விழித்தெழு!-வை வாயார பாராட்டுகிறார் ஓர் இதய டாக்டர்
“மாரடைப்பு—என்ன செய்யலாம்?” என்ற தொடர்கட்டுரைகளை, டிசம்பர் 8, 1996, விழித்தெழு! வெளியிட்டது. ஜெர்மனியில் இதய-மாற்று அறுவை மருத்துவராய் புகழ்பெற்று விளங்குபவரும், மார்பக மற்றும் கார்டியோவாஸ்குலார் சிகிச்சைப் பிரிவின் தலைவருமான பேராசிரியர் தாமஸ் ஸ்டேக்மான், அந்தக் கட்டுரைகளை வாசித்து, பிரசுரிப்பாளர்களுக்கு இப்படி எழுதினார்:
“இதய நோய் பற்றி, அதுவும் குறிப்பாக மாரடைப்புகள் பற்றி நீங்கள் எழுதியிருந்தவற்றை ஆர்வம்பொங்க படித்தேன். இந்தத் துறையில் கைதேர்ந்தவனாய், மாரடைப்புகள் பற்றி நீங்கள் அளித்திருந்த விளக்கமும் மற்ற தகவல்களும் வெகு பிரமாதம் என நான் சொல்லியேதீர வேண்டும். ஒரு பக்கம் இதய நோயாளியின் நிலையை நன்கு புரிந்துகொண்டு எழுதியிருந்தீர்கள், மறுபக்கம் மருத்துவ உண்மைகளை திருத்தமாக கொடுத்திருந்தீர்கள். நன்கு தொகுக்கப்பட்ட, விஷயங்கள் நிறைந்த விளக்கம். மாரடைப்பு அறிகுறிகளை ஆரம்பத்திலேயே புரிந்துகொள்வதற்கு நீங்கள் செலுத்தியிருந்த விசேஷ கவனமும் அவசியமானதே.
“மருத்துவமும் சமுதாயமும் இணைந்து பொதுவில் முயற்சிகள் எடுத்திருந்தாலும், மேற்கத்திய நாடுகளில் மக்கள் இறப்பதற்கு முக்கிய காரணம் சிதல் தடிப்பு (arteriosclerosis), விசேஷமாக மாரடைப்பு. கொரோனரி சிதல் தடிப்பில் ஏற்படும் மோசமான பிரச்சினைகளுக்கு (இரத்தக் குழாய் தடிப்பு, சுருக்கம், அடைப்பு) தினந்தினம் சிகிச்சை அளிக்கிறேன்; பல்வேறு இதய ஆபரேஷன்களின் மூலம் இந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறேன்; இப்படிப்பட்ட ஓர் இதய அறுவை மருத்துவனான எனக்கு, நிரூபிக்கப்பட்ட, நூத்துக்கு நூறு உண்மையான விளக்கம் பொது மக்களுக்கு எந்தளவு தேவை என்பது தெரியும்; அந்நோயால் பாதிக்கப்படவிருப்போருக்கும் அது தேவை.
“இந்த விஷயத்தை வழங்கிய விதத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்; உங்கள் கட்டுரை எல்லாருக்கும் கிடைக்கவேண்டுமென்பது என் விருப்பம்.”
விழித்தெழு! பத்திரிகையை நீங்கள் தவறாமல் பெற விரும்பினால், அல்லது பைபிளைக் கற்றுக்கொடுக்க எவராவது உங்கள் வீட்டிற்கு வரவேண்டுமென விரும்பினால், Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.