எஸ்பிரஸோ—காபியென்றால் இதுவல்லவோ காபி!
‘காபி அது மணக்கிறமாதிரியே ருசியாவும் இருந்தா நல்லாயிருக்குமே!’ என்றாவது நீங்கள் இப்படி சொல்லியிருக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் “எஸ்பிரஸோ காபியை” குடித்துப் பார்க்க விரும்பலாம். சுவைத்திற வல்லுநர்கள் அதை “காபி உலகிலேயே மிகச்சிறந்த காபி” என்றும் “சுவையில் நிகரற்ற காபி” என்றும் அழைக்கிறார்கள்.
ஒருவேளை நீங்கள் எஸ்பிரஸோவை ஏற்கெனவே ருசி பார்த்துவிட்டீர்களா? அதன் கொழகொழப்பான தன்மையும் ஸ்ட்ராங்கான மணமும் உங்கள் மனதைக் கவர்ந்திருக்கலாம். மறுபட்சத்தில், நீங்கள் இவ்வாறும் தீர்மானித்திருக்கலாம்: ‘என்னை பொருத்தவரை இது நல்ல காபியில்ல. அதனாலதான் இருக்கிறதிலேயே ரொம்ப சின்ன கப்பில் பரிமாறப்படுது. இப்படி கடுக்கிற, கசப்பான காபியை சில மடக்குக்கு மேல யார்தான் குடிப்பாங்க? அதோட, இதுல நிச்சயமா ஆரோக்கியத்தைக் கெடுக்கிற அளவுக்கு எக்கச்சக்கமான கேஃபின் இருக்கனும்!’
எனினும், நன்றாகத் தயாரிக்கப்பட்ட எஸ்பிரஸோ கசக்குமா? ஒரு கப் சாதாரண காபியைக் காட்டிலும் ஒரு சிங்கிள் எஸ்பிரஸோ காபியில் அதிகளவு கேஃபின் இருக்கிறதா? இதற்குரிய பதில்கள் உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்.
அது எப்படி எஸ்பிரஸோ ஆகிறது?
பல நாடுகளும் கலாச்சாரங்களும் எஸ்பிரஸோ காபியை தயாரிப்பதற்கு தங்களுக்குரிய பிரத்தியேக முறையை உருவாக்கியிருக்கிறபோதிலும், அது தோன்றியது இத்தாலியில்தான். அதன் ருசி எப்படி இருக்கும்? எஸ்பிரஸோ காபி பிரியர்கள் அதை நறுமணம் கமழுகிற, ஸ்ட்ராங்கான, கொழகொழப்பான, இதமான, கசப்பும் இனிப்பும் கலந்த, காரமெல் சுவையுடைய, மணக்கும் காபி என்று வருணிக்கிறார்கள். நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட ஒரு கப் எஸ்பிரஸோ காபியின்மேல் கிரேமா (crema) இருக்கிறது; இது பொதுவாக கஷ்டப்பட்டு தயாரிக்கப்படும் பொன் பழுப்பு நிற நுரையே. இது காபியின் இதமான தன்மையைக் கூட்டி ஓரளவு நறுமணத்தை காக்கிறது.
ஒரு சிங்கிள் எஸ்பிரஸோ காபி என்பது வெறும் 30-லிருந்து 40 மில்லிலிட்டர் அளவுள்ள காபியே, அது பொதுவாக தயாரிக்கப்பட்ட உடனே, சர்க்கரை சேர்க்கப்பட்டு சுடச்சுட ஒரு சிறிய கப்பில் (டெமிடேஸ்) கொடுக்கப்படுகிறது!
அது எப்படி தயாரிக்கப்படுகிறது? எஸ்பிரஸோவைத் தயாரிப்பது என்பது பல்வேறு வகையான காபிக்கொட்டைகளை பிரத்தியேகமான அளவுகளில் கலந்து கறும்பழுப்பு நிறத்துக்கு (ஆனால் கறுப்பாக அல்ல) வறுத்து அரைப்பதுடன் ஆரம்பிக்கிறது. சாதாரண காபிக்கு அரைப்பதைக்காட்டிலும் இதை மிகவும் நன்றாக அரைக்கவேண்டும். இருப்பினும், எஸ்பிரஸோவைத் தயாரிப்பதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது எந்த வகை காபிக்கொட்டை, எப்படி வறுக்கப்படுகிறது, எந்தளவு நன்றாக அரைக்கப்படுகிறது என்பவை அல்ல, ஆனால் பில்டர் முறைக்கு பதிலாக அழுத்தத்தை உபயோகிக்கும் அதன் தனித்தன்மைவாய்ந்த தயாரிப்பு முறையே. ஒரு கப் எஸ்பிரஸோ காபிக்கு பயன்படுத்தப்படும் காபிப்பொடியின் அளவு பில்டர் காபிக்கு பயன்படுத்தும் அளவில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்குதான். ஆனால் அதைக்காட்டிலும் மிகக்குறைந்தளவு தண்ணீரில் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தயாரிப்பு முறை காபிக்கொட்டையிலிருந்து முழு சாரத்தையும் எடுக்கிறது.
அநேக ரெஸ்டாரெண்டுகளிலும் காபி கடைகளிலும் ஒரு சிங்கிள் அல்லது டபுள் எஸ்பிரஸோ காபியை நீங்கள் கேட்டுப் பெறலாம். இருப்பினும், கவனிக்கவேண்டியது என்னவென்றால், ஏனோதானோவென்று தயாரிக்கப்பட்ட எஸ்பிரஸோ காபி கசப்பாக இருக்கும். எனவே ஒரு ரெஸ்டாரெண்டிலோ கஃபேயிலோ எஸ்பிரஸோ காபி உங்களுக்கு சர்வ் செய்யப்பட்டதென்றால், அதை சோதித்துப் பாருங்கள். உங்கள் கப் நிறைந்து வழிந்ததென்றாலோ, அதன் மேல்பாகத்தில் கிரேமா இல்லையென்றாலோ, நீங்கள் கடுக்கிற, அளவுக்கதிகமாக சாறெடுக்கப்பட்ட ஒரு காபியைத்தான் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.
எஸ்பிரஸோவுடன்கூட எஸ்பிரஸோ சார்ந்த பானங்கள் நிறைய உள்ளன. உங்களுக்கு எஸ்பிரஸோ அதிக ஸ்ட்ராங்காக இருந்தால், ஒரு ருசியான காப்யச்சினோவையோ (cappuccino) பாலேடு நிறைந்த காபே லாட்டெவையோ (caffe latte) முயற்சித்துப் பார்க்கலாமே?
எஸ்பிரஸோவை வீட்டில் தயாரிப்பதற்கான சாதனம்
எஸ்பிரஸோ காபி வகைகளை வீட்டிலேயே தயாரிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? இனிப்பான, அருமையான ஒரு காபியை நீங்கள் பெறவேண்டுமென்றால், ஒவ்வொரு குறிப்புக்கும் கவனம் செலுத்துவது அவசியம்.
எந்த வகையான எஸ்பிரஸோ மேக்கரை நீங்கள் வாங்கவேண்டும்? எவ்வளவுதான் வறுத்தாலும் அரைத்தாலும் பில்டர் முறையில் தயாரிக்கப்பட்டால் அது உண்மையான எஸ்பிரஸோ ஆகாது. இதற்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சாதனம் உங்களுக்கு தேவைப்படுகிறது.
ஸ்டவ்-டாப் காய்ச்சிகளே (Stove-top brewers) பெரும்பாலும் மிக மலிவானவையாக இருக்கின்றன. அதில் தயாரிக்கப்பட்ட காபி நீர்த்ததாகவும், கிரேமா இல்லாத காபியாக இருந்தாலும்கூட அநேக ஆட்கள் தங்கள் வீட்டில் தயாரிக்கப்படும் ஸ்டவ்-டாப் எஸ்பிரஸோ காபியிலேயே திருப்தியடைகிறார்கள். ஸ்டவ்வின் நீர் ஊற்றும் (reservoir) பகுதியில் நீரின் அளவை கவனமாக குறைப்பதாலோ, மூடியைத் திறந்துவைத்தவாறு பாதி கொதித்த நிலையிலேயே அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கிவிடுவதாலோ உங்களுக்கு ஒரு நல்ல எஸ்பிரஸோ கிடைக்கக்கூடும்.
மின் நீராவி இயந்திரங்கள் (Electric steam machines) காபிப்பொடிக்குள்ளே நீரைப் பாய்ச்சுவதற்கு நீராவியைப் பயன்படுத்துகின்றன. இம்முறையில் சிறந்த பலனை உங்களால் எவ்வாறு பெறமுடியும்? காபியின் சாரத்தை அளவுக்குமீறி எடுப்பதைத் தவிர்ப்பதற்காகவும், பாலை நுரையாக்குவதற்காக நீராவியை போதுமான அளவு சேமிப்பதற்காகவும் முதல் 30-லிருந்து 60 மில்லிலிட்டருக்கு பின்பு கப்பில் காபி விழுவதை நிறுத்திவிடவேண்டும். எனவே, ஒரு ஸ்விட்சையோ காபி விழுவதை நிறுத்தும் வேறு ஏதாவதையோ உடைய ஒரு இயந்திரத்திற்காக தேடுங்கள். நீராவி இயந்திரங்கள் நல்ல காப்யச்சினோவையும் லாட்டெவையும் தயாரிக்கின்றன; ஆனால் ஸ்டவ்-டாப் காய்ச்சிகளைப் போன்று சிறந்த அசல் எஸ்பிரஸோவை இவற்றால் தயாரிக்கமுடிவதில்லை.
பிஸ்டன் இயந்திரங்களே சாதாரணமாக மிக விலையுயர்ந்தவையாகவும் பிரமாதமான எஸ்பிரஸோவைத் தயாரிப்பவையாகவும் உள்ளன. பிஸ்டன் இயந்திரத்தை இயக்குவதற்கு, ஒரு கைப்பிடியை அமுக்கி அழுத்தவேண்டும்; அது ஸ்பிரிங் பொருத்தப்பட்ட பிஸ்டனை அழுத்துவதன்மூலம், காபிக்குள்ளே சூடான நீரை வேகமாக பாய்ச்சுகிறது. கைகளால் கட்டுப்படுத்தி இயக்கமுடிவதாலும் தோற்றத்தில் கவர்ச்சிகரமானதாய் இருப்பதாலும் சில ஆட்கள் பிஸ்டன் இயந்திரங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். மற்றவர்களோ அவை இயக்குவதற்கு கடினமானவையாயிருந்து, நீரை மிக மெதுவாக சூடாக்குகின்றன என்கிறார்கள்.
பம்ப் இயந்திரங்களும் பிரமாதமான எஸ்பிரஸோவைத் தயாரிப்பதற்காக போதுமான அளவு அழுத்தத்தை உண்டாக்குகின்றன. அவை பிஸ்டன் இயந்திரங்களைக் காட்டிலும் இயங்குவதற்கு எளிதானவையாகவும், வேகமானவையாகவும் உள்ளன. எனவே, பிரமாதமான எஸ்பிரஸோவைப் பெற விரும்புகிறவர்கள் சாதாரணமாக ஒரு பம்ப் இயந்திரத்தையே தெரிவு செய்கிறார்கள். அம்சங்கள் மாறுபடுகின்றன; மேலும் சில பம்ப் இயந்திரங்கள் மற்றவற்றைக் காட்டிலும் நீடித்து உழைக்கின்றன. எனவே வாங்குவதற்கு முன்பு, பல கடைகளில் ஏறியிறங்கி பாருங்கள். தங்களுடைய இயந்திரங்களை இயக்கி காட்டும் கடைகள், பயனுள்ள ஒன்றை நீங்கள் தெரிவுசெய்வதற்கு உதவுகின்றன.
நீங்கள் வாங்கும் காபிப்பொடி
புதிதாக வறுக்கப்பட்ட எஸ்பிரஸோ காபிப்பொடியைத் தேர்ந்தெடுங்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் காபிப்பொடி அரிதாகவே புதியவையாக இருக்கின்றன; எனவே பிரத்தியேகமான காபி கடையைத் தேடுங்கள். அதுவும் அங்கேயே காபிக்கொட்டை வறுக்கப்பட்டதென்றால் இன்னும் நல்லதுதான். காபிப்பொடி சிலநாட்களுக்குள்ளேயே கெட்டுவிடுகிறது; ஆனால், காபிக்கொட்டைகளோ ஒருசில வாரங்களுக்கு ஓரளவு கெடாமல் புதிதாக இருக்கும். எனவே, சாத்தியப்பட்டால், காபிக்கொட்டைகளை வாங்கி, தேவைக்கேற்றபடி உங்கள் வீட்டிலேயே அதை அரைத்துக் கொள்ளுங்கள். சரியாக அரைக்கப்படுவதற்கு, மிருதுவாக இருந்தாலே போதும், மாவுபோன்று மிகவும் நைஸாக்கவேண்டிய அவசியமில்லை. நீங்கள் காபிப்பொடியை வாங்க வேண்டியிருந்தால் கொஞ்சமாக வாங்கி, சீக்கிரமாகவே பயன்படுத்திவிடுங்கள்.
உங்கள் காபிப்பொடியை கெடாமல்பாதுகாக்க இறுக்கமான மூடியுடைய காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவையுங்கள். அதை நீங்கள் சில வாரங்களுக்குள்ளாகவே பயன்படுத்திவிடுவீர்களென்றால், காபிப்பொடி டப்பாவை குளுமையான, இருட்டான இடத்தில் வையுங்கள். இல்லையென்றால், ஃப்ரீசரில் வையுங்கள்.
காபி தயாரிக்கும் கலை
நல்ல இயந்திரமும் சிறந்த காபிப்பொடியும் இருந்தபோதிலும்கூட, எஸ்பிரஸோவைத் தயாரிக்கும் கலை கற்கப்படவேண்டும், அதை நாம் வாங்கமுடியாது. தயாரிப்பதற்கான படிகள் நீங்கள் பயன்படுத்தும் இயந்திரத்தைப் பொருத்து வேறுபடும் என்பதால், அதனுடன் கொடுக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். தேவையான அளவு காபிப்பொடியை பயன்படுத்துங்கள். சரியான அளவுக்கு, அந்த சாதனத்துக்குள்ளே பொருத்தப்பட்ட பில்டர் கிட்டத்தட்ட நிரம்புமளவுக்கு காபிப்பொடியை போடவேண்டும். காபிப்பொடி விரிவடைவதற்கும் கொஞ்சம் இடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். காபிப்பொடியை சரியானபடி நிரப்புவதற்கோ, பில்டரில் அதைத் தட்டிக் குலுக்கிப் போடுவதற்கோ கொஞ்சம் அனுபவம் தேவைப்படுகிறது; ஏனெனில் அப்போதுதான் காபிப்பொடிக்குள் தண்ணீர் மெதுவாகவும் ஒரேசீராகவும் கசிந்து, முழுமையான சுவையைக் கொடுக்கும்.
தவிர்க்கவேண்டிய ஒரு தவறு என்ன? காபியைத் தயாரிப்பதற்கு அளவுக்குமீறி தண்ணீரை காபிப்பொடியில் ஊற்றுவதுதான். ஒரு கப் எஸ்பிரஸோ காபிக்கு தேவையான அளவு காபிப்பொடியிலிருந்து 60 அல்லது 90 மில்லிலிட்டர் காபியைத் தயாரிக்க முயற்சித்தீர்களென்றால், அது நீர்த்ததாகவும் கசப்பானதாகவும் இருக்கும். எஸ்பிரஸோவுக்கு பதிலாக நீங்கள் தயாரித்திருப்பது ஸ்டிராங் பில்டர் காபியே. ஆனால் நீங்கள் தயாரிக்க நினைத்தது இதுவல்லவே.
எனவே, எவ்வளவு நேரத்தில் தயாரிக்கவேண்டும் என்பதை அறிந்திருப்பதே முக்கியமான அம்சமாயிருக்கிறது. 30-லிருந்து 40 மில்லிலிட்டர் அளவான ஒரு சிங்கிள் எஸ்பிரஸோ காபியை சுமார் 20 முதல் 25 நொடிகளில் தயாரிக்கவேண்டும் என்று சுவைத்திற வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் காபிப்பொடி முழுமையாக சாரமெடுக்கப்படுகிறது; பின்பு அதை எறிந்துவிடவேண்டும்.
டபுள் எஸ்பிரஸோ காபியைத் தயாரிக்கும்போதுகூட, “காபிப்பொடியிலிருந்து கொஞ்சமாக காபி தயாரிப்பதே சிறந்த பலனைத் தரும்.” கொஞ்சமாக காபி தயாரிக்கும்போது, காபி குடிப்பதற்கு இனிப்பாக இருக்கும். டபுள் எஸ்பிரஸோ காபி என்பதற்கான விளக்கம் வேறுபடுகிறது; ஆனால் காபிப்பொடியின் அளவை இரண்டு மடங்கு அதிகமாக போட்டு, ஒரே கப் எஸ்பிரஸோவை இரண்டு மடங்கு தயாரிப்பதை இது ஏறத்தாழ குறிக்கலாம்.
கேஃபினைப் பற்றி என்ன?
ஒரு சிங்கிள் எஸ்பிரஸோ காபி சாதாரண ஒரு கப் காபியைவிட குறைந்தளவு கேஃபினையே கொண்டிருக்கலாம். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? அதுவும் எஸ்பிரஸோ காபி இந்தளவு அதிக ஸ்ட்ராங்காக இருக்கும்பட்சத்தில் இது எப்படி சாத்தியம்?
ஒரு அம்சமானது காபிக்கொட்டை எந்தளவு கறுக்க வறுக்கப்படுகிறது என்பதே. நன்கு வறுக்கப்பட்ட காபிக்கொட்டைகள் குறைந்தளவு கேஃபினை கொண்டிருக்கின்றன. கூடுதலாக, எஸ்பிரஸோ காபிக்கு பேர்போன காபி கடைகள், அரேபிகா (arabica) காபிக்கொட்டைகளை பயன்படுத்துகின்றன. இந்தக் காபிக்கொட்டைகளில், சூப்பர்மார்க்கெட்டுகளில் அட்டைப்பெட்டிகளில் அடைத்து விற்கப்படும் அநேக காபிகளில் பயன்படுத்தப்படும் ரோபஸ்டா (robusta) காபிக்கொட்டைகளைக் காட்டிலும் கேஃபின் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைவாகவே உள்ளது.
ஆனால் இதில் மிக முக்கியமான அம்சம் அளவுதான். ஒரு மில்லிலிட்டர் எஸ்பிரஸோ காபியில் சாதாரண காபியில் இருப்பதைக் காட்டிலும் அதிக கேஃபின் இருந்தாலும்கூட, எஸ்பிரஸோ காபியின் அளவு சாதாரண காபியைவிடவும் குறைவாகத்தான் இருக்கிறது. எனவே, ஒரு 180 மில்லிலிட்டர் கப்பிலுள்ள சாதாரண காபியில் நூறோ அல்லது அதற்கும் அதிகமான அளவோ கேஃபின் இருந்தால், ஒரு கப் எஸ்பிரஸோ காபியில் அதைவிட குறைவாகவே இருக்கிறது என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன.
இருப்பினும், ஆய்வுகளின் முடிவுகள் வேறுபடுகின்றன; மேலும் கேஃபின் அளவானது, எத்தகைய காபிக்கொட்டை என்பதோடுகூட தயாரிப்பில் உட்பட்டிருக்கும் ஒவ்வொரு படியையும் பொருத்திருக்கிறது. ஒரு டபுள் எஸ்பிரஸோ காபியில், சிங்கிள் எஸ்பிரஸோ காபியில் இருப்பதைவிட அதிகமான கேஃபின் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் காபியைக் குடித்த பிறகு நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பது கேஃபின் அளவை தீர்மானிப்பதற்குரிய சிறந்த உதவியாய் இருக்கலாம். கேஃபின் அளவு குறைவாகவும், அதேசமயத்தில் எஸ்பிரஸோவை நீங்கள் ரசித்து ருசிக்கவும் விரும்பினீர்கள் என்றால், கேஃபின் இல்லாத எஸ்பிரஸோ காபிப்பொடியை பயன்படுத்தலாம் அல்லது நீங்கள் விரும்பும் கேஃபின் அளவுக்கு ஏற்றாற்போல, அதை சாதாரண எஸ்பிரஸோ காபிப்பொடியில் கலந்து குடிக்கலாம்.
எஸ்பிரஸோவை உங்களுடைய சமையலறையிலேயே தயாரிக்குமளவுக்கு ரெடியாகிவிட்டீர்களா? விடாமுயற்சி நல்ல பலன்களைக் கொடுக்கும்; எனவே நீங்களே சோதனை எலியாக மாறிவிடுங்கள்; அதாவது எஸ்பிரஸோவை நண்பர்களுக்கு கொடுப்பதற்கு முன்பு நீங்களே குடித்துப் பாருங்கள். கிரேமாவையும் பால் நுரையையும் தயாரிப்பதற்கு உங்களுக்கு அனுபவம் தேவைப்படுகிறது. உங்கள் நண்பர்களை மகிழ்விக்க நீங்கள் தயாரித்துக் கொடுக்கும் எஸ்பிரஸோ காபி உள்ளூர் காபிகடையில் கிடைக்கும் எஸ்பிரஸோ காபியை எல்லாம் விழுங்கி ஏப்பம்விடும் அளவுக்கு இருக்கும்போது, உங்கள் விடாமுயற்சிக்கு பலன் கிடைக்கிறது. காபியென்றால் எஸ்பிரஸோ காபி அல்லவோ காபி என்பதை நீங்களும்கூட ஒத்துக்கொள்ள தொடங்குவீர்கள்.
[பக்கம் 20-ன் பெட்டி]
பாலை நுரையாக்குவதற்கான வழிமுறைகள்
காப்யச்சினோ மற்றும் லாட்டெவுக்கு பாலை நுரையாக்குவதற்கும் அல்லது பாலை நீராவியால் கொதிக்க வைப்பதற்கும், ஒரு ஸ்டீல் கூஜா, குளிர்ந்த பால் மற்றும் பால் கொதிக்கும் நீராவிக்கலம் ஆகியவை உங்களுக்கு தேவைப்படுகின்றன. உங்களுடைய எஸ்பிரஸோ மேக்கரில் பாலை நீராவியால் கொதிக்கவைப்பதற்கு தேவையான நீண்ட மெல்லிய பைப் (wand) இல்லாவிட்டால், இதற்காக அதை தனியாக வாங்கிக்கொள்ளுங்கள்.
1. ஸ்டீல் கூஜாவில் பாதியளவுக்கு குளிர்ந்த பாலை நிரப்புங்கள்.
2. நீராவி வரும் பைப்பை பாலின் மேல்பகுதிக்கு சற்று இறக்கி பிடித்துக்கொண்டு, நீராவி வால்வை திறந்துவிடுங்கள்.
3. பைப்பின் நுனியை பாலின் மேல்பகுதிக்கு சற்று கீழே வைத்து, கூஜாவை சற்றே இறக்குவதன் மூலம், பாலை நுரையாக்கும்போது அதிகமான காற்று கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
4. பொதுவாக கூஜா தொடமுடியாதளவுக்கு அதிக சூடாக இருக்கும்போது சரியான வெப்பநிலையை நீங்கள் பெற்றுவிட்டீர்கள்.
5. நீராவி வால்வை மூடிவிட்டு, அதன் கீழிருந்து கூஜாவை எடுத்துவிடுங்கள். பிறகு பால் ஏதேனும் மீதமிருந்தால் அதை சுத்தம்செய்வதற்காக, நீராவி வால்வை திறந்து ஈரத்துணியால் துடையுங்கள்.
[பக்கம் 23-ன் படம்]
காபிப்பொடியைக் காட்டிலும் காபிக்கொட்டைகள் அதிக நாட்களுக்கு கெடாமல் இருக்கின்றன
படத்தில் உள்ளது நீராவி எஸ்பிரஸோ மேக்கர்