வானிலை—அதைப் பற்றி பேசுவோமே
நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் சரி, நீங்கள் யாராக இருந்தாலும் சரி, வானிலை உங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது. ஒருவேளை, அந்த நாள் புழுக்கமாக இருந்தால் நீங்கள் மெல்லிய ஆடைகளை அணிகிறீர்கள். குளிராக இருந்தால் ஸ்வெட்டரையும் மஃப்லரையும் சுற்றிக்கொள்கிறீர்கள். மழை வந்தால்? குடை இல்லாமல் முடியாது.
சில சமயங்களில் வானிலை நம்மை சந்தோஷப்படுத்துகிறது, சில சமயம் வெறுப்பேற்றுகிறது. அவ்வப்போது அது ஒரு சூறாவளியாக, கடும்புயலாக, வறட்சியாக, பனிப்புயலாக, அல்லது பருவக்காற்றாக உருவெடுத்து அநேகரைக் கொல்கிறது. அதை நீங்கள் விரும்புகிறீர்களோ அல்லது வெறுக்கிறீர்களோ, அதைத் திட்டுகிறீர்களோ அல்லது பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறீர்களோ, வானிலை நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மோடு இருந்து வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகிறது.
ஒருவர் இவ்விதம் ஒரு முறை கிண்டலாக குறிப்பிட்டார்: “ஆமா எல்லாரும்தான் வானிலையப்பத்தி பேசறாங்க ஆனா யாரும் ஒண்ணும் செய்யறதில்ல.” வானிலை நம் கட்டுப்பாட்டிற்கு மீறியது என்றும் அதை எவ்விதத்திலும் மாற்ற முடியாது என்றும் தோன்றியது என்னவோ உண்மைதான். ஆனால், அவ்விதம் நம்பாத விஞ்ஞானிகளின் பட்டியல் இப்பொழுது நீண்டு வருகிறது. கார்பன்-டைஆக்சைட் மற்றும் அநேக வாயுக்களை நம்முடைய காற்று மண்டலத்தில் வெளியேற்றுவதால் நம்முடைய நீண்ட கால வானிலை பாங்கான சீதோஷ்ணநிலை பாதிக்கப்படுகிறது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நிபுணர்கள் கருத்தின்படி வரப்போகும் இந்த மாற்றம் எப்படிப்பட்டது? ஒருவேளை, இதற்கு அத்தாட்சிப்பூர்வமான பதிலை இன்டர்கவர்மென்டல் பேனல் ஆன் கிளைமேட் சேஞ்ச் (IPCC) கொடுக்கலாம். அது, 80 நாடுகளிலிருந்து வந்த, 2,500-க்கும் அதிகமான சீதோஷ்ணநிலை ஆய்வாளர்கள், பொருளாதார நிபுணர்கள், ஆபத்து வரும் வாய்ப்பைப் பற்றி அறிவிக்கும் நிபுணர்கள் போன்றவர்களின் சிறப்பறிவுத்திறமையின் அடிப்படையில் சில முடிவுகளுக்கு வந்தது. அவர்களுடைய 1995-ஆம் வருட அறிக்கையின் அடிப்படையில் IPCC-ன் முடிவு, பூமியின் சீதோஷ்ணநிலை அதிக உஷ்ணமாகிறது என்பதே. அடுத்த நூற்றாண்டிலும் இதே சூழ்நிலைமைகள் தொடர்ந்தால் சீதோஷ்ணநிலை 3.5 டிகிரி செல்ஸியஸ் அதிகரிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை, வெப்பம் ஒரு சில டிகிரி அதிகரித்தால், அது கவலையை ஏற்படுத்தாது என்பது உண்மையாக இருந்தாலும், உலக சீதோஷ்ணநிலையின் ஒரு சிறிய தட்பவெப்ப நிலை மாற்றம்கூட பெரிய அழிவுண்டாக்கும். பின்வரும் காரியங்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்று அநேகர் முன்னுரைக்கின்றனர்.
பிராந்திய வானிலையில் பெரிய மாற்றம். சில இடங்களில் வறட்சி நீடித்து, வேறு சில இடங்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. புயலும் வெள்ளமும் அதிக கடுமையாகலாம்; சூறாவளி இன்னும் அதிக அழிவுண்டாக்கும். வெள்ளத்தினாலும் பஞ்சத்தினாலும் ஏற்கெனவே லட்சக்கணக்கானோர் இறப்பது ஒரு பக்கம் இருக்க, உலகளாவிய வெப்பத்தினால் இறப்போரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆரோக்கியத்திற்கான அதிகரிக்கும் அபாயம். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களும் மரணமும் பன்மடங்கு அதிகரிக்கக்கூடும். வெப்பமண்டலப் பகுதிக்கேயுரிய பூச்சிகளால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு போன்றவை மற்ற பகுதிகளுக்குள்ளும் நுழையலாம் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது. இவற்றோடு, பிராந்தியங்களில் மழை, பனி போன்றவற்றின் அளவு திடீரென மாறுவதால், நன்னீர் அளவு குறைந்து, தண்ணீர் மற்றும் உணவின் மூலம் பரவும் நோய்களும் ஒட்டுயிர்களும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.
இயற்கை இருப்பிடங்கள் அழியும் அச்சுறுத்தல். காடுகளும், சதுப்புநிலங்களும் நம்முடைய காற்றையும் தண்ணீரையும் வடிகட்டுகின்றன. அதிக உஷ்ணமான தட்பவெப்ப நிலையாலும், மழை அளவின் மாற்றத்தினாலும் இவை அழியும் அபாயம் இருக்கிறது. காட்டுத் தீ அடிக்கடி ஏற்படலாம் அதிக தீவிரமாகவும் பரவலாம்.
கடல் மட்டம் உயருதல். கடலை உள்ளே வராமல் தடுப்பதற்கான பணச்செலவு பிடித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை என்றால், ஒருவேளை தாழ்வான கடற்கரையோரப் பகுதிகளில் குடியிருப்போர் அந்த இடங்களை காலி செய்ய நேரிடலாம். சில தீவுகள் முற்றிலும் மூழ்கிவிடக்கூடும்.
இப்படிப்பட்ட பயங்களுக்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா? உலகத்தின் சீதோஷ்ணநிலை தொடர்ந்து உஷ்ணமாகிறதா? அது உண்மையென்றால் அதற்கு மனிதர்கள்தான் காரணமா? இவ்வளவு விஷயங்கள் இதில் உட்பட்டிருப்பதால் இந்தக் கேள்விகளைக் குறித்து நிபுணர்கள் அதிக தர்க்கம் செய்வதில் வியப்பொன்றும் இல்லை. அடுத்த இரண்டு கட்டுரைகள் விவாதத்தில் உட்பட்டிருக்கும் சில பிரச்சினைகளை ஆராய்ந்து, நம்முடைய கிரகத்தின் எதிர்காலத்தைக் குறித்து கவலைப்பட வேண்டுமா என்ற கேள்விக்கும் பதிலளிக்கிறது.