என்றும் 7,73,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் வாதிடுகின்றனர்.
சூழலியலர்களின் தொகுதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடும்போதும், இதற்கு எதிராக அநேக செல்வாக்குள்ள தொழிற்சாலைகள் இருக்கின்றன—கார் தயாரிப்பாளர்கள், எண்ணெய் கம்பெனிகள், கரி உற்பத்தியாளர்கள் போன்றவர்களை உதாரணமாக சொல்லலாம். இவர்கள் மிகுதியான பணத்தின் மூலமும் செல்வாக்கின் மூலமும் உலகளாவிய வெப்பத்தைப் பற்றிய அச்சுறுத்தலின் தன்மையைக் குறைத்து, நிலத்தடி எரிபொருட்களை உபயோகிப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை பூதாகரமாக்கிக் காண்பிக்கின்றனர்.
இதைப்பற்றிய வாதம் ஒரு தொடர்கதையே. ஒருவேளை மனிதர்கள் சீதோஷ்ணநிலையை மாற்றிவிட்டு அதை சரிப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே பேசுவதோடு நிறுத்திக்கொண்டால், எல்லாரும் பேசுகிறார்கள், ஆனால் ஒருவரும் ஒன்றும் செய்வதில்லை என்று சொல்லப்படும் முதுமொழிக்கு, அச்சுறுத்துகிற புதிய அர்த்தம் வெளிப்படும்.
[பக்கம் 5-ன் பெட்டி]
கியோடோ ஒப்பந்தம்
1997-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 161 நாடுகளிலிருந்து 2,200-க்கும் அதிகமான பிரதிநிதிகள் ஜப்பானில் கியோடோவில் கூடிவந்து, உலகளாவிய வெப்பம் அதிகரிப்பதை குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை ஒன்றை கட்டாயமாக ஏற்படுத்தக் கூடினர். ஒரு வாரத்திற்கும் அதிகமாக கலந்தாலோசித்தப்பின், தொழில் மயமாக்கப்பட்ட நாடுகள் தாங்கள் வெளியேற்றும் உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்களை 2012-ஆம் வருடத்திற்குள், 1990-ஆம் வருடத்தில் இருந்ததைவிட சராசரியாக 5.2 சதவீதம் கட்டாயமாகக் குறைக்க வேண்டும் என்று அந்தப் பிரதிநிதிகள் முடிவு செய்தனர். ஒப்பந்தத்தை மீறுபவர்களுக்கான தண்டனை பின்னால் முடிவு செய்யப்படும். ஒருவேளை எல்லா தேசங்களும் இந்த ஒப்பந்தப்படி நடப்பதாக வைத்துக்கொண்டால்கூட, வெறுமனே 5.2 சதவீதம் குறைத்தலானது பிரமாதமாக என்ன வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்? நிச்சயமாக சிறிதளவே. டைம் பத்திரிகை இவ்விதம் அறிவித்தது: “தொழில் புரட்சியின் காலத்திலிருந்து காற்று மண்டலத்தில் வந்து சேரும், உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்களில் ஏதாவது சிறு மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்றால்கூட 60 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும்.”
[பக்கம் 7-ன் பெட்டி/வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கண்ணாடி அறை விளைவு விவரிக்கப்படுகிறது
கண்ணாடி அறை விளைவு: கண்ணாடி அறை விளைவு ஏற்படும் அறையில் உள்ள கண்ணாடி கூரையைப்போல் பூமியின் காற்று மண்டலம் சூரியனின் உஷ்ணத்தை இருத்தி வைக்கின்றது. சூரிய ஒளி பூமியை சூடாக்குகிறது, ஆனால் அதனால் உற்பத்தியான வெப்பம்—அகச்சிவப்பு கதிர்வீச்சால் எடுத்து செல்லப்படுகிறது—அது காற்று மண்டலத்தைவிட்டு எளிதாக வெளியேற முடியாது. அதற்கு பதில் உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்கள் வெப்பக்கதிர்வீச்சை தடுத்து அதில் பகுதியை மறுபடியும் பூமிக்கே அனுப்பிவிடுவதால் பூமியின் உஷ்ணம் அதிகரிக்கிறது.
1. சூரியன்
2. சிக்கிக்கொண்ட அகச்சிவப்பு கதிர்வீச்சு
3. உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்கள்
4. தப்பிக்கும் வெப்பக்கதிர்வீச்சு
[பக்கம் 8, 9-ன் பெட்டி/வரைப்படம்]
(For fully formatted text, see publication)
சீதோஷ்ணநிலையை கட்டுப்படுத்தும் சக்திகள்
சமீப காலங்களில் நடக்கும் உலகளாவிய வெப்பத்தைப் பற்றிய விவாதங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நம்முடைய சீதோஷ்ணநிலையை கட்டுப்படுத்தும் வியக்க வைக்கும் சில சக்திகளைப்பற்றி முதலாவதாக புரிந்துகொள்ள வேண்டும். சில அடிப்படை அம்சங்களை கவனிக்கலாம்.
1. சூரியன்—வெப்பம் மற்றும் ஒளிக்கு ஊற்றுமூலம்
சூரியன் என்று நம்மால் அழைக்கப்படும் மிகப்பெரிய அணு உலையை, பூமியில் இருக்கும் உயிர் சார்ந்திருக்கிறது. நம்முடைய பூமியைவிட பத்து லட்சம் மடங்கு பெரியதாக இருக்கும் சூரியன், எப்பொழுதுமே வெப்பத்தையும் வெளிச்சத்தையும் நமக்கு வாரிவழங்குகிறது. ஒருவேளை சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றலில் சற்றே குறைவு ஏற்பட்டால், நம் கிரகம் ஒரு ஐஸ் கட்டியால் சூழப்படும்; சற்றே அதிகரித்தால் பூமி எரியும் அடுப்பில் வைக்கப்பட்ட சட்டிபோல் ஆகிவிடும். பூமி சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் சுழலுவதால், அது சூரியன் வெளியிடும் சக்தியில் 200 கோடியில் ஒரு பாகத்தை மட்டுமே பெறுகிறது. ஆனாலும் இதுதான் உயிர் வாழ்வதற்கேற்ற சரியான சீதோஷ்ண நிலையை உருவாக்குவதற்கான அளவாகும்.
2. காற்று மண்டலம் —பூமிக்கு கதகதப்பான போர்வை
பூமியின் தட்பவெப்பத்தை முடிவு செய்வதில் சூரியன் மட்டுமே பொறுப்பாளியல்ல; நம் காற்று மண்டலமும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றது. பூமியும் சந்திரனும் சூரியனிலிருந்து சம தூரத்தில்தான் இருக்கின்றன, ஆகவே இரண்டும் சூரியனிலிருந்து ஒரே அளவான வெப்பத்தைத்தான் பெற வேண்டும். ஆனால் பூமியின் சராசரி தட்பவெப்பம் 15 டிகிரி செல்ஸியஸ் என்று இருக்கும்போது, சந்திரனுடைய சராசரி வெப்பமோ -18 டிகிரி செல்ஸியஸ். ஏன் இந்த வித்தியாசம்? பூமிக்கு ஒரு காற்று மண்டலம் இருக்கிறது ஆனால் சந்திரனுக்கோ அவ்வாறு இல்லை.
நம்முடைய காற்று மண்டலம்—ஆக்ஸிஜன், நைட்ரஜன், பிற வாயுக்களால் பூமியை சுற்றியிருக்கும் ஒரு புடவை—சூரியனுடைய வெப்பத்தில் கொஞ்சத்தைப் பிடித்துவைத்து மீதியை தப்பவிடுகிறது. இந்த விளைவை சாதாரணமாக கண்ணாடி அறை விளைவோடு ஒப்பிடலாம். உங்களுக்கு தெரிந்திருக்கிறபடி கண்ணாடி அறை விளைவு என்பது, சுவர்களும் கூரையும் கண்ணாடியால் அல்லது பிளாஸ்டிக்கினால் ஆன ஒரு அறை. சூரிய ஒளி எளிதில் உள்ளே வந்து உட்புறத்தை சூடாக்குகிறது. அதே சமயத்தில் கூரையும் சுவர்களும் உஷ்ணம் மெதுவாகவே வெளியேற அனுமதிக்கின்றன.
இதேவிதமாக நம்முடைய காற்று மண்டலம், சூரிய ஒளி அதன் வழியே பாய்ந்து பூமியின் மேற்புறத்தை சூடாக்க அனுமதிக்கின்றது. பூமி தன் பங்கிற்கு வெப்ப சக்தியை, அகச்சிவப்பு கதிர்வீச்சாக காற்று மண்டலத்திற்கு திருப்பி அனுப்புகிறது. இப்படிப்பட்ட கதிர்வீச்சின் பெரும் பகுதி நேராக விண்வெளிக்கு செல்வதில்லை, ஏனென்றால் காற்று மண்டலத்தில் இருக்கும் சில வாயுக்கள் இவற்றை உட்கிரகித்து மறுபடியும் பூமிக்கே திருப்பி அனுப்பிவிடுவதால் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது. இவ்விதத்தில் உஷ்ணமாவதுதான் கண்ணாடி அறை விளைவு என்று அழைக்கப்படுகிறது. நம்முடைய காற்று மண்டலம் இவ்விதம் சூரியனுடைய வெப்பத்தை இருத்தி வைக்கவில்லையென்றால் பூமியும் சந்திரனைப்போல் உயிர் வாழ்க்கைக்கு ஏற்றதல்லாமல் இருந்திருக்கும்.
3. நீராவி —பிரதானமான வெப்ப இருத்தி வாயு
நம்முடைய காற்று மண்டலத்தின் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என்ற இரண்டு வாயுக்களால் ஆனது. பூமியின் மீது உயிர் தொடர்ந்து இருப்பதற்கு தேவையான சிக்கலான சுழற்சிகளில், இந்த வாயுக்கள் முக்கிய பங்கு வகித்தாலும் சீதோஷ்ணநிலையை சீராக்குவதில் இவை எந்த நேரடியான பங்கையும் வகிப்பதில்லை. மீதமிருக்கும் 1 சதவீத காற்று மண்டலம் சீதோஷ்ணநிலையை சீராக்கும் பணியை செய்கின்றது. உஷ்ணத்தை தப்பவிடாது இருத்தி வைக்கும் வாயுக்களில் நீராவி, கார்பன்-டைஆக்சைட், நைட்ரஸ் ஆக்சைட், மீதேன், க்ளோரோஃப்ளூரோகார்பன், ஓசோன் என்பவை அடங்கும்.
உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்களில் முக்கியமானது—நீராவி—இதை ஒரு வாயுவாக நாம் நினைப்பதில்லை, ஏனெனில் இதைச் சொன்னவுடன் நாம் தண்ணீரை அதன் திரவ வடிவத்தில் நினைப்பது வழக்கம். ஆகிலும் காற்று மண்டலத்திலிருக்கும் நீராவியின் ஒவ்வொரு மூலக்கூறும் வெப்ப சக்தி நிறைந்ததாய் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு மேகத்திலிருக்கும் நீராவி குளிர்ச்சியடைந்து சுருங்கும்போது, வெப்பம் வெளிப்பட்டு வெப்பச்சலனம் ஏற்படுகிறது. வானிலையிலும் தட்பவெப்பநிலையிலும் முக்கிய மற்றும் சிக்கலான பங்கை நீராவி நம் காற்று மண்டலத்தில் ஆற்றலுடன் நகர்வதால் ஏற்படுத்துகிறது.
4. கார்பன்-டைஆக்சைட் —உயிருக்கு இன்றியமையாத தேவை
உலகளாவிய வெப்பம் அதிகரிப்பதை குறித்த விவாதங்களில் மிக அதிகமாக பேசப்படும் வாயு கார்பன்-டைஆக்சைட். இதை ஒரு மாசுபடுத்தும் வாயு என்று வெறுமனே குற்றப்படுத்துவது ஜனங்களைத் தவறாக வழிநடத்துவதாகும். கார்பன்-டைஆக்சைட் ஒளிச்சேர்க்கை நடப்பதற்கு ஒரு முக்கியமான காரணப் பொருளாகும்; இதன் மூலம் தாவரங்கள் தங்களுடைய உணவினை தயாரிக்கின்றன. மனிதர்களும் விலங்குகளும் ஆக்ஸிஜனை உள்ளே இழுத்து கார்பன்-டைஆக்சைடை வெளியே விடுகின்றனர். தாவரங்கள் கார்பன்-டைஆக்சைடை உள்ளே இழுத்து ஆக்ஸிஜனை வெளியே விடுகின்றன. பூமியில் உயிர் தொடர்ந்திருப்பதற்காக, இது சிருஷ்டிகரால் செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு. aஆனால், காற்று மண்டலத்தில் கார்பன்-டைஆக்சைட் அதிகமாக இருக்குமென்றால், அதை மெத்தையில் போர்த்திக்கொள்ள கூடுதலான கம்பளியை பயன்படுத்துவதற்கு ஒப்பிடலாம். அதனால் நிலைமை மிக வெதுவெதுப்பாகலாம்.
சிக்கலான சக்திகளின் பட்டியல்
சீதோஷ்ண நிலையை சூரியனும் காற்று மண்டலமும் மட்டுமே நிர்ணயிப்பதில்லை. சமுத்திரங்கள், பனிப்பாறைகள், பரப்பிலுள்ள ரசாயனங்கள், தாவர வாழ்க்கை, பூமியின் சூழ்நிலைத் தொகுதிகள், புவி உயிர் வேதியல் செயல்பாடுகள், பூமியின் சுழற்சி இயக்கவியல் ஆகியவையும் இதில் பங்கு வகிக்கின்றன. ஆகவே சீதோஷ்ணநிலையைப் பற்றிய ஆய்வு என்பது பூமியில் உள்ள எல்லா விதமான அறிவியலையும் உட்படுத்துகின்றது.
சூரியன்
காற்று மண்டலம்
நீராவி (H20)
கார்பன்-டைஆக்சைட் (CO2)
[அடிக்குறிப்புகள்]
a பெரும்பாலும் உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் கரிமப் பொருட்களிலிருந்து சக்தியைப் பெறுகின்றன; ஆகவே நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சூரிய ஒளியைச் சார்ந்திருக்கின்றன. ஆனால், சமுத்திர ஆழத்தின் இருட்டில் வசிக்கும் சில உயிரினங்கள் கனிம ரசாயனங்கள் மூலம் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றன. ஒளிச்சேர்க்கைக்கு பதில் இந்த உயிரினங்கள் இரசாயனச் சேர்க்கையை உபயோகிக்கின்றன.